என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொதுப்பணி துறையின் அரசு நிதி மூலம் ரூ. 10 லட்சத்து 71 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    திருபுவனைத் தொகுதிக்குட்பட்ட மதகடிப்பட்டு அரசு ஆரம்பப்பள்ளி வளாகத்தை சுற்றி புதிதாக மதில் சுவர் கட்டுவதற்காக பொதுப்பணி துறையின் அரசு நிதி மூலம் ரூ. 10 லட்சத்து 71 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது .

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், உதவி பொறியாளர் கெஜலட்சுமி, பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் கருணாகரன், பள்ளி தலைமை ஆசிரியர் வச்சலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.வை அழித்து ஒழித்து இரட்டை இலையை முடக்கம் செய்ய அ.தி.மு.க.வில் இருந்த சில துரோகிகள் துணையோடு தி.மு.க. தலைவர் எடுத்த நடவடிக்கையில் தோல்வி ஏற்பட்டது.
    • 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தோம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை அழித்து ஒழித்து இரட்டை இலையை முடக்கம் செய்ய அ.தி.மு.க.வில் இருந்த சில துரோகிகள் துணையோடு தி.மு.க. தலைவர் எடுத்த நடவடிக்கையில் தோல்வி ஏற்பட்டது.

     இதனால் தமிழக சட்ட மன்றத்தில் அ.தி.மு.க.விற்கு அவமதிப்பை தேடித் தரும் விதத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஒருசிலரை பயன்படுத்தி தமிழக முதல்-அமைச்சரும், தமிழக சபாநாயகரும் ஆடும் நாடகம் எடப்பாடியாரிடம் செல்லாது. தமிழகத்தை போல புதுவையிலும் அருந்ததியர் என பெயரை மாற்றி 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தோம். ஆனால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு இதுவரை அரசாணை வெளியிடப் படவில்லை.

    இதற்கு தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தான் காரணம்.

    எனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி இதன் உண்மை தன்மையை அறிந்து அருந்ததியர் என பெயர் மாற்றி உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    • மாணவர்கள் தீய பழக்கத்திற்கு செல்லாமல் இருக்க விளையாட்டு, யோகா போன்றவற்றில் ஈடுபடுத்த வேண்டும்.
    • சர்வதேச நண்பர்கள் தினத்தன்று போலீசார் தங்களது பகுதிகளில் நல்லுறவு கூட்டம் நடத்த வேண்டும்.தலைகவசம் அபராதத்தை நெறிப்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் பேசியதாவது:-

    மாணவர்கள் தீய பழக்கத்திற்கு செல்லாமல் இருக்க விளையாட்டு, யோகா போன்றவற்றில் ஈடுபடுத்த வேண்டும். 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு உளவியல் வகுப்பு நடத்த வேண்டும். மாணவர்களை மாடித்தோட்டம், காடுகள் வளர்க்க ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும்.

    காவல்துறையும், இளைய சமுதாயத்தையும் ஒன்றிணைக்கும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பை மீண்டும் செயல்படுத்த வேண்டும். சர்வதேச நண்பர்கள் தினத்தன்று போலீசார் தங்களது பகுதிகளில் நல்லுறவு கூட்டம் நடத்த வேண்டும்.தலைகவசம் அபராதத்தை நெறிப்படுத்த வேண்டும்.

    காவலர்கள் புகார் ஆணை யத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.மின் கம்பியில் சிக்கி இறக்கும் ஆடு மாடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும்.

    வடமாநில தொழி லாளர்கள் ஆதிக்கம் புதுவையில் அதிகமாக உள்ளது. அரசு இதில் தலையிட்டு உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு லட்சுமிகாந்தன் பேசினார்.

    • மீன்பிடித் தடைக்கால நிவாரணம் மற்றும் விடுமுறைக் கால நிதி உதவியை உயர்த்தி வழங்குவதற்கான கோப்பிற்கு துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
    • மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5,500-ல் இருந்து ரூ.6,500 ஆக உயர்வு.

    புதுச்சேரி:

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    புதுச்சேரி மீன் வளம், மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மீனவர்களுக்கான விடுமுறை கால நிதிஉதவி மற்றும் இயற்கை பேரிடர் கால நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம் மற்றும் விடுமுறைக் கால நிதி உதவியை உயர்த்தி வழங்குவதற்கான கோப்பிற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

    அதன்படி, மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5,500-ல் இருந்து ரூ.6,500 ஆகவும், விடுமுறைக்கால நிதியுதவி ரூ.2,500-ல் இருந்து ரூ.3,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இல்லாததை அரசு அறியுமா? இ.எஸ்.இ. மருத்துவமனையை மாதிரி மருத்துவமனையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா?
    • இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு தொழிலாளர்கள் விடுப்பு கடிதத்திற்குத்தான் செல்கின்றனர். மருத்துவ மனைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

    நேரு(சுயே): அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இல்லாததை அரசு அறியுமா? இ.எஸ்.இ. மருத்துவமனையை மாதிரி மருத்துவமனையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா?

    முதல்-அமைச்சர் ரங்கசாமி: அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் புதுவை மட்டுமின்றி, அண்டை மாநில நோயாளிகளும் வருவதால் படுக்கை வசதி பற்றாக்குறை உள்ளது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சரிசெய்ய முடியாத அளவு பழுதடைந்துள்ளது.

    புதிய கருவி வாங்க உள்ளோம். அதுவரை கதிர்காமம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யப்படுகிறது. இ.எஸ்.ஐ. மாதிரி மருத்துவமனை அமைக்க அரசு பரிசீலித்து வருகிறது. இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டிடத்தை அந்த கார்ப்பரேஷனிடம் ஒப்படைக்கும் பரிந்துரையும் அரசிடம் உள்ளது.

    நேரு: அரசு மருத்துவமனையில் டாக்டர் பரிந்துரை இருந்தால்தான் படுக்கை வசதி கிடைக்கிறது. புதுவையில் ரூ. 4½ லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை அணுகுகின்றனர். அங்கு கிளீனிக்தான் நடத்து கின்றனர். இதனால்தான் மருத்துவமனை அமைக்க கோருகிறோம். மருத்துவமனை அமைந்தால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நெரிசல் குறையும்.

    இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி அமைக்கவும் கோருகின்றனர். மருத்து வக்கல்லூரி அமைந்தால் மாநில மாணவர்களுக்கு மருத்துவ இடங்களும் கிடைக்கும்.

     முதல்-அமைச்சர் ரங்கசாமி: இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு தொழிலாளர்கள் விடுப்பு கடிதத்திற்குத்தான் செல்கின்றனர். மருத்துவ மனைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம். கூடுதல் இடம் தேவைப்படுகிறது.

    நிலத்தை மருத்துவ மனைக்கு பின்புறம் உள்ள இடத்தை கொடுக்க பரிசீலித்து வருகிறோம். இந்த நிதியாண்டில் ரூ.50 கோடியில் 5 ஏக்கர் பரப்பில் சித்த மருத்துவ கல்லூரி கொண்டுவர உள்ளோம். அந்த கல்லூரிக்கும் அந்த பகுதியிலேயே நிலம் ஒதுக்க ஆலோசித்து வருகிறோம். இந்த மருத்துவமனைகள், கல்லூரி வரும் போது மருத்துவ பல்கலைக்கழகமும் அமைக்க வேண்டும். அதற்கான நிலமும் தேவைப்படுகிறது.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுக மீன்பிடி இறங்கு விரிவாக்கம் செய்ய 100 சதவீத மானியத்துடன் நிதியுதவி கோரி கோப்புகள் அனுப்பப்பட்டன.
    • ரூ.2 கோடி வைப்பு தொகையாகவும், நல்லவாடு மீன் இறங்கு மைய பராமரிப்பு பணிக்காக ரூ.4 கோடியும் வைப்பு தொகையாக வழங்கியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் அமைச்சர் லட்சுமிநாராயணன் மீன்வளத்துறை தொடர்பான ஒரு அறிவிப்பை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது: -

    முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தலின்பேரில் புதுவை அரசு மீன்வளம், மீனவர் நலத்துறை மூலம் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்திற்கு 2 மீன் இறங்கு நிலையம், தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுக மீன்பிடி இறங்கு விரிவாக்கம் செய்ய 100 சதவீத மானியத்துடன் நிதியுதவி கோரி கோப்புகள் அனுப்பப்பட்டன.

    இதை ஆய்வு செய்த மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் அனுப்பிய திட்டத்திற்கு 22.3.2023-ல் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.20.14 கோடியில் பெரியகாலாப்பட்டு பகுதியில் மீன் இறங்கு நிலையம், ரூ.18.94 கோடியில் நல்லவாடு பகுதியில் மீன் இறங்கு மையம், ரூ.53.39 கோடியில் தேங்காய்திட்டு துறைமுகம் (அரிக்கன்மேடு பிரிவு) கட்டுமானம், மீன்பிடி விரிவாக்கம் என மொத்தம் ரூ.92.47 கோடி வழங்கியுள்ளது.

    மேலும் பெரிய காலாப்பட்டு மீன் இறங்கு மைய பராமரிப்பு பணிக்காக ரூ.2 கோடி வைப்பு தொகையாகவும், நல்லவாடு மீன் இறங்கு மைய பராமரிப்பு பணிக்காக ரூ.4 கோடியும் வைப்பு தொகையாக வழங்கியுள்ளது. ஆக மொத்தம் ரூ.100 கோடியே 47 லட்சம் அளவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இத்திட்டங்களை 12 முதல் 18 மாதத்தில் முடிக்க காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கு அனுமதியளித்த பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபலா, இணை அமைச்சர் முருகன் ஆகியோருக்கு நன்றி.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுவையில் பிரெஞ்சு இந்திய நற்பணி இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் நடேசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் காமராஜ் சாலையில் உள்ள விஜயேந்திரா ஓட்டலில் நடைபெற்றது.
    • இந்திய அரசிடம் புகார் அனுப்பப்படும் இந்தோ-பிரான்ஸ் ஒப்பந்தத்தின்படி பஞ்சாலைகள் அழிக்கப்படக்கூடாது.

    புதுச்சேரி:

    புதுவையில் பிரெஞ்சு இந்திய நற்பணி இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் நடேசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் காமராஜ் சாலையில் உள்ள விஜயேந்திரா ஓட்டலில் நடைபெற்றது.

    பொது செயலாளர் சதாசிவ ரெட்டியார் வரவேற்று பேசினார்.

    இதில் சுப்பிரமணி, கார்த்திகேயன், அருணகிரி, ரகுராமன் என்ற ரகுபதி, கிருஷ்ணமூர்த்தி, தம்பி ராஜேந்திரன், உதயகுமாரி, பாண்டுரங்கன், புருஷோத்தன் முன்னிலை வகித்தனர். சிவ.இளங்கோ, அரி, விஜய் வீரன், கலியமூர்த்தி உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.

    தொடர்ந்து நிறுவன தலைவர் சிவராஜ் ஏற்புரை ஆற்றினார். பின்னர் புதுவை துணைநிலை கலெக்டரிடம் இந்தோ-பிரான்ஸ் சரித்திரம் கடந்த பல ஆண்டுகளாக இருட்டடிப்பு குறித்தும் சரித்திர சின்னம் கீழுர் அவமதிப்பு குறித்தும் விளக்கப்பட்டு. இந்திய அரசிடம் புகார் அனுப்பப்படும் இந்தோ-பிரான்ஸ் ஒப்பந்தத்தின்படி பஞ்சாலைகள் அழிக்கப்படக்கூடாது.

    இந்தியாவோடு இணைந்த மக்கள் புதுவை அரசால் பாதுகாக்கபட வேண்டும். இந்த நிலைகள் மீண்டும் மீண்டும் நீடித்தால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கே பிரச்சினைகள் தலைதூக்கும் என எச்சரிக்கப்பட்டன.

    கனகன் ஏரி, வெள்ளவாரி ஓடை, குயில் ேதாப்பு, சிவாஜி சிலை கிழக்கு கடற்கரை சாலை ரோடு, தட்டாஞ்சாவடி ஓடை புதுவை அரசால் அழிக்கப் பட்டுவிட்டன. மத்திய அரசால் முறையான விசாரணை நடத்தப்படவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் துணை தலைவர் ஏகாம்பரம் நன்றி தெரிவித்தார்கள்.

    கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட முருகனின் ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கோட்டக்குப்பம் அடுத்த குயிலாப்பா ளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது72). விவசாயி. இவருக்கு வெங்கடேசன், முருகன், ஈஸ்வரன் ஆகிய 3 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர்.

    முருகனும்,ஈஸ்வரனும் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். சொத்து பிரச்சனை காரணமாக பெரியசாமிக்கும் இவரது மகன்களான முருகன், ஈஸ்வரன் ஆகியோர்களுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் முருகனும், ஈஸ்வரனும் சேர்ந்து தந்தை பெரியசாமியை அடிக்கடி தாக்கி வந்துள்ளனர்.

    சம்பவத்தன்று கோட்டகுப்பத்தில் இருந்து கோட்டைமேடு வழியாக பெரியசாமி சைக்கிளில் குயிலாப்பாளையம் சென்று கொண்டிருந்தார்.

