என் மலர்tooltip icon

    வேலூர்

    தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று மாற்றுத்திறனாளி வாலிபர் சாதனை படைத்துள்ளார்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மாற்றுத்திறனாளியான இவர் மாற்றுத் தினாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு இந்தியாவிற்காக பல பதக்கங்களை வென்றுள்ளார்.

    இவர் வேலூர் அடுத்த பூட்டுத்தாக்கு கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் விஷ்ணுவிற்கு மாற்றுத்திறனாளி விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக பல்வேறு நுணுக்கங்களை தெரிவித்தும் போட்டிகளில் கலந்துகொள்வது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார்.

    அவரது ஆலோசனைகளை பேரில் மாற்றுத்திறனாளி தடகள விளையாட்டு வீரர் விஷ்ணு கடந்த வாரம் டெல்லியில் மாற்று த்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    அதில் மாற்று த்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார்.

    சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள வீரர் வெங்கடாஜலபதியுடன் மாற்றுத்திறனாளிக்கான போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்ற விஷ்ணு குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராசனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

    அப்போது நகர்மன்ற தலைவர் அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை தேடித்தர வேண்டும் எனவும் அதற்காக தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்தார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் சி.என்.பாபு, திமுக பிரமுகர்கள் கா.கோ. நெடுஞ்செழியன், என்.ஜம்புலிங்கம், ஆர்.ஜி.மாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    காட்பாடி ரெயில்வே மேம்பாலம் 1-ந் தேதி முதல் சீரமைப்பு செய்ய உள்ளதால் வேலூர்-சித்தூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    காட்பாடி ரெயில்வே மேம்பாலம் ஓடுத்தளத்தின் இணைப்புகள் வலுவிழந்துள்ளதால் அதனை சீர் செய்ய ரெயில்வே நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை உத்தேசித்துள்ளது.

    கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் பணிகள் தொடங்க முடிவு செய்தனர். ஆனால் ஏப்ரல் மாதத்தில் பள்ளி மாணவர்களின் தேர்வுகளுக்காகவும், சில நிர்வாக காரணங்களுக்காகவும் சீரமைப்பு பணி தற்காலி கமாக ஒத்திவைக்கப்பட்டது.

    பாலம் மிகவும் பழுதடைந்துள்ள காரணத்தினாலும், நீண்ட காலத்திற்கு பாலத்தினை பயன்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையிலும், இனியும் சீரமைப்பு பணிகள் காலதாமதப்படுத்த முடியாது என்பதால், பொதுமக்களின் நலன் கருதி, காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் வருகிற 1-ந் தேதி முதல் அனைத்து வாகனப் போக்குவரத்துகளையும் நிறுத்தி பாலம் பழுதுபார்க்கும் பணி தொடங்கப்படுகிறது.

    இதனால் வேலூரிலிருந்து சித்தூர் செல்லும் அனைத்து வாகனங்களும் வேலூர் - பழைய பஸ் நிலையம், வி.ஐ.டி, இ.பி. கூட்டுரோடு, சேர்காடு வழியாக செல்ல வேண்டும்.

    சித்தூரிலிருந்து வேலூர் வரும் வாகனங்கள்.இதே வழியை பயன்படுத்தி வரலாம். குடியாத்தத்திலிருந்து வேலூர் வரும் பஸ்கள் காட்பாடி கூட்டுரோடு, கிறிஸ்டியான்பேட்டை, டெல் வரை செல்லலாம். வேலூரிலிருந்து அரக்கோணம் செல்லும் வாகனங்கள் வேலூர் பழைய பஸ் நிலையம், வி.ஐ.டி, இ.பி.கூட்டுரோடு, சேர்க்காடு, வள்ளிமலை, சோளிங்கர், திருத்தனி செல்ல வேண்டும்.

    கிரிஸ்டியா–ன்பேட்டையிலிருந்து சித்தூர் பஸ் நிலையம் வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, ரிக்‌ஷா, இலகுரக வாகனங்கள் (கார்). வள்ளிமலை கூட்டுரோடு, காமராஜபுரம், ரெயில்வே நுழைவுப் பாலம், பழைய காட்பாடி வழியாக சித்தூர் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

    கிறிஸ்டியான்பேட்டை, கரசமங்கலம், லத்தேரியிலிருந்து வேலூர் செல்லும் கார், இலகுரக சரக்குவாகனங்கள் ஜாப்ராபேட்டை, கழிஞ்சூர், விருதம்பட்டு வழியாக செல்லலாம்.

    தென் மாவட்டங்–களிலிருந்து திருவண்ணாமலை வழியாக வரும் சரக்கு வாகனங்கள் போளூர், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை சேர்காடு வழியாக சித்துார் செல்ல வேண்டும்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாகவரும் சரக்குவாகனங்கள் பள்ளிகொண்டா, குடியாத்தம் வழியாக சித்தூர் செல்ல வேண்டும். சித்தூரிலிருந்து தமிழ்தாடு வரும் வாகனங்கள் வேலூர் மாவட்ட அனுமதி பெற்ற சரக்கு வாகனங்கள் மட்டும் சேர்காடு வழியாக, இ.பி. கூட்டுரோடு. வி.ஐ.டி. வழியாக செல்லவும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் சேர்காடு, ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை வழியாக செல்ல வேண்டும்.

    சித்தூரிலிருந்து வரும் சரக்கு வாகனங்கள் குடியாத்தம், பள்ளிகொண்டா வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பாலத்தின் சீரமைப்பு பணியின் காரணமாக ஏற்பட்டுள்ள அசவுகரியத்தை ஒருமாத காலத்திற்கு பொதுமக்கள் ஏற்றுக்கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    அப்துல்லாபுரத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
    வேலூர்:

    வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் இன்று காலை மனுநீதி நாள் முகாம் நடந்தது.

    தாசில்தார் செந்தில் வரவேற்று பேசினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பேபி இந்திரா தலைமை தாங்கினார்.  

    நிகழ்ச்சியில் 49 பயானாளிகளுக்கு ரூ 2 லட்சத்து 37 ஆயிரத்து 518 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன் மரக்கன்று நட்டார்.
    வேலூர் அருகே கிணற்றில் பெண் பிணம் மீட்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள கட்டுப்படி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக மிதந்தார்.

    இதனை கண்ட பொதுமக்கள் வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக மீட்கப்பட்ட பெண் யார் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. 

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பெண் யாராவது மாயமாகி உள்ளார்களா? பெண் சாவுக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் 77 மையங்களில் குரூப்- 2 தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வேலூர் மாவட்டத்தில், குருப் 2 நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான முதல்நிலைத்தேர்வு வருகிற 21-ந் தேதி (முற்பகல் மட்டும்) அன்று நடைபெற உள்ளது.

    வேலூர் மற்றும் குடியாத்தம் இரு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வேலூர் மையத்தில் 59 தேர்வு கூடங்களும் குடியாத்தம் மையத்தில் 18 தேர்வு கூடங்களும் தேர்வு செய்யப்பட்டு தேர்வு நடைபெற உள்ளது.

    வேலூர் மாவட்டம் முழுவதுமாக இரு மையங்களில் 77 தேர்வு கூடங்களில் இத்தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    வேலூர் மையத்தில் 15612 விண்ணப்பதாரர்களும், குடியாத்தம் மையத்தில் 5246 விண்ணப்பதாரர்களும் ஆக மொத்தம் 20,858 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

    இது தவிர, ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் பாதுகாப்பிற்கு ஒரு காவலரும், விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்திற்கு பைகள், புத்தகங்கள் மற்றும் கைபேசி, கால்குலேட்டர், பேஜர், போன்ற மின்னணு சாதனங்களை கண்டிப்பாக எடுத்துவரக் கூடாது. 

    கொரோனா காலமாக இருப்பதால் கொரோனா விதிமுறைகளை தவறாது பின்பற்றுமாறும், முகக்கவசம் அணியுமாறும், சிறிய அளவிலான கை சுத்தம் செய்யும் திரவத்தினை எடுத்து செல்லுமாறும் தெரிவிக்கப்படுகிறது. 

    தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வுக் கூடங்களிலும் விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இன்றி தேர்வு எழுத அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
    2 ஆண்டுகளில் உள்ள தேதியை சொன்னால் கிழமையை கூறும் சிறுவனை கலெக்டர் பாராட்டினார்.
    வேலூர்:

    வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சங்கீதபிரியா. இவர்களுக்கு 5 வயதில் ரக்‌ஷன் என்ற மகன் உள்ளான். இவன் 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அனைத்து தேதிகளும் என்ன கிழமைகளில் வரும் என்பதை மனப்பாடம் செய்துள்ளான். அதாவது, இந்த இரு ஆண்டுகளில் ஏதேனும் ஒரு தேதியை குறிப்பிட்டு கேட்டால் அந்த தேதி என்ன கிழமையில் வரும் என்பதை சரியாக கூறுவான்.

    இந்த திறமையை அவனது பெற்றோர் கண்டறிந்தனர். இதையடுத்து அந்த சிறுவனை பெற்றோர் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று அழைத்து வந்து கலெக்டர் குமாரவேல்பாண்டியனை சந்தித்தனர். அப்போது சிறுவனின் திறமை குறித்து அவர்கள் கலெக்டரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து கலெக்டர் பல்வேறு தேதிகளை குறிப்பிட்டு சிறுவனின் திறமையை சோதித்தார். அப்போது, சிறுவன் அந்த தேதிகளில் வரும் அனைத்து கிழமைகளையும் சரியாக தெரிவித்தான்.

    இதைப்பார்த்து கலெக்டர் வியப்படைந்தார். மேலும் சிறுவனை பாராட்டி இனிப்புகள் வழங்கினார். மேலும் சிறுவனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

    செல்லியம்மன் கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்றதை கண்டித்தும், இதை தடுக்காத அமைச்சர் துரைமுருகன், சேகர்பாபுவை கண்டித்தும் இந்து முன்னணியினர் கோஷம் எழுப்பினர்.
    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் மாவட்ட இந்துசமய அறநிலையத்துறையின் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது.

    இதில் சிலர் செருப்பு அணிந்து கோவிலுக்குள் வந்ததாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த காட்சி பரவியது.

    இந்த நிலையில் செல்லியம்மன் கோவில் முன்பு இன்று காலை இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதில் பா.ஜ.க. மாவட்டத் தலைவர் மனோகரன் மற்றும் இந்து முன்னணியினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்றதை கண்டித்தும், இதை தடுக்காத அமைச்சர் துரைமுருகன், சேகர்பாபுவை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    கோவிலில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும், செல்லியம்மன் கோவில் செயல் அலுவலரை பதவி நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு கோவில் செயல் அலுவலரிடம் மனு அளிக்க சென்றனர். அப்போது செயல் அலுவலர் இல்லாததால் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்தது. இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    காட்பாடி - திருவலம் சாலை 4 வழிச்சாலையாக மாறுகிறது.
    வேலூர்:

    காட்பாடி - திருவலம் இடையே உள்ள 7.9 கிலோ மீட்டர் சாலை ரூ.47 கோடி செலவில் 4 வழிச்சாலையாக மாற்ற பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா செம்பராயநல்லூரில் இன்று நடந்தது.

    இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ, கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர் சரவணன், உதவி கோட்ட பொறியாளர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவலம் காட்பாடி இடையே உள்ள சாலை 4 வழி சாலையாக அமைய உள்ளது.இதற்காக 170 மரங்களை வெட்ட முடிவு செய்துள்ளனர்.மேலும் சாலையில் இடையூறாக உள்ள மின்கம்பங்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த சாலை விரைவில் 4 வழி சாலையாக மாற்றப்பட்டு சாலையின் நடுவில் தடுப்பு சுவர்கள் கட்டபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூரில் தின்பண்ட பிளாஸ்டிக் கவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் மனு அளித்தனர்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. 

    இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேலு, இளைஞரணி செயலாளர் அருண் பிரசாத் தலைமையில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பிளாஸ்டிக் கவர்களுக்கு அனுமதி வேண்டும் அரசு தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் விற்க தடை என்பதை வணிகர் சங்கம் ஏற்றுக்கொண்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கு துணை நிற்கின்றது. 

    இந்த நிலையில் தின்பண்ட தயாரிப்புகளான முறுக்கு, எல்லடை காராபூந்தி போன்ற பொருட்கள் பார்சல் செய்யப்பட்ட முதன்மை பேக்கிங் என நிர்ணயிக்கப்பட்டு அரசு அதற்கு அனுமதி வழங்கி உள்ளது.

    தற்போது 51 மைக்ரான் கவர் மற்றும் நிறுவன முகவரி கொண்ட கவர்களையும் மாநகராட்சி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகின்றன. எனவே நிறுவன முகவரி கொண்டு அச்சிட்ட பிளாஸ்டிக் கவர்களுக்கு அனுமதி வழங்கிட வேண்டும்‌. இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    வேலூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த ரோஷி (.வயது 13) பெற்றோரை இழந்த இவர் தனது பாட்டியின் அரவணைப்பில் உள்ளார்.தற்போது 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தனக்கு உதவ வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு
    மாநில அரசின் திட்டங்களுக்கு வேகத்தடை ஏற்படுத்த கூடியவராக கவர்னர் இருக்கக்கூடாது என காட்பாடி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசினார்.
    வேலூர்:

    காட்பாடி தொகுதி தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் நேற்று இரவு நடந்தது. 

    காட்பாடி பகுதி செயலாளர் ஜி. வன்னியராஜா தலைமை தாங்கினார். காட்பாடி ஒன்றிய செயலாளர்கள் எஸ்.சரவணன், எஸ். தணிகாசலம், எஸ். ராஜேந்திரன், சி.ரவி வாலாஜா ஒன்றிய செயலாளர் ஏ.கே.முருகன், பகுதி செயலாளர்கள் என். பரமசிவம், பி. முருகப்பெருமாள், காட்பாடி ஒன்றியக்கழு தலைவர் வி.வேல்முருகன், மாநகர துணை செயலாளர் கோவிந்தன், மண்டல குழு தலைவர் வி.புஷ்பலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி துணைமேயர் எம்.சுனில் குமார் வரவேற்று பேசினார்.

    அமைச்சர் துரைமுருகன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:-

    தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் உழைப்பால் ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ளது. பதவியேற்பு விழா எளிமையாக நடந்தது. ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது கொரோனா தொற்று பேரலை அதிகமாக இருந்தது. மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன் இல்லை என மக்கள் அவதிப்பட்டனர்.

    இதில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தானே களத்தில் இறங்கி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரையும் களத்தில் இறக்கி தமிழகத்தை சகஜ நிலைக்கு கொண்டுவந்தார்.

    அது முடிந்ததும் பெருமழை வெள்ளம் ஏற்பட்டது . மழை நீரில் முதலமைச்சர் நடந்து சென்று மக்கள் குறைகளை கேட்டார். 45 நாட்கள் இயற்கையுடன் போராடி வென்ற தலைவர் மு.க. ஸ்டாலின்.

    இந்தி மொழியை நாங்கள் வெறுக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் இந்தி திணிப்பு நடைபெறும்போது உறுதியாக எதிர்ப்போம். சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினால் அவர் அதை மத்திய அரசுக்கு அனுப்ப தயங்குகிறார். அதனால்தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தார். நல்ல திட்டங்களுக்கு கவர்னர் வேகத்தடை ஏற்படுத்தக் கூடியவராக இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

    எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., சட்டமன்ற கொறடா கோவி. செழியன், வேலூர் மத்திய மாவட்ட  செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ., டி. எம்.கதிர்ஆனந்த் எம்.பி. மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமதுசகி, மாநகராட்சி மேயர் ஏ.சுஜாதா, மாவட்ட பொருளாளர் சி.நரசிம்மன், வள்ளலார் தொண்டு நிறுவனத் தலைவர் ஆர்.பி. ரமேஷ் ஆகியோர் உள்பட நிர்வாகிகள் பலர்கலந்து கெண்டனர்.
    காட்பாடி அருகே 7 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா 4 கைத்துப்பாக்கி ரூ.3.50 லட்சம் பணம் 472 கிராம் தங்கம் பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    காட்பாடி கிளித்தான்பட்டரை அருகேயுள்ள கடை ஒன்றில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கும்பல் சதித்திட்டத்துடன் கூடி விவாதித்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், தனிப்படை போலீசார் விரைந்து சென்று 5 பேர் கும்பலை சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் பேரணாம்பட்டு ஏரிக்குத்தி பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்றும் மற்றவர்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த பாஷா (25), மணலியை சேர்ந்த அசோக் (39), ராயபுரத்தைச் சேர்ந்த மாதவன் (27), எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிபாலன் (26) என்றும் தெரியவந்தது.

    அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா 4 கைத்துப்பாக்கி ரூ.3.50 லட்சம் பணம் 472 கிராம் தங்கம் பறிமுதல் செய்தனர்.

    தொடர் விசாரணையில் இம்ரானின் மனைவிக்கும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. இம்ரான் பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறை சென்றதால் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் அந்த இளைஞருடன் சென்றுவிட்டார். இந்த தகவலை அடுத்து தனது மனைவியை மீட்பதற்காக இளைஞரின் பெற்றோரை கடத்தி மிரட்டுவதற்காக சதித்திட்டம் தீட்ட முயன்றபோது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இதில் இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார்.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.இதற்கான ஆணை வேலூர் ஜெயிலில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.

    இதேபோல குடியாத்தம் அருகே கஞ்சா கடத்தியதாக புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் (வயது 26). கூட நகரம் கிராமத்தைச் சேர்ந்த குமரன் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதியில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நாட்டறம்பள்ளி பகுதியில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் மேகம் மந்தமாக காணப்படுகிறது. நேற்று பகலில் வேலூர் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்தது. 99.9 டிகிரி வெயில் பதிவானது.

    இந்த நிலையில் மாலை திடீரென மேகம் மந்தமாக காணப்பட்டது. இரவு 7 மணிமுதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. வேலூர், குடியாத்தம், திருவலம் பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அதிகபட்சமாக மாவட்டத்தில் மேல் ஆலத்தூரில் 39.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    மோர்தனா அணை அடுத்த ஆந்திரா வனப்பகுதியில், நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை நிரம்பியது. இன்று அதிகாலை முதல் தண்ணீர் அணையில் இருந்து வெளியேறி வழிந்து வருகிறது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதியில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நாட்டறம்பள்ளி பகுதியில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    திருப்பத்தூர், ஆம்பூர், ஆலங்காயம் வாணியம்பாடி பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக நாட்றம்பள்ளியில் 84.2 மீட்டர் மழை பதிவானது.

    ஏலகிரி மலையில் மழை பெய்ததால் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை பகுதியில் பலத்த மழை பெய்தது. சோளிங்கர், காவேரிபாக்கம், அரக்கோணம் பகுதியில் மிதமான மழை பெய்தது. மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை காரணமாக குளிர்ச்சியான தட்பவெப்பநிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ×