என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்கு மார் ஊர் பெரியோர்களுடன் சந்தித்தார்.
    • அப்போது முத்தியால்பேட்டை தொகுதிக்கு வழங்கப்படும் குடிநீரில் அதிக தாது உப்புக்கள் கலந்துள்ளது.

    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்கு மார் ஊர் பெரியோர்களுடன் சந்தித்தார். அப்போது முத்தியால்பேட்டை தொகுதிக்கு வழங்கப்படும் குடிநீரில் அதிக தாது உப்புக்கள் கலந்துள்ளது. சாதாரணமாக குடிநீரில் 50 முதல் 150 றி.டி.எஸ். அளவுள்ள குடிநீரை பருகுவது மட்டுமே நமது உடல் நலத்திற்கு பாதுகாப்பானது.

    அதே குடிநீரில் றி.டி.எஸ். 1,000-க்கு மேல் இருந்தால் நிச்சயம் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் என்று புகார் தெரிவித்தார். மேலும் முத்தியால்பேட்டை தொகுதி காட்டாமணி குப்பம் குடிநீர் மேல்நிலைத்தேக்க தொட்டிக்கு 6 இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீரில் அதிக அளவு உப்பு உள்ளது. இந்த குடிநீர் முத்தியால்பேட்டை சோலை நகர், வ.உ.சி.நகர், மஞ்சினி நகர், அங்காளம்மன் நகர், விஸ்வநாதன்நகர் ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே , முத்தியால்பேட்டை தொகுதிக்கு வழங்கப்படும் குடிநீரை மாற்றி, குறைந்த தாது உப்புத்தன்மையுடைய, மக்களுக்கு பாதுகாப்பான தரமான குடிநீர் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

    • அரவிந்தர் நினைவு தபால் தலையை பிரதமர் வெளியிடுகிறார்
    • புதுச்சேரி கம்பன் கலை சங்கம் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

    ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    75-வது விடுதலை கொண்டாட்ட அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக கம்பன் கலை சங்கம் சார்பில் புதுச்சேரியில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    அரவிந்தருக்கு பெருமை சேர்க்கும் வகையில், நாணயம் மற்றும் நினைவு தபால் தலையை வெளியிட்டு அவர் உரை நிகழ்த்த உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுவை கொசப்பாளையம் சாத்தானி வீதியை சேர்ந்த தயாளராஜன். இவரது மகன் சுப்பிரமணி வக்கீலுக்கு படித்துள்ளார்.
    • தனது தந்தையுடன் இணைந்து தொழில் செய்து வந்தார்

    புதுச்சேரி:

    புதுவை கொசப்பாளையம் சாத்தானி வீதியை சேர்ந்த தயாளராஜன். இவரது மகன் சுப்பிரமணி வக்கீலுக்கு படித்துள்ளார்.

    தனது தந்தையுடன் இணைந்து தொழில் செய்து வந்தார். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி யோகபிரியா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர்.

    இதனிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் இவரது தாய்-தந்தை இருவரும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். அந்த சோகத்தை மறக்க முடியாமல் சுப்பிரமணி குடிபழக்கத்திற்கு ஆளாகினார். 

    அடிக்கடி நண்பர்களுடன் வெளியில் சென்று குடித்து வந்தார். மனைவி தட்டிக்கேட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டி வந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் சுப்பிரமணி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று நண்பர்களுடன் மது குடித்தார். மாலை 6 மணிக்கு திரும்ப வந்த அவர் மனைவியிடம் பணம் கொடுத்து ஜவுளி வாங்கிக்கொள்ளுமாறு கூறினார்.

    உடனே யோகப்பிரியா ஜவுளி எடுக்க கடைக்கு சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வந்தார். இதனிடையே மது போதையில் இருந்த சுப்பிரமணி வலிப்பு ஏற்பட்டு சாலையிலேயே விழுந்து கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சுப்பிரமணி மனைவியிடம் சாப்பாடு கேட்டார். உடனே யோகபிரியா சாப்பாடு வாங்க வெளியில் சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்தபோது சுப்பிரமணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் தொழிற்சாலை பங்களிப்போடு சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
    • இதனை போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் இயக்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    நெட்டபாக்கம் மும்முனை சந்திப்பில் குற்ற சம்பவங்களை தடுக்க இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை பங்களிப்போடு சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் இயக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், தனியார் தொழிற்சாலை மனித வள மேம்பாட்டு அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் கணேஷ் உட்பட ஊர் பிரமுகர்கள் புருஷோத்தமன், வெங்கடேசன், சரவணன், முருகன், சண்முகம், காந்தி தாஸ், வீரப்பன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம், சத்திரிய சேனா சேவகம், சர்வதேச கேரளா கட்டை விளையாட்டு சம்மேளனம் இணைந்து சர்வதேச கர்லா கட்டை தினம் கொண்டாடப்பட்டது.
    • இந்த சாதனையை பதிவு செய்து சான்றிதழ் வழங்கினார்.

