என் மலர்
புதுச்சேரி
- புதுவையில் சாலை, கழிவுநீர் வாய்க்கால், நீர்பாசனம், ஏரி கரைகளை மேம்படுத்த நபார்டு வங்கியிடம் கடன் பெற ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
- இதுவரை ரூ.76 கோடி கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் சாலை, கழிவுநீர் வாய்க்கால், நீர்பாசனம், ஏரி கரைகளை மேம்படுத்த நபார்டு வங்கியிடம் கடன் பெற ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
சட்டசபை அமைச்சர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை செயலர் மணிகண்டன், தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் வெங்கடகிருஷ்ணன், பொது மேலாளர் நசியாநிசாமுதீன், துணை உதவி பொது மேலாளர் பாலமுருகன், புதுவை நபார்டு வழங்கி துணை மேலாளர் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மொத்தம் ரூ.120 கோடி கடன் வழங்க அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுவரை ரூ.76 கோடி கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.44 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்படும் என நபார்டு வழங்கி அதிகாரிகள் உறுதியளித்தனர். அடுத்த ஆண்டுக்கு ரூ.120 கோடிக்கான திட்டங்களை அனுப்பலாம் என்றும் நபார்டு வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
- குடிநீர் தொட்டியினை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அப்பகுதி மக்கள் சபாநாயகரிடம் முன் வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை அருகே மணவெளி தொகுதி நோணாங்குப்பம் பகுதியில் ரூ.1 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலைப் பொறியாளர் சரஸ்வதி, அறங்காவல் குழுவினர் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் பொது குடிநீரில் வருகிற குடிநீரானது மஞ்சள் நிறத்தில் வருகிறது. எனவே குடிநீர் இணைப்பு பைப்புகளை மாற்றிட வே ண்டும். குடிநீர் தொட்டியினை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அப்பகுதி மக்கள் சபாநாயகரிடம் முன் வைத்தனர். இந்த கோரிக்கைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என ஆணையருக்கு அவர் உத்தரவிட்டார்.
- புதுவை அமைச்சரவைக்கு முழு அதிகாரம் உருவாக்க அலுவலக விதியில் திருத்தம் கொண்டு வந்து அதை மத்திய அரசுக்கு அனுப்பி சட்ட திருத்தம் கொண்டு வர வழிவகை காண வேண்டும்.
- மருத்துவம் சார்ந்த உயர்கல்வியில் அரசின் இடஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசு சட்டமன்ற கூட்டத்தொடரில் உரிய சட்டம் கொண்டு, வர வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புதுவை அமைச்சரவைக்கு முழு அதிகாரம் உருவாக்க அலுவலக விதியில் திருத்தம் கொண்டு வந்து அதை மத்திய அரசுக்கு அனுப்பி சட்ட திருத்தம் கொண்டு வர வழிவகை காண வேண்டும். அரசின் துறைகளை சீர்செய்ய ஒர்க் ஸ்டடி குரூப் ஒன்று அமைக்க வேண்டும்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு நியாயமான சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டருக்கும் ரூ.500 மானிய உதவியாக அரசு வழங்க வேண்டும். தனியார் மற்றும் கோவில் இடங்களில் வசிப்போருக்கு அவரவர் கூரை வீடுகளை கல்வீடாக மாற்றிக் கொள்ள ரூ.5 லட்சம் மானியம் வழங்க வேண்டும்.
நகரப் பகுதி முழுவதும் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வழி காண வேண்டும். அரசு துறைகளில் பணிபுரியும் பகுதி நேர ஊழியர்கள், மணி நேர ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் நிதி நிலைமைக்கு ஏற்ப பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மருத்துவம் சார்ந்த உயர்கல்வியில் அரசின் இடஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசு சட்டமன்ற கூட்டத்தொடரில் உரிய சட்டம் கொண்டு, வர வேண்டும். தனி கல்வி வாரியம், விளையாட்டுத் துறைக்கு தனி இயக்குனரகம், அமைக்க வேண்டும்.
அரசுத் துறைகளில் கடன் பாக்கி வைத்துள்ளோருக்கு வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்து அசலை செலுத்த வாய்ப்பு அளித்தால் கடன் வசூலாகும். மதுபானம் கொள்முதல், விநியோகம் ஆகிய இரண்டையும் அரசே ஏற்று நடத்த தனி கார்பரேஷனை ஏற்படுத்த வேண்டும்.
ரோடியர் மில் வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் சர்வ தேச ஐ.டி. பூங்கா, சேதராப்பட்டில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் தொழில் பூங்கா அமைத்தால் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். ஓய்வு பெறும் நிரந்தர அங்கன்வாடி ஊழியாகளுக்கு அரசு துறைகளில வழங்கப்படும் பென்ஷன், மற்றும் ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும்.
புதுவை, உழவர்கரை நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகவும், அரியாங்குப்பம், வில்லியனூர், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், பாகூர் ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துக்களை மக்கள் ஜனத்தொகைக்கு ஏற்ப நகராட்சிகளாக மாற்றம் வேண்டும்.
அரசுத் துறையில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதால் ஓ.பி.சி., எஸ்.சி., பொதுபிரிவினருக்கு 5 ஆண்டு வயது தளர்வு வழங்கி அரசாணை வெளியிட வேண்டும். ஏழை பள்ளி மாணவர்கள் கல்வி பயிலும் அரசு பள்ளிகளில் மீண்டும் காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கடிதத்தில் கூறியுள்ளார்.
- சாரதா கங்காதரன் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
- கோடாக் லைவ் இன்சூரன்ஸ் தலைமை மேலாளர் சஞ்சய் ரவீந்திரன், மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
புதுச்சேரி:
சாரதா கங்காதரன் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி துணை தலைவர் பழனிராஜா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் கோடாக் லைப் இன்சூரன்ஸ் பிரதிநிதிகள் பங்கே ற்று, மாணவர்களுக்கு அறிமுக உரையாற்றினர்.
முகாமில் சாரதா கங்காதரன் கல்லூரி மாணவர்கள், இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். பணி நியமன தேர்வின் முதல் சுற்றில் ஆன்லைன் மூலம் திறன் சோதனை, தர்க்க ரீதியான சிந்தனை, தொழில் நுட்ப திறன் ஆகியவையும், 2-வது சுற்றாக நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டது.
இதில் 8 மாணவர்கள் தேர்வாகினர். கோடாக் லைவ் இன்சூரன்ஸ் தலைமை மேலாளர் சஞ்சய் ரவீந்திரன், மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
முன்னதாக வேலை வாய்ப்பு தேர்விற்கு மாணவர்களை ஆயத்தப்படுத்தும் வகையில் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியை சேர்ந்த எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேசன் துறை தலைவர் அருண்மொழி சிறப்புரை ஆற்றினார்.
புதுவை ஆட்டோ இன்னோவேசன் தலைமை நிர்வாக அலுவலர் கரன்பரேக், 'புரோக் ரே ஸ் இன்பினிட்டி' என்ற தலைப்பில் மாணவர்களிடையே பேசினார். கல்லூரி முதல்வர் உதயசூரியன் வாழ்த்துரை வழங்கினார். வேலை வாய்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆன் வரவேற்புரை ஆற்றினார். முடிவில் துணை ஒருங்கிணைப்பாளர் கமலகண்ணன் நன்றி கூறினார்.
- ரூ.17 லட்சத்து 99 ஆயிரத்து 422 மதிப்பில் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
- இதில் நாகராஜ், கணேஷ், அருள், பிரபு, ரஞ்சித்குமார், பழங்குடியின கூட்டமைப்புத் தலைவர் ஏகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதிக் குட்பட்ட, செந்தமிழ் நகரில் நீண்ட நாட்களாக உள்ள பழுதடைந்த சிறிய நீர்பாசன வாய்க்கால் பாலத்தை பொதுப்பணித்துறையின் நீர்பாசன கோட்டத்தின் மூலம் ரூ.17 லட்சத்து 99 ஆயிரத்து 422 மதிப்பில் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பாலம் அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் சங்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொகுதி அவைத்தலைவர் ஜலால் ஹனீப், தொகுதி துணை செயலாளர் ஹரி கிருஷ்ணன், ராஜி, ரமணன், காளிதாஸ்,
முருகன், திலகர், சபரி, ஏழுமலை, சுப்பிரமணி, சத்தியமூர்த்தி, சர்மா, ரகுராமன், சிவாஜி ராவ், பாலா, பிரகாஷ், குமார், நாகராஜ், கணேஷ், அருள், பிரபு, ரஞ்சித்குமார், பழங்குடியின கூட்டமைப்புத் தலைவர் ஏகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஓய்ஸ்மேன் பள்ளியில் சிகரம் அமைப்பு சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
- மாணவிகளுக்கும், மகளிருக்கும் சிறப்பு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
வேல்ராம்பட்டு ஓய்ஸ்மேன் பள்ளியில் சிகரம் அமைப்பு சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிகரம் அமைப்பு செயலாளர் லட்சுமி மவுலி தலைமை தாங்கினார். கவிமன்ற தலைவர் கலாவிசு முன்னிலை வகித்தார். தலைவர் சந்திரமவுலி சிறப்புரையாற்றினார்.
முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், சிகரம் தொட்ட மகளிர் விருதை பிரேம பஞ்சகாந்தி சித்ரலோக, கல்பனா ஜெயராமன், ஆனந்தி, எலிசபெத்ராணி, சுபா வைஷ்ணவி, கும்சி, அஸ்வினி, அமலாதேவி ஆகியோருக்கு வழங்கினார். டாக்டர் விஜயகுமாரி வாழ்த்தி பேசினார்.
இதில், மாணவிகளுக்கும், மகளிருக்கும் சிறப்பு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஆசிரியர் காயத்ரி தொகுத்து வழங்கினார். புனிதா நன்றி கூறினார்.
விழாவிற்க்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், மற்றும் சிகரம் அமைப்பினர் செய்திருந்தனர்.
- அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.
- நாளை மறுநாள் முதல் வெளிப்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம் போல் இயங்கும்.
புதுச்சேரி:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாளை மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. எனது இந்த தேதியில் நோயாளிகள் ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவிற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். நாளை மறுநாள் (09-03-2023) முதல் வெளிப்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம் போல் இயங்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பெண்களின் உயர்வினை உறுதிபடுத்தும் வகையிலும் அதை, உலகிற்கு பறை சாற்றும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
- குடும்ப தலைவிகளின் பொருளாதாரத்தை உறுதி செய்யும் வகையில் புதுவை அரசு மாதம் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கும் முன்னோடிதிட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள சர்வதேச மகளிர் தின வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-
பெண்களின் உயர்வினை உறுதிபடுத்தும் வகையிலும் அதை, உலகிற்கு பறை சாற்றும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்து நிலைகளிலும் மகளிர் சம உரிமையும், வாய்ப்பும் பெற்று சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ வழிவகுக்கும் வகையில் புதுவை அரசு மகத்தான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும், அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும் முன்னோடி மாநிலமாக புதுவை திகழ்கிறது.
பெண்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கினால் முத்திரைத்தாள் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படுகிறது. முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், முதிர் கன்னிகளின் நலனை பேணும் வகையில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
குடும்ப தலைவிகளின் பொருளாதாரத்தை உறுதி செய்யும் வகையில் புதுவை அரசு மாதம் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கும் முன்னோடிதிட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
பாகுபாடு, சமத்துவம் இடையே உள்ள வேறுபாடுகளை எதிர்கொண்டு ஒவ்வொரு துறை யிலும் முன்னேறி, உலகிற்கே மேன்மையளிக்கும் சக்தியாக திகழ்ந்துவரும் மகளிர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மகளிர் தின வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சி தலைவர் சிவா: பெண்களுக்கான திட்டங்கள் முன்னெடுக்கும் அரசு புதுவையில் அமைய வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் பெண்கள் சம வாய்ப்பு பெற்று, சுயமாக வாழ வேண்டும் என்று கூறி சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. செயலளார் அன்பழகன்: ஒரு குடும்பத்தில் பாசமுள்ள தாய் என்பவர் அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்களால் தெய்வமாக மதிக்கப்படுவார். பல்வேறு பெருமைகளுக்கு சொந்தமான பெண்களை பாராட்டும் வகையில் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மகளிர் தின விழாவில் ஒட்டுமொத்த பெண் இனத்தையும் போற்றுவோம்.
ஒம்சக்தி சேகர்: உலகத்தில் உள்ள மகளிர் அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கிய ஜெயலலிதா தமிழகத்தை ஆட்சி செய்த போது மகளிர் வாழ்வு மேம்பட பல்வேறு மகத்தான திட்டங்களை செயல்படுத்தினார். அதுபோல் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக மகளிர்க்கு மாதம்ரூ.1000 வழங்கும் திட்டத்தை புதுவையில் செயல்படுத்தி வருவதையும் இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்துக்களோடு மகளிர் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வையாபுரி மணிகண்டன்: சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும், புதுவை மாநிலத்தை சேர்ந்த என் அன்பு சகோதரிகள், தாய்மார்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பா.ஜனதா சாமிநாதன்: இந்த நாளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிந்து, பெண்கள் பாதுகாப்புடனும், தைரியமுடனும் திகழ என் மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
- புதுவை பொதுப்பணித் துறை பொறியாளர்கள் சங்கம் சார்பில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
- காலியாக உள்ள கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி பொறியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித் துறை பொறியாளர்கள் சங்கம் சார்பில் இன்று பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மணிமாறன், எழில்வண்ணன், வெங்க டேசன், அன்பழகன், ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்மார்ட் சிட்டி அலுவலகத்தின் சிறப்பு தனி அதிகாரியாக பணி செய்து கொண்டிருக்கும் புகழேந்திக்கு பொதுப் பணித்துறை பணிகளை மேற்பார்வையிட ஆணை வெளியிட்டுள்ளதை வாபஸ் பெற வேண்டும். காலியாக உள்ள கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி பொறியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் 5 ஆண்டு களாக நிலுவையில் உள்ள வழக்குக்கை உடனே வாபஸ் பெற ஆவண செய்ய வேண்டும்.
அனைத்து பிரிவு பொறி யாளர்களின் பணிநிரந்தரம் மற்றும் சீனியாரிட்டியை வெளியிட வேண்டும். முறையான மாற்றல் கொள்கையை அமல் படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகையை வலியுறுத்தி இந்த உண்ணா விரத போராட்டம் நடை பெற்றது.
- புதுவை அருகே முத்தியால்பேட்டையில் சுமை தூக்கும் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.
- உறவினர்கள் அறிவுரை கூறியதின் பேரில் கடந்த ஒரு வாரமாக மணிவண்ணன் மது பழக்கத்தை நிறுத்தி விட்டார்.
புதுச்சேரி:
சுமை தூக்கும் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்து போனார். புதுவை முத்தியால் பேட்டை திருவள்ளுவர் நகர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணியரசு. இவரது இளைய மகன் மணிவண்ணன் (வயது36).
திருமணம் ஆகாத இவர் அரும்பார்த்தபுரம் தக்ககுட்டை வி.ஐ.பி. நகர் பின்புறத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கடந்த 6 மாதமாக பிருந்தாவனம் பகுதியில் சுமை தூக்கும் வேலை செய்து வந்தார்.
இதற்கிடையே மணிவண்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. உறவினர்கள் அறிவுரை கூறியதின் பேரில் கடந்த ஒரு வாரமாக மணிவண்ணன் மது பழக்கத்தை நிறுத்தி விட்டார். இதனால் அவருக்கு சிறிது உடல்நிலை பாதிப்பு இருந்தது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை மணிவண்ணனுக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்தார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு ஆட்டோ மூலம் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியி லேயே மணிவண்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது தந்தை மணியரசு கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆட்டோ டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வலி தாங்காமல் அன்பழகன் அலறவே அங்கிருந்தவர்கள் ஜெயசந்திரனையும், ஜோதியையும் தடுத்தி நிறுத்தி சமாதானம்படுத்தினர்.
புதுச்சேரி:
சவாரி ஏற்றி செல்வதில் தகராறு ஆட்டோ டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை திலாஸ்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்ப ழகன் (வயது46). ஆட்டோ டிரைவர். இவருக்கும் மற்ற ஆட்டோ டிரைவர்களான கோவிந்தசாலையை சேர்ந்த ஜெயசந்திரன் மற்றும் சோனாம்பாளையத்தை சேர்ந்த ஜோதி ஆகியோ ருக்கும் கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு சவாரி ஏற்றி செல்வதில் தகராறு ஏற்பட்டது.
அப்போது மற்ற ஆட்டோ டிரைவர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமா தானம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் அன்பழகன் புதுவை காந்தி வீதியில் சவாரிக்காக ஆட்டோ ஒட்டி சென்றார். அப்போது ஜெயசந்திரன் மற்றும் ஜோதி ஆகிய இருவரும் அன்பழகனை வழி மறித்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டினர்.
மேலும் இருவரும் சேர்ந்து அன்பழகனை தாக்கினர். வலி தாங்காமல் அன்பழகன் அலறவே அங்கிருந்தவர்கள் ஜெயசந்திரனையும், ஜோதியையும் தடுத்தி நிறுத்தி சமாதானம்படுத்தினர்.
ஆனால் ஆத்திரம் தீராத ஜெயசந்திரனும், ஜோதியும் இனிமேல் இங்கு வந்தால் வெட்டி கொலை செய்து விடுவோம் என்று அன்பழகனை மிரட்டி விட்டு சென்று விட்டனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த அன்பழகன் புதுவை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவை அருகே ரெட்டியார்பாளையத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
- அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுக்கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து அவர்களது சட்டை பையில் சோதனை நடத்தினர்.
புதுச்சேரி:
ரெட்டியார்பாளையத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுவை ரெட்டியார் பாளையம் லாம்பர்ட் சரவணன் நகரில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுக்கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து அவர்களது சட்டை பையில் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது சட்டை பையில் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மொத்தம் 250 கிராம் கஞ்சா பொட்ட லங்கள் வைத்திருந்தனர். இதனை பறிமுதல் செய்து அந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சங்கர்(வயது24), அருண்(25) என்பதும், இவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