    அப்பொழுது ஆட்டோ ஓட்டி வந்த முருகன், பெரியசாமி ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது வேகமாக மோதியதில் அவர் கீழே விழுந்து தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் பெரியசாமியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து பெரியசாமியின் மூத்த மகன் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் முருகன் மற்றும் ஈஸ்வரன் ஆகிய 2 பேரும் மீதும் வழக்கு பதிவு செய்து முருகனை கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட முருகனின் ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தலைமறைவாக உள்ள ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். குயிலாப்பாளையத்தில் சொத்து தகராறு காரணமாக தந்தையை மகன்களே திட்டம் போட்டு ஆட்டோ ஏற்றி கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுற்றுலா மற்றும் ஆன்மீகத்திற்கு புகழ்பெற்ற புதுவை மாநிலத்தில் சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு பலரும் அடிமையாகி வருகின்றனர்.
    • பொதுவாக மாநில அரசுகள் தண்டனை சட்டத்தை நிறைவேற்றினால் அதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்யும் கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்து, எதிர்க்கட்சித் தலைவர் சிவா தாக்கல் செய்து பேசியதாவது:-

    சுற்றுலா மற்றும் ஆன்மீகத்திற்கு புகழ்பெற்ற புதுவை மாநிலத்தில் சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த விளையாட்டில் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மூழ்குவதும், அதன் காரணமாக பணத்தை இழந்து, தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

    இந்த விளையாட்டுக்களை வீடுகளில் இருந்து தான் விளையாடுகிறார்கள். அதை 'கூகுள் பிளே ஸ்டோர்' மற்றும் 'ஆப்பிள் ஆப் ஸ்டோர்' ஆகியவை தான் கண்டறிய முடியும் என்ற நிலை உள்ளது.

    தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து அந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    தமிழக முதலமைச்சர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தார். அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றி, அந்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்யும் உத்தரவை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் இருந்து சென்றால் மட்டுமே அந்த விளையாட்டுக்களை தடை செய்யும் நிலை உள்ளது. எனவே புதுவை மாநிலத்திலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது சம்பந்தமாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் அதனை அரசின் தீர்மானமாக இயற்றி, கவர்னர் ஒப்புதலோடு, ஒன்றிய அரசிற்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், சம்பத், செந்தில்குமார், கென்னடி ஆகியோரும் பேசினர். தொடர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், இளைஞர்கள் நலனை காக்க ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை அவசியம்.

    இதை அரசு தீர்மானமாக கொண்டுவர பா.ஜனதா ஆதரவு தெரிவிக்கும் என்றார்.

    தொடர்ந்து அமைச்சர் லட்சுமிநாராயணன் பதலளித்து பேசியதாவது:-ஆன்லைன் தடை சட்டத்திற்கு தடை கொண்டுவர மாற்று கருத்து இல்லை. கடந்த 11.6.2022-ல் இதுதொடர்பான தமிழக அரசு சட்டம் கொண்டுவர உள்ளது என்ற தகவல் வெளியானபோதே சட்டத்துறையிடம் விவாதம் நடத்தினோம்.

    மேலும் தி.மு.க. எம்.எல்.ஏ, சம்பத் முன்மாதிரி சட்டத்தை அளித்திருந்தார். அதில் உள்ள சாரம்சங்களையும் பரிசீலித்துள்ளோம். காவல்துறை, வருவாய்த் துறைக்கும் கருத்து கேட்டு அனுப்பியுள்ளோம். தற்போது தடை சட்டம் சட்டத்துறையின் வசம் உள்ளது. அமைச்சரவை ஒப்புதல் பெற்று புதுவை சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்படும்.

    அப்போது எம்.எல்.ஏ.க்கள் பிரிவு வாரியாக சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம். பொதுவாக மாநில அரசுகள் தண்டனை சட்டத்தை நிறைவேற்றினால் அதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கான ஒப்புதல் பெறவும் மத்திய அரசை அணுகியுள்ளோம்.

    இதனால் புதுவையில் விரைவில் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த தடை சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தேசிய அளவில் சராசரி தனிமனிதன் தினசரி உபயோகிக்கும் தண்ணீரின் அளவு 135 லிட்டர் ஆகும்.
    • குழாயை திறந்துவிட்டு பல்துலக்குவதால் ஒரு மனிதன் ஒரு வருடத்தில் 2 லட்சம் லிட்டர் குடிநீரை வீணாக்குகிறான்.

    புதுச்சேரி:

    புதுவையில் உலக தண்ணீர் தின கருத்தரங்கில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ரமேஷ் பேசியதாவது:-

    தேசிய அளவில் சராசரி தனிமனிதன் தினசரி உபயோகிக்கும் தண்ணீரின் அளவு 135 லிட்டர் ஆகும். புதுவையில் இது இருமடங்காகும்.

    பிற மாநிலங்களில் போல் இல்லாமல் புதுவையின் தண்ணீரின் பயன்பாடு 100 சதவீதம் நிலத்தடி நீரையே சார்ந்துள்ளது.

    இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து கடல் நீர் குடிநீரில் கலந்து வருகிறது. இதனை உணர்ந்து நாம் உடனடியாக தண்ணீர் சிக்கனத்தை கடைப்பிடிக்காவிடில் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் நகரத்தை போல் குளிப்பதற்கு கடல்நீரை பயன்படுத்த வேண்டிய சூழல் புதுவைக்கு ஏற்படும். குழாயை திறந்துவிட்டு பல்துலக்குவதால் ஒரு மனிதன் ஒரு வருடத்தில் 2 லட்சம் லிட்டர் குடிநீரை வீணாக்குகிறான்.

    இதனால் 1 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் கழிவு நீர் உற்பத்தி ஆகுகிறது. குவளை நீரில் பல்துலக்கினால் பெருமளவில் தண்ணீரை சேமிக்கலாம். நமது முன்னோர்கள் நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக புதுவையில் 88 ஏரிகள், 450 குளங்கள் அமைத்தனர்.

    மணக்குள விநாயகர் கோவில், குளக்கரையில் கட்டப்பட்டது. எதிர்கால சந்ததியருக்கு நாம் விட்டு செல்லும் சொத்து பாதுகாப்பான குடிநீராக இருக்க வேண்டும் என்றார். கருத்தரங்கில் பல்கலைக்கழக பேராசி ரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • மாநில அரசின் திட்டங்கள் மூலம் தலித் மற்றும் பழங்குடி மக்களின் சமூக,பொருளாதார மேம்பாட்டிற்கு துணைத்திட்ட நிதியை செலவிட வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும்.
    • புதுவை அரசுக்கு சுமார் ரூ.413 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தலித் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் 2022 - 2023-ம் நிதியாண்டில் புதுவை அரசுக்கு சுமார் ரூ.413 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதை பயன்படுத்தி மாநில அரசின் திட்டங்கள் மூலம் தலித் மற்றும் பழங்குடி மக்களின் சமூக,பொருளாதார மேம்பாட்டிற்கு துணைத்திட்ட நிதியை செலவிட வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும்.

    ஒதுக்கப்பட்ட ரூ.413 கோடியில் சுமார் ரூ.166 கோடியை புதுவை அரசு செலவிடாமல் முடக்கி வைத்துள்ளது. புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தலித் மக்களுக்கான துணைத்திட்ட நிதி முறையாக செலவிடப்படுவதில்லை.

    கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் துணைத்திட்ட நிதி ரூ.925 கோடி ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பப் பட்டுள்ளது.

    புதுவை அரசின் இத்தகைய தலித் விரோத போக்கு மாநிலத்தில் வாழும் 4 லட்சம் தலித் மக்களுக்கு இழைக்கும் வரலாற்று துரோகம்.

    புதுவையை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி அரசின் இத்தகைய தலித் விரோத போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டிக்கிறோம்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி இதற்கான காரணத்தை விளக்க வேண்டும். தலித் மக்களின் வாக்குகளை தேர்தல் நேரத்தில் தனது ஏஜென்ட்கள் மூலம் குவிக்க வேண்டும் என்று அக்கறை காட்டும் முதல்-அமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கான நிதியை செலவிடுவதில் துளியும் ஈடுபாடு காட்டுவதில்லை.

    இந்த நிதி ஆண்டில் தலித் மக்களுக்கான துணை திட்ட நிதி சுமார் ரூ.166 கோடியை வீணடித்த துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பொறுப்பற்ற செயல் காரணமாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை தட்டாஞ்சாவடி மேட்டு தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவர் தலைமை செயலகத்தில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
    • இந்நிலையில் துரைராஜ் ஆட்டோவில் மயங்கிய நிலையில் கிடந்தார்

    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி மேட்டு தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது48). இவர் தலைமை செயலகத்தில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அன்பரசி(40). இவர்களுக்கு பவித்ரா என்ற மகள் உள்ளார். துரைராஜிக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    இந்நிலையில் பணிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற துரைராஜ் மேட்டுப்பாளையம் சாராயக் கடையில் மது அருந்தி விட்டு ஆட்டோவில் வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் துரைராஜ் ஆட்டோவில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அன்பரசி கணவரை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் துரைராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அன்பரசி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×