என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் விவகாரம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    காரைக்கால்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்த மத்திய தகவல் ஒலிபரப்புப்புத்துறை இணை மந்திரி எல். முருகன் நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும், இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். ஆன்லைன் சூதாட்ட விவகாரம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதை தடை செய்வது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.

    தொடர்ந்து, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை ஆய்வு செய்த மத்திய இணை மந்திரி, மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர், மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

    • புதுவையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வந்தது.
    • புதுவையில் 59, காரைக்காலில் 15, ஏனாமில் 15 பேர் என 89 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வந்தது.

    இந்நிலையில் ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று பரவியுள்ளது. புதுவையில் 2 ஆயிரத்து 355 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 86, காரைக்காலில் 28, ஏனாமில் 9 பேர் என புதிதாக 123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 10, காரைக்காலில் 2, ஏனாம் 2 பேர் என 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 510, காரைக்காலில் 95, ஏனாமில் 39, மாகேவில் 2 பேர் என 649 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 59, காரைக்காலில் 15, ஏனாமில் 15 பேர் என 89 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

    மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 48 ஆயிரத்து 571 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நெறிமுறைகளை தொடரவும், அனைவரும் முககவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • மின்துறை தனியார்மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்திராகாந்தி சிலை அருகில் தொடங்கிய ஊர்வலத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தேவபொழிலன் தலைமை வகித்தார்.

    புதுச்சேரி:

    மின்துறை தனியார்மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்திராகாந்தி சிலை அருகில் தொடங்கிய ஊர்வலத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தேவபொழிலன் தலைமை வகித்தார்.

    நிர்வாகிகள் செல்வ நந்தன், அரிமா தமிழன், செந்தமிழ்செல்வன், எழில்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் செந்தமிழ்செல்வன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    ஊர்வலம் மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, நேருவீதி வழியாக கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர்.

    போலீசார் அவர்களை நேருவீதியில் தடுத்து மிஷன் வீதியில் திருப்பி அனுப்பினர். ஊர்வலம் ஜென்மராக்கினி கோவில் வழியாக ஆம்பூர் சாலையை அடைந்தது. அங்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    அங்கு தடுப்புகளின் மீது ஏறி தாண்டிச்செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளு, முள்ளு, மோதல் ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கட்டுப்படுத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.

    ஊர்வலம், ஆர்ப்பாட்ட த்தில் நிர்வாகிகள் வணங்கா முடி, தலையாரி, பொதினிவளவன், முன்னவன், ஆதவன், செல்வசுந்தரம், கார்முகில், சுடர்வாளன், கார்வேந்தன் மற்றும் கட்சியின் மாநில செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய, மாநில அரசு கள் மின்துறையை தனியார்மயமாக்கக்கூடாது என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஊர்வலத்தில் மின்துறை தனியார்மயத்தை கண்டித்து பதாகைகளை ஏந்தி வந்தனர். போராட்டத்தையொட்டி நகரம் முழுவதும் ஊர்வலம் வந்த வழிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சட்டசபை வளாகம், கவர்னர் மாளிகையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • புதுவை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனை
    • பழங்கள், கீரைகள் இதர உணவு வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனையில் அப்பகுதியை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் தங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்கள், கீரைகள் இதர உணவு வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    இதனால் அவர்களுக்கு ஓரளவிற்கு லாபம் ஈட்டினாலும், தற்போது தரைக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய இடம் இல்லாமல் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    சென்னை - நாகப்–பட்டினம் 4 வழிச்சாலை விரிவாக்க பணி கடந்த ஒரு வருட காலமாக முழு வீட்டில் நடைபெற்று வருகின்றது.

    இதனால் புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த கடைகள் வணிக வளாகங்கள், சாலையோரக் கடைகள் அகற்றப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறு, குறு விவசாயிகள் தங்களது விலை பொருட்களை சாலையோரம் தரை கடைகள் அமைத்து விற்பனை செய்து வந்தனர்.

    தற்போது இவர்களை சாலை போடும் அதிகாரிகள் அகற்றி சாலை போடும் பணியை துரிதப்படுத்தி உள்ளார்கள். இதனால் தினந்தோறும் விளைவிக்கும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய இடம் இல்லாமலும், விளைவித்த பொருள்கள் அழுகிய நிலையில் தூக்கி வீசி மிகுந்த நஷ்டத்தில் சிறு, குறு விவசாயிகள் உள்ளனர்.

    இதனால் வியாபாரி–களுக்கும், பொருள்களை வாங்க வரும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத தன்மையை உருவாக்கி உள்ளது. இந்த கடைகளின் வழி–யாக அதிகப்படியான வாகனங்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த விவசாயி–கள் கூறும்போது, தங்களுக்கு உழவர் சந்தை தேவை என்றும், அரசு எங்களுக்கு உடனடியாக இப்பகுதியை பார்வையிட்டு உழவர் சந்தையை கட்டித்தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த திருவண்டார் கோவில், திருபுவனை, மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், காலையும், மாலையும் போலீசாரை அதிகப்படுத்தி பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் முறைப்படுத்த வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • புதுவை மண்ணாடிப் பட்டு அருகே உள்ள சுத்துக்கேணி கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகர்
    • விவசாயியான இவர் தன்னுடைய நிலத்தில் கரும்பு, நெல், மரவள்ளி உள்ளிட்டவை சாகுபடி செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை மண்ணாடிப் பட்டு அருகே உள்ள சுத்துக்கேணி கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகர். விவசாயியான இவர் தன்னுடைய நிலத்தில் கரும்பு, நெல், மரவள்ளி உள்ளிட்டவை சாகுபடி செய்து வருகிறார். இவரது வீட்டு தோட்டத்தில் முருங்கை மரம் வைத்துள்ளார். இந்த முருங்கை மரத்தை இயற்கை முறையில் அதாவது தொழு உரம், புண்ணாக்கு உள்ளிட்டவை வைத்து பராமரித்து வருகிறார்.

    இதில் தற்போது முருங்கைக்காய்கள் காய்த்துள்ளது. ஒவ்வொரு காயும் குறைந்தபட்சம் 5 அடி நீளம் உள்ளது. இது அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சாதாரணமாக ஒரு முருங்கைக்காய் அதிகபட்சம் 2 அடி இருக்கும். ஆனால், ஞானசேகரன் தோட்டத்தில் இருக்கும் முருங்கைக்காய்கள் 5 அடி நீளம் இருப்பதால் அதனை அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

    இதுகுறித்து விவசாயி ஞானசேகர் கூறுகையில், இயற்கை முறையில் பயிர் பாதுகாப்பு செய்யப்பட்டு வரும் இந்த முருங்கை 5 அடி நீளமுள்ள காய்கள் காய்த்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

    அனைவரும் வந்து இதனை ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதாகவும் இந்த மரத்திலிருந்து பதிவு போட்டு தங்களுக்கு தருமாறு கேட்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

    • புதுவை பொதுப்பணித் துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தினர் பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சரவணன் தலைமை வகித்தார்

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித் துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தினர் பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வீராசாமி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர் ஞானசேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    காலியாக உள்ள மெக்கா னிக், ஒர்க் இன்ஸ்பெக்டர், சீனியர் மெக்கானிக், போர்மென், ஓவர்சியர் பதவிகளை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட சேதராப்பட்டில் உள்ள ஒரு சாராயக் கடையில் சாராயம் வாங்கிய ஒருவர் அதை டம்ளரில் ஊற்றினார். அப்போது சாராயத்தில் மண் இருந்தது.
    • உடனடியாக கடை ஊழியரிடம் கொடுத்த போது அவர் வடிகட்டி கொடுத்தார். இதை ஏற்காத குடிமகன் வேறு சாராயம் தரும்படி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் அரசு அனுமதியுடன் சாராய கடைகள் இயங்கி வருகின்றன.

    வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட சேதராப்பட்டில் உள்ள ஒரு சாராயக் கடையில் சாராயம் வாங்கிய ஒருவர் அதை டம்ளரில் ஊற்றினார். அப்போது சாராயத்தில் மண் இருந்தது.

    உடனடியாக கடை ஊழியரிடம் கொடுத்த போது அவர் வடிகட்டி கொடுத்தார். இதை ஏற்காத குடிமகன் வேறு சாராயம் தரும்படி கூறியுள்ளார்.

    கடை ஊழியர் மறுத்ததால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதத்தை வீடியோவாக எடுத்தவரிடம், எந்த வீடியோ எடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது, உரிமையாளரை கேட்டுவிட்டு மாற்றி தருகிறேன் என கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த குடிமகன் அந்த வீடியோவை வாட்ஸ்அப் மூலம் கலால்துறை இணை ஆணையருக்கு அனுப்பி புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து கலால்துறை ஊழியர்கள் அந்த கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அரியாங்குப்பத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் தபால்காரர் வீதி செட்டிக்குளம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது38). ஆட்டோ டிரைவர். இவர் தனது மனைவி பச்சைவாழி(34) மற்றும் மகள் லட்சுமி தேவி(7) மகன் ஆகாஷ்(3) ஆகியோருடன் அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் தபால்காரர் வீதி செட்டிக்குளம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

    இதற்கிடையே தியாகராஜனுக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சுமார் ரூ.18 லட்சம் வரை அவருக்கு கடன் இருந்ததாக தெரிகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொடர்ந்து தியாகராஜனுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

    இதனால் மனமுடைந்த தியாகராஜன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து அவர்கள் 3 பேரையும் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தானும் தூக்கில் தொங்கினார்.

    வெகு நேரமாக தியாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது தியாகராஜன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அரியாங்குப்பத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    மனைவி-குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த தியாகராஜன் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் நெருங்கிய உறவினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோர்ட்டு சம்மன் அனுப்பிய தால் விரக்தியில் ஐஸ் கிரீமில் எலி மருந்து கலந்து தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இவர் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கேண்டினில் வேலை செய்து வருகிறார்

    புதுச்சேரி:

    கோர்ட்டு சம்மன் அனுப்பிய தால் விரக்தியில் ஐஸ் கிரீமில் எலி மருந்து கலந்து தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் சுப்பு லட்சுமி நகரை சேர்ந்தவர் பாபு. இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பார்வதி. இவர் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கேண்டினில் வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் விஷ்ணு குமார்(வயது18).

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடப்பாக்கம் - பத்துகண்ணு ரோட்டில் விஷ்ணுகுமார் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இந்த வழக்கில் ஆஜராக கோர்ட்டில் இருந்து விஷ்ணுகுமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனால் விஷ்ணுகுமார் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த விஷ்ணுகுமார் ஐஸ்கிரீமில் எலிமருந்து கலந்து சாப்பிட்டு விட்டார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட விஷ்ணுகுமாரை அவரது பெற்றோர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஷ்ணுகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது தந்தை பாபு கொடுத்த புகாரின் பேரில் வில்லிய னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உப்பளம் தொகுதியில் குடிநீர் குழாய்களில் வரும் குடிநீர் கலங்கலாக பழுப்பு நிறத்தில் வந்தது.
    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகானந்தத்தை சந்தித்து முறையிட்டார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதியில் குடிநீர் குழாய்களில் வரும் குடிநீர் கலங்கலாக பழுப்பு நிறத்தில் வந்தது. இதுகுறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகானந்தத்தை சந்தித்து முறையிட்டார். அவர் உதவி பொறியாளர் வெங்கடேசனை அழைத்து உடனே சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமான குடிநீர் வழங்க வலியுறுத்தினார்.

    மேலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தாமதமாக நடைபெறுவதாகவும் அதனை துரிதப்படுத்த வேண்டும் எனவும் கென்னடி எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.

    • தொ.மு.ச. சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
    • மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து, உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதிக் குட்பட்ட கொம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தொ.மு.ச. சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

    இதனை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., திறந்து வைத்து, பேனா, நோட்டு உள்ளிட்ட எழுதுப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்கினார்.தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து, உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

    பெரிய பேட்டில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கழிப்பிட கட்டிடம் சேதம் அடைந்துள்ளதாக புகார் வந்ததை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் சிவா அப்பள்ளிக்கு சென்று சேதமடைந்த கட்டிடங்களை பார்வையிட்டார். பின்னர், அதிகாரிகளை தொடர்பு கொண்டு விரைந்து சரி செய்யும் படி வலியுறுத்தினார்.

    அப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை எதிர்க்கட்சி தலைவர் சிவா சாப்பிட்டு உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

    இதில் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில ஆதிதிராவிடர் அணி கலியமூர்த்தி, தொகுதி துணை செயலாளர் அங்காளன், கிளை செயலாளர் செல்வநாதன், தொகுதி இளைஞரணி அமைப்பா ளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • புதுவை கோரிமேட்டில் உள்ள பூச்சி கட்டுப்பாட்டுத்துறையினர் டெங்கு, சிக்கன்குனியாவை பரப்பும் கொசுக்களை ஒழிப்பது குறித்து கடந்த 4 ஆண்டாக தீவிர ஆராய்ச்சி செய்து வந்தனர்.
    • இந்த நிலையில் டெங்கு, சிக்கன் குனியாவை கட்டுப்படுத்தும் சிறப்பு பெண் கொசுக்களை இந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    புதுச்சேரி:

    குளிர்காலம், மழைக்காலம் தொடங்கி விட்டாலே டெங்கு, சிக்கன்குனியா நோய்கள் பரவ தொடங்கிவிடும்.

    இந்த கொசுக்களால் பலவித நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கொசுக்களை ஒழிக்க பல்வேறு ஆராய்ச்சிகளும் நடந்து வருகிறது.

    புதுவை கோரிமேட்டில் உள்ள பூச்சி கட்டுப்பாட்டுத்துறையினர் டெங்கு, சிக்கன்குனியாவை பரப்பும் கொசுக்களை ஒழிப்பது குறித்து கடந்த 4 ஆண்டாக தீவிர ஆராய்ச்சி செய்து வந்தனர்.

    இந்த நிலையில் டெங்கு, சிக்கன் குனியாவை கட்டுப்படுத்தும் சிறப்பு பெண் கொசுக்களை இந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்த பெண் கொசுக்கள் ஆண் கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்யும் போது வைரஸ்களை சுமக்காத லார்வாக்களை உருவாக்குகின்றன.

    இதனால் கொசு மூலம் வைரஸ் பரவுவது தடுக்கப்படும். இந்த கொசுக்களை ஒவ்வொரு பகுதியாக விடுவித்து பரவ விட மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதல் பெற வேண்டும்.

    இதுகுறித்து பூச்சி கட்டுப்பாட்டு நிறுவன இயக்குனர் அஸ்வனிகுமார் கூறியதாவது:-

    டெங்கு, சிக்குன்குனியா கொசுக்களுக்காக பெண் கொசுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை பொதுவெளியில் விடுத்தால், ஆண் கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்யும். இந்த கொசுக்களில் இருந்து வெளிவரும் முட்டை, லார்வாக்களில் வைரஸ்கள் இருக்காது.

    இதற்காக கொசு முட்டைகளை தயாரித்துள்ளோம். 4 ஆண்டு ஆய்வுக்கு பின் இப்போது இந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளோம். இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை. இதற்காக காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×