என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
    வேலூர், 

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. நிர்வாகிகள் செல்வி பாண்டுரங்கன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கரி, நாராயணன் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும்.

    ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் தொகையினை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு இந்து சமய அறநிலையத் சட்டத்தின்படி பயனாளிகளுக்கு பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து வீட்டுமனை பட்டா வழங்க கோரி அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை அளித்தனர்.
    வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது.
    வேலூர், 

    தமிழகத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை . இந்நிலையில் , இந்த ஆண்டு கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததால் நடப்பு ஆண்டுக்கான அரசு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. 

    அதன்படி , மாநிலம் முழுவதும் 10-ம் பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது.
    வேலூர் மாவட்டத்தில் 92 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. மொத்தம் 9,528 மாணவர்கள் 9,401 மாணவிகள் உள்பட 18,929 பேர் தேர்வு எழுதினர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 77 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன .204 பள்ளிகளை சேர்ந்த 15,551 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 96 மையங்களில் 16,966 பேர் ேதர்வு எழுதினர்.

    திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள 5 கல்வி மாவட்டங்களில் 504 உயர்நிலைப்பள்ளிகளில் பயிலும் 17,318 மாணவர்கள், 16,075 மாணவிகள் என மொத்தம் 33,393 மாணவர்கள் 139 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதினர்.

    திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உட்பட 8 பேர் உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் 144 கண்காணிப்பு அலுவலர்கள் மேற்பார்வையில் தேர்வு நடைபெறுகின்றன.

    தேர்வுக்கான வினாத்தாள்கள் மையத்தில் இருந்து துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை காவலர்கள் உதவியுடன் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, தேர்வு தொடங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைகளில் சமூக இடைவெளியை விட்டு அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு அறைக்குள் தண்ணீர் பாட்டில், பேனா, ஹால்டிக்கெட் கொண்டு செல்ல அனுமதிக்க பட்டனர். எலெக்ட்ரானிக், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்க படவில்லை.
    குடியாத்தம் அடுத்த தட்டாங்குட்டை கிராமத்தில் எட்டியம்மன் திருவிழாவில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் திருவீதி உலா வந்தார்.
    குடியாத்தம், 

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மேல் முட்டுக்கூர் ஊராட்சி தட்டாங்குட்டை கிராமத்தில் ஸ்ரீஎட்டியம்மன் திருவிழா நடந்தது.

    திருவிழாவை முன்னிட்டு அனைத்து கிராம ஆலயங்களுக்கும் அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது தொடர்ந்து ஸ்ரீ எட்டியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் திருவீதி உலா வந்தார்.
     
    வழிநெடுகிலும் பக்தர்கள் பக்தியுடன் அம்மனை தரிசித்தனர் வேண்டு தலுக்காக ஏராளமான ஆடுகள் பலியிடப்பட்டன தொடர்ந்து ராட்சத பூமாலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சாத்தப்பட்டது.

    தொடர்ந்து பல ஆயிரம் எலுமிச்சைகளால் ஆன மாலை அம்மனுக்கு சாத்தப்பட்டது.
    குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா கேமரா மூலம் கண்காணிக்கபடும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறினார்.
    குடியாத்தம், 

    வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய தேர் திருவிழாவான நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா வரும் 11-ந்தேதி நடைபெற உள்ளது.

    எஸ்.பி. ஆய்வு இதனையொட்டி தேர் செல்லும் பாதையில் பாதுகாப்பு பணிகள் குறித்தும் தேர் செல்லும் பாதையிலும் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் காவல்துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா வரும் 14-ந் தேதியும், கெங்கையம்மன் சிரசு திருவிழா ஊர்வலம் வரும் 15-ந்தேதியும் நடைபெற உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து குறித்தும் தேர் மற்றும் சிரசு செல்லும் பாதைகளில் காவல்துறை அதிகாரிகளுடன் சென்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நேற்று இரவு ஆய்வு செய்தார். 

    இந்த ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், மணிகண்டன், கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது
    நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் தேர் திருவிழா மற்றும் கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா, சிரசு திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்யப்பட்டது. 

