என் மலர்tooltip icon

    வேலூர்

    ராஜூவ் காந்தி கொலை கைதி சாந்தனுக்கு வழக்கமாக நடைபெறும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாந்தன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இன்று காலை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

    அங்கு சாந்தனுக்கு ரத்தம் சர்க்கரை அளவு ஈசிஜி உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. சோதனை முடிந்த பிறகு மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சாந்தன் உடல்நிலை நன்றாக உள்ளது. அவருக்கு வழக்கமாக நடைபெறும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் 30-வது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு யாகத்தில் கர்நாடக கவர்னர் தாவர் சந்த் கெலாட் கலந்து கொண்டார்.
    வேலூர்:

    வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 30-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த ஸ்ரீ நாராயணி மூலமந்திர மகா யாகத்தில் கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டார்.

    வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 30-ம் ஆண்டு விழா இன்று நடந்தது. முன்னதாக நேற்று மாலை 6 மணியளவில் ஸ்ரீ மஹால–ட்சுமி மூலமந்திர மஹா யாகம் நடந்தது. ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.

    தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 10,008 பக்தர்கள் மஞ்சள் நீர் கலசங்களுடன் மேளதாளங்கள் முழங்க‌ ஊர்வலமாக வந்து நாராயணி பீடத்தின் சுயம்பு அம்மனுக்கு தங்கள் கைகளால் அபிஷேகம் செய்தனர்.

    தொடர்ந்து காலை 11 மணியளவில் ஸ்ரீ நாராயணி மூலமந்திர யாகம் நடந்தது. ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் நடைபெற்ற இந்த யாகபூஜையில் கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டார். 

    நிகழ்ச்சியில் ஸ்ரீ்புரம் இயக்குனர் சுரேஷ்பாபு, மேலாளர் சம்பத் அறங்காவலர் சவுந்தர ராஜன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4965 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    வேலூர், 

    வேலூர் மாவட்டத்தில் இன்று 1965 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. வேலூர் உழவர் சந்தையில் சிறப்பு முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி, வேலூர் மாநகராட்சி நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதுவரை வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 101 சதவீதமாகும், 2-வது தவணை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டுள்ளது.இதில் மீதும் 11 சதவீதம் மட்டுமே இன்னும் செலுத்த உள்ளது. இது தவிர பூஸ்டர் தடுப்பூசி 65 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பத்தூரில் 1500 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. இது தவிர அனைத்து அரசு ஆஸ்பத்திரியிலும் முகாம் நடந்தது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 1,500 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 29வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 74 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி மற்றும் 55 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 830 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 93 ஆயிரத்து 920 தடுப்பூசிகளும் இருப்பு உள்ளது. 

    உடல் ஊனமுற்றவர்களுக்கு அவர்களின் இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தினர். இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி சேர்த்துக் கொள்ளுமாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பித்து மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவையோட்டி ரத வீதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனார்.
    குடியாத்தம், 

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் தேர் திருவிழா வரும் 11-ந்தேதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

    சிரசு திருவிழா குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவை முன்னிட்டு 14-ந்தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது.

    இந்த இரண்டு தேர்கள் செல்லும் பாதைகளை ஆய்வு செய்யுமாறு வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல்பாண்டியன் அனைத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் தலைமையில் தாசில்தார் லலிதா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், கோயில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு மற்றும் அதிகாரிகள் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் மற்றும் கெங்கையம்மன் கோவில் தேர் செல்லும் பாதைகளை நடந்து சென்று ஆய்வு செய்தனர்.

    மின் ஒயர்கள்அந்த ஆய்வின் போது சாலையில் ஆங்காங்கே சிறுசிறு பழுதான இடங்களை உடனடியாக சீர் செய்யவேண்டும், தேர் செல்லும் பாதைகளில் உள்ள மரங்களின் கிளைகளை தேவையான அளவு வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.

    சாலையின் குறுக்கே செல்லும் மின் ஒயர்கள் குறித்தும் தேர் செல்லும் சமயத்தில் அப்புறப்படுத்தவேண்டும், தேர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உதவி கலெக்டர் தனஞ்செயன் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் ஆலய தேர் திருவிழா கமிட்டி நிர்வாகிகள் உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
    ரெட் கிராஸ் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 4000 ஊசிகள் வழங்கப்பட்டது.
    வேலூர், 

    காட்பாடி வட்ட ரெட்கிராஸ் உலக ரெட்கிராஸ் தினம் திருவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. 

    ஜீன் ஹென்றியின் டுனந்த் 195-வது பிறந்த நாளினை முன்னிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 4000 ஊசிகள்களையும், நலதிட்ட உதவிகளையும் காட்பாடி தாசில்தார் கே.ஜெகதீஸ்வரன் வழங்கினார்.

    காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். பொருளாளர் வி.பழனி, வரவேற்று பேசினார். துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் ஆர்.விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் எம்.ராணி நிர்மலா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

    வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எம்.பாலசுப்பிரமணியன், மருந்தாளுநர் சாமுண்டீஸ்வரி, கூகுளே நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஷ்குமார், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், வாழ்நாள் உறுப்பினர்கள் தணிகை செல்வம், திருமகள் செல்வமணி, தன்னார்வலர்கள் எஸ்.ஜெ.சோமசுந்தரம், எஸ்.மோதகப்பிரியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    வேலூர் ஜெயிலில் பரோல் வழங்கினால் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக வக்கீல் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். உயர் பாதுகாப்பு தொகுதியில் உள்ள முருகன், பரோல் வழங்கக் கோரி இன்று 8-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

    சிறையில் உள்ள முருகனை அவரது வழக்கறிஞர் புகழேந்தி சந்தித்துப் பேசினார்.அவர் கூறியதாவது:-

    தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனுக்கு 5-ந் தேதி மாலை மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிறை மருத்துவமனையில் அவருக்கு 6 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. 

    திடீரென காய்ச்சல் வந்ததால் கபசுர குடிநீர் வழங்கியுள்ளனர். பின்னர் 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றிய பிறகு முருகனுக்கு இரவு 11 மணியளவில் சுய நினைவு திரும்பியுள்ளது.

    முருகனை அவரது மனைவி நளினி சந்தித்து பேசியதுடன் உண்ணாவிரதத்தை கைவிட கோரினார். ஆனால், மறுத்துவிட்டு முருகன், நளினியின் தொடர் வற்புறுத்தல் காரணமாக 2 ஆரஞ்சு துண்டுகளை சாப்பிட்டுள்ளார். 

    தொடர்ந்து ஜெயிலர் கூறியதின் அடிப்படையில் சிறிதளவு மோர் குடித்துள்ளார். உண்ணாவிரதத்தை கைவிட நான் பேசியும் அவர் சமாதானம் அடையவில்லை.

    குடும்பத்தினரை சந்திக்க 6 நாட்கள் பரோல் கோரி மனு அளித்துள்ளார். வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரது பரோல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தனது வழக்கை சிறை நிர்வாகம் திட்டமிட்டே நடத்தவிடாமல் தடுப்பதாக அவர் நினைக்கிறார். 

    இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரில் 3 பேருக்கு பரோல் வழங்கிய நிலையில் இலங்கையைச் சேர்ந்த தனக்கு மட்டும் பரோல் ஏன் மறுக்கப்படுகிறது என கேள்வி எழுப்புகிறார். 

    31 ஆண்டுகள் சிறையில் கடந்துவிட்டது. 6 நாட்கள் பரோல் கொடுத்தால் உண்ணாவிரதத்தை கைவிடுகிறேன். இல்லாவிட்டால் இறந்தாலும் பரவாயில்லை என்கிறார். சிறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகளும் அவரை சமாதானம் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
    வேலூர் விருப்பாட்சிபுரத்தில் 21 அடி உயரத்தில் அம்மன் சிலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    வேலூர்:

    வேலூர் விருப்பாட்சிபுரம் காந்திநகர் 15- வது தெருவில் உள்ள புற்றுநாகேஸ்வரி அம்மன் கோவிலில் 21 அடி உயரமுள்ள நாகேஸ்வரியம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.

    காலை 10 மணியளவில் யாகசாலையில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சக்தி அம்மா ஆசியுடன் பரிவார தெய்வங்களுக்கும் பூஜைகளை பாலமதி முருகன்கோவில் பிரபு சாமிகள் நடத்தி வைத்தார்.இதில் அந்த பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    21 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி அளிக்கும் அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.
    குடியாத்தம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த பெண் உடலை கைபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பார்வதிபுரம் கிராமம் ஒட்டியபடி ரயில்வே பாதை அருகே உள்ள தனியார் விவசாய கிணறு ஒன்று உள்ளது. 

    இதில் இன்று காலை அந்த கிணற்றில்  அழுகிய நிலையில் பெண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக குடியாத்தம் நகர போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி கிணற்றிலிருந்து பெண்ணின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    அந்தப் பெண் சுமார் 2 நாட்களுக்கு முன் இறந்த நிலையில் இரு–ந்ததால் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி உள்ளிட்ட போலீசார் அப் பெண்ணின் சடலத்தை. 

    கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கிணற்றில் மிதந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூரில் ஐ.டி. ஊழியர் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி புகார் அளித்ததால் உடலலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர், சாய்நாதபுரம், பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோமசேகர் (வயது 45). தனியார் ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தார்.இவரது மனைவி பேபி கலா (40). சோம சேகர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பேபி கலவை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். 

    இதேபோல் பேபி கலாவும் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு 2-வதாக  சோமசேகரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சோம சேகர் தனது தாய் சாந்தா மற்றும் மனைவியுடன் சாய்நாதபுரத்தில் வசித்து வந்தார்.கொரோனா தொற்று பரவல் காரணமாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்து கொண்டு இருந்தார்.

    கடந்த மாதம் பேபி கலா சோமசேகருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். 21-ந் தேதி சோம சேகருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. 

    இதையடுத்து அவரது தாய் சாந்தா சோமசேகரை சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சோமசேகர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    சோம சேகர் இறந்த தகவலை மனைவி பேபி கலாவுக்கு தெரிவிக்காமலேயே அவரது தாய் சாந்தா மகனின் உடலை வேலப்பாடியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தார். 

    ஒரு வாரம் கழித்து கணவர் வீட்டிற்கு வந்த பேபி கலா கணவர் இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். என் கணவர் இறந்த தகவலை என்னிடம் கூறவில்லை என கேட்டார்.அதற்கு அவர் உன்னுடைய செல்போனில் இல்லாததால் தகவல் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளனர்.

    பேபி கலா கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக பாகாயம் போலீசில் புகார் செய்தார். 

    இதனையடுத்து பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தாசில்தார் செந்தில் வருவாய் ஆய்வாளர் முகமதியர் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு கோடை விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது, கடந்த ஓராண்டு காலத்தில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து அலுவலகங்களும் ஆன் லைன் மூலமாகவே செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுமக்கள் தங்கள் புகார்களை ஆன் லைன் மூலமாக அளிக்கவும், அதற்கு ஆன்லைன் மூலமாக தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும்.வேலூர் அருகே மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் விமான நிலைய விரிவாக்க பணிகள் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிக்கப்பட்ட பின்பு, மாவட்டத்திற்கு என்று தனியாக சுற்றுலா தளம் இல்லை என்றும் கோடை விழா நடத்தப்படுவதில்லை எனவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர், வேலூர் மாவட்டத்தில் புதிதாக சுற்றுலா தளம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் விரைவில் ெதாடங்கப்படும். பணிகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு கோடை விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேலூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
    நளினி வேண்டுகோளை ஏற்க மறுத்து வேலூர் ஜெயிலில் 7வது நாளாக முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். முருகன் பரோல் கேட்டு சட்டபோராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை.

    இதனால் விரக்தியடைந்த அவர் பரோல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

    அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று பரோலில் வெளியே வந்துள்ள நளினி வேலூர் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முருகனை நளினி சந்தித்துப் பேசினார்.

    அப்போது உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். அதனை கைவிட வேண்டும் என நளினி கேட்டுக்கொண்டார்‌. மேலும் முருகனுக்கு பழங்களையும் அவர் வழங்கினார்.

    நளினி வேண்டுகோளை ஏற்க மறுத்து முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    7வது நாளாக இன்றும் அவர் ஜெயில் உணவை சாப்பிட மறுத்துவிட்டார். அவரது வக்கீல் புகழேந்தி இன்று முருகனை நேரில் சந்தித்து பேசுகிறார். முருகனின் உடல்நிலையை ஜெயில் டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
    குடியாத்தம், காட்பாடி அருகே ரெயிலில் அடிபட்டு பெண் உள்பட 2 பேர் இறந்தனர்.
    ஜோலார்பேட்டை, மே.6-

    காட்பாடி - லத்தேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    பெண் பலி அப்போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் இறந்தவர் மாநிறம் உடையவராகவும் கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து உள்ளார் இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    குடியாத்தம்இதே போன்று குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று முன்தினம் அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். 

    இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ஒரே நாளில் காட்பாடி ஜோலார்பேட்டை மார்க்கத்தில் அடுத்தடுத்து 2 இடங்களில் ரெயிலில் அடிபட்டு ஒரு பெண் பலியான சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×