என் மலர்tooltip icon

    வேலூர்

    • போலீஸ் சீருடையில் காரை வழி மறித்து துணிகரம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் பர்வேஷ் அகமது (வயது 53). இவர், சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரிடம் இருந்து வீட்டு உபயோக பொருட்களை வாங்கி, பெங்களூரில் விற்பனை செய்து வந்தார்.

    கடந்த மாதம் பொருட்களை வாங்க இஸ்மாயிலை தொடர்பு கொண்ட போது, தன்னிடம் இப்போது பொருட்கள் இருப்பு இல்லை.

    காட்பாடியைச் சேர்ந்த சங்கர் என்பவரை தொடர்பு கொள்ளும்படி கூறி அவரது செல்போன் எண்ணையும் கொடுத்தார்.

    அதன்படி, சங்கரை தொடர்புகொண்டதில், காட்பாடியில் தன்னை சந்திக்கும்படி கூறினார். இதையடுத்து, பர்வேஷ் அகமது தனது காரில் நண்பர் மொஹாஜித் கான் உட்பட 3 பேருடன் கடந்த 7-ந் தேதி வந்து பெங்களூரில் இருந்து வேலுார் வந்து சங்கரை சந்தித்தார்.

    அப்போது, "திருவலத்தில் உள்ள குடோனில் பொருட்கள் இருக்கின்றன, அங்கு செல்லலாம் என சங்கர் கூறினார். மேலும், தனது காரிலேயே அழைத்துச்சென்று மீண்டும் காட்பாடியில் விட்டுவிடுவதாக கூறியதாக தெரிகிறது.

    இதை நம்பிய பர்வேஷ், தனது நண்பர் மொஹாஜித்கானுடன் சங்கர் காரில் ஏறினார். பின்னர், காரில் வைத்து ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.2 லட்சத்திற்கான காசோலை ஆகியவற்றை சங்கரிடம் கொடுத்தார்.

    தொடர்ந்து, அம்முண்டி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, போலீஸ் சீருடையில் இருந்த ஒருவர் உட்பட 4 பேர் திடீரென காரை வழிமறித்தனர்.

    இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர், மேலும் இது தொடர்பாக சங்கரிடம் விசாரணை நடத்தவேண்டும் என்றும், நீங்கள் இருவரும் காரை விட்டு இறங்குங்கள் என்றும் கூறியுள்ளனர்.

    அப்போது, பதட்டத்தில் இருந்த பர்வேஷ் அகமது, மொஹாஜித்கான் ஆகியோர் வேகமாக காரை விட்டு இறங்கி, சாலையில் நின்றனர்.

    இதையடுத்து, காரில் ஏறி விசாரணை நடத்துவதுபோல் நடித்த அந்த கும்பல் சிறிது நேரத்தில் சங்கருடன் காரில் தப்பியது.

    இதுகுறித்து காட்பாடி போலீசில் பர்வேஷ் அகமது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருகிற 13-ந் தேதி நடக்கிறது
    • போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    வேலுார்:

    வேலுார் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் மற்றும் 4 சக்கர வாகனங்கள், வருகிற 13-ந் தேதி காலை 9 மணி முதல் வேலுார் நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது.

    இவற்றின் உரிமையா ளர்கள் உரிமை கோரிய வாகனங்களை தவிர்த்து, மீதமுள்ளவை பொது ஏலம் விடப்படும். ஏலம் எடுக்க பார்வையிடுவோர் ரூ.100 நுழைவுக்கட்டணம் செலுத்திய பின்னரே ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர்.

    ஏலத்தொகையுடன் பைக்குகளுக்கு 12 சதவீத விற்பனை வரியும், 4 சக்கர வாகனங்களுக்கு 18 சதவீத விற்பனை வரியும் சேர்த்து செலுத்தவேண்டும்.மேலும் இதற்கான ரசீது வழங்கப்படும். அதுவே அந்த வாகனத்தின் உரிமை ஆவணம் ஆகும்.

    இவ்வாறு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

    • வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்தது
    • 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரே இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் சேகர் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.

    திருப்பத்தூர் மாவட்ட பொருளாளர் ஆனந்தன் வரவேற்று பேசினார்.

    பல சேவைகள் மையம் மற்றும் விவசாய கட்டமைப்பு நிதி திட்டத்தில் தேவையற்ற உபகரணங்கள் வாங்க கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நகர கூட்றவு கடன் சங்கப் பணியாளர்களின் ஊதிய உயர்வு கமிட்டி அறிக்கையினை உடனடியாக அமல்படுத்த வேண்டும், சங்கங்களில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்புதல், ஓய்வு பெற்ற அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    மேலும் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வருகிற 12-ந்தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    இதில் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • காப்பாற்ற முயன்ற தாய் படுகாயம்
    • கம்பத்திற்கு உதவியாக பொருத்தப்பட்டிருந்த ஸ்டே கம்பியை பிடித்தபோது பரிதாபம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் அருகே உள்ள அல்லிவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு (வயது 50), விவசாயி. இவரது மனைவி செந்தாமரை (43). தம்பதியினரின் மகன்கள் அஜித்குமார் (24), விஜயகுமார் (22).

    அஜித்குமார் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். விஜயகுமார் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    அஜித்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்தார். விடுமுறை முடிந்து நேற்று பணிக்கு திரும்பி செல்ல தயாரானார்.

    இந்த நிலையில் அவரது தம்பி விஜயகுமார் மாட்டு கொட்டகையில் இருந்த சானியை நிலத்திற்கு எடுத்துச் சென்றார். அப்போது அங்கிருந்து மின்கம்பத்திற்கு உதவியாக பொருத்தப்பட்டிருந்த ஸ்டே கம்பியை பிடித்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததால், விஜயகுமார் துடித்தார். இதனைப் பார்த்து அவரது தாய் செந்தாமரை ஓடி சென்று, மகனைக் காப்பாற்ற கீழே தள்ளிவிட்டார்.

    அப்போது செந்தாமரை மீது மின்சாரம் பாய்ந்தது. படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். செந்தாமரை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை தடை
    • பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி மற்றும் தொரப்பாடி துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது.

    எனவே நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை சத்துவாச்சாரி பேஸ்-1, 2, 3, 4, 5, அன்புநகர், ஸ்ரீராம் நகர், டபுள்ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேல்ரங்காபுரம், சைதாப் பேட்டை, சி.எம்.சி. காலனி, எல்.ஐ.சி. காலனி, காகிதப்பட்டறை, இ.பி.நகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள்.

    அதேபோல் தொரப்பாடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சித்தேரி, தென்றல் நகர், இடையன்சாத்து, பென் னாத்தூர், ஆவாரம்பாளையம், அரியூர், தொரப்பாடி, ஜெயில் குடியிருப்பு,எழில் நகர், டோல்கேட், அண்ணாநகர், சங்க ரன்பாளையம், சாயிநாதபுரம், குப்பம், விருப்பாட்சிபுரம், ஓட்டேரி, பாகாயம், இடையம்பட்டி, சாஸ்திரிநகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும்.

    மேற்கண்ட தகவலை செயற்பொறியாளர் எஸ்.ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.

    • குடும்ப தகராறில் விபரீதம்
    • அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள ஒதியத்தூர் சர்ச் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 40) இவருடைய மனைவி அஞ்சலி (வயது 38) இவர்களுக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    கடந்த சில மாதங்க ளாகவே கணவர் வசந்தகுமார் மனைவி மீது சந்தேகப்பட்டு தினமும் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    இதனையடுத்து நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று விடியற்காலையில் வீட்டில் உள்ள குளியலறையில் அஞ்சலி தன் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததை கண்டு இவரது உறவினர்கள் வந்து பார்த்த போது அஞ்சலி தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் அச்சம்
    • வனத்துறையினர் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊனை மோட்டூர் கிராமத்தில் கடந்த மாதம் ஒருவரின் வீட்டின் முன்பு பூனை இறந்து கிடந்தது. அந்த பூனை எப்படி இறந்தது என்பதை அறிய, வீட்டின் உரிமையாளர் தனது வீட்டு வாசலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

    அதில் வீட்டின் வாசலில் இருந்த பூனையை ஏதோ பெரிய விலங்கு ஒன்று கடித்து குதறிய காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த விலங்கு சிறுத்தை போல் உள்ளது. அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.

    மேலும் 13 பேர் கொண்ட வனத்துறையினர் ஊனை மோட்டூர், ஏரிப்புதூர், நாராயிணபுரம், கவுதமபுரம், ஊனை வாணியம்பாடி, ஊனை, ஊனை பள்ளத்தூர், பெரிய ஊனை, கந்தனேரி, அணைக்கட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    பூனையை கொன்றது சிறுத்தை இல்லை, நாய் என்று வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனை அடுத்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    இந்த நிலையில் அணைக்கட்டு அடுத்த ஏரிபுதூர் வனப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்து தூக்கத்தை இழந்த தவிக்கின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஒடுகத்தூர் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அணைக்கட்டு பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    அணைக்கட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் மற்றும் ஏரிப்புதூர் கிராமத்திலும் தற்போது சிறுத்தை நடமாட்டம் இல்லை.இந்த வீடியோ முற்றிலும் தவறானது. இதனை யாரும் நம்ப வேண்டாம்.

    சமூக விரோதிகள் யாரோ ஒரு சிலர் செய்த தவறுகளால் தற்போது பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். இது போன்ற பொய்யான பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • மீன்கள் வாங்க பொதுமக்கள் குறைந்தளவே வந்திருந்தனர்
    • புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சிகளின் விற்பனை மந்தமாக உள்ளது

    வேலூர்:

    வேலூர் மீன் மார்க் கெட்டுக்கு தமிழகத்தின் நாகப்பட்டினம், மங்களூரு, கோழிக்கோடு, கார்வார் போன்றஇடங்களில் இருந்து மீன் இறக்குமதி செய்யபடுகிறது.

    வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன்கள் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடை பெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை சில்லறை விற்பனை நடக்கிறது. புரட்டாசி மாதம் என்பதால் மீன் உள்ளிட்ட இறைச்சிகளின் விற்பனை மந்தமாக உள்ளது.

    இதன் எதிரொலியாக மீன்கள் விற்பனையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் வேலூர் மீன் மார்கெட்டில் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் மீன்களின் விலையில் சரிவு காணப்பட்டது. அதன்படி, இன்று வஞ்சிரம் கிலோ ரூ.900 முதல் 1,200 வரையும், சின்ன வஞ்சிரம் ரூ.400 முதல் ரூ.500 வரையும் விற்றது.

    சீலா கிலோ ரூ.350, தேங்காய்பாறைகிலோ ரூ.450. இறால் கிலோ ரூ.350 முதல் ரூ.550 வரையும், நண்டு கிலோ ரூ.400 வரையும் விற்றது. சங்கரா ரூ.150 முதல் ரூ.300-க்கும், நெத்திலி ரூ. 200-க்கும், கட்லா ரூ. 120-க்கும், மத்தி ரூ.120-க்கும். மத்தி ரூ.140, வவ்வால் ரூ.450-க்கும், டேம்வவ் வால் ரூ.150-க்கும், அயிலா ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் 2 லோடு மீன்களின் வரத்து அதிகரிப்பால், மீன்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • பாலீஷ் செய்து தருவதாக கூறி மோசடி

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த திப்பசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் உமாராணி (வயது 53). கணவரை இழந்த அவர் தனியாக தம்பி வீட்டில் வசித்து வருகிறார்.

    உமாராணி தோளப்பள்ளி கிராம ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை 11.30 மணிக்கு வீட்டில் தனியாக இருந்தபோது, அவரை வீட்டு வாசலில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு, வெளியே வந்து பார்த்தார். வீட்டு வாசலில் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் டிப்டாப் உடையில் நின்றிருந்தனர்.

    அவர்கள், உமாராணியிடம் வீட்டில் இருக்கும் பித்தளை பாத்திரங்களை கொடுத்தால், உங்கள் கண் எதிரே சிறிது நேரத்தில் பளிச்சென மாற்றி தருவதாக கூறினர்.

    இதை நம்பிய அவர் வீட்டில் இருந்த பித்தளை பாத்திரங்களை எடுத்து வந்து கொடுத்துள்ளார். வாலிபர்கள் கூறியபடியே சிறிது நேரத்தில் பாத்திரங்களை பளிச்சென மாற்றி கொடுத்துள்ளனர்.

    இதையடுத்து அவர்கள், இதேபோல் வெள்ளிப்பொ ருட்களையும் பாலீஷ் செய்து தருவோம், என்றனர். உடனே உமாராணி தன்னிடம் இருந்த வெள்ளி கால் கொலுசை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். வெள்ளிக்கொலுசையும் அவர்கள்' பளிச்சென மாற்றி கொடுத்தனர்.

    இந்தநிலையில் வாலிபர்கள், தங்க நகைகளில் அழுக்கை நீக்கி புதிய நகை போல் பாலீஷ் செய்து தருவோம், என்றனர்.

    இதைக்கேட்ட உமாராணி தான் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை கழற்றி வாலிபர்களிடம் கொடுத்துள்ளார். வாலிபர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் மஞ்சள் தூள் மற்றும் ரசாயனத்தை கலந்து, தங்க சங்கிலியை போட்டுள்ளனர். அப்போது வாலிபர்கள், உமாராணியிடம் பேசியபடியே அந்த பாத்திரத்தில் இருந்து தெரியாமல் சங்கிலியை திருடி கொண்டு, பாத்திரத்தில் சங்கிலி இருப்பதாக கூறி அவரிடம் கொடுத்து விட்டு, திடீரென அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்.

    பாத்திரத்தில் தங்க சங்கிலி இருப்பதாக நினைத்துக்கொண்ட உமாராணி, வீட்டுக்குள் எடுத்துச் சென்று பார்த்தபோது, அதில் தங்க சங்கிலியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தாம் மோசம் போய் விட்டோம் என்பதை உணர்ந்த உமாராணி, வீட்டுக்கு வெளியே வந்து சத்தம்போட்டு கத்தியவாறு வாலிபர்களை பின்தொடர்ந்து ஓடி உள்ளார்.

    ஆனால் அவர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து உமாராணி, பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்
    • நாளை கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளது

    வேலூர்:

    வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் 270 பெண் காவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2-ம் நிலை காவலர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

    மினி மாரத்தான் போட்டி

    அதன்படி, நேற்று நடந்த போட்டியில் முதல் 3-இடங்களை பிடித்த 2-ம் நிலை காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    இதைதொடர்ந்து, இன்று காலை தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவலர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது.

    போட்டியை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி தொடங்கி வைத்தார். இதில் காவலர் பயிற்சி முதல்வர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் கனிமொழி, விஜயலட்சுமி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    சான்றிதழ்

    வேலூர் கோட்டை நுழைவு வாயில் காந்தி சிலை அருகே இருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டி, மீன் மார்க்கெட், கோட்டை பின்புறம், அண்ணா கலையரங்கம் வழியாக அண்ணா சாலை, கோட்டை மைதானத்தில் ஒரு சுற்று என 5 கி.மீ.நடந்தது.

    இப்போட்டியில் முதல் 5 இடங்களை பிடித்த காவலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, நாளை கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளது.

    • மேய்ச்சலுக்காக விட்டிருந்த போது பரிதாபம்
    • தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே மேல் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 40). இவர் வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் மாடுகளை விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார்.

    அப்போது அருகில் இருந்த சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில பசு மாடு தவறி விழுந்தது.

    இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் விழுந்த பசுமாட்டை மீட்டனர்.

    • 2 மணி நேரம் போராடி மீட்டனர்
    • சாலை அமைக்க வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள பீஞ்சமந்தை மலை ஊராட்சிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் உள்ள வெள்ளாண்டப்பன் கோவிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சுமார் 30 கிலோமீட்டர் தொலைவு நடைப்பயணமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர், குடியாத்தம், ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஒடுகத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    மலை கிராமத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஒடுகத்தூர் முதல் வெள்ளாண்டப்பன் கோவில் வரை உள்ள மலை பாதையில் போலீசார் வாகனம் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கட்டிப்பட்டு மலை கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது போலீஸ் ரோந்து வாகனம் சாலையோர பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. அதனை போலீசார் மற்றும் அந்த வழியாக சென்ற பக்தர்கள் மீட்க முயன்றனர்.

    முடியாததால் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் டிராக்டர் மூலம் சுமார் 2 மணி நேரம் கழித்து போலீஸ் ரோந்து வாகனம் மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில்:-

    எங்கள் மலை கிராமத்தில் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. தினமும் இது போன்ற சிக்கல்களில் தான் நாங்கள் கடும் அவதி அடைகிறோம். எனவே எங்கள் கிராமத்திற்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ×