என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வில்லியனூர் தட்டாஞ்சாவடியில் காளிகாம்பாள் சமேத அகோரவீரபத்திர சுவாமி கோவில் உள்ளது.
    • தேசிக பராமச்சாரிய சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தட்டாஞ்சாவடியில் காளிகாம்பாள் சமேத அகோரவீரபத்திர சுவாமி கோவில் உள்ளது.

    இங்குள்ள பால்முத்து மாரியம்மன், அறிவொளி விநாயகர், கங்கை அம்மன், காளிகாம்பாள் சமேத அகோர வீரபத்திரர் ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்து வந்தது. திருப்பணிகள் முடிந்து காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நட ந்தது.

    திருவாடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பராமச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பராமச்சாரிய சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    கும்பாபிஷேக விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், எதிர்கட்சித்தலைவர் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பேரிடர் கால ஒத்திகை இன்று நடத்தப்பட்டது.
    • அனைத்து துறைகள் ஒத்துழைப்போடு ஒத்திகை நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் பேரிடர் கால ஒத்திகை இன்று நடத்தப்பட்டது.

    தேசிய பேரிடர் மேலாண்முகமை, தேசிய பேரிடர் மீட்பு குழு, இந்திய வானிலை மையம் இணைந்து புதுவை அரசின் அனைத்து துறைகள் ஒத்துழைப்போடு ஒத்திகை நடந்தது. வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ளத்தில் சிக்கும் மக்களை மீட்டு நிவாரண மையங்களில் சேர்ப்பது, மருத்துவம், உணவு வழங்குதல், முதலுதவி குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது.

    தவளக்குப்பம் என்.ஆர்.நகர், காலாப் பட்டு, கரிக்கலாம்பாக்கம் சுகாதார மையம், ஆரியப்பாளையம் பாலம் உட்பட 5 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    • புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.170 கோடியே 11 லட்சத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட உள்ளது.
    • புதுவை நகர பகுதி முழுவதும் 130 ஸ்மார்ட் தூண்கள் அமைக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.170 கோடியே 11 லட்சத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட உள்ளது.

    இதற்காக புதுவை அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ரெயில்டெல் இந்தியா மேலாண்மை நிறுவனம் ஆகியவை இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

    சட்டமன்றத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமை செயலர் ராஜீவ்வர்மா ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    புதுவை அரசு சார்பில் கலெக்டர் வல்லவன், ரெயில்டெல் நிறுவன பொது மேலாளர் பிரதீபாதேவேந்திரயாதவ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    நிகழ்ச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை செயல் அதிகாரி அருண், இணை அதிகாரி சுதாகர், சப்-கலெக்டர் வினயராஜ், ரெயில்டெல் செயல் இயக்குனர் மனோகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுவை நகர பகுதி முழுவதும் 130 ஸ்மார்ட் தூண்கள் அமைக்கப்படும். இந்த தூணில் சக்தி வாய்ந்த கேமராக்கள் பொருத்தப்படும். காற்று மாசு, வெப்பநிலையும் கண்காணிக்கப்படும். ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து புதுவை பிரதான சாலைகளில் போக்குவரத்து வாகன நெரிசல், வாகன நிறுத்தங்கள், கண்காணிப்பு கேமராக்கள், கண்ணாடி ஒளியிழை புதைவடங்கள், சுற்றுலா வழிகாட்டு செயலிகள் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படும்.

    இதன் மூலம் நகர பகுதியில் நெரிசல் கட்டுக்குள் கொண்டுவரப்படும். கண்காணிப்பு கேமராக்கள் வழியாக கண்காணிப்பதால் குற்ற நடவடிக்கைகளை குறைக்க முடியும்.

    இதனால் சுற்றுலா மேம்பாடு அடைந்து நகர பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். இந்த திட்டத்தை 6 மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கட்டுப்பாட்டு மையம் அமைக்க கிழக்கு கடற்கரை சாலை நவீன மீன்அங்காடி, ரோடியர் மில் திடல், பழைய உள்ளாட்சித்துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து உரிய இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    வருகிற ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான குழுவினர் இந்த இடத்தை தேர்வு செய்கின்றனர்.