    புதுச்சேரி:

    ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம், சத்திரிய சேனா சேவகம், சர்வதேச கேரளா கட்டை விளையாட்டு சம்மேளனம் இணைந்து சர்வதேச கர்லா கட்டை தினம் கொண்டாடப்பட்டது.

    ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் கர்லாக்கட்டை சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நடைபெற்றது. புதுவை, பல்வேறு வெளிநாடுகள், மாநில, மாவட்டங்களில் இருந்தும் பலர் பங்கேற்றனர். கலைமாமணி ஜோதி செந்தில் கண்ணன் தலைமை வகித்தார். அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனர் ராஜேந்திரன் இந்த சாதனையை பதிவு செய்து சான்றிதழ் வழங்கினார்.

    சத்ரிய சேனா சேவக பொதுச்செயலாளர் வெற்றிச்செல்வம் வரவேற்றார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், பொது செயலாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தனர்.

    பயிற்சியாளர்கள் பயில்வான் பெரியசாமி, முன்னாள் ராணுவ வீரர் ஆனந்தராஜ், நிர்வாகிகள் அருள்ராஜ், ராதாகிருஷ்ணன், திருவேங்கடம், பாலாஜி, குமார், சிவராமகிருஷ்ணன், சுவாதி உட்பட நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி முதல்வர்கள், நிறுவனர்கள், ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகளின் பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை மாநில அ.தி.மு.க.துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.
    • ங்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதனை சந்தித்து ஒரு கடிதம் அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க.துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதனை சந்தித்து ஒரு கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்து 2 ஆண்டுகளாக உள்ளது. ஆட்சி அமைந்தது முதல் என்.ஆர்.காங்கிரஸ் அரசு மதுபான கொள்கையால் தள்ளாட்டத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    கூடுதலாக 10 மதுபான, சாராய தொழிற்சாலைகளை திறக்க அனுமதியளித்துள்ளது. கவர்ச்சி நடனங்களுடன் கூடிய சுற்றுலா மதுபார் (ரெஸ்டோ பார்) அமைக்கவும் நூற்றுக்கணக்கில் அனுமதி வழங்குகிறது. என்.ஆர்.காங்கிரஸ் அரசு மதுபான உரிமையாளர்களுக்கு, சாராய முதலாளிகளுக்கும் சாதகமாக, அரசின் அனைத்து சட்டவிதிகளையும் மீறி செயல்பட்டு, அனுமதி வழங்கி வருகிறது. இதனால் புதுவையில் மது ஆறாக பெருக்கெடுத்து ஓடும். புதுவையின் கலாச்சாரம், பண்பாடு முற்றிலுமாக சீர்குலையும்.

    இந்த கலாச்சார சீரழிவுக்கு, புதுவை மாநில பா.ஜனதா நிலைப்பாடு என்ன? நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதே பா.ஜனதா வின் தேசிய கொள்கை. ஆனால் பா.ஜனதா கூட்டணியில் உள்ள புதுவையில் என்.ஆர்.அரசு நாள்தோறும் கூடுதலாக மதுபான தொழிற்சாலைகள், மதுபார்களை திறக்க அனுமதி வழங்கி வருகிறது.

    ஆட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணி என்றாலும், மக்களின் உரிமைகள் பறிபோகும்போதும், அவர்களின் நலனுக்காகவும் தவறுகளை தட்டிக்கேட்பது அரசியல்கட்சிகளின் தலையாய கடமை. எனவே மதுபான, சாராய கொள்கையில் புதுவை மாநில பா.ஜனதாவின் நிலைப்பாடு என்ன? என்பதை வெளிப்படையாக, அறிக்கையாக வெளியிட வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கல்விக்கான 2-வது சர்வதேச மாநாடு (ஐகான் 2022) புதுவை தனியார் ஓட்டலில் நடந்தது.
    • கணேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    சேலம் விநாயக மிஷின் ரிசர்ச் பவுண்டேஷனின் ஒரு அங்கமான கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், சுகாதாரத் தொழில்களில் புதுமைகள்" கல்விக்கான 2-வது சர்வதேச மாநாடு (ஐகான் 2022) புதுவை தனியார் ஓட்டலில் நடந்தது.

    சூப்பர் ஸ்கில்லிங் கட்டமைப்பின் மூலம் 21-ம் நூற்றாண்டின் கற்றலின் தேவைகளை நோக்கி சுகாதாரத் தொழில்சார் கல்வியை ஆராயும் நோக்கில் 2 நாட்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை விநாயகா மிஷின் ரிசர்ச் பவுண்டேஷன் வேந்தர் மற்றும் ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி சேர்மன் டாக்டர். கணேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    சிறப்பு விருந்தினராக டாக்டர் அவினாஷ் சுபே, டாக்டர். பி.சி. ராய் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கின்றனர்.

    மாநாட்டில் பயிற்சி பட்டறைகள், முக்கிய உரைகள், முழுமையான அமர்வுகள், குழு விவாதங்கள் மற்றும் சுகாதாரத் தொழில்கள், கல்வியில் கற்பித்தல், கற்றல், மதிப்பீடு ஆகியவற்றில் புதுமைகள் பற்றிய விளக்கக்காட்சிகள் மூலமாக விளக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்காக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இதில ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி டீன். டாக்டர்.கோட்டூர், விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாகக் குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல், மருத்துவ கல்விப் பிரிவு டீன் டாக்டர் மகாலக்ஷ்மி, இயக்குனர் டாக்டர் விஷ்ணு பட், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஜெயசிங், மருத்துவக் கல்விப் பிரிவு டீன் டாக்டர் மகாலட்சுமி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.

    • தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட சுவாமிக்கு புதுவையில் முதல்முறையாக அய்யா வைகுண்டர் புதுவை பதி என்ற பெயரில் அமைந்துள்ள கோவில் திருநடை திறப்பு விழா நடைபெற்றது.
    • இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    புதுச்சேரி:

    தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட சுவாமிக்கு புதுவையில் முதல்முறையாக அய்யா வைகுண்டர் புதுவை பதி என்ற பெயரில் அமைந்துள்ள கோவில் திருநடை திறப்பு விழா நடைபெற்றது.

    பாகூரை அடுத்த அரங்கனூரில் எரமுடி அய்யனார் கோவில் அருகில் உள்ள அய்யா பதி திருநடை திறப்பு விழாவில் நேற்று பள்ளியுணர்த்தல், அய்யாவுக்கு பால் வைத்தல், உகப்படிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான அய்யாவுக்கு பணிவிடை மற்றும் உச்சிபடிப்பு நிகழ்ச்சி பிற்பகலில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    தொடர்ந்து நடந்த அன்னதானத்தை பவர் சோப் நிர்வாக இயக்குனர் தனபால் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மாலையில் பணிவிடை மற்றும் உகபடிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் கடலூர், விழுப்புரம், புதுவையில் இருந்து திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்டர் புதுவை பதி அய்யாவழி பக்தர்கள் செய்து இருந்தனர்.

    • புதுவை லாஸ்பேட்டை உள்விளையாட்டரங்கில் லீ புதுவை ஹாக்கி அமைப்பு சார்பில் தென்னிந்திய அளவிலான 5 பேர் ஹாக்கி சாம்பியன்கோப்பை போட்டி கடந்த 9-ந் தேதி தொடங்கியது.
    • காலிறுதிக்கு 8 அணிகள் தகுதி பெற்றன.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை உள்விளையாட்டரங்கில் லீ புதுவை ஹாக்கி அமைப்பு சார்பில் தென்னிந்திய அளவிலான 5 பேர் ஹாக்கி சாம்பியன்கோப்பை போட்டி கடந்த 9-ந் தேதி தொடங்கியது.

    காலிறுதிக்கு 8 அணிகள் தகுதி பெற்றன. இறுதிபோட்டிகளை வேளாண் அமைச்சரும், ஒலிம்பிக் சங்க தலைவருமான தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். சென்னை இந்தியன் வங்கி முதல் பரிசும், சென்னை ஜி.எஸ்.டி. சுங்கத்துறை அணி 2-ம் பரிசும், பெங்களூரு மெக்பாய்ஸ் அணி 3-ம் பரிசும், சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 4-ம் பரிசும் வென்றன.

