என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை கல்லூரிகளில் தி.மு.க. மாணவர் அமைப்பு தொடக்க விழா மாநில தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.
    • மாணவர்கள் புதுவையின் வரலாற்றையும், ஆட்சி நிர்வாகத்தையும் தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை கல்லூரிகளில் தி.மு.க. மாணவர் அமைப்பு தொடக்க விழா மாநில தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தி.மு.க. மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    மாணவர்கள் புதுவையின் வரலாற்றையும், ஆட்சி நிர்வாகத்தையும் தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.புதுவை அரசு நிர்வாகத்தில் மத்திய அரசால் அனுப்பி வைக்கப்படும் கவர்னர், தலைமை செயலர், நிதி செயலர் ஆகியோரே ஆட்சி செய்யும் அவல நிலை உள்ளது.

    இது போக்கப்பட வேண்டும். பா.ஜனதா பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு வருகின்றது. இவைகளை தெரிந்து, புரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் மாணவர்கள் இருந்தால் மட்டுமே நாம் ஒற்றுமையுடன் வாழ முடியும்.

    இவ்வாறு சிவா பேசினார்.

    நிகழ்ச்சியில் உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால், மாநில துணை அமைப்பாளர் அமுதாகுமார், தொகுதி செயலாளர் சக்திவேல், இலக்கிய அணி சங்கர், தர்மன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நசீர், மாணவர் அணி துணை அமைப்பாளர் அமுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன் செய்திருந்தார்.

    • புதுடெல்லி சென்றுள்ள புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மத்திய ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
    • ஏனாம் மக்கள் புதுவைக்கு 120- கி.மீ. பஸ் பயணம் செய்கின்றனர். எனவே இந்த சேவையை புதுவை வரை நீட்டித்து தர வேண்டும் என கோரினார்.

    புதுச்சேரி:

    புதுடெல்லி சென்றுள்ள புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மத்திய ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

    மனுவில், புதுவை மாநில பகுதிகளில் ஒன்றான ஏனாம் பிராந்தியம் புதுவையிலிருந்து 800 கி.மீ. தொலைவில் உள்ளது. செங்கல்பட்டில் இருந்து காக்கிநாடா செல்லும் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலை அப்பகுதி மக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ெரயில் செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படுகிறது.

    இதனால் ஏனாம் மக்கள் புதுவைக்கு 120- கி.மீ. பஸ் பயணம் செய்கின்றனர். எனவே இந்த சேவையை புதுவை வரை நீட்டித்து தர வேண்டும் என கோரினார். இந்த கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதியளித்தார். 

    • புதுவையில் தனியார் பஸ்கள் ஓடவில்லை. பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
    • எம்.ஜி.ஆர். சிலை அருகே பெட்ரோல் பங்க் எதிரே பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த மற்றொரு தமிழக அரசு பஸ்சின் கண்ணாடியையும் மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர்.

    புதுச்சேரி:

    இந்து மதத்தையும் இந்து பெண்களையும் இழிவுபடுத்தி பேசியதாக கூறி தி.மு.க. எம்.பி. ராசாவுக்கு பா.ஜனதா, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    ஆ.ராசா பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்து முன்னணி மற்றும் இந்து சமுதாய அமைப்புகள் சார்பில் இன்று புதுவையில் பந்த் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    இதனால் இன்று புதுவையில் தனியார் பஸ்கள் ஓடவில்லை. பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. டெம்போக்களும் ஓடவில்லை. தமிழக அரசு பஸ்கள் மட்டுமே காலையில் இயக்கப்பட்டது.

    இன்று காலை சுமார் 5 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த தமிழக அரசு பஸ் வந்தது. வில்லியனூர் மேம்பாலம் அருகே மின்துறை அலுவலகம் எதிரே அந்த பஸ்சை வழிமறித்த கும்பல் பஸ்சின் கண்ணாடியை அடித்து நொறுக்கியது. அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தி விட்டார்.

    மேலும் எம்.ஜி.ஆர். சிலை அருகே பெட்ரோல் பங்க் எதிரே பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த மற்றொரு தமிழக அரசு பஸ்சின் கண்ணாடியையும் மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர்.

    பஸ் பாஸ் சாலையின் அருகே மற்றொரு தமிழக அரசு பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வில்லியனூர் போலீசார் வந்து பஸ்சின் கண்ணாடியை உடைத்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தமிழக அரசு பஸ்சை குறி வைத்து அடுத்தடுத்து 3 இடங்களில் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பதட்டத்தை தணிக்க வில்லியனூர் பகுதியில் ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • புதுவையிலிருந்து காலையில் அண்டை மாநிலமான தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்ட பணிக்கு செல்வோர் அரசு பஸ்களில் சென்றனர்.
    • சேதாரப்பட்டு, கரசூர், தட்டாஞ்சாவடி, திருபுவனை தொழிற்பேட்டைகளிலும் குறைவான தொழிற்சாலைகள் இயங்கின.