    கட்டுப்பாட்டு மையத்தை அமைக்கும் மத்திய அரசு நிறுவனம் இந்த மையத்தை 5 ஆண்டு பராமரிக்கும். அதன்பின் புதுவை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

    • கட்டிட தொழிலாளிகளாக கடந்த 6 மாதமாக வேலை செய்து வந்தனர்.
    • இவர்கள் தற்போது கணுவாய்பேட்டை சேசப்பிரியன் நகரில் கட்டிட பணி செய்து வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சரோஜ், நிதிராம், மற்றும் சவுமியரஞ்சன்,ஆகிய 3 பேரும் வில்லியனூர் கணுவாய்பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் பாலமுருகனிடம் கட்டிட தொழிலாளிகளாக கடந்த 6 மாதமாக வேலை செய்து வந்தனர்.

    இவர்கள் தற்போது கணுவாய்பேட்டை சேசப்பிரியன் நகரில் கட்டிட பணி செய்து வருகிறார்கள். இதற்காக அங்கு ஒரு கீற்று கொட்டகையில் தங்கியிருந்து வந்தனர். வேலை முடிந்ததும் இரவு சாப்பிட்டு விட்டு கீற்று கொட்டகையில் 3 பேரும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 11 மணியளவில் 4 பேர் கொண்ட கும்பல் முகத்தில் கர்ச்சிப் கட்டிக் கொண்டு வடமாநில வாலிபர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவை தட்டினர்.

    இதையடுத்து சரோஜ் உள்பட 3 பேரும் எழுந்து கதவை திறந்த போது திடீரென அந்த கும்பல் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். இதனால் வலி தாங்காமல் 3 பேரும் அலறினர். அப்போது அந்த கும்பல் சத்தம் போட்டால் இரும்பு கம்பியால் அடித்தே கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர்.

    இதைத்தொடர்ந்து சரோஜ் இதுபற்றி தாங்கள் வேலை பார்க்கும் என்ஜினீயர் பாலமுருகனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து தாக்குதலில் காயமடைந்த 3 பேரையும் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

    இதுகுறித்து சரோஜ் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வடமாநில வாலிபர்களை தாக்கிய கும்பலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    • டென்னிஸ் விளையாடும் மகளிர் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
    • இதுகுறித்து கென்னடி எம்.எல்.ஏ. சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் டென்னிஸ் விளையாடும் மகளிர் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    இதுகுறித்து கென்னடி எம்.எல்.ஏ. சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று இந்திரா காந்தி விளையாட்டு அரங்க சுற்று சுவரை புனரமைப்பு செய்வதற்காக ரூ. 12.83 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பெறப்பட்டது.

    இந்த பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுவை பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர். சத்தியமூர்த்தி கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவுறுத்தலின்படி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்டசபை வளாகத்தில் உணவகம் அமைப்பதற்கு அனுமதி அளித்தார்.
    • பொதுமக்கள், சட்டசபை ஊழியர்கள் என அனைவருக்கும் மானிய விலையில் உணவு விற்பனை செய்வதற்கு டெண்டர் விடப்படுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை பார்ப்பதற்காக அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அந்தந்த தொகுதி மக்கள் என நூற்றுக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

    சில நேரங்களில் முதலமைச்சர், எம்.எல்.ஏ.கள் வருவதற்கு கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் கிராமத்தில் இருந்து வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

    அப்போது அவர்களுக்கு அப்பகுதியில் மதிய உணவு கிடைக்காததால் உணவின்றி அங்கேயே காத்திருக்கின்றனர். மேலும் சிலர் சிறிது தூரம் சென்று ஓட்டல்களில் அதிக பணம் கொடுத்து உணவு சாப்பிட்டு விட்டு வருகின்றனர்.

    இதனால் ஏழை, எளிய மக்கள் சிரமப்படுகின்றனர். ஆகையால் சட்டசபை வளாகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதனையேற்று முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவுறுத்தலின்படி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்டசபை வளாகத்தில் உணவகம் அமைப்பதற்கு அனுமதி அளித்தார்.

    மேலும் இதனை அமைத்து தர பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து செஞ்சி சாலையில் உள்ள சட்டசபையின் மேற்கு நுழைவு வாயில் பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் ரூ.10 லட்சத்து 63 ஆயிரம் செலவில் புதிதாக உணவகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இங்கு பொதுமக்கள், சட்டசபை ஊழியர்கள் என அனைவருக்கும் மானிய விலையில் உணவு விற்பனை செய்வதற்கு டெண்டர் விடப்படுள்ளது. விரைவில் இப்பகுதியில் உணவகம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 1200 கோடி ரூபாய் அளவிற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது .
    • தற்போது அந்த திட்டத்திற்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை-கடலூர் ரெயில் பாதை திட்டத்திற்கு புத்துயிர் கொடுத்து 50 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.இதற்கு 1200 கோடி ரூபாய் அளவிற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது .

    ஏற்கனவே இந்த திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டு இருந்த நிலையில் தற்போது புதுவை அரசின் முயற்சியாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லியில் மத்திய ரெயில்வே துறை மந்திரியை சந்தித்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், தற்போது அந்த திட்டத்திற்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

    தற்போதைய நிலையில், நகரி, திண்டிவனம் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த திட்டம் புதுவை வரை நீட்டிக்கப்பட வேண்டும்.இதனால் புதுவை பயணிகள் பெருதளவில் பயனடைவர்.

    மேலும் புதுவை- கடலூர் இடையே புதிய ரெயில் பாதை அமைக்க ப்பட்டால் தற்போது, சென்னையில் இருந்து விழுப்புரம், கடலூர் வழியாக செல்லும் ரயில்களில் சில ரெயில்களை, திண்டி வனம்,புதுவை, கடலூர் வழியாக இயக்க வாய்ப்பாக அமையும். இதனால் பயண தூரமும் குறையும், நேரமும், செலவும் குறையும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை .

    குறிப்பாக நகரி, திண்டிவனம், புதுவை திட்டத்தில், முதல்கட்டமாக திண்டிவனம், புதுவை வரையிலும், சென்னை, கடலூர் கடற்கரை சாலை திட்டத்தில், முதல் கட்டமாக புதுவை, கடலூர் வரை, புதிய ரெயில் பாதை மட்டும் அமைந்து விட்டால் புதுவை மற்றும் புதுவை சார்ந்த ரெயில் பயணிகளுக்கு பேரூதவியாக இருக்கும்.

    ஆகவே ஆளுநர் மற்றும் முதல்-அமைச்சரின் துரித நடவடிக்கையால் விரைவில் புதுவை,கடலூர் ரெயில் பாதை திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்பதில் ஐயமில்லை.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளிக்க ப்பட்டது.
    • விழிப்புணர்வு செயல் விளக்கத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    புதுச்சேரி:

    திருபுவனையில் உள்ள அன்னை வித்யா மந்திர் பள்ளி மற்றும் பாண்டுரங்கா இண்டேன் கியாஸ் ஏஜென்சியும் இணைந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எரிவாயு பயன்பாடு மற்றும் தீ பரவினால் அதனை அணைக்கும் முறைகள், தற்போது உள்ள கியாஸ் பயன்பாட்டை எப்படி பயன்படுத்துவது உள்ளிட்ட, பல்வேறு செயல் விளக்க மாக பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் தனசெல்வம் கலந்து கொண்டு விழிப்புணர்வு செயல் விளக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தன செல்வம் தீயினால் ஏற்படும் விளைவுகளையும், அதிலிருந்து மாணவர்கள் எப்படி தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் இந்தியன் கியாஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு விழிப்புணர்வு குழுவை சேர்ந்த சீனிவாசன், நாகராணி, கவுசல்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டு எரிவாயு பயன்பாடு தீ விபத்தினை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினர்.

    முடிவில் பள்ளியின் மாணவர்களுக்கு சான்றிதழ்களை தாளாளர் தனசெல்வம் வழங்கினார். இதில் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டிட திறப்பு விழா நடந்தது.
    • பெற்றோர் ஆசிரிய சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மணவெளி பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தின் நிதி உதவியுடன் புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டிட திறப்பு விழா நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, முதன்மைகல்வி அலுவலர் தனசெல்வன் நேரு, பள்ளி துணை ஆய்வாளர் பக்கிரிசாமி, தனியார் நிறுவன தலைவர் ஹேமச்சந்திரன், துணை இயக்குனர் மேத்யூ வால்டர் மற்றும் கிராமலயா தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்-ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் ஆசிரிய சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • ஒரு பையில் அடுக்கி கொடுக்கப்பட்ட பணத்தை என்ஜினீயர்கள் வாங்கி அவர்கள் தங்கி இருந்த அலுவலக வீட்டில் வைத்திருந்தனர்.
    • 6-ந்தேதி ரூ.35 லட்சத்தில் 25 லட்ச ரூபாய் திருட்டுப் போய்விட்டதாக என்ஜினீயர்கள் தொழிலதிபர் ஹரிஷுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேதராப்பட்டு:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஹரிஷ். தொழிலதிபரான இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் கட்டுமான பணியினை காண்ட்ராக்ட் எடுத்து மேற்கொண்டு வருகிறார்.

    100-க்கும் மேற்பட்டவர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமான பணியில் தெலுங்கானா, தமிழகம், புதுவை பகுதியைச் சேர்ந்த பல்வேறு தொழில்நுட்ப வல்லுனர்களும், என்ஜினீயர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

    காலாப்பட்டு பங்களா தெருவில் சிறிய அலுவலகத்துடன் கூடிய வீடு ஒன்றை தொழிலதிபர் ஹரிஷ் வாடகைக்கு எடுத்து அங்கு புதுவை மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 4 என்ஜினீயர்களை தங்க வைத்து கட்டுமான பணியை மேற்கொண்டு வந்தார்.

    கடந்த 4-ந்தேதி ஹரிஷ் ஐதராபாத்தில் இருந்து காலாப்பட்டில் உள்ள என்ஜினீயர்களுக்கு போன் செய்து முக்கிய நபர் ஒருவர் ரூ.35 லட்சம் பணம் தருவார். அதை வாங்கி பாதுகாப்பாக வைக்கும்படி கூறினார். அதன்படி புதுவையைச் சேர்ந்த ஒருவர் ரூ.35 லட்சத்தை அங்கு தங்கியிருந்த என்ஜினீயர்களிடம் கொடுத்து விட்டு சென்றார்.

    ஒரு பையில் அடுக்கி கொடுக்கப்பட்ட அந்த பணத்தை என்ஜினீயர்கள் வாங்கி அவர்கள் தங்கி இருந்த அலுவலக வீட்டில் வைத்திருந்தனர். இந்த நிலையில் 6-ந்தேதி ரூ.35 லட்சத்தில் 25 லட்ச ரூபாய் திருட்டுப் போய்விட்டதாக என்ஜினீயர்கள் தொழிலதிபர் ஹரிஷுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதிர்ச்சி அடைந்த ஹரிஷ் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தனச்செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் இந்த பணம் திருட்டு போன சம்பவத்தில் அறையில் தங்கி இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒரு என்ஜினீயர் மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 3 என்ஜினீயர் உட்பட 4 பேரிடம் துருவி துருவி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • உதவி யாளர் பதவிகளை நிரப்ப கோரிக்கை வைத்து வருகின்றனர்.
    • இதனால் உதவியாளர் தேர்வு அறிவிக்கப்பட வில்லை.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் காலியாக உள்ள பல்வேறு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

    உதவியாளர் பதவிக்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்கக்கூடாது என அமைச்சக ஊழி யர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சீனியாரிட்டி அடிப்படையில் உதவி யாளர் பதவிகளை நிரப்ப கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இதனால் உதவியாளர் தேர்வு அறிவிக்கப்பட வில்லை. இந்த நிலையில் தற்போது துறை ரீதியிலான போட்டித்தேர்வு நடத்தி உதவியாளர் தேர்வு செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

     இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் தலைமை செய லகத்தை முற்றுகையிட்டனர்.

    போராட்டத்துக்கு சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தலைமை செயலக நுழைவுவாயில் தரையில் அமர்ந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் தலைமை செயலரின் காரை வழிமறித்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்து வந்தது.
    • ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிய பராமச்சாரிய சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்

    புதுச்சேரி:

    வில்லியனூர் தட்டாஞ்சாவடியில் காளிகாம்பாள் சமேத அகோரவீரபத்திர சாமி கோவில் உள்ளது.

    இங்குள்ள பால்முத்து மாரியம்மன், அறிவொளி விநாயகர், கங்கை அம்மன், காளிகாம்பாள் சமேத அகோர வீரபத்திரர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்து வந்தது. திருப்பணிகள் முடிந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    திருவாடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிய பராமச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிய பராமச்சாரிய சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.

    கும்பாபிஷேக விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், எதிர்கட்சித்தலைவர் சிவா உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று காலை நடந்த 2-ம் கால யாக பூஜையில் அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவி வசந்தியுடன் பங்கேற்றார். மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

    நாளை காலை 6.30 மணிக்கு 4-ம்கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, மகா பூர்ணாஹூதி நடத்தப்பட்டு கடம்புறப்பாடாகி கும்பாபிஷேகம் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், 8 மணிக்கு சாமி வீதியுலா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை தனி அதிகாரி உமாபதி, திருப்பணிக்குழு தலைவர் ராமதாஸ், தலைமை அர்ச்சகர் சரவண சிவாச்சாரியார், திருப்பணிக்குழு, கிராமவாசிகள், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

    ×