    பரிசளிப்பு விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அசோக்பாபு எம்.எல்.ஏ., தமிழ்நாடு பா.ஜனதா மாநில செயலாளர் சூர்யா ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகோப்பை, பதக்கம், ரொக்கப்பரிசுகளை வழங்கினர்.

    முதலிடம் பெற்ற அணிக்கு ரூ.50 ஆயிரம், 2-ம் இடம் பெற்ற அணிக்கு ரூ.30 ஆயிரம், 3-ம் இடம் பெற்ற அணிக்கு ரூ.20 ஆயிரம், 4-ம் இடம் பெற்ற அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை புதுவை ஹாக்கி சங்க சேர்மன் லட்சுமிநாராயணன் தலைமையில் கவுரவ தலைவர் செல்வம், நிர்வாகிகள், சீனியர் வீரர்கள் செய்திருந்தனர்.

    • அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு நாளை பிறந்த நாளாகும்.
    • அவரது பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து புதுவை வடக்கு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வில்லியனூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு நாளை பிறந்த நாளாகும். அவரது பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து புதுவை வடக்கு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வில்லியனூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அவைத்தலைவர் சுப்ரமணி யன், இணைச்செயலாளர் லாவண்யா, மகளிரணி தலைவி காமாட்சி ரகுபதி, துணைச்செயலாளர் சிலம்பரசன், ஜெ.பேரவை செயலாளர் காண்டீபன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நந்தகோபால், இளைஞர் பாசறை செயலாளர் இளம்வழுதி, இலக்கிய அணி பாலு, மாணவர் அணி ஜெகதீஷ், வர்த்தக அணி கணேசன், தொகுதி செயலாளர்கள், செந்தில், ரத்தினவேல், தனவேலு, செல்லா என்ற தமிழ்செல்வன், ராமசந்திரன், மணவாளன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவையை தமிழகத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாது. அதனால்தான் புதுவையும் சேர்த்து 40 தொகுதிகள் என கூறுகிறோம்.
    • நிச்சயமாக மீண்டும் புதுவையில் திராவிட மாடல் ஆட்சி உதயமாகும். அதில் யாரும் சந்தேகப்பட வேண்டாம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாநில அவைத் தலைவருமான எஸ்.பி. சிவக்குமார்-சித்ரா சிவக்குமார் ஆகியோரின் மகன் ஆனந்தராஜிற்கும், திருப்பத்தூர் சாமிசெட்டி-சித்ராசாமிசெட்டி ஆகியோரின் மகள் மீனாட்சிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இவர்களது திருமணம் புதுவை-திண்டிவனம் சாலை பட்டானூர் அருகே உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (திங்கட்கிழமை) நடந்தது.

    திருமணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி தாலி எடுத்து கொடுத்தார். மணமகன் ஆனந்தராஜ் மனமகள் மீனாட்சி கழுத்தில் தாலி கட்டினார். தொடர்ந்து மணமக்கள் முதலமைச்சர் ஸ்டாலின்-துர்கா ஸ்டாலின் ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

    மணமக்களை வாழ்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:-

    தலைவர் கலைஞரை கல்லூரிக்கு சிறப்பு பேச்சாளராக பேச வைக்க எஸ்பி.சிவக்குமார் அழைத்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, நீண்டநேரம் பேச வேண்டும் என சிவக்குமார் கட்டளையிட்டார்.

    இதற்கு கலைஞர் பேசும்போது, இளம்கன்று பயமறியாது. சிவக்குமார் போன்ற இளைஞர்கள் கட்டளையிட, அதை நிறைவேற்ற நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம் என பேசினார். எஸ்.பி.சிவக்குமார் துணிச்சல் மிக்கவர்.

    40 ஆண்டு கட்சிப்பணியை நிறைவு செய்தபோது, கலைஞர், பேராசிரியர், புதுவை மக்களின் நன்மதிப்பை பெற்றவர் என பாராட்டியிருந்தேன்.

    புதுவை அமைச்சராக அவர் ஆற்றிய பணியை மறக்க முடியாது. புதுவையை தமிழகத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாது. அதனால்தான் புதுவையும் சேர்த்து 40 தொகுதிகள் என கூறுகிறோம்.

    புதுவை இணைபிரியாத ஊர். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஊர் என்பதால், திராவிட இயக்கத்தின் இலக்கிய தலைநகர் என சொல்லக்கூடிய ஊர் புதுவை. கலைஞரின் கொள்கை உரம் பெற்ற ஊர் புதுவை. சாந்தா என்ற பழனியப்பன் நாடகத்தில் சிவகுரு வேடம் ஏற்று கலைஞர் நடித்தார். அந்த நாடகம் பாதியிலேயே புதுவையில் நிறுத்தப்பட்டது. ஒரு கலக கும்பல் மிகப்பெரும் கலவரத்தை ஏற்படுத்தினர். கலைஞர் பலமாக தாக்கப்பட்டார்.

    அவரை சாக்கடையில் தூக்கி வீசி சென்றனர். அவர் இறந்துவிட்டார் என பலரும் நினைத்தனர். மறுநாள் காலை பெரியார் கேள்விப்பட்டு ஓடோடி வந்து மடியில் படுக்கவைத்து, மருந்து போட்டு ஈரோடு அழைத்து சென்றார்.

    குடியரசு வார இதழின் துணை ஆசிரியராக பணியாற்ற கலைஞருக்கு உத்தரவிட்டார். பெரியாருடன் பழக புதிய பாதையை ஏற்படுத்திய ஊர் புதுவை. இதனால் புதுவை என்றால் கலைஞருக்கு தனி பாசம் வந்துவிடும்.

    அவருக்கு மட்டுமல்ல, அவரின் மகனான எனக்கும் அந்த பாசம் வந்துவிடும். எனவே அந்த கொள்கை உணர்வோடுதான் சிவக்குமார் இல்ல விழாவில் பங்கேற்க வந்துள்ளேன்.

    25 ஆண்டாக சிவக்குமாரை நான் நன்கு அறிவேன். அப்போது எப்படி கொள்கை பிடிப்போடு பார்த்தேனோ? அதே கொள்கை பிடிப்போடு இன்றும் உள்ளார். அவர் பேசும்போது, எனக்கு எதுவும் வேண்டாம் என்றார். தேர்தல் சமயத்திலும் இதேபோல சொல்ல வேண்டும்.

    அவர் சொல்வார், அவர் உரிமை. ஆனால் கட்சித்தலைமை சொன்னால் கட்டுப்பட்டு நடப்பார்.

    நாஜிம் பேசும்போது, தெற்கு, மேற்கே, கிழக்கே அனுப்புவோம் என்றார். எதையும் பெரிதுபடுத்த விரும்பவில்லை. போட்டி இருந்தால்தான் கட்சி வளரும். கலைஞரே போட்டி நமக்குள் இருக்க வேண்டும், பொறாமையாக இருக்கக்கூடாது என சொல்வார்.

    கலைஞர் உத்தரவிட்டால் அதை அப்படியே நிறைவேற்றுவார்கள். அதேபோல கலைஞரின் மகனான நான் உத்தரவிடுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிற தொண்டர்கள் கழகத்தில் உள்ளார். இதுதான் கழகத்திற்கு பெருமை.

    தலைமையின் கீழ் எந்தவித மாறுபாடும் இன்றி செயல்பட்டு வருபவர்களில் சிவக்குமாரும் ஒருவர். எனவே கட்சியின் தலைவர் என்ற முறையில் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், போற்றுகிறேன்.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உதயசூரியன் ஆட்சி மலர்ந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சி என பெருமையோடு சொல்கிறோம்.

    அப்படிபட்ட திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கு வருவது எளிதுதான். உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் அந்த ஆசை உண்டு. கடந்த சட்டமன்ற தேர்தலில்கூட வாய்ப்பு கிட்டியிருக்கும். ஆனால் போய்விட்டது. புதுவையில் தற்போது ஒரு ஆட்சி நடந்து வருகிறது. அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான். முதலமைச்சர் ஒருவர் உள்ளார், உயர்ந்த மனிதர்தான், உயரத்தில். ஆனால் அடிபணிந்து கிடக்கிறார்.

    அவர் நல்லவர்தான், குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் நல்லவர் வல்லவராக இருக்க வேண்டாமா? புதுவையில் கவர்னர் ஆட்டிப்படைக்கும் வகையில் ஆட்சி நடந்தால் வெட்கப்பட வேண்டாமா? வெகுண்டு எழ வேண்டாமா? அடங்கி, ஒடுங்கி ஒரு ஆட்சி நடப்பது புதுவை மாநிலத்துக்கு மிகப்பெரும் இழுக்காக உள்ளது.

    ஏதாவது ஒரு நன்மை நடந்துள்ளதா? இல்லை. இதனால்தான் நம் ஆட்சி வரவேண்டும் என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். புதுவையில் ஏற்கனவே ராமச்சந்திரன், ஜானகிராமன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வின் ஆட்சி நடந்துள்ளது.