    திருவிழாவை காண வரும் வெளியூர் பக்தர்கள் வசதிக்காக வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்வது குறித்தும், நகரில் திருவிழாவின் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பக்தர்களும் பொதுமக்களும் கோவில்களுக்கு சென்று வர ஏற்பாடுகள் செய்வது குறித்தும், தேர் திருவிழாவின் போதும் சிரசு திருவிழாவின் போதும் அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் முன்னேற்பாடுகள் குறித்தும் கோவில் மற்றும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிப்பது, குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்தும் அவர்களை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக கைது செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    மேலும் திருவிழாவின்போது பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
    குடியாத்தம் சிரசு திருவிழாவின்போது கவுண்டன்ய ஆற்றில் கடை அமைப்பது கோர்ட்டு அவமதிப்பு செயல் என வேலூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    குடியாத்தம், 

    வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று குடியாத்தம் பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 
    போக்குவரத்து நெரிசல்
    அப்போது அவர் கூறியதாவது-
    தேர்வு நடைபெறும் பள்ளிகளை ஆய்வு செய்த போது மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தேர்வு எழுதுகின்றனர் பரதராமி-குடியாத்தம் இடையே நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் பணிகள் விரைந்து செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
    மேலும் குடியாத்தம் வழியாக வெளிம ாநிலங்களிலிருந்து அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் அந்த வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    மேலும் மரக்கட்டைகளை சாலையில் போக்குவரத்து இடையூறாக போட்டுள்ளனர் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் அதை அப்புறப்படுத்த மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    கோர்ட்டு அவமதிப்பு
    கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆற்றில் கடைகள் போடுவதற்கு தடைவிதிக ்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றியபின் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என  கோர்ட்டு உத்தரவு இருப்பதால் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆற்றுப்பகுதியில் கடைகளை அமைக்க கூடாது. அப்படி கடைகளை அமைத்தால் கோர்ட்டு அவமதிப்பு செயலாகும்.
    கெங்கையம்மன் திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் 
    பயிர் இழப்பீடு
    கடந்த சில தினங்களாக வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் சூறைக் காற்றுடன் கூடிய மழை பெய்தது இதனால் பல பகுதிகளில் வாழை, நெல், மாஉள்ளிட்ட விவசாய பயிர்கள் பெருத்த சேதம் அடைந்ததாக தகவல்கள் வந்துள்ளன.

    இது குறித்து ஓரிரு நாளில் ஆய்வு அறிக்கை வந்தபின் உரியவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வளத்தூர் பள்ளியில் தேர்ச்சி பெற்றும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பத்தாம் வகுப்பு படித்த மாணவன் சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க எடுப்பார்கள் என தெரிவித்தார்.
    வேலூரில் கோட்டை பூங்காவில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் கோட்டை அகழியில் இன்று காலை ஆண் பிணம் மிதந்தது. இதனை கண்ட பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    தீயணைப்பு நிலைய ஊழியர்களுடன் இணைந்து அகழியில் மிதந்த பிணத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பிணமாக மிதந்த வாலிபர் உடலில் கல்லால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தன.

    மேலும் வாலிபர் கிடந்த இடத்தில் அகழி கரையில் ரத்தம் கொட்டியிருந்தது. மேலும் வாலிபரை அருகில் உள்ள பூங்காவில் இருந்து இழுத்து வந்த தடயங்களும் இருந்தன.

    வாலிபரை கோட்டை பூங்காவில் வைத்து அடித்து கொலை செய்து இழுத்து வந்து அகழியில் வீசியுள்ளனர்.

    வாலிபரை தாக்கிய ரத்தம் படிந்த கல் ஒன்று கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். கொலையான வாலிபர் யார் என்பது தெரியவில்லை.

    வாலிபர் உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்தது. இதன் மூலம் கொலை நடந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபர் யார்? கொலை செய்து வீசிய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    பூங்கா பகுதியில் மது, கஞ்சா பயன்படுத்தும் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கோட்டை பூங்காவில் வாலிபர் கொலையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூரில் வீடு பெற நடைெபற்ற சிறப்பு முகாமில் ஏராளமானோர் குவிந்தனர்.
    வேலூர்:

    வேலூரில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

    வேலூர் முத்து மண்டபம் டோபிகானா பகுதி கன்னிகாபுரம், தொரப்பாடி, கரிகிரி ஆகிய இடங்களில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்வதற்கான சிறப்பு முகாம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதேமில்லத் அரங்கத்தில் நடந்தது. 

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வீடுகள் கேட்டு விண்ணப்பித்தனர். அதிகளவில் கூட்டம் இருந்ததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பம் வழங்கி சென்றனர்.கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக சத்துவாச்சாரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் இந்தியாவில் வேறு எங்கும் சொந்தமாக நிலமும் வீடும் இருக்கக்கூடாது. 

    பயனாளிகளின் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும்.குடியிருப்போர் நல சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து மாதம் ரூ.250 பராமரிப்பு தொகை செலுத்த வேண்டும் ஆகியவை விண்ணப்பிக்க தகுதிகளாகும்.

    விண்ணப்பத்துடன் குடும்பத் தலைவர் மற்றும் தலைவி ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்கள் ஒப்படைக்க கோரி இருந்தனர்.

    இன்று விண்ணப்பிக்க தவறியவர்கள் காட்பாடியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பம் அளிக்கலாம் என தெரிவித்தனர்.
    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது- 73,387 பேர் எழுதினர்.
    வேலூர்:

    தமிழகத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. 

    இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததால் நடப்பு ஆண்டுக்கான அரசு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது.

    வேலூர் மாவட்டத்தில் 73 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. மொத்தம் 7,527 மாணவர்கள் 8,580 மாணவிகள் உள்பட 16,107 பேர் தேர்வு எழுதினர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 60 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 120 பள்ளிகளை சேர்ந்த 13,855 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர்.
    திருப்பத்தூர் மாவட்டத்தில் 56 மையங்க–ளில் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்தது. இதில் 14,014 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 252 பள்ளிகளில் படிக்கும் 14,501 மாணவர்கள் 14,910 மாணவிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 411 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உட்பட 8 உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் 165 கண்காணிப்பு அலுவலர்கள் மேற்பார்வை–யில் ஈடுபட்டனர்.

    அரசு பொதுத் தேர்வுகளை முன்னிட்டு நிலையான படை உறுப்பினர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்படுகின்றன.

    இது தவிர மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், அனைவருக்கும் கல்வி உதவி திட்ட அலுவலர் தலைமையில் தேர்வு கண்காணிப்பு குழுவினர் அரசு பொதுத் தேர்வு களை கண்காணித்து வருகின்றனர்.

    தேர்வுக்கான வினாத்தாள்கள் மையத்தில் இருந்து துப்பாக்கி ஏந்திய ஆயுதப்ப–டை காவலர்கள் உதவியுடன் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, தேர்வு தொடங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைகளில் சமூக இடைவெளியை விட்டு அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு அறைக்குள் தண்ணீர் பாட்டில், பேனா, ஹால்டிக்கெட் கொண்டு செல்ல அனுமதிக்க பட்டனர். எலெக்ட்ரானிக், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்க படவில்லை.
    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கவுண்டன்ய ஆற்றுப்பகுதியில் கடைகள் அமைக்க தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    வேலூர்:

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கவுண்டன்ய ஆற்றுப்பகுதியில் கடைகள் அமைக்க தடை விதித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். 

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குடியாத்தம் தாலுகா கவுண்டன்ய ஆற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு மாதத்துக்கு மேலாக ஆற்றில் பெரு வெள்ளம் ஓடியது. 

    இதனால் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி குடியிருந்த குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. எனவே அங்கு குடியிருந்தவர்களை முகாம்களில் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த 1,282 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

    இந்தநிலையில் குடியாத்தம் தாலுகா கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கவுண்டன்ய ஆற்று பகுதியில் சிறிய வியாபாரிகள் பொம்மை கடைகள், விளையாட்டு ப்பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பொழுது போக்கிற்கான ரங்கராட்டினம் மற்றும் இதர கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய வந்தால் மீண்டும் தொடர் மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மேலும், மண்வளம் குறித்த நிலைமை அறியாத நிலையில் ரங்கராட்டினம் போன்றவற்றை ஆற்றுப்பகுதியில் அமைத்தால் விபத்துக்கள் ஏற்பட வாய்யப்புள்ளது.

    கோர்ட்டு உத்தரவில் நீர்வழிப் புறம்போக்குகளில் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ஆக்கிரமிப்புகள் ஏதும் இருக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஆக்கிரமிப்புகள் செய்பவர்கள் மீது சட்டப்படி நீதிமன்ற அவமதிப்பு ஏற்படுத்தப்படும்.

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கவுண்டன்ய ஆற்று புறம்போக்கில் எவ்வித கடைகள் அமைப்பது முற்றிலுமாக தடைசெய்யப்படுகிறது.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    30 நாள் பரோல் வழங்கக்கோரி வேலூர் ஜெயிலில் முருகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது பரோலில் வெளியே வந்துள்ள அவர் காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.

    இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் பரோலில் வெளியே வந்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    முருகன் பரோல் கேட்டு சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை.

