என் மலர்tooltip icon

    வேலூர்

    கே.வி.குப்பம் தொகுதி அதிமுக லோகநாதன் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருடைய குடும்பத்தினருக்கும் தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை நடத்தப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா செஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் ஜி.லோகநாதன். கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் தற்போது நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத் தொடருக்கு செல்வதற்கு முன்பாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு நோய் தொற்று இல்லை என்று தெரியவந்தது.

    இந்தநிலையில் அவருக்கு நேற்று முன்தினம் உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று மாலையில் உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லோகநாதன் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருடைய குடும்பத்தினருக்கும் தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை நடத்தப்பட்டது.
    ஸ்ரீபுரம் தங்கக்கோவில் இன்று (வியாழக்கிழமை) பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பக்தர்கள் பொதுதரிசனம்செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    வேலூர் :

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) பக்தர்களின் தரிசனத்திற்காக தங்ககோவில் திறக்கப்படுகிறது.

    பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பக்தர்கள் பொதுதரிசனம்செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. காலை 11 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும், இரவு 8 மணிக்கும் பக்தர்கள் பொதுதரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    பிறகு கோவில் நடைமூடப்படும். இடைப்பட்ட நேரங்களில் சுற்றுப்புற பராமரிப்பு மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறும். சேவா தரிசனம்செய்ய விரும்பும் பக்தர்கள், மக்கள் தொடர்பு அலுவலகத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த தகவலை கோவில் இயக்குனர் எம்.சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்.
    வேலூர் ஜெயிலில் இருக்கும் முருகனை புழல் ஜெயிலுக்கு மாற்ற கோரி ஜெயில் சூப்பிரண்டிடம் அவரது சகோதரி கோரிக்கை மனு அளித்தார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்யக்கோரி கணவன்-மனைவியும் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகன் ஜெயிலில் தன்னை அதிகாரிகள் துன்புறுத்துவதாகவும், அதனால் புழல் ஜெயிலுக்கு மாற்றக்கோரி ஜீவசமாதி அடைய வேண்டி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். 20 நாட்களுக்கு மேலாக நீடித்த இந்த போராட்டம் ஜெயில் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டிற்கு பின்னர் முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் முருகனின் சகோதரி தேன்மொழி வேலூர் ஜெயில் சூப்பிரண்டிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில், வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் முருகனை புழல் ஜெயிலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அந்த மனுவை சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


    காவேரிப்பாக்கம் அருகே சிமெண்டு தூண் விழுந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அருகே பெரிய கிராமம் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கஸ்தூரி (58). இவர் நேற்று வீட்டின் பின்புறம் சமைப்பதற்காக காய்கறிகளை வெட்டிக் கொண்டு இருந்தார்.

    சில தினங்களாக மழை பெய்ததால் வீட்டின் பின்புறம் இருந்த சிமெண்ட்டால் ஆன தூண் திடீரென கஸ்தூரியின் தலை மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தத்தில் லாட்டரி விற்றதாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு அரிதாஸ் மற்றும் போலீசார் நேற்று குடியாத்தம் தங்கம் நகர் வள்ளலார் தெரு பகுதியில் திடீரென சோதனை செய்தனர். அப்போது லாட்டரி சீட்டுகள் விற்றதாக ராஜேஷ் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.

    அதேபோல் பிச்சனூர் பாலகங்காதர திலகர் தெருவில் லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருந்த ராமமூர்த்தி (54) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இறந்த துப்புரவு பணியாளரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சக ஊழியர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
    அடுக்கம்பாறை:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் 510 படுக்கைகள் உள்ளது. 285 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று முன்தினம் வென்டிலேட்டரில்  சிகிச்சை பெற்று வந்த வேலூர் மூஞ்சூர்பட்டை சேர்ந்த கலைச்செல்வி (வயது 42), திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பகுதியை சேர்ந்த ஜெயமுருகன் ஆகியோர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். சுமார் 1 மணி நேரம் ஆக்சிஜன் வராததால் அவர்கள் இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

    இதுகுறித்து வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், சப்-கலெக்டர் கணேஷ், சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து, 2 பேரின் இறப்புக்கான காரணம் குறித்து மருத்துவக் கல்லூரி டீன் செல்வி உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் கூறுகையில் ஆக்சிஜன் குறைபாட்டால் இருவரும் இறக்கவில்லை என்று தெரிவித்தார்.

    கலைச்செல்வி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துமனையில் ஒப்பந்த முறையில் துப்புரவு பணியாளராக வேலை செய்துவந்தார். இதனால் அவர் இறந்த தகவலை கேட்ட, சக ஊழியர்கள் 5 பேர் நேற்று முன்தினம் இரவே மயங்கி விழுந்தனர். அவர்களுக்கும் அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று கலைச்செல்வி கொரோனாவால் இறந்ததை அதிகாரிகள் மறைக்கின்றனர். கொரோனா பாசிட்டிவ் என சான்று வழங்கினால் தான் உடலை வாங்குவோம் என கூறி, அவருடைய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் வேலை செய்யும் துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்கள், கலைச்செல்வி இறந்து போனதற்கான காரணம் தெரிய வேண்டும். மேலும் ஒப்பந்த முறையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதோடு, அரசு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மருத்துவமனை டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அலுவலகம்முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் துப்புரவு பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் முயற்சி செய்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மருத்துவமனை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தும்வரை, போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனக்கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க 20-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

    தகவலறிந்த வேலூர் சப்-கலெக்டர் கணேஷ், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜவேலு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இறந்துபோன துப்புரவு பணியாளர் கலைச்செல்வி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியானார். அத்துடன் அவர் ஒப்பந்த பணியாளர்தான், அரசு ஊழியரில்லை. எனவே நீங்கள் நிவாரணம் கேட்க வேண்டுமென்றால் ஒப்பந்ததாரரைதான் கேட்க வேண்டுமென சப்-கலெக்டர் கணேஷ் கூறினார்.

    மேலும் கலைச்செல்விக்கு கொரோனா பாசிட்டிவ் இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சான்று வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூரில் 2 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ள நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
    வேலூர்:
     
    கொரோனா தொற்று காரணமாக வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டு கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி மற்றும் களம்பூர் பகுதியை சேர்ந்த ஜெயமுருகன் ஆகியோர் வேலூர் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை திடீரென ஆக்சிஜன் நின்றதாக கூறப்படுகிறது.

    அப்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், சிறிது நேரத்தில் அதனை சரி செய்துவிடுவோம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்த நிலையில் இருவரும் மூச்சு தினறல் ஏற்பட்டு இறந்துள்ளனர்.  இதனைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் குறைப்பாட்டினால் இறந்ததாக பரவும் தகவல் பொய்யானது என மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார். நுரையீரல் பாதிப்பு மற்றும் நிமோனியா  காரணமாகவே இருவரும் உயிரிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 15 மையங்களில் நடந்த ‘நீட்’ தேர்வை 6,958 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். 1,412 பேர் பங்கேற்கவில்லை.
    வேலூர்:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் நேற்று நடைபெற்றது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 370 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்காக வி.ஐ.டி., கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, சன்பீம் பள்ளி, சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, ஸ்பார்க் சி.பி.எஸ்.இ பள்ளி., ஸ்பார்க் மெட்ரிக் பள்ளி, டி.கே.எம். மகளிர் கல்லூரி உள்பட ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 15 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    தேர்வு மையங்களின் நுழைவு வாயிலில் மாணவர்கள் கைகளை கழுவும் வசதி மற்றும் ஹால்டிக்கெட், புகைப்படங்களை சரிபார்க்கும் நேரத்தில் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நிற்பதற்காக கட்டங்கள் வரையப்பட்டிருந்தன. தேர்வு மையங்கள், அறைகளை கண்காணிக்கும் பணியில் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என்று 1,395 பேர் ஈடுபட்டிருந்தனர்.

    தேர்வு மையங்களுக்கு காலை 10 மணி முதல் மாணவ-மாணவிகள் வரத்தொடங்கினார்கள். 11 மணி முதல் அவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணிந்த மாணவர்களின் ஹால்டிக்கெட், புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றை தேர்வு மைய அலுவலர்கள் சரி பார்த்து அனுமதித்தனர். செல்போன், கைக்கெடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்ட எலெக்ரானிக் சாதனங்கள் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    முழுக்கை சட்டை, தொப்பி அணிந்து வந்த ஆண்கள், செயின், கம்மல், மூக்குத்தி, வளையல், தாலி அணிந்து வந்த பெண்களுக்கு தேர்வு மையத்துக்குள் அனுமதி இல்லை. மாணவிகள் தாங்கள் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி, செயின் உள்ளிட்டவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுத சென்றனர். தேர்வு மைய நுழைவு வாயிலில் மாணவர்கள் கைகளை கழுவிய பின்னர் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து தெர்மல் கருவியால் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.

    தேர்வு மையத்துக்குள் பிற்பகல் 1.30 மணி வரை மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலான மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து சேர்ந்தனர். மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வை 6,958 மாணவ-மாணவிகள் எழுதினர். 1,412 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 83.1 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

    வேலூரில் உள்ள தேர்வு மையங்களை வேலூர் மாவட்ட ‘நீட்’ தேர்வு ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.சரவணன் நேரில் பார்வையிட்டார். வேலூர் சாய்நாதபுரம் டி.கே.எம். மகளிர் கல்லூரி, வி.வி.என்.கே.எம். ஆகிய தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஒவ்வொரு தேர்வு மையத்திலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு டாக்டர், 2 நர்சுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். மேலும் மையத்தின் அருகே தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்தது. மாணவர்களின் பெற்றோர் தங்குவதற்கு இடவசதி செய்யப்பட்டிருந்தது. தேர்வு மையங்களின் அருகே இடைத்தரகர்களின் நடமாட்டம் உள்ளதா என்று போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். மாணவ-மாணவிகள் வரிசையாக தேர்வு மையங்கள் செல்வதற்கான ஒழுங்குப்படுத்துதல், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். காட்பாடி சன்பீம் பள்ளி தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு காட்பாடி தன்னார்வக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, துர்காமகால் சுரேஷ் ஆகியோர் உணவு வழங்கினர்.

    மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அரியூர் உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் தேர்வு மையம் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களை போக்க வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்வு கட்டுபாட்டு மையமும் அமைக்கப்பட்டிருந்தது.

    கொரோனா பாதித்தவர்கள் ஏற்கனவே எந்த நோயும் இல்லாவிட்டால் அவர்கள் வீட்டிலேயே தனி அறையில் தங்கி சிகிச்சை பெறலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இதற்கென அமைக்கப்பட்டுள்ள முகாம்களிலும் பாதிப்படைந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

    இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பாதிப்பு ஏற்பட்டவர்களை வீட்டில் தனிமைபடுத்தும் நடவடிக்கையில் வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி முதல்கட்டமாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 2 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது.

    பாதிப்படைந்தவர்கள் 40 வயதுக்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டும். அவருக்கு வேறு எந்த நோய்களும் இருந்திருக்க கூடாது. அவர் தங்கும் வீட்டில் அவர் தனியாக தங்க அறை மற்றும் அங்கு கழிவறை, குளியலறை வசதி இருக்க வேண்டும். அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது கட்டுப்பாட்டு அறையில் இருந்த டாக்டர்கள் கேட்பார்கள். வீட்டில் சிகிச்சை பெறுபவர்கள் ரூ.2 ஆயிரத்து 500 கட்டணம் செலுத்த வேண்டும். அதற்காக அவர்களுக்கு தெர்மல்ஸ்கேனர் கருவி, ஆக்சிமீட்டர் கருவி, மருந்துகள் போன்றவை வழங்கப்படும். மேலும் எந்தெந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

    வீட்டு தனிமைக்கு முன்னர் அவர்களுக்கு வேறு எந்த நோயும் இல்லை என அரசு டாக்டர்கள் பரிசோதித்து சான்றழிக்க வேண்டும். தங்கும் அறையில் தனியாக கழிவறை மற்றும் குளியலறை வசதி உள்ளதா என்பதை சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்து அவர்களும் சான்றழிக்க வேண்டும். 10 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். முதல்கட்டமாக 2 பேரை வீட்டு தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    வேலூர் மாவட்டத்தில் புதிதாக 122 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,665 ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 12,543 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 122 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,665 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 11,280 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 192 பேர் உயிரிழந்துள்ளனர்.
    சென்னை இளம்பெண்ணை காதலிப்பது போல் நடித்து போதை மாத்திரை கலந்த குளிர்பானத்தை கொடுத்து ஆபாச படமெடுத்து மிரட்டிய வேலூர் சிறைக்காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    வேலூர்:

    சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் கடந்த ஆகஸ்ட் 28-ந் தேதி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வேலூர் மத்திய சிறை காவலர் கணேஷ்குமார் மீது புகார் அளித்தார்.

    அந்த புகாரில் தன்னை சிறைக்காவலர் கணேஷ்குமார், காதலிப்பது போல் நடித்து போதை மாத்திரை கலந்த குளிர்பானத்தை கொடுத்து ஆபாச படமெடுத்து மிரட்டுவதாக கண்ணீர் மல்க கூறினார்.

    மேலும் மிரட்டியதற்கான வீடியோ ஆதாரங்களையும் போலீசாரிடம் வழங்கினார். இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசார் கணேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதற்கிடையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சிறைக்காவலர் கணேஷ்குமார் வந்தவாசி கிளைச்சிறைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகள், கணேஷ்குமார் இளம்பெண்ணை நேரடியாக மிரட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனால் அதிர்ந்து போன சிறைத்துறை நிர்வாகம் கணேஷ்குமாரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.

    வேலூர் அனைத்து மகளிர் போலீசார் கணேஷ்குமாரை தேடி வருகின்றனர்.
    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு கிராமம் புதுமனை பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன். இவருடைய மனைவி யுவராணி, மகள் கீர்த்தனா (வயது 8). 3-ம் வகுப்பு படித்து வந்தாள். அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரது மகள் பாவனா (12) 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் அதேபகுதியில் கானாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் மழை பெய்துள்ளதால் சுமார் 25 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனை வேடிக்கை பார்த்து விட்டு அருகில் உள்ள கானாற்றில் குளித்து, துணி துவைக்க அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் உள்பட சுமார் 20 பேர் நேற்று பகல் 12 மணியளவில் அங்கு சென்றனர்.

    அவர்களுடன் கீர்த்தனா, பாவனா ஆகியோரும் சென்றனர். அப்போது கீர்த்தனா, பாவனா ஆகியோர் கானாற்றில் உள்ள தண்ணீரில் இறங்கி விளையாடி கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கி கொண்டனர். மேலும் ஆற்றில் வேகமாக வந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கினர்.

    இதனை பார்த்து யுவராணி மற்றும் பெண்கள் கூச்சலிட்டனர். ஆற்றில் குளித்து கொண்டிருந்த பொதுமக்கள் ஆற்றில் குதித்து கீர்த்தனா, பாவனா ஆகியோரை மீட்டனர். பின்னர் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கீர்த்தனா பரிதாபமாக இறந்தாள். பாவனா பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாலை இறந்தாள்.
    ×