    நிச்சயமாக மீண்டும் புதுவையில் திராவிட மாடல் ஆட்சி உதயமாகும். அதில் யாரும் சந்தேகப்பட வேண்டாம். வைத்திலிங்கம் காங்கிரஸ் முதலமைச்சராக கூட்டணி ஆட்சி நடக்கவில்லையா? நாராயணசாமி நம்மோடு இணைந்து கூட்டணி ஆட்சி நடக்கவில்லையா? எந்த ஆட்சி நடந்தாலும் புதுவையில் மதவாத ஆட்சி உருவாகிவிடக்கூடாது என்பதில் கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும்.

    புதுவையில் விரைவில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளீர்கள். தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் நாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு பணியினை தொடங்குங்கள் என கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் சமயத்தில் யாரோடு கூட்டணி என்பதை முடிவு செய்வோம். வெற்றிக்கு அச்சாரமாக நாம் தற்போதே பணியாற்ற தொடங்க வேண்டும்.

    அனைவரும் இது குடும்ப விழாவாக நடக்கிறது என கூறினர். இதைத்தான் அண்ணா, அனைவரையும் தம்பி, தம்பி என்றார். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை அனைவரையும் ஒன்று சேர்த்து உடன்பிறப்பே என கலைஞர் அழைத்தார். அவர்கள் வழியில் உங்களை வழிநடத்தும் பொறுப்பேற்றுள்ள நான் உங்களில் ஒருவனாக கடமையாற்றி வருகிறேன்.

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் எந்த சூழலிலும் உங்களோடு ஒருவனாக இணைந்து நின்று பணியாற்ற காத்திருக்கிறேன். சிவக்குமார் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதது. அவரின் இல்ல விழா நம் விழாவாக கருதுகிறோம். உங்களோடு சேர்ந்து நானும் மணமக்களை வாழ்க, வாழ்க என வாழ்த்துகிறேன்.

    புரட்சிக்கவிஞர் கூறியபடி, வீட்டுக்கு விளக்காய், நாட்டுக்கு தொண்டர்களாய் வாழுங்கள் என வாழ்த்துகிறேன். பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்பெயர் சூட்டுங்கள் என மணமக்களை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    புதுவை மாநில எதிர்கட்சித்தலைவர் சிவா வரவேற்றார். திருமண விழாவில் தமிழக அமைச்சர்கள் நேரு, பொன்முடி, ஆர்.கே. பன்னீர்செல்வம், செஞ்சி மஸ்தான், மாவட்ட செயலாளர் புகழேந்தி, மு.க.தமிழரசன், புதுவை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால்கென்னடி, நாகதியாகராஜன், சம்பத், செந்தில்குமார் மற்றும் தமிழக மாநகராட்சி, நகராட்சி மேயர்கள், கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். முடிவில் எஸ்பி.சிவக்குமார், மணமகன் ஆனந்தராஜ் ஆகியோர் நன்றி கூறினர். முன்னதாக திருமணத்திற்கு வந்தவர்களை எஸ்பி.சிவக்குமார், அவரின் மனைவி சித்ரா, மகள் காயத்ரி ஆகியோர் வரவேற்றனர்.

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுவை வருகையொட்டி அவரை வரவேற்று புதுவை முழுவதும் கட்சி கொடி-தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.
    • மு.க.ஸ்டாலினை வரவேற்க தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் கட்சி கொடியுடன் அணி திரண்டு வருமாறு தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    தி.மு.க. அவைத்தலைவர் இல்லத் திருமண விழாவை நடத்தி வைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதுவை வருகிறார்.

    புதுவை முன்னாள் அமைச்சரும், மாநில தி.மு.க. அவைத்தலைவருமான எஸ்.பி.சிவக்குமார் இல்ல திருமண விழா புதுவை ஜிப்மர் அருகில் உள்ள சங்கமித்ரா கன்வென்சன் சென்டரில் நாளை(திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.

    திருமணத்தை தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நடத்தி வைக்கிறார்.

    இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு புதுவை வருகிறார். புதுவை-வழுதாவூர் சாலையில் உள்ள அக்கார்டு ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கும் மு.க.ஸ்டாலின் நாளை காலை திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுவை வருகையொட்டி அவரை வரவேற்று புதுவை முழுவதும் கட்சி கொடி-தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் மு.க.ஸ்டாலினை வரவேற்க தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் கட்சி கொடியுடன் அணி திரண்டு வருமாறு தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ×