search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் துரைமுருகன்
    X
    அமைச்சர் துரைமுருகன்

    இந்து அறநிலையத்துறை விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்- அமைச்சர் துரைமுருகன்

    குடிகாரன், கோவில் நிலத்தை அபகரிப்பவனை எல்லாம் அறநிலையத்துறை பொறுப்புகளில் அமர்த்தக்கூடாது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறையில் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள செல்லியம்மன் கோவிலில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சி தொடக்கத்தின்போது இறை வாழ்த்து பாடப்பட்டது.

    விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

    அறநிலையத்துறை அரசு நிகழ்ச்சிகளில் தேவாரம் பாடட்டும், திருவாசகம் பாடட்டும் அதை பற்றி கவலையில்லை. ஆனால் அறநிலைத்துறையும் அரசு துறை தான், அது சார்ந்த நிகழ்ச்சியும் அரசு நிகழ்ச்சி தான்.

    இதனால் தான் இங்குள்ள விளம்பர பதாகையில் கோபுரத்துடன் கூடிய அரசு சின்னம் போடப்பட்டுள்ளது. அதனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும். இன்று அது பாடாதது வருத்தம். இனி நடக்கும் நிகழ்ச்சிகளில் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும், வரும் நாட்களில் கட்டாயம் இதை கடைபிடிக்க வேண்டும் என அறநிலைத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் இங்கே பொறுப்பேற்றவர்கள் கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்கும்போது சரியான ஆட்களை நியமிக்க வேண்டும்.

    குடிகாரன், கோவில் நிலத்தை அபகரிப்பவனை எல்லாம் அறநிலையத்துறை பொறுப்புகளில் அமர்த்தக்கூடாது.

    அப்படி போட்டால் உங்களை பதவியில் இருந்து எடுத்துவிடுவோம்.

    இங்குள்ள செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான புதிய பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள சிறிய இடத்தை பஸ் நிலையத்துக்கு கொடுத்தால் மேலும் பஸ் நிலையம் நவீனமயம் ஆக்க உதவும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு, எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த் எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணைமேயர் சுனில்குமார் வள்ளலார் ஆர்.பி.ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×