என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சு
    • சில மாதங்களில் தமிழ் மாமணி விருதும் அறிவிக்கப்பட்டு வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    கலைமாமணி விருது வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    பல ஆண்டுகளுக்கு பிறகு கலைமாமணி விருது வழங்கும் விழா மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் விடுப்பட்ட அனைத்து திட்டங்களையும் செய்வதோடு அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் செய்து முடிக்கும்.

    மத்திய அரசு தேவையான அளவு நிதி ஆதாரங்களை வழங்குகிறது. ஆனால் இதனை தெரிந்தும் சிலர் அரசு மீது அரசியலுக்காக குற்றஞ்சாடி வருகின்றனர். தமிழ் அறிஞர்கள், பாவலர்கள், புலவர்கள், கவிஞர்கள் மட்டுமின்றி மேடை பேச்சாளர்களுக்கும் வருகின்ற ஆண்டு முதல் கலைமாமணி விருது வழங்கப்படும்.

    இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ் மாமணி விருதும் அறிவிக்க ப்பட்டு வழங்கப்படும். இவ்வாறுஅவர் பேசினார்.

    • முதலாளி வர்க்கத்திற்கு ஆதரவாக கவர்னர் தமிழிசை கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்திற்கு உரியது.
    • 2 மணி நேரம் வேலை சலுகை என்பது இந்துத்துவா கொள்கை திணிப்பு என்ப தால் கண்டிக்கின்றோம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரெஞ்சு ஆட்சியில் 1936-ம் ஆண்டு நடந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் 12 பேர் உயிரிழந்து செய்த தியாகத்தால் இந்த 8 மணி நேர வேலை, ஆசியாவிலேயே முதன்முதலாக புதுவையில் சட்டமாக்கப்பட்டது.

    புதுவையில் சென்ற ஆட்சியில் -மத்திய பா.ஜனதா அரசு தனது ஆர்.எஸ்.எஸ். கொள்கை கொண்ட அரசு அதிகாரி களைக் கொண்டு 12 மணி நேர வேலையை அமல்படுத்தும் தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டது. அதனை காங்கிரஸ் அரசு முறியடித்தது.

    தொழிலாளர்கள் ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தினை நியாயப்படுத்தி முதலாளி வர்க்கத்திற்கு ஆதரவாக கவர்னர் தமிழிசை கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்திற்கு உரியது. மேலும் சில அரசு துறைகளில், பெண் பணியாளர்களுக்கு, வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் வேலை சலுகை என்பது இந்துத்துவா கொள்கை திணிப்பு என்ப தால் கண்டிக்கின்றோம். இவ்வாறு ஏ.வி.சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • மாதர் சங்கம் வலியுறுத்தல்
    • ள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் ஓய்வு எடுக்கும் அறை அமைத்துத்தர வேண்டும்.

    புதுச்சேரி:

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைவர் முனியம்மாள், செயலாளர் இளவரசி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜதா கூட்டணி அரசு மாதம் 3 வெள்ளிக்கிழமைகள் பூஜை செய்வதற்காக காலதாமத நேர அனுமதி வழங்கி உள்ளது வேதனை யளிக்கிறது. பெண்களை மீண்டும் வீட்டுக்குள் அடைக்கும் விதமாகவும், பூஜை செய்வதை திணிக்கும் விதமாகவும் ஆணாதிக்க சிந்தனையுடன், மத அடை யாளத்துடன், பாகுபாட்டை உருவாக்கக்கூடிய பிற்போக்குத்தனமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பெண்களின் மாதவிடாய் காலம் எவ்வளவு வலியும் வேதனையும் மிக்கது என்று அனைவரும் அறிவர். புதுவையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசுக்கு உண்மையில் பெண்கள் மீது அக்கறை இருந்தால், நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கேரள அரசை போல் மாதந்தோறும் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்துக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் ஓய்வு எடுக்கும் அறை அமைத்துத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
    • பாரம்பரிய நெல் ரகங்களையும் இயற்கை வழி விவசாய பொருட்களையும் பார்வையிட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் இயற்கை உழவர்கள் மற்றும் காரைக்கால் ரோட்டரி சங்கம் பிரெஞ்சு சிட்டி இணைந்து நடத்தும் இயற்கை வழி வேளாண்மை திருவிழா காரைக்கால் அம்பாள் சத்திரம் சக்தி திருமண மண்டபத்தில்  நடைபெறுகிறது.

    இந்த இயற்கை வழி வேளாண்மை திருவிழாவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தி னராக கலந்து கொண்டு வேளாண் திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர் காட்சிப்படுத்தப் பட்ட பாரம்பரிய நெல் ரகங்களையும் இயற்கை வழி விவசாய பொருட்களையும் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் திருநள்ளாறு பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் விவசாய பெருமக்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • துணை சபாநாயகர்ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
    • ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அடுத்த சார்காசிமேடு கிராமத்தில் அம்பேத்கர் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு புதுவை மாநில கபடி சங்க அனுமதியுடன் வாணிதாசன் விளையாட்டுக் கழகம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு புதுவை துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

    புதுவை கபடி சங்க செய்தி தொடர்பாளர் பூபாலன் சங்க கொடி ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு புதுவை மாநில கபடி சங்க பொதுச் செயலாளர் ஆரிய சாமி, பொருளாளர் கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் போட்டி யில் சுமார் 52 அணிகள் பங்கேற்று ஆட உள்ளனர்.

    இதற்கான இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நாளை நடைபெறு கிறது. இதற்கான ஏற்பாடுகளை சார்க்காசி மேடு வாணிதாசனார் கபடி கழக நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் செய்து வருகின்றனர்.

    • தமிழகத்தில் 20 இடங்களில் விலையில்லா விருந்தகம் நடத்தப்படுகிறது.
    • விஜய்யின் உத்தரவுப்படி இதனை செயல்படுத்து வருகிறோம் என்றார்.

    புதுச்சேரி:

    விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அண்மைக்காலமாக அரசியல் மற்றும் தேச தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 14-ந் தேதி அம்பேத்கர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்தனர்.

    இன்று புதுவையில் பாவேந்தர் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்தனர். சட்டமன்றம் எதிரில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ஆறுமுகம், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

    தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்தனர். அதன் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். விஜய் மக்கள் இயக்க கொடியுடன் வந்த அவர்கள் விஜய்க்கும் பாவேந்தர் பாரதிதாசனுக்கும் வாழ்த்து தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த புஸ்சி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அனைத்து தலைவர்களுக்கும் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும். விஜய்யின் உத்தரவுப்படி இதனை செயல்படுத்து வருகிறோம் என்றார்.

    தமிழகத்தில் 20 இடங்களில் விலையில்லா விருந்தகம் நடத்தப்படுகிறது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விஜய் மன்ற பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இன்னும் பல இடங்களில் இந்த விருந்தகம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

    உள்ளாட்சி அமைப்புகளில் விஜய் மக்கள் இயக்கம் நுழைந்தது போல சட்டமன்றத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் நுழையுமா ? என்ற கேள்விக்கு அனைத்தையும் விஜய் முடிவு செய்வார் என கூறி புஸ்ஸி ஆனந்த் புறப்பட்டார்.

    • கவர்னர் தமிழிசை -முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்குகின்றனர்
    • கடந்த 10 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம், சிற்பம், நாட்டுப்புற கலை ஆகிய 6 துறைகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் கலைமாமணி விருது வழங்கப்படும்.

    கடந்த 2016-ம் ஆண்டு 2010, 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப் படவில்லை.

    இந்த நிலையில் தற்போது 2013 முதல் 2021 வரை 9 ஆண்டுகளுக்கு கலை மாமணி விருது வழங்கப்பட உள்ளது. விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்வதற்கான குழு கூட்டம் கடந்த 24-ந் தேதி அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் பெறப்பட்ட 743 விண்ணப்பங்களில் 216 கலைஞர்கள் கலைமாமணி விருதுக்கு தேர்வுக்கு செய்யப்பட்டனர். இயல் பிரிவில் நாராயணசாமி, ராமலிங்கம், நமச்சிவாயம், பாஞ்.ராமலிங்கம், பூபதி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 44 பேரும் இசை பிரிவில் கந்தசாமி, அன்னபூரணி, தமிழரசன், ராஜரத்தினம், ஜெயா, தருமு, ராஜ்முகில் உள்ளிட்ட 38 பேரும் நாடகப் பிரிவில் முனுசாமி, ஏழுமலை, கலி யபெருமாள், ஜெயபாலன், ஆனந்த கிருஷ்ணன், நாகசுப்பிரமணியன் உள்ளிட்ட 39 பேரும் நடனப்பிரிவில் ரகுநாத், ராகினி, சீனிவாஸ், சங்கீதா தாஸ், ரஷ்யா, தலியா சகாயராஜ், ஆனந்த பால யோகி பவானி உள்ளிட்ட 21 பேருக்கும் ஓவியம் மற்றும் சிற்ப பிரிவில் சுப்பி ரமணியன், அழகுமுத்து, மாசிலாமணி, காந்தா, ராஜராஜன், தட்சி ணாமூர்த்தி உள்ளிட்ட 35 பேருக்கும் நாட்டுப்புறக் கலை பிரிவில் வீரப்பன், கலியமூர்த்தி, காத்தமுத்து, சாமிகண்ணு, முத்துலிங்கம், ஞானமூர்த்தி உள்ளிட்ட 38 பேருக்கும் என மொத்தம் 216 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது.

    இதற்கான விழா இன்று (சனிக்கிழமை) மாலை கம்பன் கலையரங்கில் நடைபெறுகிறது. விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் விருதா ளர்களுக்கு விருதுகளை வழங்குகின்றனர். விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அமைச்சர்கள் மற்றும்

    எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கி ன்றனர். 2022 மற்றும் 2023-ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் கலைப் பண்பாட்டு துறையில் வழங்கப்படுகிறது. ஏற்கனவே விண்ணப்பம் அளித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை யில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ் தொண்டிற்கான தமிழ்மா மணி விருது, தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் கம்பன் புகழ் பரிசு, தொல்காப்பியர் விருது சிறுவர் நூலுக்கு நேரு புகழ் பரிசு ஆகியவற்றிற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

    • திருவாண்டார் கோவில் அருகே நடைபெற்றது.
    • தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலாவும் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் திருவாண்டார் கோவில் அருகே உள்ள கொத்தபுரி நத்தம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலாவும் நடைபெற்றது.

    மேலும் ஊரணி பொங்கல், சாகை வார்த்தல் , உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று வெள்ளிக்கிழமை காலையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு விதமான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதன் பிறகு செடல் திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் முத்து மாரியம்மன் எழுந்தருளிய பின்னர் தேரானது கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தது.

    அதன் பிறகு மாலை 7 மணிக்கு கழுமரம் ஏறும் திருவிழா நடந்தது. அதில் 70 அடி உயரம் உள்ள கழு மரத்தின் காப்பு கட்டிய பக்தர்கள் மட்டும் ஏரி அமர்ந்தனர். பின்னர் கூடையில் வரும் மோரினை அருந்திய பிறகு அங்கிருந்து எலுமிச்சை பழத்தினை பக்தர்களுக்கு வீசி எறிந்தனர்.

    அந்த பழத்தினை பிடித்து சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன் பிறகு அன்னதானம் சாமிக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு கொடுத்தனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ராமசாமி, செயலாளர் ரங்கசாமி, பொருளாளர் ஜானகிராமன், துணைத் தலைவர் வெங்கடேசன், உறுப்பினர் பெருமாள் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.

    • அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல்
    • அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஆகாது என்பதை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உணர வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமுதசுரபி ஊழியர்கள் தொடர் போராட்டத்தின் உச்சமாக தங்களது உயிரை பணயம் வைத்து விஷ பொருளை அருந்தி விட்டனர்.

    அரசு சார்பு நிறுவனங்கள் பல்வேறு பிரச்சனைகளை துறை சார்ந்த அமைச்சரிடமும், தலைமைச் செயலாளரிடமும், முதல்-அமைச் சரிடமும் முறையிட்டு தீர்வு காண்பது என்பது நியாயமான ஒன்றாகும்.

    அதை தவிர்த்து இதுபோன்ற விஷம் அருந்துவதால் அதுவே அனைத்து பிரச்சனை களுக்கும் தீர்வு ஆகாது என்பதை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உணர வேண்டும்.

    இந்த பிரச்சினையில் அரசு சார்பு கூட்டுறவு ஊழியர்களின் நிலை உணர்ந்து முதல்-அமைச்சர் ஊழியர் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களுக்கு மனிதா பிமான அடிப்படையில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும்.

    புதுவை மாநிலத்திற்கு அடையா ளமாக செயல் பட்டு வந்த அமுதசுரபி கூட்டுறவு நிறுவனத்தை செம்மையாக நடத்த போதிய நிதி உதவியை அந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.

    அந்த நிறுவனத்தை நிர்வாகிக்க ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை சேர்மனாக முதல்-அமைச்சர் நியமனம் செய்ய வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு
    • அனைத்து மத பண்டிகைகளுக்கும் மதிப்பளித்து தேசிய விடுமுறை, பண்டிகை விடுமுறைகள் அறிவிக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசின் பணியாளர், நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்டுள்ள அரசாரணையில், வழிபாடு மற்றும் பூஜை செய்வதற்காக வெள்ளிக்கிழமையில் காலை 8. 45 முதல் 10 .45 மணி நேரம் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கல்வி, காவல், சுகாதார துறைகளுக்கு பொருந்தாது. சுழற்சி முறையில் சிறப்பு அனுமதி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கவர்னர், முதல்-அமைச்சர் தங்கள் பேட்டிகளில் வீட்டை சுத்தம் செய்வது உட்பட பணிக்காக என குறிப்பிட்டுள்ளனர்.

    இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அனைத்து மத வழி பாட்டு உரிமைகளை மதிக்கிறது. அனைத்து மத பண்டிகைகளுக்கும் மதிப்பளித்து தேசிய விடுமுறை, பண்டிகை விடுமுறைகள் அறிவிக்கப்படுகிறது. இவைகள் எல்லாம் கவனத்தில் கொண்டதாக அரசின் உத்தரவு அமைய

    வில்லை. மாதத்தில் 3 நாட்கள் 2 மணி நேர சலுகை பெண்கள் நலன் சார்ந்ததாக அமையவில்லை.

    இது உள்நோக்கம் கொண்ட அரசியல் கபடநாடக அறிவிப்பாகும். பெண்கள் நலனில் அக்கறை இருந்தால் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரமாக குறைக்க வேண்டும். மக்கள் ஒற்றுமையை சிதைக்கும், மதவாத நிகழ்ச்சி நிரலுக்கு இடம் அளிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கவர்னர் தமிழிசை வலியுறுத்தல்
    • சுய உதவிக் குழுக்களின் ஈடுபாட்டையும் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தையும் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுடெல்லியில் யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள், நிர்வாகிகள் மாநாடு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தலைமையில் நடந்தது.

    இதில் காணொலியில் புதுவை கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

     புதுவை மாநில பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வேளாண்மை இருந்து வருகிறது. நகரமயமாதல், தொழிற்சாலை பெருக்கம், இதர சமூக பொருளாதார வர்ச்சி நடவடிக்கை களின் காரணமாக விளைநிலங்களை பாதுகாப்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.

    இருப்பினும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளின் சமூக பொருளாதார நிலையை உயர்த்த நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடந்த 10 ஆண்டாக வேளாண்துறை சிறப்பான வளர்ச்சி பெற்று வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் வேளாண் உற்பத்தியை 2 மடங்காக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

     புதுவை அரசு குறிப்பிட்ட பயிர்களுக்கு உற்பத்தி மானியம் வழங்கி வருகிறது. இதனால் 11 ஆயிரத்து 761 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். வேளாண்பொருள் உற்பத்தியில் சுய உதவிக் குழுக்களின் ஈடுபாட்டையும் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தையும் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

    மத்திய அரசின் வேளாண் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் புதுவை அரசு எடுத்து வருகிறது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் புதுவைக்கு 2023-24ம் ஆண்டுக்கான இடைக்கால ஒதுக்கீடாக ரூ.9 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. புதுவை அரசின் முயற்சிக ளுக்கு உறுதுணையாக மத்திய நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.11 கோடியே 45 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த நிதி மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்ப டுத்தவும், விவசா யிகளை ஊக்கப்படுத்தவும் உதவும். மத்திய அமைச்சகத்தின் உதவியோடு புதுவையில் வேளாண் உற்பத்தி, விவசாயிகள் வாழ்வா தாரத்தை பாதுகாக்க முடியும்.

    இவ்வாறு தமிழிசை பேசினார்.

    • வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது.
    • மே 16 முதல் 31-ந் தேதி வரையிலும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு பொதுப்பணித்துறை பிரிவால் கழிவுநீர் வாய்க்கால் வடிகால் அமைக்கும் பணி நகர பகுதியில் நடக்கிறது.

    இந்த நாட்களில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது. சுப்பையா சாலை, லால்பகதூர் சாஸ்திரி சாலை இடையே வரும் 30-ந் தேதி வரையிலும், லால் பகதூர் சாஸ்திரி சாலை, ஐ.ஜி அலுவலகம் இடையே மே 1 முதல் 15-ந் தேதி வரையிலும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

    இதேபோல பிராங்கோயில் மார்ட்டின் தெரு சந்திப்பில் லொரிஸ்டோன் தெருவுக்கும், எஸ்.வி. படேல் சாலைக்கும் இடையே மே 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையும் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

    கொம்பங்கி தெரவில் ஐ.ஜி அலுவலகம் முதல் தலைமை செயலகம் வரை மே 16 முதல் 31-ந் தேதி வரையிலும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

    இந்த தகவலை புதுவை போக்குவரத்து எஸ்.பி மாறன் தெரிவித்துள்ளார்.

    ×