என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • செப்டம்பர் மாதம் 15-ந் தேதி பொறியாளர் பாரத் ரத்னா விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினத்தை தேசிய பொறியாளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சிறப்பு விருந்தினராக புதுவை அரசு சுற்றுச் சூழல் துறை சீனியர் பொறியாளர் ரமேஷ் கலந்து கொண்டு "சமூக வளர்ச்சியில் பொறியாளர்களின் பங்கு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.

    புதுச்சேரி:

    செப்டம்பர் மாதம் 15-ந் தேதி பொறியாளர் பாரத் ரத்னா விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினத்தை தேசிய பொறியாளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுபோல புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தேசிய என்ஜினீயர் தின விழா கொண்டாடப்பட்டது.

    இப்பல்கலைக்கழகத்தில் சிறப்பான உலகிற்கு சிறந்த பொறியாளர்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    கருத்தரங்கிற்கு சிவில் பொறியியல் பிரிவு தலைவர் பழனிவேல் வரவேற்றார். பேராசிரியர் சரவணன் நோக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக புதுவை அரசு சுற்றுச் சூழல் துறை சீனியர் பொறியாளர் ரமேஷ் கலந்து கொண்டு "சமூக வளர்ச்சியில் பொறியாளர்களின் பங்கு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.

    ரமேஷ்சுக்கு பல்கலைக்கழகம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் பொறியாளர் குமார் நன்றி கூறினார்.

    • புதுவை ராஜீவ்காந்தி அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் துணையோடு எதிர்கால ஆராய்ச்சிகளுக்காக வழிமுறைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • புதுவை மாணவர்கள் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் மேல் படிப்பை தொடர்வதற்கு சாத்தியக்கூறுகளையும் அதற்கான வழிமுறைகளையும் விளக்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை ராஜீவ்காந்தி அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் துணையோடு எதிர்கால ஆராய்ச்சிகளுக்காக வழிமுறைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மெல்போர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜியோ வாணி தர்சினி, டாக்டர் சுரீந்தர் சிங் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். புதுவை மாணவர்கள் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் மேல் படிப்பை தொடர்வதற்கு சாத்தியக்கூறுகளையும் அதற்கான வழிமுறைகளையும் விளக்கினர்.

    மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் புதுவை மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    கல்லூரி முதல்வர் டாக்டர் செழியன் கல்லூரியின் எதிர்கால திட்டம் மற்றும் ஆராய்ச்சிகளை மெல்போர்ன் பல்கலையுடன் இணைந்து செய்லாற்றுவது குறித்து பேசினார்.

    தொடர்ந்து, மெல்போர்ன் பல்கலைக்கழக பேராசிரி–யர்கள் மேட்டுப்பாளையம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

    • பருவநிலை மாற்றத்தால் இயற்கையாகவே அனைவருக்கும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.
    • பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு காய்ச்சல் அதிகமாக பரவுகின்றது.

    புதுச்சேரி:

    முதலியார் பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் புதுவை கல்வி துறை அமைச்சர் நமச்சிவாத்துக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் தற்போது பருவநிலை மாறி வருகின்றது. பருவநிலை மாற்றத்தால் இயற்கையாகவே அனைவருக்கும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள். அதிலும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.

    தற்சமயம் பருவநிலை காய்ச்சல் அதிக அளவில் குழந்தைகளை தாக்கி வருகின்றது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு காய்ச்சல் அதிகமாக பரவுகின்றது.

    குழந்தைகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதைவிட உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். மருத்துவர்களின் கருத்துப்படி இன்னும் 2-3 வாரங்களில் சகஜ நிலைக்கு திரும்பி விடும் என்கின்றனர்.

    எனவே 1-ம் வகுப்பு முதல் 5-ந் வகுப்பு வரை உள்ள தொடக்க பள்ளி மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையிருப்பின் ஆன்லைன் வகுப்பு நடத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • நீர் நிலைகளை ரூ.22.50 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்தும் பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
    • நல்லவாடு மீனவ கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய நபர்களுக்கு பணி அட்டையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள நீர் நிலைகளை ரூ.22.50 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்தும் பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.

    இந்த பணியின் கீழ் நோணாங்குப்பம் பகுதியில் உள்ள தீர்த்தகுளம் ரூ.1.41 லட்சம், அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள சம்போடை குளம் ரூ.3.45 லட்சம், பூரணாங்குப்பம் பகுதியில் உள்ள சந்திர குளம் ரூ.1.29 லட்சம், கொருக்கமேடு பகுதியில் உள்ள பரப்பன்குளம் ரூ.1.95 லட்சம், அபிஷேகப்பாக்கம் பகுதியில் தேடுவார் நத்தம் முதல் வண்ணான் குளம் வரை உள்ள ஊரல் வாய்க்கால் ரூ.6.48 லட்சம், டி.என்.பாளையம் பகுதியில் உள்ள பெரியகுட்டை குளம் ரூ.6.48 லட்சம் மதிப்பிலும் தூர்வாரி ஆழப்படுத்தி சுத்தம் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து நல்லவாடு மீனவ கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய நபர்களுக்கு பணி அட்டையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.

    நிகழ்ச்சியின் போது அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், இளநிலை பொறியாளர் சிவஞானம், பணி ஆய்வாளர் நற்குணம், பா.ஜனதா தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.காங்கிரஸ் தொகுதி தலைவர் மனோகர், கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் சக்திவேல், பூபாலன், ஹேமாமாலினி, மாயகிருஷ்ணன், செல்வி, மோகன், ராஜா, வீரபாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மின்துறை அலுவலகத்தில் லட்சக்கணக்கில் பணம் கையாடல் செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
    • ஊழியரிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 2 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை வம்பாகீரப்பாளையத்தில் மின்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்துக்கு ஜி.எஸ்.டி அலுவலகத்தில் இருந்து சம்மன் ஒன்று வந்தது. அதில் கடந்த 4 வருடங்களாக ஜி.எஸ்.டி வரி செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து மின்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் மின்துறை அலுவலகம் கணக்கு வைத்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பண பரிவர்த்தனைக்கான அறிக்கையை பெற்று ஆய்வு செய்தனர். அதில் லட்சக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை பார்த்து மின்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இந்த சம்பவம் குறித்து மின்துறை அலுவலக வருவாய் தணிக்கையாளர் மோகன்குமார் ஓதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பணமோசடியில் ஈடுபட்டது மின்துறையில் கேஷியராக பணிபுரியும் மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த யோகேஷ் என்பது தெரியவந்தது. மேலும் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்கு யோகேசின் வங்கி கணக்கு என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் யோகேசை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜி.எஸ்.டி வரி செலுத்தவேண்டிய ரூ. 55 லட்சத்து 75 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் பல்வேறு தவணைகளாக அவருடைய சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

    மேலும் கையாடல் செய்த பணத்தில் தன்னுடைய கடனை அடைத்ததாகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் செலவழித்ததாக தெரிவித்துள்ளார். அவரிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 2 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • புதுவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரைநிலைக் கழகத்தின் மூலம் தேசிய கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடன்களை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரைநிலைக் கழகத்தின் மூலம் தேசிய கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இத்திட்டத்தின் கீழ் பல்வேறு கல்லூரிகளில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்ப, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் புதுவையை சேர்ந்த 20 ஆதிதிராவிட மாணவ-மாணவிகளுக்கு கல்விக் கடனாக ரூ.22 லட்சத்து 7 ஆயிரத்து 228 கல்விக்கடன் தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடன்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அரசு கொறடா ஆறுமுகம், முதல்வரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரைநிலைக் கழக மேலாண் இயக்குநர் தயாளன், துறை இயக்குநர் யஷ்வந்தயா, பொது மேலாளர் ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • முத்திரையர்பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
    • அரசு கொறடாவுமான ஏ.கே.டி.ஆறுமுகம் தனது சொந்த செலவில் பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    புதுச்சேரி:

    முத்திரையர்பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட இந்திராநகர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அரசு கொறடாவுமான ஏ.கே.டி.ஆறுமுகம் தனது சொந்த செலவில் பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படி அப்பள்ளியில் பயிலும் 500 மாணவ-மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் சிக்கன் பிரியாணி விருந்து தயார் செய்யப்பட்டது. அதனை ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். அனைவரும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்ட மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும், ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ.வுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

    • புதுவை பாப்ஸ்கோ ஊழியர்கள் நலச்சங்கத்தினர்(ஏ.ஐ.டி.யூ.சி.) சட்டசபை அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தீபாவளி பசார் மானியத்தொகை ரூ.62 லட்சம் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பாப்ஸ்கோ ஊழியர்கள் நலச்சங்கத்தினர்(ஏ.ஐ.டி.யூ.சி.) சட்டசபை அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    55 மாத சம்பளம் வழங்க வேண்டும். தீபாவளி பசார் மானியத்தொகை ரூ.62 லட்சம் வழங்க வேண்டும். பாப்ஸ்கோ ரேஷன்கடைகளுக்கு 6 ஆண்டு வாடகை பாக்கியை தர வேண்டும்.

    மதுபான ஆலைகளை தனியாருக்கு வழங்கி பாப்ஸ்கோவை புனரமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    2-ம் நாளாக வயிற்றில் ஈரத்துணி அணிந்து போராட்டம் நடத்தினர். போராட்டாத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.

    பாப்ஸ்கோ ஊழியர் நல சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் மோகன், நிர்வாகிகள் குணா, கோவர்த்தனன்,பிரபு, ஏழுமலை, அமுதா , சரஸ்வதி, அமுதவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயல் தலைவர் அபிஷேகம் , ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • புதுவை குருசுக்குப்பத்தில் கிருஷ்ணராசு செட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
    • 500-க்கும் மேற்பட்ட மாணவிகளையும் ஒருங்கிணைத்து குருசுக்குப்பம் பள்ளியில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை குருசுக்குப்பத்தில் கிருஷ்ணராசு செட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடற்கரை சாலையில் உள்ள சுப்பிரமணிய பாரதி பள்ளியின் கட்டிடம் இடியும் நிலையில் உள்ளதால் அங்கு படித்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளையும் ஒருங்கிணைத்து குருசுக்குப்பம் பள்ளியில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

    2 பள்ளிகளும் ஒருங்கிணைக்கப்பட்டதால் ஒரு சில ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குருசுகுப்பம் அரசு பள்ளி மாணவிகள் பள்ளியின் நுழைவாயில் முன்பு திடீரென வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து பள்ளி மாணவிகள் கூறியதாவது:-

    சுப்ரமணிய பாரதி பள்ளிக்கும், குருசுகுப்பம் பள்ளி மாணவிகளுக்கும் ஒருங்கிணைத்து பாடம் எடுக்கப்படுகிறது. ஆனால் போதிய ஆசிரியர்கள் இல்லை. இதனால் பாடம் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

    மேலும் மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாரபட்சம் காட்டுகின்றனர். 2 பள்ளி மாணவிகளும் அமரும் அளவுக்கு இட வசதியும் இல்லை, குடிநீர் பற்றாக்குறை உள்ளது. பல மணி நேரம் காத்திருந்து கழிவறை செல்ல வேண்டியுள்ளது. இந்த குறைபாடுகளை களைய வேண்டும்.

    இவ்வாறு மாணவிகள் கூறினர்.

    • சமீபகாலமாக மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் பூங்காவுக்குள் வந்து புகைப்பிடிப்பது மற்றும் உறங்குவது , சுற்றுலா பயணிகளை கிண்டல்செய்வது என தொடர்கிறது.
    • நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் அவ்வப்போது ரோந்து வந்து மாணவர்களை விரட்டியடித்து வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை, கவர்னர் மாளிகை மையத்தில் பாரதி பூங்கா உள்ளது.

    இங்கு வேளையில் மக்கள் நடை பயிற்சி செல்வர். சுற்றுலா பயணிகள் வந்து குழந்தைகளோடு விளையாடி மகிழ்வர்.

    சமீபகாலமாக மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் பூங்காவுக்குள் வந்து புகைப்பிடிப்பது மற்றும் உறங்குவது , சுற்றுலா பயணிகளை கிண்டல்செய்வது என தொடர்கிறது.

    நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் அவ்வப்போது ரோந்து வந்து மாணவர்களை விரட்டியடித்து வந்தனர்.

    இன்று 10 மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் புத்தக பையுடன் பூங்காவில் அமர்ந்து புகை பிடித்துக்கொண்டிருந்தனர். தகவலறிந்த பெரியகடை போலீசார் விரைந்து வந்து அனைவரையும் விரட்டி பிடித்து வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

    அனைவரும் அரசு பள்ளி மாணவர்கள் என்பதை அறிந்து அவர்களை அந்தந்த பள்ளியில் போலீசார் இறக்கி விட்டு பள்ளி நிர்வாகத்திடம் தகவலை தெரிவித்தனர்.

    பள்ளி நேரத்தில் மாணவர்கள் பூங்கா வருவதை தடுக்க தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • புதுவை காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட பிள்ளைச்சாவடி கிராமத்தில் இரு தரப்பினரிடையே நிலவி வந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக நீண்ட காலமாக புதிய கிராம பஞ்சாயத்தார் நியமனம் செய்யப்படவில்லை.
    • அப்பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரத்திடம் முறையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட பிள்ளைச்சாவடி கிராமத்தில் இரு தரப்பினரிடையே நிலவி வந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக நீண்ட காலமாக புதிய கிராம பஞ்சாயத்தார் நியமனம் செய்யப்படவில்லை.

    இதனால் கிராம கோவில் திருப்பணிகள் போன்ற முக்கியப் பணிகள் முடங்கின.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரத்திடம் முறையிட்டனர். கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு இருதரப்பினரிடையே எம்.எல்.ஏ. சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி கிராமத்தில் அமைதியான சூழல் நிலவிடவும் புதிய கிராம பஞ்சாயத்தார்களை நியமனம் செய்திடவும் வழிவகை செய்தார்.

    இதன் விளைவாக புதிதாக கிராம பஞ்சாயத்தார் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    கிராம பஞ்சாயத்தார் எவ்வித கருத்து வேறுபாடும் இன்றி கிராம முன்னேற்றத்தை மட்டுமே இலக்காக கொண்டு செயல்பட்டு பல ஆண்டு காலமாக முடங்கிக் கிடக்கும் கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கல்யாண சுந்தர எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

    • ஆரோவில் சர்வதேச நகரின் அருகே இடையஞ்சாவடி குயிலாப்பாளையம் சாலை இரும்பை வருவாய் கிராமத்தில் விழுப்புரத்தை அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் 2 ஏக்கர் 82 செண்ட் நிலத்தை வாங்கினார்.
    • வெளிநாட்டினர் அந்தப் பணியை தடுத்து நிறுத்தி அவர் அமைத்திருந்த கம்பி வேலியை உடைத்தனர்.

    புதுச்சேரி:

    ஆரோவில் சர்வதேச நகரின் அருகே இடையஞ்சாவடி குயிலாப்பாளையம் சாலை இரும்பை வருவாய் கிராமத்தில் விழுப்புரத்தை அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் 2 ஏக்கர் 82 செண்ட் நிலத்தை வாங்கினார்.

    ஒரு பகுதியில் சுற்றுச் சுவர் கட்டி அதில் விவசாயம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக மற்றொரு இடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜே.சி.பி. இயந்திர மூலம் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது அங்கு வந்த 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அந்தப் பணியை தடுத்து நிறுத்தி அவர் அமைத்திருந்த கம்பி வேலியை உடைத்தனர்.

    இதுகுறித்து சுப்பிரமணியன் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் வாங்கிய இடத்திற்கு முறைப்படியான ஆவணங்கள் வைத்துள்ளார். மேலும் இந்த ஆதாரங்களை சுப்பிரமணியன் ஆரோவில் பவுண்டேஷன் நிர்வாகத்திடமும் வருவாய் துறையிடமும் அந்த ஆவணங்களை வழங்கி உள்ளார்.

    இன்று அவர் மீண்டும் பணியாளர்களை வைத்து இடத்தை சுத்தம் செய்ய முற்பட்ட போது மரங்களை வெட்டக்கூடாது என கூறி 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்களை வலுக்கட்டயமாக வெளியேற்றினர்.

    இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் வந்து இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இந்த இடம் பிரச்சினை தொடர்பாக வெளிநாட்டவர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    ×