என் மலர்
புதுச்சேரி

வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
அரசு பள்ளி மாணவிகள் திடீர் போராட்டம்
- புதுவை குருசுக்குப்பத்தில் கிருஷ்ணராசு செட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
- 500-க்கும் மேற்பட்ட மாணவிகளையும் ஒருங்கிணைத்து குருசுக்குப்பம் பள்ளியில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுவை குருசுக்குப்பத்தில் கிருஷ்ணராசு செட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடற்கரை சாலையில் உள்ள சுப்பிரமணிய பாரதி பள்ளியின் கட்டிடம் இடியும் நிலையில் உள்ளதால் அங்கு படித்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளையும் ஒருங்கிணைத்து குருசுக்குப்பம் பள்ளியில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
2 பள்ளிகளும் ஒருங்கிணைக்கப்பட்டதால் ஒரு சில ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குருசுகுப்பம் அரசு பள்ளி மாணவிகள் பள்ளியின் நுழைவாயில் முன்பு திடீரென வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பள்ளி மாணவிகள் கூறியதாவது:-
சுப்ரமணிய பாரதி பள்ளிக்கும், குருசுகுப்பம் பள்ளி மாணவிகளுக்கும் ஒருங்கிணைத்து பாடம் எடுக்கப்படுகிறது. ஆனால் போதிய ஆசிரியர்கள் இல்லை. இதனால் பாடம் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
மேலும் மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாரபட்சம் காட்டுகின்றனர். 2 பள்ளி மாணவிகளும் அமரும் அளவுக்கு இட வசதியும் இல்லை, குடிநீர் பற்றாக்குறை உள்ளது. பல மணி நேரம் காத்திருந்து கழிவறை செல்ல வேண்டியுள்ளது. இந்த குறைபாடுகளை களைய வேண்டும்.
இவ்வாறு மாணவிகள் கூறினர்.






