என் மலர்tooltip icon

    வேலூர்

    குடிகாரன், கோவில் நிலத்தை அபகரிப்பவனை எல்லாம் அறநிலையத்துறை பொறுப்புகளில் அமர்த்தக்கூடாது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறையில் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள செல்லியம்மன் கோவிலில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சி தொடக்கத்தின்போது இறை வாழ்த்து பாடப்பட்டது.

    விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

    அறநிலையத்துறை அரசு நிகழ்ச்சிகளில் தேவாரம் பாடட்டும், திருவாசகம் பாடட்டும் அதை பற்றி கவலையில்லை. ஆனால் அறநிலைத்துறையும் அரசு துறை தான், அது சார்ந்த நிகழ்ச்சியும் அரசு நிகழ்ச்சி தான்.

    இதனால் தான் இங்குள்ள விளம்பர பதாகையில் கோபுரத்துடன் கூடிய அரசு சின்னம் போடப்பட்டுள்ளது. அதனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும். இன்று அது பாடாதது வருத்தம். இனி நடக்கும் நிகழ்ச்சிகளில் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும், வரும் நாட்களில் கட்டாயம் இதை கடைபிடிக்க வேண்டும் என அறநிலைத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் இங்கே பொறுப்பேற்றவர்கள் கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்கும்போது சரியான ஆட்களை நியமிக்க வேண்டும்.

    குடிகாரன், கோவில் நிலத்தை அபகரிப்பவனை எல்லாம் அறநிலையத்துறை பொறுப்புகளில் அமர்த்தக்கூடாது.

    அப்படி போட்டால் உங்களை பதவியில் இருந்து எடுத்துவிடுவோம்.

    இங்குள்ள செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான புதிய பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள சிறிய இடத்தை பஸ் நிலையத்துக்கு கொடுத்தால் மேலும் பஸ் நிலையம் நவீனமயம் ஆக்க உதவும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு, எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த் எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணைமேயர் சுனில்குமார் வள்ளலார் ஆர்.பி.ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கெங்கையம்மன் தேர்த் திருவிழாவும் சிரசு திருவிழாவும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.
    குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா உலக அளவில் புகழ் பெற்றது. இந்த திரு விழாவில் வேலூர் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா பாண்டிச்சேரி மற்றும் வட இந்திய மாநிலங்கள், சிங்கப்பூர், மலேசியா இலங்கை, நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டு கெங்கையம்மன் சிரசு திருவிழா நேற்று நடந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கெங்கையம்மன் தேர்த் திருவிழாவும் சிரசு திருவிழாவும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.

    2 ஆண்டுகளாக கெங்கையம்மன் திருவிழா நடைபெறாததால் பக்தர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் இருந்தனர். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால் தேர்த்திருவிழா கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தேர் திருவிழா நடைபெற்றது.

    2 ஆண்டுகளுக்கு பின் நடந்த தேர் திருவிழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து நேற்று காலையில் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. அதிகாலையில் முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து நீலிகோவிந்தப்ப செட்டிதெரு, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து கோவிலை சென்றடைந்தது.

    வழிநெடுகிலும் நேர்த்திக்கடனாக பக்தர்கள் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து வழிப்பட்டனர். வீடுகளிலும், மாடிகளிலும், சாலைகளிலும் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் திரண்டுநின்று அம்மன் சிரசை வழிப்பட்டனர்.

    வழிநெடுகிலும் பூ மாலை அணிவிக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர். அதிகாலை முதலே வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

    தொடர்ந்து ஊர்வலமாக பக்தர் வெள்ளத்தில் மிதந்து சென்ற கெங்கையம்மன் சிரசு கோவிலை வந்தடைந்ததும் சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவிலில் அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மாலையில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    காலை முதலே அறுசுவை உணவு கொண்ட அன்னதானமும், குளிர்பானங்கள், நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    வேலூர் :

    வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி, மாடல் சிட்டி ஆகிய திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட அனைத்து பணிகளை முன்னேற்றம் செய்வது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி இத்திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது

    வேலூர் மாநகராட்சி முழுவதும் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 937 இடங்களில் சாலைப்பணிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் 280 பணிகள் முடிவடைந்துள்ளது.

    டிசம்பர் மாதத்துக்குள்  மீதம் உள்ள சுமார் 500 இடங்களில் சாலை பணிகளை விரைந்து முடிக்க ஆய்வு மேற்கொண்டு ஒப்பந்ததாரர், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி சாலை பணிகள் அமைய உள்ள இடங்களில் உடைந்த குழாய்களை சீரமைத்தல், வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்ட குழாய்களில் உள்ள பழுதை நீக்குதல் போன்ற பணிகள் முடிக்க வேண்டும். அதன் பின்னர் சாலை பணிகள் நடைபெறும்.

    இந்த பணிகள் 90 நாட்களுக்குள் முடிக்க காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெறாமல் உள்ள இடங்களில் பணிகள் தொடங்கப்படும்.

    மாநகராட்சியில் அனைத்து பாதாள சாக்கடை பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளும் திட்டமிட்டபடி முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    வேலூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை சிறப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
    வேலூர்,

    தமிழகத்தில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக அரசு சார்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான டேவிதார் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்கிறது. 

    அதன்படி வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை அவர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    வேலூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டார். அப்போது பஸ் வெளியே செல்லும் நுழைவு பகுதி குறுகலாக இருந்ததை பார்த்தார். அந்த வழியாக ஒரு பஸ் செல்லும் வகையில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே 2 பஸ் செல்லும் வகையில் அந்த பாதையை அகலப்படுத்த வேண்டும் என்று அவர் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

    முக்கிய பணிகள் இதையடுத்து சர்க்கார்தோப்பில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சூரிய மின்சக்தி உற்பத்தி மையம் போன்றவற்றை அவர் பார்வையிட்டார்.

    மேலும், மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய பணிகள் குறித்து வரைபடம் மூலம் அவருக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ரேசன் கார்டில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாமில் ஒரேநாளில் 956 மனுக்கள் பெறப்பட்டது.
    வேலூர், 

    பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நேற்று பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது.

    இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    வேலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டை தொடர்பாக திருத்தங்களை மேற்கொண்டனர். இந்த முகாமை மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் பார்வையிட்டார். ஏற்கனவே புதிய அட்டைக்கு விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்கு புதிய அட்டைகளை அவர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் செந்தில் வட்ட வழங்கல் அலுவலர் சத்தியமூர்த்தி வருவாய் ஆய்வாளர் (நுகர்பொருள்) வேணு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    956 மனுக்கள் அளிப்பு மாவட்டத்தில் அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு, வேலூர், காட்பாடி என 6 தாலுகாவில் நடந்த முகாம்களில் புதிய ரேஷன் அட்டைக்கு 23 பேரும், முகவரி மாற்றம் மேற்கொள்ள 100 பேரும், பெயர் சேர்க்க 107 பேரும், நீக்கம் செய்ய 86 பேரும், செல்போன் எண் மாற்றம் செய்ய 256 பேரும் மற்றும் இதர திருத்தங்கள் உள்பட மொத்தம் 956 மனுக்கள் வரப்பெற்றதாகவும், இதில் 158 மனுக்கள் விசாரணையில் உள்ளதாகவும் மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர் அருகே நடுரோட்டில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர், 

    தீப்பிடித்த கார் வேலூர் அருகே அமிர்தியில் சிறுவன உயிரின பூங்கா உள்ளது. இங்கு மான்கள், முதலை, பறவை இனங்கள் போன்றவை உள்ளது. இயற்கை சூழலுடன் அமைந்துள்ள இந்த பூங்காவுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் வேலூர் விருதம்பட்டை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 35). இவர் ஆஸ்திரேலியா நாட்டில் டாக்டராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த அவர் அமிர்திக்கு நேற்று சென்று விட்டு மாலையில் நண்பருடன் வீடு திரும்பினார்.

    வேடக்கொல்லைமேடு அருகே வந்து கொண்டிருந்தபோது கார் திடீரென தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காரை அங்கேயே நிறுத்திவிட்டு இருவரும் வெளியே தப்பி ஓடினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ பற்றிக்கொண்டு கருகியது. கார் மளமளவென எரிந்து கொண்டிருந்தபோது மழை பெய்தது.

    போக்குவரத்து பாதிப்பு இதனிடையே தகவல் அறிந்ததும் வேலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது காரின் உட்பகுதியில் இருந்து புகை வந்ததால் அதை அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த விபத்தில் இருவருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், காரில் இருந்த ஏ.சி.யில் மின்விசிறி திடீரென ஓடாமல் இருந்தது. இதனால் அதிக மின் அழுத்தம் ஏற்பட்டு தீபிடித்துள்ளது என்றனர். 

    தீ விபத்து ஏற்பட்டபோது அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பள்ளிகொண்டாவில் காரில் கடத்திய ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    வேலூர், 

    கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு வேலூர் வழியாக குட்கா பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வருகின்றனர்‌. இதனை தடுக்க தேசிய நெடுஞ்சாலைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

    இந்த நிலையில் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் பள்ளிகொண்டா போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர்.

    அதில் தடைசெய்யப்பட்ட குட்கா பார்சல் மூட்டைகளில் கட்டி வைத்திருந்தனர். மொத்தம் ஒரு டன் குட்கா அதில் இருந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். குட்காவை போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர்.

    இதனை கடத்தி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 22), வேல்முருகன் (24) ஆகியோரை கைது செய்தனர்.

    குட்கா எங்கிருந்து யாருக்கு கடத்திச் செல்லப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் முருகனுக்கு உடல் சோர்வு ஏற்பட்டது.இதன் காரணமாக நேற்று மாலை முதல் 3 பாட்டில் குளுக்கோஸ் முருகனுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த நிலையில் முருகன் தனக்கு 6 நாள் பரோல் விடுப்பு வழங்க கோரி இன்றோடு 14-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவரது மனைவி நளினி வலியுறுத்தியும் முருகன் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    வேலூர் ஜெயிலில் உண்ணாவிரதம் இருக்கும் முருகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவரது வக்கீல் புகழேந்தி சிறைக் கைதிகள் உரிமை மையத்திற்கு மனு அனுப்பி உள்ளார். சிறைக் கைதிகள் உரிமை மையம் தலையிட்டு முருகனின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

    தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் முருகனுக்கு உடல் சோர்வு ஏற்பட்டது.இதன் காரணமாக நேற்று மாலை முதல் 3 பாட்டில் குளுக்கோஸ் முருகனுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    முருகன் ஜெயில் உணவை சாப்பிடவில்லை. பழங்களை மட்டுமே சாப்பிடுகிறார் அவர் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். தொடர்ந்து முருகனை கண்காணித்து வருகிறோம் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர் அருகே ஊராட்சி செயலாளர் தற்கொலை செய்த விவகாரத்தில் தி.மு.க. கவுன்சிலரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த ராமநாயினி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 36). இவருக்கு காந்திமதி என்ற மனைவியும், யாகேஷ் என்ற 2 வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.

    ராஜசேகர் ராமநாயனி குப்பம் ஊராட்சியில் கடந்த 13 ஆண்டுகளாக ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் நேற்று இரவு தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அவரது பெற்றோர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    ராஜசேகர் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒருகடிதம் எழுதி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் எனது சாவுக்கு தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் அரி என்பவர் தான் காரணம். என் தம்பி பிரவீன் குமாருக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி என்னிடம் ரூ.2 ½ லட்சத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

    மேலும் என்னை மிரட்டி அவர் செய்த வேலைக்கான பணத்தை வங்கியில் எடுத்து தரும்படி ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு என்னை மிரட்டினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சொல்லி ஊராட்சி செயலர் பதவியில் இருந்து தூக்கி விட்டு துணைத் தலைவரின் மகனை இந்த வேலையில் அமர்த்த போவதாகவும் என்னை மிரட்டி வந்தார். தொடர்ந்து எனக்கு போன் செய்து என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்துள்ளார். என் சாவுக்கு உறவினர்களோ, நண்பர்களோ, அரசு அதிகாரிகளோ காரணமில்லை. ஒன்றிய கவுன்சிலரின் சூழ்ச்சியே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ராஜசேகர் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் ராஜசேகரின் தற்கொலைக்கு காரணமான தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் அரியை கைது செய்யக் கோரி உறவினர்கள் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் பாதை மாற்றி விடப்பட்டது.

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நேரில் வந்து உயிரிழந்த ராஜசேகரின் மனைவி கோமதி மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    தனது கணவர் தற்கொலைக்கு காரணமாக தி.மு.க. கவுன்சிலரை கைது செய்ய வேண்டும். அவரை கைது செய்யும் வரை எனது கணவர் உடலை வாங்க மாட்டோம் என அவர் கூறினார்.

    இதுகுறித்து கோமதி கண்ணீர் மல்க கூறுகையில்:-

    எனது கணவர் உயிரோடு இருந்த போது தி.மு.க.கவுன்சிலர் அரி அடிக்கடி வீட்டிற்கு வந்து தொல்லை கொடுத்தார். எனது மைத்துனர் வேலைக்காக 2 1/2 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். அதனை திரும்பி கேட்ட போதும் மிரட்டினார்.

    இது தொடர்பாக வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒடுகத்தூர் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதனை தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர் அரி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கவுன்சிலர் அரியை போலீசார் தேடி வருகின்றனர்.
    பாகாயத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்து பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
    வேலூர்:

    வேலூர் பாகாயத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் வேலூர் மாவட்ட குமாரவேல் பாண்டியன் இன்று திடீரென ஆய்வு செய்தார்.

    அப்போது அலுவலகத்தில் இருந்த மண்டல மேலாளர் ராஜா துணை மண்டல மேலாளர் விஜயகுமார் ஆகியோரிடம் அரிசி, பருப்பு, கோதுமை தரம் குறித்து ஆய்வு செய்து இருப்பு குறித்து கேட்டறிந்தார். 

    அப்போது அரிசி 2,517 டன், கோதுமை 729 டன், சர்க்கரை 260 டன், துவரம்பருப்பு 38 டன், பாமாயில் 20ஆயிரம் பாக்கெட்டுகள் இருப்பு உள்ளதாக தெரிவித்தனர்.

    மேலும் ரேசன் கடைகளில் வினியோகிக்க அனுப்பி வைக்கப்பட்ட தரம் குறைந்த 26 டன் ரேசன் அரிசி திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

    நுகர்பொருள் வாணிப கிடங்கில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஓய்வு அறை மற்றும் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவை ஏற்படுத்தி தர வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

    தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் ஒரு வார காலத்திற்குள் சாலையை சீரமைத்து தர வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் பூங்கொடி, மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ், தாசில்தார் செந்தில் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது.
    குடியாத்தம் :

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா மாநில அளவில் மிகவும் புகழ்பெற்றது.கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தேர் திருவிழாவும், கோவில் வளாகத்திலேயே அம்மன் சிரசு ஊர்வலமும் நடந்தது.

    கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால் இந்த ஆண்டு தேர் திருவிழா மற்றும் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இன்று காலை கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. 

    தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் ஆராதனையும் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார். 

    தேர்த்திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன், நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, ஒன்றிய குழு தலைவர்என்.இ. சத்யானந்தம், தாசில்தார் லலிதா உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வடம்பிடித்து செல்லப்பட்டது.

    நேர்த்திகடன் செலுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு தீபம் ஏந்தி வந்தனர் தொடர்ந்து மிளகு உப்பு கோவில் மீது எறிந்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நேர்த்திக் கடனுக்காக தேரில் அம்மனிடம் வைத்து வழிபட்டனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார்.

    கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் குடியாத்தம் டி.எஸ்.பி. ராமமூர்த்தி உள்பட 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசுஊர் நாட்டாமை ஆர்.ஜி.எஸ்.சம்பத், கவுரவ தர்மகர்த்தா கே.பிச்சாண்டி உள்பட விழாக்குழுவினர் இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர்.

    தேரோட்டம் மற்றும் கெங்கையம்மன் சிரசு திருவிழா முன்னிட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது பல இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தண்ணீர்பந்தல் அன்னதானம் உள்ளிட்டவை  வழங்கினர்.

    தேர் செல்லும் பாதையில் உள்ள மின் கம்பிகளை அப்புறப்படுத்துவது பணிகளை குடியாத்தம் மின்சார வாரிய செயற் பொறியாளர் வெங்கடாஜலபதி தலைமையில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவிழாவை முன்னிட்டு குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு தலைமையில் குடியாத்தம் நகரில் முழு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    கெங்கையம்மன் சிரசு திருவிழா காரணமாக குடியாத்தம் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
    குடியாத்தம் :

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை சிரசு ஊர்வலம் நடைபெற உள்ளது.

    கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னேற்பாடு  குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

    குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் தலைமை தாங்கினார். குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகர மன்ற தலைவர் கவுந்தரராசன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் லலிதா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி, நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலந்துகொண்டார்.

    கூட்டத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன், வனவர் மாசிலாமணி, அரசு வழக்கறிஞர் விஜயகுமார், நகரமன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, ஆட்டோ மோகன், என்.கோவிந்தராஜ், நவீன்சங்கர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், உதவி கலெக்டர் தனஞ்செயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகர்மன்ற தலைவர் சௌந்தரராசன் உள்ளிட்ட அதிகாரிகள் கெங்கையம்மன் கோயில் மற்றும் தேர் புறப்படும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறியதாவது:-

    கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு தேர் ஊர்வலம் மற்றும் சிரசு திருவிழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் இருந்து 700 போலீசாரும் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 500 போலீசார் என மொத்தம் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    இது தவிர்த்து 200 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். திருவிழாவின் போது பக்தர்களை கண்காணிக்க கோவில் உள்ளேயும் வெளியேயும் 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

    தேர் செல்லும் பகுதியில் உள்ள மின் வயர்கள் குறித்து ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    திருவிழா நடைபெற உள்ள 2 நாட்களில் கனரக வாகனங்கள் குடியாத்தம் நகருக்குள் வந்து செல்ல தடை விதிக்கப்படுகிறது மாற்று வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    2 நாட்கள் நெரிசலை குறைக்கும் வகையில் வேலூர் மற்றும் சித்தூரில் இருந்து வரும் பஸ்கள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், மேல்பட்டி ஆம்பூர் வழியாக வரும் பஸ்கள் செருவங்கி பகுதியிலுள்ள திரையரங்கம் அருகிலும், பேர்ணாம்பட்டு பகுதியிலிருந்து வரும் பஸ்கள் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் உள்ள ஒரு இடத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வெளியூரிலிருந்து சொந்த வாகனங்களில் திருவிழாவுக்கு வருபவர்கள் நகரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டு அவர்களின் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வேலூர், சித்தூர் பகுதியில் இருந்து வருபவர்களின் வாகனங்கள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், ஆம்பூர் மற்றும் பேர்ணாம்பட்டு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் என்.எஸ்.கே. நகர் மைதானத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அங்கிருந்து கோவிலுக்கும், உறவினர்கள் வீடுகளுக்கு செல்பவர்கள் ஆட்டோக்கள் மூலம் செல்லலாம்.

    கெங்கையம்மன் கோவில் அருகே 200 மீட்டர் தொலைவுக்கு முன்பாக வாகனங்கள் நிறுத்தப்படும் பல இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் பிக்பாக்கெட் மற்றும் கூட்டத்தில் நகை திருடும் நபர்களை கண்காணித்து பிடிக்கும் வகையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் கண்காணித்து வருவார்கள்.

    மேலும் பழைய குற்றவாளி களையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது இத்திருவிழா அமைதியாகவும் சிறப்பாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    ×