    இதனால் விரக்தியடைந்த அவர் காலை உணவு சாப்பிட மறுத்தார். பரோல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    முருகன் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பாக அரசு மற்றும் கோர்ட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி முருகன் 5வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தனக்கு 30 நாள் பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தண்ணீர் கூட அருந்தாமல் இருக்கிறார். இன்று காலை மயக்கமாகியுள்ளார். அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
    கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டுக்கு ரூ.1,60,642 மின்கட்டணம் வந்தது அங்குள்ள மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    வேலூர் முத்து மண்டபம் டோபி கானா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராணி அம்மாள். கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவருடைய மகன், மருமகளுடன் வசித்து வருகிறார்.

    இவர்களது வீட்டில் 2 மாதத்திற்கு ஒரு முறை ரூ‌.95 முதல் ரூ.150 வரை மின் கட்டணம் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் இவரது வீட்டுக்கு நேற்று மின்கட்டண அளவு எடுக்கப்பட்டது. அப்போது மின் கட்டணம் ரூ.1,60,642 கட்ட வேண்டும் என அட்டையில் எழுதி வைத்து விட்டு மின் ஊழியர் சென்று விட்டார்.

    இதனை கண்டதும் ராணி அம்மாள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தோட்டப்பாளையம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று இது பற்றி கேட்டனர்.

    அப்போது ரூ.1 லட்சத்திற்கும் மேல் மின் கட்டணம் வந்தது குறித்து மனு ஒன்று எழுதி தரும்படி அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

    கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டுக்கு ரூ.1 லட்சத்து 60,642 மின்கட்டணம் வந்தது அங்குள்ள மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து ராணி அம்மாள் குடும்பத்தினர் கூறுகையில்:-

    எங்கள் வீட்டில் 4 டியூப்லைட் விளக்கு, 2 மின்விசிறி, ஒரு டி.வி., பிரிட்ஜ் உள்ளது. பகல் நேரத்தில் வீட்டில் இருக்கும் 3 பேரும் வேலைக்கு சென்று விடுகிறோம். இதனால் இரவு நேரத்தில் மட்டுமே எங்கள் வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அரசு தந்தபோது நாங்கள் பெரும்பாலும் மின்கட்டணம் கட்டியதே இல்லை. தற்போது ரூ.95 முதல் 150 வரை கட்டணம் செலுத்தி வருகிறோம்.

    இந்த மாதம் ரூ.1,60, 642 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என எழுதியுள்ளனர். இதுபற்றி அலுவலத்தில் கேட்டபோது மனு அளிக்குமாறு கூறி உள்ளனர். எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை என்றனர்.

    இவ்வளவு மின்கட்டணம் எப்படி வந்தது என்ற அதிர்ச்சியில் இருந்து ராணி அம்மாள் குடும்பத்தினர் மீளவே இல்லை.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    வேலூரில் தேர்வுக்கு பயந்து பிளஸ்-2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தேர்வுக்கு மாணவ, மாணவிகள் ஆயத்தமாகி உள்ளனர். முதல் நாளான இன்று மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வு எழுத சென்றனர்.

    இந்த நிலையில் தேர்வுக்கு பயந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் அரியூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் கோபி என்பவரது மகன் மோனிஷ் (வயது 16) தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தாய் பரிமளா ஷு கம்பெனியில் வேலைக்குச் சென்று மோனிசை படிக்க வைத்தார்.

    நேற்று மாலை பரிமளா ஷு கம்பெனியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது மோனிஷ் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

    இன்று தேர்வு தொடங்குவதால் மாணவன் மோனிஷை படிக்குமாறு பரிமளா அறிவுரை வழங்கினார்.

    இதனையடுத்து மோனிஷ் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.

    மகன் தேர்வுக்கு படிக்கிறான் என நினைத்து பரிமாளாவும் அந்த அறைக்கு செல்லவில்லை. ஆனால் அறையில் இருந்த மோனிஷ் தேர்வுக்கு பயந்த நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த மோனிஷ் அந்த அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இரவு 9 மணிக்கு மோனிஷ் அறைக்கதவை திறந்து பரிமளா உள்ளே சென்றார். அங்கு மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்று பிளஸ்-2 தேர்வு தொடங்கிய நிலையில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தவித அச்சம், பதட்டம் அடைய வேண்டாம். இதுபோன்ற விபரீத முடிவுகளில் ஈடுபட வேண்டாம் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ×