என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பாரம்பரிய அழகிய பிரெஞ்சு துணை தூதரக கட்டிடம் பல வண்ண லேசர் ஒளி வீச்சுக்களால் மின்னியது.
    • கட்டிடத்தின் மேற்புறத்தில் இருந்து வானை நோக்கி லேசர் விளக்கு ஒளித்தது.

    புதுச்சேரி:

    பிரான்ஸ்- மேற்கு ஜெர்மனி இடையே போர் நிறுத்த எலிசி உடன்படிக்கை ஒப்பந்தம் இரு நாட்டு ஜனாதிபதிகளிடையே பாரீசில் உள்ள எலிசி அரண்மனையில் கடந்த 1963 ஜனவரி 22-ந் தேதி மேற்கொள்ளப்பட்டது.

    இந்த எலிசி உடன்படிக்கை ஒப்பந்த தினத்தையொட்டி புதுவையில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகத்தில் லேசர் லைட் ஷோவுடன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பாரம்பரிய அழகிய பிரெஞ்சு துணை தூதரக கட்டிடம் பல வண்ண லேசர் ஒளி வீச்சுக்களால் மின்னியது. மேலும் கடட்டிடத்தின் மேற்புறத்தில் இருந்து வானை நோக்கி லேசர் விளக்கு ஒளித்தது. துணை தூதரகத்தினுள் கண் கவரும் பிராங்கோ-ஜெர்மன் எலக்ட்ரோ கச்சேரி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை பிரெஞ்சு துணை தூதர் லிசே டால் போட் பாரே தொடங்கி வைத்தார். இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., புதுவை பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவர்கள், புதுவையில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை மக்கள் பலரும் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.

    • புதுவை பிள்ளையார் குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் சார்பில் 2-வது சர்வதேச சுகாதார மற்றும் ஆராய்ச்சி மாநாடு தொடங்கியது‌.
    • நிகழ்ச்சியில் புதுவை துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை பிள்ளையார் குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் சார்பில் 2-வது சர்வதேச சுகாதார மற்றும் ஆராய்ச்சி மாநாடு தொடங்கியது.

    இந்த மாநாட்டினை புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாமலரை வெளியிட்டு தொடங்கி வைத்தார். ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ராஜகோபாலன் முன்னிலை வகித்து பேசினார்.

    சிறப்பு விருந்தினராக இந்திய அரசு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இயக்குனர் டாக்டர் நிட்டின் சேத் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்கள் பற்றி பேசினார். துணைவேந்தர் பேராசிரியர் சுபாஷ் சந்திர ஹரிதா, சர்வதேச சுகாதார மற்றும் ஆராய்ச்சி மாநாட்டின் நோக்க உரை ஆற்றினார். முன்னதாக மாநாட்டு அமைப்பின் செயலர் பேராசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். பல்கலைக்கழக பொது மேலாளர் மற்றும் மாநாட்டின் செயலர் ஆஷா சுரேஷ் பாபு சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். நிகழ்ச்சியில் புதுவை துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர்.

    இம்மாநாட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதுவை மாநிலத்தில் இது போன்ற மாநாடு நடத்துவது பெருமையாக உள்ளது. முன்பு மருத்துவ வசதிக்கு ஜிப்மர் அரசு மருத்துவமனையை நாடி வந்த நிலையில் தற்போது ஏராளமான மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் மூலம் சிறந்த மருத்துவ சேவைக்கும் ஆண்டிற்கு 267 மருத்துவர்களையும் உருவாக்கப்படும் போது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வளவு சிறிய மாநிலத்தில் மருத்துவர்களை உருவாக்கி உலக அளவில் தலைசிறந்த மருத்துவர்கள் ஆக இருந்து வருவது நமது மாநிலத்திற்கு பெருமை ஆகும். மகாத்மா காந்தி மருத்துவமனை சிறந்த மருத்துவர் களை உருவாக்கிக் கொண்டிருப்பது பாராட்டு க்குரியதாகும்.

    மருத்துவ வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும். புதுவை அரசு மருத்துவத்துறையில் சிறந்த மாநிலமாக உள்ளது. நமது மாநில மக்களுக்கு சிறப்பு மருத்துவ சேவை வசதி நமது மாநிலத்திலேயே கிடைக்க அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் செயல்பட வேண்டும். தற்போது சிறப்பு மருத்துவ சேவையை இம் மருத்துவமனை செய்து வருவதை பாராட்டுகிறேன் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் மாநாட்டின் இணை செயலர் பேராசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

    இந்த மாநாடு வருகிற 22-ந் தேதி முடிவடைகிறது. மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் நடைபெற உள்ளது. இதில் 50 சர்வதேச வல்லுநர்கள் மற்றும் 250 தேசிய வல்லுனர்கள் பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சிகள் பற்றி பேசுகின்றனர். மாநாட்டிற்காக 3500 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

    • புதுவை மாநில தி.மு.க. 15 வது பொது தேர்தல் வில்லியனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
    • ஊர்கிளை நிர்வாகி தேர்தலில் சென்னை திரு.வி.க நகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. தாயகம் கவி மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. 15 வது பொது தேர்தல் வில்லியனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. பல்வேறு தொகுதிகளுக்கு நடந்த ஊர்கிளை தேர்தலில் புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    ஊர்கிளை நிர்வாகி தேர்தலில் சென்னை திரு.வி.க நகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. தாயகம் கவி மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.

    ஊசுடு தொகுதியில் 32 ஊர்க்கிளை மற்றும் உட்கிளையில் ஒவ்வொரு கிளைக்கும் அவைத்தலைவர், கிளை செயலாளர், பொருளாளர் 3 துணை செயலாளர்கள், 2 பிரதிநிதிகள், 6 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கான போட்டியிடுபவர்கள் பட்டியலை புதுவை மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தேர்தல் மேற்பார்வையாளர் தாயகம் கவி எம்.எல்.ஏ. ஆகியோரிடம் ஊசுடு தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் லோகையன், மதிவாணன், அரிதாஸ் ஆகியோர் வழங்கினர்.

    இதில் தி.மு.க. நிர்வாகிகள் இளஞ்செழிய பாண்டியன், உத்திராபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் நேரில் சென்று சந்தித்து தொகுதியில் மின்துறை சம்பந்தமான வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
    • புதைவட மின் கேபிள் அமைக்கும் பணியை மேற்கொள்ளும் படி பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. கேட்டுகொண்டார். அதற்கு அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மின்துறை தலைமை அலுவலகத்தில் மின்துறை இயக்குனர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் சண்முகத்தை, முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் நேரில் சென்று சந்தித்து தொகுதியில் மின்துறை சம்பந்தமான வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    மின்துறை கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீதர், செயற்பொறியாளர் கனியமுதன், புதைவட பிரிவு செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் திலகராஜ், இளநிலை பொறியாளர் குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தொகுதியில் புதியதாக உருவாகியுள்ள தனலட்சுமி கார்டன், சப்தகிரி கார்டன், அம்பேத்கர் நகர், அரவிந்தர் கார்டன், ஸ்டாலின் நகர், பட்டினத்தார் தோட்டம் ஆகிய பகுதிகளுக்கு உடனடியாக புதைவட மின் கேபிள் அமைக்கும் பணியை மேற்கொள்ளும் படி பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. கேட்டுகொண்டார். அதற்கு அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    • புதுவை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் எக்ஸாம் வாரியர் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது.
    • இதன் தொடக்கமாக விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் எக்ஸாம் வாரியர் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் எக்ஸாம் வாரியர் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது.

    பொதுத்தேர்வின் போது மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் நீங்கவும், மாணவர்கள் நல்ல உடல் நிலை மற்றும் மனநிலையுடன் தேர்வு எழுதி சான்றோனாக உருவாக பிரதமர் மோடி பரிக் ஷா பி சர்ச்சா என்ற திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப் படுத்தியுள்ளார்.

    இதன் தொடக்கமாக விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் எக்ஸாம் வாரியர் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடந்தது. இதில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 500 மாணவர்கள் பங்கேற்றனர்.

    போட்டியை பள்ளி தாளாளரான செல்வகணபதி எம்.பி. தொடக்கி வைத்தார். பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, பள்ளி முதல்வர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை ஈ-கான் சிஸ்டம் நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • புதுவை மற்றும் அதை சுற்றியுள்ள பல என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட இறுதியாண்டு படிக்கும் என்ஜினீயரிங் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை ஈ-கான் சிஸ்டம் நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    ஈ-கான் சிஸ்டம் நிறுவன மனிதவளத்துறை மேலாளர் அர்ச்சனா, அத்திபா, வைஷாலி ஆகியோர் அந்நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தின் ேவலை செய்தற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர்.

    எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கல்லூரி முதல்வர் மலர்க்கண் முகாமை தொடங்கி வைத்தார். இதில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர். புதுவை மற்றும் அதை சுற்றியுள்ள பல என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட இறுதியாண்டு படிக்கும் என்ஜினீயரிங் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    முடிவில் ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் செய்திருந்தார்.

    • சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் காலங்களில் மாநில அந்தஸ்து விவகாரம் அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறும்.
    • முதலமைச்சர் ரங்கசாமி, தான் கலந்துகொள்ளும் அரசு விழாக்களில் எல்லாம் மாநில அந்தஸ்து பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசி வருகிறார்.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

    மத்திய அரசிடம் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி புதுவை சட்டசபையில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்தே முதலமைச்சர் ரங்கசாமி 2011-ம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்தார்.

    மாநில அந்தஸ்து கோரிக்கை அவ்வப்போது வலுப்பெறுவதும், பின்னர் அடங்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் காலங்களில் மாநில அந்தஸ்து விவகாரம் அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறும்.

    தேர்தலுக்கு பிறகு கோரிக்கை மாயமாகிவிடும். இதேநிலைதான் பல ஆண்டாக நீடித்து வருகிறது. சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி ஒரு விழாவில் பேசும்போது, மாநில அந்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற காலதாமதம் ஏற்படுகிறது என்றும் இது மன உளைச்சலை உருவாக்குவதாகவும் பேசினார்.

    இதையடுத்து மாநில அந்தஸ்து விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது. புதுவையில் பல்வேறு சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து மாநில அந்தஸ்து வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க. மத்திய அரசை வலியுறுத்தி பந்த் போராட்டம் நடத்தியுள்ளது.

    அதோடு முதலமைச்சர் ரங்கசாமி, தான் கலந்துகொள்ளும் அரசு விழாக்களில் எல்லாம் மாநில அந்தஸ்து பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசி வருகிறார். ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த வக்கீல்கள் சேம்பர் அடிக்கல் நாட்டு விழாவில் மாநில அந்தஸ்து பெற நீதிபதிகள் ஆலோசனை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    விழாவில் பங்கேற்ற மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூவிடம் மாநில அந்தஸ்து வலியுறுத்தி மனுவும் அளித்தார். இந்த நிலையில் கூட்டணியில் ஆட்சியில் அங்கம் வகிக்கும் பா.ஜனதா, புதுவைக்கு மாநில அந்தஸ்து அவசியமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

    பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கூறும்போது, புதுவைக்கு சொந்தமாக மின் உற்பத்தி, கனிம வளங்கள் இல்லாததால் மாநில அந்தஸ்து கொடுத்தால் வளர்ச்சி பாதிக்கும் என்றும் மாநில அந்தஸ்து குறித்த சாதக, பாதகங்களை ஆராய வேண்டும் என்றும், மக்களை பாதிக்காத மாநில வளர்ச்சியை பா.ஜனதா ஆதரிக்கும் என்றும் கூறினார்.

    இதனால் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மத்தியில் பா.ஜனதா ஆட்சி நடைபெறும் நிலையில், புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவையா? என்ற ரீதியில் பா.ஜனதா மாநில தலைவர் கேள்வி எழுப்பியிருப்பது மாநில அந்தஸ்தை வலியுறுத்தும் கோரிக்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    • மணவெளி தொகுதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் தலைமை வகித்தார்.
    • நான் அதை கொடுக்க வேண்டும், இதை கொடுக்க வேண்டும் என சொல்கிறேன். ஆனால் அவர்கள் தரவில்லை என அதிகாரிகள் மீது பழிபோடுகிறார். அதிகாரிகள் என்ன செய்வார்கள்?

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

    முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்தியலிங்கம் எம்.பி. , எம்.எல்.எ. வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி,ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் ஒன்றும் செய்ய முடியவில்லை. நீதிபதியிடம் கேட்கிறார். யாரிடம் கேட்க வேண்டுமோ? அவரிடம் கேட்கவில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி கேட்கவேண்டிய இடத்தில் கேட்கவில்லை. தப்பான இடத்தில் கதவை தட்டுகிறார். அப்படியென்றால் முதல்-அமைச்சர் ரங்கசாமி மக்களை ஏமாற்றுகிறார் என அர்த்தம்.

    நான் அதை கொடுக்க வேண்டும், இதை கொடுக்க வேண்டும் என சொல்கிறேன். ஆனால் அவர்கள் தரவில்லை என அதிகாரிகள் மீது பழிபோடுகிறார். அதிகாரிகள் என்ன செய்வார்கள்? கவர்னர், மத்திய அரசை காரணம் சொல்ல மறுக்கிறார். அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறுகிறார்.

    அவர் முதல்-அமைச்சர் தானே? அவரின் அதிகாரம் எங்கே போனது? வாக்காளர்களாகிய மக்கள் ஏமாந்துவிட்டனர். மோடிக்கு புதுவையே தெரியாது. புதுவையில் பாஜக கிடையாது. அதை இறக்குமதி செய்தது ரங்கசாமி. ரங்கசாமி இல்லாவிட்டால் புதுவையில் பா.ஜனதா இல்லை.

    ஆண்கள் மது குடித்து அழிந்துவிட்டனர், விதவைகளாக பெண்கள்தான் உள்ளனர். அவர்களையும் அழிக்க பிராந்தி கடையில் பெண்களுக்கு இலவச மது வழங்குகின்றனர். இப்படி கடைகளை திறப்பது நியாயமா? என முதல்-அமைச்சரிடம் கேட்டால், எனக்காக செய்யவில்லை, மக்களுக்காக செய்கிறேன் என்கிறார்.

    ரூ.ஆயிரம் கொடுக்க என்னிடம் காசு இல்லை. மற்ற திட்டங்களுக்கு காசு இல்லை. இதிலிருந்துதான் பணம் தருகிறேன் என்கிறார். குடும்பத்தை அழித்துவிட்டு ரூ.ஆயிரம் வழங்குவதில் என்ன பயன் உள்ளது? ரங்கசாமி நிஜமான சாமியார்தானா? நிஜமான சாமியாராக இருந்தால் குடும்பத்தை பற்றி, சமுதாயத்தை பற்றி ஆய்வு செய்து நன்மையானவற்றை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மத்தியில் தேசிய கட்சிகளான காங்கிரஸ்-பா.ஜனதா எப்போது ஆட்சியில் இருந்தாலும் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் பாரபட்சமாக நடந்துகொள்கிறது.
    • மாநில அந்தஸ்து இல்லாததால் பட்ஜெட்டை கூட வடிவமைக்க முடிய வில்லை. தனியாக தேர்வு வாரியம் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் தேசிய கட்சிகளான காங்கிரஸ்-பா.ஜனதா எப்போது ஆட்சியில் இருந்தாலும் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் பாரபட்சமாக நடந்துகொள்கிறது. புதுவைக்கு மாநில அந்தஸ்து மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இந்நிலையில் புதுவை மாநில பா.ஜனதா தலைவர் மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஒரு குழப்பதை ஏற்படுத்தும் வகையில் இருவேறு கருத்துக்களை கூறியது தவறானது.

    மாநில அந்தஸ்து இல்லாததால் பட்ஜெட்டை கூட வடிவமைக்க முடிய வில்லை. தனியாக தேர்வு வாரியம் இல்லை. மத்திய அரசின் அடிமை ஆட்சி போல புதுவை மாநில நிர்வாகம் உள்ளது. நமது மாநிலத்தை மத்திய நிதிக்குழுவில் சேர்க்கவில்லை. திட்டங்களை விரைவாக செயல்படுத்தவும், சட்ட மன்றத்தில் அறிவிப்புகளை செயல்படுத்தவும் மாநில அந்தஸ்து அவசியம். மாநில அந்தஸ்து இல்லாததால் துறைமுக விரிவாக்கம் கிடப்பில் உள்ளது.

    பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல விஷயங்களில் நமது மாநிலம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே பா.ஜனதா தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாநில அந்தஸ்து அ.தி.மு.க.வின் பிரதான கொள்கை முடிவு. புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சட்டமன்ற உறுப்பி னர்களை டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமர் உள்ளிட்டவர்களை சந்தித்து வலியுறுத்த ஆக்கப்பூ ர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை முதல்-அமைச்சர் கூட்ட வேண்டும். அப்போது குறைந்தபட்ச செயல்திட்டங்களை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மனைவி பிரிந்து சென்ற வேதனையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • அடிக்கடி மது குடித்து விட்டு தனது பெற்றோரிடம் மனைவி பிரிந்து சென்றதை கூறி வருத்தப்பட்டு வந்தார்.

    புதுச்சேரி:

    மனைவி பிரிந்து சென்ற வேதனையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் அருகே மேல் திருக்காஞ்சி ஆனந்தா நகரை சேர்ந்தவர் அந்தோணி சாமி. இவரது இளைய மகன் பெலிக்ஸ் (வயது 33) இவருக்கும் சென்னையை சேர்ந்த ஜெனிபர் என்ற பெண்ணுக்கும் கடந்த 2018 -ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரண மாக ஜெனிபர் கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் பெலிக்ஸ் மன வேதனைக்கு உள்ளானார்.இதனால் அவர் மது பழக்கத்துக்கு ஆளானார்.

    அடிக்கடி மது குடித்து விட்டு தனது பெற்றோரிடம் மனைவி பிரிந்து சென்றதை கூறி வருத்தப்பட்டு வந்தார்.

    அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி வந்தார்.

    இந்த நிலையில் மனமுடைந்த பெலிக்ஸ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    வீட்டின் அருகே காலி மனையில் உள்ள வேப்ப மரத்தில் அவர் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது தந்தை அந்தோணி சாமி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 4-ம் ஆண்டை முன்னிட்டு அவரது சிலைக்கு செல்வ கணபதி எம்.பி. மாலை அணிவித்து திருக்குறள் கூறினார்.
    • இதில் பொற்செழியன், மணி, சாது.அறிமாவளவன், திருக்குறள் சண்முகம், சாதனையாளர் வெங்கடேசன் மற்றும் தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 4-ம் ஆண்டை முன்னிட்டு அவரது சிலைக்கு செல்வ கணபதி எம்.பி. மாலை அணிவித்து திருக்குறள் கூறினார்.

    தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார். தமிழ்ச் சங்கச் செயலர் சீனு.மோகன்தாசு வரவேற்றுப் பேசினார்.

    இதில் பொருளாளர் திருநாவுக்கரசு, துணைத்தலைவர்கள் ஆதி கேசவன், பாலசுப்ரமணியன், துணைச் செயலாளர் அருள்செல்வம், போலீஸ் சூப்பிரண்டு (ஓய்வு) பாலகிரு ஷ்ணன்ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், சீனு. கந்தகுமார், தினகரன், சிவேந்திரன்,, கவிஞர்.சொற்கோ, கலாம் விதைகள் விருட்ச தலைவர் ராஜா, பொற்செழியன், மணி, சாது.அறிமாவளவன், திருக்குறள் சண்முகம், சாதனையாளர் வெங்கடேசன் மற்றும் தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பாகூர், பேராசிரியர் அன்னுசாமி மேனிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
    • 40-திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை பள்ளிக்கு அமைத்துக் கொடுத்து, நன்றியை பள்ளிக்கு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர், பேராசிரியர் அன்னுசாமி மேனிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. 1997-ம் ஆண்டு 10 வகுப்பு படித்த மாணவர்கள், 25 வருடங்கள் நிறைவடைந்ததை தனித்து வத்துடன் கொண்டாடினர்.

    40-திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை பள்ளிக்கு அமைத்துக் கொடுத்து, நன்றியை பள்ளிக்கு தெரிவித்தனர்.

    இதில் முன்னாள் மாணவர்கள் கந்தநாதன் , ரங்கநாதன், நித்தியானந்தம், சிவமுருகன், கிரிதரன் , சீனுவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளிக் குழும தலைவர் இருதயமேரி ஆசியுரையாற்றினார். தாளாளர் ராஜராஜன் தலைமை தாங்கி பேசினார். முதல்வர் நீலம் அருள்செல்வி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

    ×