என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கடலூர - புதுவை மெயின் ரோட்டில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதை தடுக்க தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாலையில் ஏற்றுப்பட்டுள்ள பள்ளங்களை அவ்வப்போது தற்காலிக ஏற்பாடுகளும் செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கணே–சன் தலைமையில் அரியாங்குப்பத்திலிருந்து முள்ளோடை வரை உள்ள கடலூர - புதுவை மெயின் ரோட்டில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதை தடுக்க தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    பல இடங்களில் தன்னார்வலர்களின் உதவியோடு தடுப்பு கட்டைகளும், பேரிகார்டு, எச்சரிக்கை பலகைகள் வைத்து வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சாலையில் ஏற்றுப்பட்டுள்ள பள்ளங்களை அவ்வப்போது தற்காலிக ஏற்பாடுகளும் செய்து வருகின்றனர்.

    போக்குவரத்து போலீசாரால் பல இடங்களில் இரு வழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் காட்டுக்குப்பத்திலிருந்து கன்னியகோவில் வரை உள்ள சாலையையும் இரு வழி சாலையாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    அதனை தொடர்ந்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இருவழி சாலையாக மாற்ற பேரிகார்டு மற்றும் சிவப்பு வண்ணம் பூசிய பேரல்கள் வைத்து மாற்றியுள்ளனர்.

    இவை சுமார் 500மீட்டருக்கு வைக்கப்பட்டு உள்ளது. ேமலும் புதுநகர் பகுதியிலும் இருவழி சாலையாக மாற்ற அப்பகுதி மக்கள் போக்குவரத்து போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சரவணன் வீட்டுக்கு வழக்கமாக மாதந்தோறும் ரூ.800க்குள் மின்கட்டணம் வரும்.
    • கடந்த மாதம் மின் கட்டணமாக ரூ.690 வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை விஸ்வநாதர் நகர், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் சரவணன், டி.வி. மெக்கானிக் வேலை செய்து வருகிறார். மேலும் இரவில் லாஸ்பேட்டையில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

    சரவணன் வீட்டுக்கு வழக்கமாக மாதந்தோறும் ரூ.800க்குள் மின்கட்டணம் வரும். அதுபோல் கடந்த மாதம் மின் கட்டணமாக ரூ.690 வந்தது.

    இந்த நிலையில் மாதம் மின் கட்டணமாக ரூ.12 லட்சத்து 26 ஆயிரத்து 944 வந்தது. இதைக்கண்டு சரவணன் அதிர்ச்சியடைந்து மின் அலுவலகத்துக்கு சென்று புகார் செய்தார்.

    அப்போது அதிகாரிகள், மின்சார ரீடிங் 21 ஆயிரத்து 115 என்பதற்கு பதிலாக தவறுதலாக கடைசியில் ஒரு பூஜ்ஜியம் சேர்த்துவிட்டனர். இதனால் 2 லட்சத்து 11 ஆயிரத்து 150 என வந்துவிட்டது என்றும் இந்த கட்டணத்தை கணக்கிட்டு ரூ.12 லட்சத்து 26 ஆயிரத்து 944 என குறிப்பிட்டுவிட்டதாக வருத்தம் தெரிவித்தனர்.

    மேலும் அதை சரி செய்து தருவதாக கூறினர். இதன்பின்னரே சரவணன் நிம்மதி பெருமூச்சுடன் வீட்டுக்கு திரும்பினார். இந்த மின் கட்டண சம்பவம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • புதுவை பாப்ஸ்கோ ஊழியர்கள்(ஏ.ஐ.டி.யூ.சி.) சங்கம் சார்பில் சட்டசபை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயல் தலைவர் அபிஷேகம், மாநில தலைவர் தினேஷ் பொன்னையா கண்டன உரையாற்றினர்.

    புதுச்சேரி:

    புதுவை பாப்ஸ்கோ ஊழியர்கள்(ஏ.ஐ.டி.யூ.சி.) சங்கம் சார்பில் சட்டசபை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். பாப்ஸ்கோ ஊழியர் நல சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் மோகன், நிர்வாகிகள் குணா, கோவர்த்தனன், பிரபு, ஏழுமலை, அமுதா, சரஸ்வதி, அமுதவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயல் தலைவர் அபிஷேகம், மாநில தலைவர் தினேஷ் பொன்னையா கண்டன உரையாற்றினர். பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய 55 மாதமாக சம்பளத்தை வழங்க வேண்டும். தீபாவளி பஜார் நடத்திய மானியம் ரூ.65 லட்சத்தை வழங்க வேண்டும்.

    பாப்ஸ்கோ ரேஷன்கடை களுக்கு வழங்க வேண்டிய 6 ஆண்டு வாடகை ரூ.1.30 கோடியை வழங்க வேண்டும். அரிசி விநியோகம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கூடுதல் விலையை வழங்க வேண்டும். பொங்கல் பொருட்கள் வழங்கியதற்கு கமிஷன் தொகை ரூ.31 லட்சம் வழங்க வேண்டும்.

    பணி ஓய்வில் சென்ற தொழிலாளர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கி ஓய்வு கால பண பலன்களை அளிக்க வேண்டும். பாப்ஸ்கோ நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்கி மாதம் தவறாமல் சம்பளம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாப்ஸ்கோ மதுபான கடைகளை தனியாருக்கு குத்தகை விட்டு, ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி, மற்றும் நிறுவனத்தை திறந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. 

    • புதுவை பிள்ளைச்சாவடியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு அதனால் ஏற்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதார பாதிப்பை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் ஆய்வு செய்தார்.
    • கடல் அரிப்பால் பிள்ளைச்சாவடி மீனவ மக்கள் படகு நிறுத்த இடம் இல்லாமல் அருகாமையில் உள்ள சுடுகாட்டு பகுதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பிள்ளைச்சாவடியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு அதனால் ஏற்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதார பாதிப்பை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் ஆய்வு செய்தார்.

    புதுவை காலாப்பட்டு அருகே உள்ள பிள்ளைச்சாவடி மீனவப் பகுதியில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவ பகுதியில் இருந்த சாலைகள், தென்னை மரங்கள், ஒரு சில குடியிருப்புகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் கடல் அரிப்பால் பிள்ளைச்சாவடி மீனவ மக்கள் படகு நிறுத்த இடம் இல்லாமல் அருகாமையில் உள்ள சுடுகாட்டு பகுதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    கடல் அரிப்பை தடுக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொகுதியின் எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் மீனவர்கள் இருந்தனர். இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு பகுதிகளை இன்று ஆய்வு செய்தனர்.

    அப்போது மீனவர்களின் பாதிப்பை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.எடுத்துக் கூறினார். மேலும் மீனவர்களின் கோரிக்கையை ஏற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி, கடல்அரிப்பை தடுக்க அரசு உரிய நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளும் என உறுதி அளித்தார்.

    • எம்.பி. ராகுல்காந்தி–யின் பாத யாத்திரையை சகித்துக்கொள்ள முடியாமல் அவர் அணிந்திருந்த டீ-சர்ட் பற்றி பா.ஜனதாவினர் விமர்சித்துள்ளனர்.
    • உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு தேசியக்கொடியை கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி

    நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி–யின் பாத யாத்திரையை சகித்துக்கொள்ள முடியாமல் அவர் அணிந்திருந்த

    டீ-சர்ட் பற்றி பா.ஜனதாவினர் விமர்சித்துள்ளனர். அது திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டீ-சர்ட். பிரதமர் மோடி ஒரு நாளைக்கு 3 முறை உடை மாற்றுகிறார்.

    அவை இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்காவில் இருந்து வருகிறது. உள்துறை மந்திரி அமித்ஷா அணியும் ஆடைகளும் வெளிநாட்டிலிருந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு தேசியக்கொடியை கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்தனர்.

    காங்கிரசை குறைகூற பா.ஜனதாவுக்கு எந்த தகுதியும் இல்லை. தமிழிசை பாதயாத்திரை பற்றி ஏளனமாக பேசியுள்ளார். நீண்ட நித்திரையில் இருந்தவர்கள் தேசத்தை ஒருங்கிணைக்க பாதயாத்திரை போவதாக கூறியுள்ளார். தெலுங்கானாவுக்குத்தான் கவர்னர்.

    அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழிசையை உதாசீனப்படுத்துகின்றனர். எனவேதான் புதுவையில் அதிக நாட்கள் தங்கியுள்ளார்.

    கவர்னர் பதவியில் உள்ளவர்கள் அரசியல் செய்யக்கூடாது. அவர் பாதயாத்திரையை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. கவர்னர் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் அரசியல் செய்ய விரும்பினால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யலாம்.

    பிரதமர் மோடி பிறந்தநாளை நிலத்தடிநீரை பாதுகாக்கும் வகையில் கொண்டாட அறிவுறுத்தியுள்ளனர். புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா முதல்-அமைச்சர் அதிகளவு தண்ணீரை உறிஞ்சும் 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார். இதில் ரூ.90 கோடி பணம் கைமாறியுள்ளது. இதை பா.ஜனதா எம்.எல்.ஏ. சட்டசபையில் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ளோம். இந்த விஷயத்தில் பா.ஜனதா தலைவர்களின் பதில் என்ன? இதுகுறித்து ரங்கசாமி மக்கள் மத்தியில் பதில் சொல்ல வேண்டும்.

    புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை மக்களின் சொத்துக்கள் அபகரிப்பு தொடர்பாக பிரான்சில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

    இது இந்தியாவுக்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ரங்கசாமி பதவிக்கு வரும்போ–தெல்லாம் பிரெஞ்சு குடிமக்களின் சொத்துக்கள் அபகரிக்கப்படுகிறது. பல காவல்நிலையங்களில் புகார் உள்ளது. ஆனால் ரங்கசாமி புகாரே இல்லை என தவறான தகவல் அளிக்கிறார்.

    பிரெஞ்சு தூதரே நேரடியாக சட்டசபைக்கு வந்து ரங்கசாமியிடம் புகார் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்து.

    புதுவையில் ரவுடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி அலுவலகம் ரவுடிகள் கூடாரமாக மாறியதுதான் காரணம். முதல்-அமைச்சர் அலுவலகத்தி–லேயே ரவுடிகள் இருந்தால் காவல்துறையினர் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.

    இதனால் ஒட்டுமொத்த நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. சொத்து அபகரிப்பு, ரவுடிகள் நடமாட்டம், வேலையின்மை, நிதி பற்றாக்குறை என அனைத்துக்கும் ரங்கசாமியே முழு பொறுப்பேற்க வேண்டும்.

    • முதலியார்பேட்டை தொகுதியில் நிலவும் மின்சார பிரச்சினைகள் தொடர்பாக மின்துறை அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சம்பத் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
    • பொதுமக்கள் சார்பில் மின்துறை தொடர்பாக எழுந்த புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து மின் துறை அதிகாரிகளிடம் சம்பத் எம்.எல்.ஏ. எடுத்துரைத்தார்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதியில் நிலவும் மின்சார பிரச்சினைகள் தொடர்பாக மின்துறை அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சம்பத் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனைக் கூட்டத்தில், மின் துறை உதவி பொறியாளர் கில்பர்ட் ஜேம்ஸ், இளநிலை பொறியாளர்கள் செல்வ பாண்டியன், செல்வமுத்தையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பொதுமக்கள் சார்பில் மின்துறை தொடர்பாக எழுந்த புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து மின் துறை அதிகாரிகளிடம் சம்பத் எம்.எல்.ஏ. எடுத்துரைத்தார்.

    இந்நிலையில், எரியாத மின்விளக்குகள் படிப்படியாக மாற்றி தருவது என்றும், முக்கிய சந்திப்புகளில் ஹைமாஸ் விளக்குகள் பொருத்துவது என்றும், கடலூர் சாலையிலிருந்து பணிகள் துவங்க அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    • திருபுவனை பாளையம் பகுதியில் அதிகப்படியான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
    • அந்த சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    புதுச்சேரி:

    திருபுவனை பாளையம் பகுதியில் அதிகப்படியான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்குள்ள தனியார் கம்பெனிகளுக்கு ஒரு சில லாரிகள் மூலப்பொருட்களை ஏற்றி வருவது, அதன் பின்னர் அங்குள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை ஏற்றி செல்வது நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில் அங்கு இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைக்கு தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலம் இருந்து மூலப் பொருட்களை மூட்டையில் ஏற்றி வரும் லாரிகள் அங்குள்ள குறுகிய சாலைப் பகுதியில் நிறுத்தி விடுகின்றனர். மேலும் அந்த லாரிகள் பல நாட்கள்அணிவகுத்து நிற்கின்றன.

    இதனால் அந்த சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    இதனை பல்வேறு முறை காவல்துறை அதிகாரிகளும், உள்ளூர் இளைஞர்களும், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும், புகார் தெரிவித்தும் தொழிற்சாலை நிர்வாகம் கண்டு கொள்வதில்லை.

    எனவே போக்குவரத்து நெரிசலுக்கு தொழிற்சாலை பகுதியினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இந்த சாலையில் நிற்கின்ற லாரிகளை முறைப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • லாஸ்பேட்டையில் 10 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை நரிகுறவர் குடியிருப்பை சேர்ந்தவர் பாபு. இவரது இளையமகள் காவ்யா (வயது 10). இவர் முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கி படித்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவ்யா பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் காவ்யா தங்களது வீட்டுக்குள் புகுந்து பணம் திருடி சென்று விட்டதாக காவ்யாவின் தாய் ரேகாவிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவ்யாவை அவரது தாய் ரேகா கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காவ்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    இன்று காலை வீட்டில் காவ்யா சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக தூக்கில் இருந்து காவ்யாவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே காவ்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.
    • கல்வி மற்றும் தொழில் ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல்

    கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி, மணக்குள விநாயகர் கல்வி குழு மத்தில் செயல்படும் கல்லூரிகளின் சாதனைகள், பாடப்பிரிவுகள் குறித்து விளக்கி கூறினார். கல்வி மற்றும் தொழில் ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் கல்வி குழுமத்தின் துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாசலபதி, பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், அகாடமியின் டீன்கள் அன்பு மலர், அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • புதுவை அரசு பொதுப் பணித்துறை பொது சுகாதார கோட்ட பிரிவு அலுவலகத்தில் உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கோரிக்கை மனு அளித்தார்.
    • திப்புராயப்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் வீதியில் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு பொதுப் பணித்துறை பொது சுகாதார கோட்ட பிரிவு அலுவலகத்தில் உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கோரிக்கை மனு அளித்தார். அதில், உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட

    நேதாஜி நகர்-2, அழகர்சாமி வீதியில் பல மாதங்களாக தண்ணீர் அழுத்தம் குறை வாக உள்ளது. திப்புராயப்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் வீதியில் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும். தாமரை நகரில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி தடைப்பட்டுள்ளது. இதனை விரைவுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில நிர்வாக குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் தினேஷ் பொன்னையா தலைமையில் நடந்தது.‌
    • நெடுஞ்சாலையில் போக்குவரத்து பிரிவு கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்தினை கட்டுப்படுத்திடவும், சீர்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில நிர்வாக குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் தினேஷ் பொன்னையா தலைமையில் நடந்தது.‌

    மாநில செயலாளர் சலீம் அறிக்கை சமர்பித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் நாரா. கலைநாதன், சேது செல்வம், வ.சுப்பையா, அந்தோணி, அமுதா, மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    சாலை பணியின் காரணமாக போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் விபத்துகளை தடுத்திடும் வகையில் விழுப்புரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பிரிவு கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்தினை கட்டுப்படுத்திடவும்,

    சீர்படுத்த வேண்டும்

    சென்டாக் மாணவர் சேர்க்கையில் புதுவையை சார்ந்தவர் என்பதை உறுதி செய்ய இருப்பிடச் சான்று கோரப்பட வேண்டும், மேலும் சான்றுகள் சரிபார்க்கப்பட வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • ஆரோவில் சர்வதேச நகரின் அருகே இடை யஞ்சாவடி குயிலாப்பாளையம் சாலை இரும்பை வருவாய் கிராமத்தில் விழுப்புரம் அடுத்த தொரவி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் 2 ஏக்கர் 82 செண்ட் நிலத்தை வாங்கியுள்ளார்.
    • ஆரோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என கூறி அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

    புதுச்சேரி:

    ஆரோவில் சர்வதேச நகரின் அருகே இடை யஞ்சாவடி குயிலாப்பாளையம் சாலை இரும்பை வருவாய் கிராமத்தில் விழுப்புரம் அடுத்த தொரவி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் 2 ஏக்கர் 82 செண்ட் நிலத்தை வாங்கியுள்ளார்.

    ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் கட்டி அதில் விவசாயம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியான மற்றொரு இடத்தில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது அங்கு வந்த 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அந்தப் பணியை தடுத்து நிறுத்தினர்‌.

    மேலும் அந்த இடம் ஆரோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என கூறி அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

    இதனால் இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் வந்து இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த நிலையில் அந்த இடத்தில் வெளிநாட்டினர் பணி செய்ய விடாமல் முற்றுகையிட்டு அமர்ந்தனர்.

    இதுகுறித்து ஆரோவில் போலீசில் சுப்பிரமணியன் புகார் அளித்துள்ளார். அந்த இடத்தில் ஆரோ வில் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×