    புதுச்சேரி:

    இந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து, இன்று புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்திருந்தது.

    இதன்படி காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது. போராட்டத்தால் நகர பகுதியில் முக்கிய சாலைகளான மறைமலை அடிகள் சாலை, அண்ணாசாலை, நேருவீதி, காமராஜர் வீதி, படேல் சாலை, புஸ்சி வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட சாலைகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. சிறிய கடைகள் கூட அடைக்கப்பட்டிருந்தது.

    புறநகர், கிராமப்புற பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. புதிய பஸ் நிலையத்தில் தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது. அதேநேரத்தில் தமிழகம், புதுவை அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கியது.

    புதுவையிலிருந்து காலையில் அண்டை மாநிலமான தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்ட பணிக்கு செல்வோர் அரசு பஸ்களில் சென்றனர். சென்னை செல்லும் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் இருந்தது. 2 அல்லது 3 பஸ்களில் பயணிகள் நிரம்பிய பிறகு போலீஸ் பாதுகாப்புடன் மாநில எல்லை வரை கொண்டு சென்று போலீசார் அனுப்பினர்.

    இருப்பினும் குறைவான அரசு பஸ்களே இயங்கியது. தமிழகத்திலிருந்து புதுவை வழியாக இயக்கப்பட்ட தமிழக அரசு பஸ்களும், புதுவையிலிருந்து இயக்கப்பட்ட அரசு பஸ்களும் குறைவாகவே இயக்கப்பட்டது. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் கல்லூரிகள் இயங்கியது. மாணவர்கள் கல்லூரி பஸ்களில் ஏறிச்சென்றனர்.

    அரசு பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடக்கிறது. இதனால் பெற்றோர்கள் மாணவர்களை இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். சேதாரப்பட்டு, கரசூர், தட்டாஞ்சாவடி, திருபுவனை தொழிற்பேட்டைகளிலும் குறைவான தொழிற்சாலைகள் இயங்கின. தியேட்டர்களில் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கியது.

    பெரியமார்க்கெட், சின்ன மார்க்கெட், அரியாங்குப்பம், வில்லியனூர், முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளில் மார்க்கெட்டில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    பந்த் போராட்டத்தையொட்டி நகரெங்கும் சாலை சந்திப்புகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்களில் நகர பகுதி முழுவதும் போலீசார் வலம் வந்தனர்.

    • புதுவை யூனியன் கிரிக்கெட் அகாடமி மற்றும் சங்கத்தின் சார்பாக 14-வது வருட டி20 கிரிக்கெட் லீக் மற்றும் நாக்அவுட் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.
    • புதுவை கோரிமேட்டில் உள்ள காவலர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் புதுவை காவல்துறை கிரிக்கெட் அணியும் வில்லியனூரைச் சேர்ந்த யூவி கிரிக்கெட் அணியும் மோதியது.

    புதுச்சேரி:

    புதுவை யூனியன் கிரிக்கெட் அகாடமி மற்றும் சங்கத்தின் சார்பாக 14-வது வருட டி20 கிரிக்கெட் லீக் மற்றும் நாக்அவுட் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

    போட்டியில் புதுவை காவல்துறை அணி , வழக்கறிஞர் கிரிக்கெட் அணி, உள்பட 64 கிரிக்கெட் அணிகள் பங்கு பெற்றன. லீக் மற்றும் நாக் அவுட் போட்டிகள் மூலம் மொத்தம் 68 போட்டிகள் நடந்தது. புதுவையைச் சேர்ந்த 1002 உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    புதுவை கோரிமேட்டில் உள்ள காவலர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் புதுவை காவல்துறை கிரிக்கெட் அணியும் வில்லியனூரைச் சேர்ந்த யூவி கிரிக்கெட் அணியும் மோதியது. இதில் யூவி கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.புதுவை யூனியன் கிரிக்கெட் அகாடமி சங்கத்தின் தலைவர் ராமச்சந்திர மூர்த்தி வரவேற்றார்.முதல் பரிசு பெற்ற வில்லியனூர் யூவி கிரிக்கெட் அணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கோப்பையுடன் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கினார்.

    2-வது பரிசு பெற்ற புதுவை காவல்துறை அணிக்கு ரூ 25 ஆயிரம் ரொக்க பரிசுடன், கோப்பையும், 3-வது பரிசு பெற்ற லாஸ்பேட் கிரிக்கெட் அணிக்கு கோப்பையுடன் ரூ.15 ஆயிரமும், 4-வது பரிசு பெற்ற சோமு கிரிக்கெட் அணிக்கு ரூ.10 ஆயிரத்துடன் கோப்பையும் வழங்கப்பட்டது.

    இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருது யூவி அணி வீரர் வெங்கட்டுக்கும், சிறந்த தொடர் நாயகன் விருது காவல்துறை அணி பிரபுவுக்கும், சிறந்த பந்து வீச்சாளர் விருது யூவி அணி அபிக்கும், சிறந்த வருங்கால விளையாட்டு வீரர் விருது தர்மாவுக்கும் வழங்கப்பட்டது.

    தொடரின் சதம் அடித்த முத்திரபாளையம் அணி வீரர் வீராவுக்கும், பிரெஞ்ச் ஸ்டார் அணி வீரர் ராஜேசுக்கும், ஒரே போட்டியில் 6 விக்கெட் எடுத்த நியூ ஸ்டார் அணி வீரர் நித்தியானந்தம் ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், செந்தில்குமரன், ரோட்டரி துணை கவர்னர் அன்பழகன், மதிவாணன் ஆகியோர் பங்கேற்றனர். போட்டிகளை சிறப்பாக நடத்த உதவியாக இருந்த நடுவர் மற்றும் ஸ்கோரருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 

    • கணவர் குடித்து விட்டு தகராறு செய்ததால் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சுபா வீட்டில் மகாளய அமாவாசையையொட்டி பூஜைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

    புதுச்சேரி:

    கணவர் குடித்து விட்டு தகராறு செய்ததால் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    லாஸ்பேட்டை மகாவீர்நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சுபா(வயது20). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவரும் சாமிபிள்ளை தோட்டம் அருகே தவமணி நகரை சேர்ந்த பெயிண்டர் பாலாஜி என்பவரும் கடந்த 1½ வருடத்துக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

    சமீப காலமாக பாலாஜி மது குடித்து விட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார். சுபா வீட்டில் மகாளய அமாவாசையையொட்டி பூஜைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அப்போது மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த பாலாஜி சுபாவிடம் தகராறு செய்தார். இதனால் கணவரிடம் கோபித்துகொண்டு சுபா தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

    சிறிது நேரம் கழித்து குழந்தையுடன் சுபா அறைக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். வெகுநேரமாக கதவு திறக்கப்படவில்லை.

    இந்தநிலையில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டதால் சுபாவின் பெற்றோர் கதவை தட்டினர். ஆனால் சுபா கதவை திறக்கவில்லை. இதனால் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை அறிந்த சுபாவின் பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சுபா சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவரது தந்தை முருகேசன் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சுபாவுக்கு திருமணமாகி 1½ வருடமே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து தாசில்தார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் சுந்தர நாட்டிய கேந்திர பரதநாட்டிய மாணவிகளின் சலங்கை பூஜை விழா கொண்டாடப்பட்டது.
    • புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டு களித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் சுந்தர நாட்டிய கேந்திர பரதநாட்டிய மாணவிகளின் சலங்கை பூஜை விழா கொண்டாடப்பட்டது.

    தலைமை விருந்தினராக புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டு களித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

    மேலும் பரதநாட்டிய மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க செயலாளர் கராத்தே சுந்தரராஜன் விழாவுக்கு தலைமை தாங்கினார்.

    தேசிய மாணவர் படை தலைவர் சுப்பிரமணியன், நாடகவியல் துறை உதவி பேராசிரியர் முருகவேல், இசை பண்பாட்டு துறை குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுந்தர நாட்டிய கேந்திர பள்ளியின் குரு. சுந்தரமூர்த்தி மற்றும் விஜய் ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருக்கனூர்-நெட்டப்பாக்கம் பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அப்போது அங்கு ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர்-நெட்டப்பாக்கம் பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை பகுதியில் 2 வாலிபர்கள் மது குடித்து விட்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களை மிரட்டி ரகளை செய்வதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தமிழக பகுதியான பொம்பூரை அடுத்த இளையாண்டிபட்டு கிராமத்தை சேர்ந்த மோகன்(35) மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமார்(29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் நெட்டப்பாக்கம் அருக ஏரிப்பாக்கத்தில் சாராயக்கடை அருகே மது குடித்து விட்டு ரகளை செய்த ராகவன் பேட்டையை சேர்ந்த கலைவாணன் (30) மற்றும் மடுகரை-சிறுவந்தாடு சந்திப்பு ரோட்டில் மது குடித்து விட்டு ரகளை செய்த வளவனூர் அருகே ஆளையாம்பாளையத்தை சேர்ந்த செந்தில்(44) ஆகிய 2 பேரை நெட்டப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் மங்கலத்தில் மதுக்கடை அருகே மது குடித்து விட்டு போதையில் அவ்வழியே சென்ற பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்த கிளிஞ்சிக்குப்பம் புதுநகரை சேர்ந்த கடம்பாகுளம்(25) என்பவரை மங்கலம் போலீசார் கைது செய்தனர்.

    • ஊசுடு தொகுதிக்குட்பட்ட துத்திப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியில் அமைந் துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயலற்ற தன்மையில் இருந்து வந்தது.
    • அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமாரின் நடவடிக்கையால் குடிநீர் நீர் தேக்க தொட்டி அருகில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் புதியதாக அமைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதிக்குட்பட்ட துத்திப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியில் அமைந் துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயலற்ற தன்மையில் இருந்து வந்தது.

    இதனால் பாதிக்கப்பட்ட அந்த ஊர் மக்கள் அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமாரிடம் மனு அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து, அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமாரின் நடவடிக்கையால் குடிநீர் நீர் தேக்க தொட்டி அருகில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் புதியதாக அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது.

    இதில் அமைச்சர் சாய். ஜெ.சரவணன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் வாசு, இளநிலை பொறியாளர் வெங்கடேசன், வில்லியனூர் கொம்யூன் பஞ் சாயத்து இளநிலை பொறியாளர் கருத்தையன், பா.ஜனதா தொகுதி தலைவர் தியாகராஜன், கிளை தலைவர் தமிழரசன், தொகுதி செயற்குழு உறுப்பினர் கனகு, தொகுதி குடிநீர் பொறுப்பாளர் பாலு மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருபுவனை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் அங்காளன். இவர் தற்போது பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.
    • தனது தொகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறி அவர் உண்ணாவிரதம் இருந்தார்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் அங்காளன். இவர் தற்போது பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். கடந்த  அங்காளன் புதுவை சட்டசபை வளாகத்தில் உண்ணாவிரத்தில் ஈடுப்பட்டார். தனது தொகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறி அவர் உண்ணாவிரதம் இருந்தார். அவர் நிருபர்களிடம் கூறும் போது என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட வேண்டும்.

    புதுவையில் பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும் என கூறினார். இதற்கு திருபுவனை தொகுதியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்து இருந்தனர்.

    அங்காளனுக்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர்.காங்கிரசார் திருபுவனை தொகுதியில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர். இதனை மர்ம நபர்கள் கிழித்துவிட்டனர். இதனால் என்.ஆர்.காங்கிரசார் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் ஒன்று திரண்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

    அங்காளனுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம்-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது எம்.எல்.ஏ.வுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர் இந்த மறியலால் விழுப்புரம்-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.

    இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்களிடம் திருபுவனை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் பேச்சுவார்த்தை நடத்தி போஸ்டர் ஒட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பருவநிலை மாற்றம் காரணமாக புதுவையில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது.
    • மைய நிர்வாகி மதன் பாபு வீடுவீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்குவதை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    பருவநிலை மாற்றம் காரணமாக புதுவையில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது.

    வைரஸ் காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோலை நகர் முழுவதும் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு தி.மு.க. பொதுமக்கள் சேவை மையம் மூலம் வழங்கப்பட்டது. மைய நிர்வாகி மதன் பாபு வீடுவீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்குவதை தொடங்கி வைத்தார்.

    தி.மு.க. தொகுதி செயலாளர் சவுரிராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவி,தனசேகர் மற்றும் எழிலன், கோபிநாத், நவீன், தங்கராசு ,செந்தில் முருகன், சந்திரன், செல்வராஜ், முருகன், மற்றும் பார்த்திபன், ஸ்ரீகாந்த், கார்த்திகேயன், குமரன், ஜவகர் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

    • திருக்கனூர் அருகே உள்ள பொம்பூர் இளங்கோ நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர்.
    • முகாமிற்கு திருக்கனூர் லயன்ஸ் சங்க தலைவர் தமிழ்மணி, செயலாளர் அசாருதீன், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் லயன்ஸ் சங்கம், புதுவை மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொம்பூர் ஊராட்சி மன்றம் , ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து திருக்கனூர் அருகே உள்ள பொம்பூர் இளங்கோ நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர்.

    முகாமிற்கு திருக்கனூர் லயன்ஸ் சங்க தலைவர் தமிழ்மணி, செயலாளர் அசாருதீன், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    பொம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா கஜேந்திரன், கவுன்சிலர் சிவகாமி கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினர்.

    இதில் திருக்கனூர் லயன்ஸ் நிர்வாகிகள் பரந்தாமன், சையது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×