என் மலர்
புதுச்சேரி

டி.வி. மெக்கானிக் வீட்டுக்கு மின் கட்டணம் ரூ.12 லட்சம்
- சரவணன் வீட்டுக்கு வழக்கமாக மாதந்தோறும் ரூ.800க்குள் மின்கட்டணம் வரும்.
- கடந்த மாதம் மின் கட்டணமாக ரூ.690 வந்தது.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை விஸ்வநாதர் நகர், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் சரவணன், டி.வி. மெக்கானிக் வேலை செய்து வருகிறார். மேலும் இரவில் லாஸ்பேட்டையில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
சரவணன் வீட்டுக்கு வழக்கமாக மாதந்தோறும் ரூ.800க்குள் மின்கட்டணம் வரும். அதுபோல் கடந்த மாதம் மின் கட்டணமாக ரூ.690 வந்தது.
இந்த நிலையில் மாதம் மின் கட்டணமாக ரூ.12 லட்சத்து 26 ஆயிரத்து 944 வந்தது. இதைக்கண்டு சரவணன் அதிர்ச்சியடைந்து மின் அலுவலகத்துக்கு சென்று புகார் செய்தார்.
அப்போது அதிகாரிகள், மின்சார ரீடிங் 21 ஆயிரத்து 115 என்பதற்கு பதிலாக தவறுதலாக கடைசியில் ஒரு பூஜ்ஜியம் சேர்த்துவிட்டனர். இதனால் 2 லட்சத்து 11 ஆயிரத்து 150 என வந்துவிட்டது என்றும் இந்த கட்டணத்தை கணக்கிட்டு ரூ.12 லட்சத்து 26 ஆயிரத்து 944 என குறிப்பிட்டுவிட்டதாக வருத்தம் தெரிவித்தனர்.
மேலும் அதை சரி செய்து தருவதாக கூறினர். இதன்பின்னரே சரவணன் நிம்மதி பெருமூச்சுடன் வீட்டுக்கு திரும்பினார். இந்த மின் கட்டண சம்பவம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.






