என் மலர்
வேலூர்
- குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
- ஏராளமானோர் பங்கேற்பு
குடியாத்தம் :
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மற்றும் சைல்டு லைன் சார்பாக குடியாத்தம் ஒன்றிய அளவில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி நேற்று குடியாத்தம் வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யா னந்தம் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். ஒன்றிய குழு துணை தலைவர் கே.கே.வி. அருண்முரளி, ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் மமதாஇமகிரிபாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், எஸ்.சாந்தி, உதவி பொது மேலாளர் மோகனவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைல்ட் லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் வரவேற்றார்
இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமாமகேஸ்வரி, குழந்தைகள் நலக்குழு தலைவர் சிவகலைவாணன், முதல் நிலை திட்ட மேலாளர்கள் கிருபாகரன், சரவணன் ஆகியோர் குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தைகளின் உரிமைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்தும் குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் சட்டங்கள் குறித்தும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பட காட்சிகள் மூலம் விரிவாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் எஸ்.பி.சக்திதாசன், ஆர்.பாபு பி.கே.குமரன், கே.ஆர்.உமாபதி, சாந்தி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் முதுநிலை மேலாளர் மணிசேகர் நன்றி கூறினார்.
- மாணவர்கள் பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில்தான் வர வேண்டும்
- பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ண கயிறு அணிவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:
பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக கல்வித்துறை சார்ந்த சுற்றறிக்கைகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். அவ்வகையில், சமூக பாதுகாப்புத்துறை மூலமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவு அனுப்பப்பட்டிருக்கிறது. வேறு சில மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த உத்தரவில், பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகங்களில் எந்த மாதிரியான பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 20க்கும் அதிகமான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பள்ளி மாணவர்கள் இனி கைகளில் எந்த விதமான கயிறும் கட்டக் கூடாது என்று சமூக பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
எண்ணெய் தேய்த்து தலைவாரவேண்டும், டாட்டூ குத்தக்கூடாது, காலணி அணிந்து வரவேண்டும், கம்மல், செயின், காப்பு போன்றவற்றை மாணவர்கள் அணியக்கூடாது, பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில்தான் வர வேண்டும் என மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் வண்ண கயிறு அணிவது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மாணவர்களிடையே பிளவு உருவாகி வருகிறது. சில சமயங்களில் இது மோதலுக்கும் வழிவகுக்கிறது. எனவே, மாணவர்களின் நலன் கருதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
- நல்லது நடக்கும் என மனு கொடுக்கிறார்கள்
- மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி தி.மு.க சார்பில் 200 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அணைக்கட்டு மூலைகேட் பகுதியில் நேற்று நடந்தது.
விழாவிற்கு வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவரும், அணைக்கட்டு மேற்கு ஒன்றிய செயலாளருமான மு.பாபு வரவேற்று பேசினார்.
வேலூர் ஒன்றிய செயலாளர் சி.எல்.ஞானசேகரன், அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் பி.வெங்கடேசன், அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.குமாரபாண்டியன், கணியம்பாடி ஒன்றிய செயலாளர் என்.கஜேந்திரன், பகுதி செயலாளர்கள் சி.எம்.தங்கதுரை, ஆர்.கே.அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு 200 கழக முன்னோடிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி, 150 ஏழை பெண்களுக்கு தையல் எந்திரங்கள், 22 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள், 100 சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டிகள், 100 நாவிதர்களுக்கு சலூன்கிட், 25 ஆட்டோ டிரைவர்களுக்கு ஆட்டோ, 150 கிராம இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், அணைக்கட்டு தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
வேலூர் மாவட்டம் என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் முகம் தான். என் மீது அதிக பாசம் கொண்டவர். முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞருடன் பயணித்தவர். தற்போது அவர் முதல்-அமைச்சருக்கு துணையாகவும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.
60 ஆண்டு கால உழைப்புக்கு சொந்தக்காரர். இந்த மாவட்டத்தின் மண்ணின் மைந்தர் அமைச்சர் துரைமுருகன். என்னை தூக்கி வளர்த்தவர் அவர். இந்த நிகழ்ச்சியில் அவர் இல்லையென்றாலும் அவருடைய மனம் முழுவதும் இதை பற்றி தான் நினைத்து கொண்டிருக்கும்.
முதல் பிரசார சுற்றுப்பயணம்
வேலூர் மாவட்டத்துக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நான் கட்சியின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்கும் முன்பே என்னுடைய முதல் பிரசார சுற்றுப்பயணம் வேலூர் மாவட்டத்தில் தான் தொடங்கியது.
நான் வாக்கு சேகரித்த முதல் நாடாளுமன்ற வேட்பாளர் கதிர்ஆனந்த். அதேபோன்று கடந்த சட்டமன்ற தேர்தலின்போதும் இந்த மாவட்டத்துக்கு வந்து அனைத்து தொகுதிக்கும் சென்று வாக்கு சேகரித்தேன்.
கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கினால் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்று கூறினேன்.
ஆனால் இங்கு வந்து பார்த்த பின்னர் தான் தெரிந்தது பொற்கிழி மட்டும் அல்லாமல் தையல் எந்திரம், சலவைபெட்டி, ஆட்டோ, விளையாட்டு உபகரணங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏ.பி..நந்தகுமார் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த தொகுதிக்கு மட்டும் அல்லாமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். சட்டமன்றத்தில் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. எப்போதும் சுறுசுறுப்பா கவும், பரபரப்பாகவும் காணப்ப டுவார். அதேவே கத்தில் இந்த தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகள்
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இந்த தொகுதியில் அணை கட்டி கொடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அதன்படி அணைக்கட்டு தொகுதியில் ரூ.50 கோடி செலவில் அணை கட்டி தரப்படும் என்ற அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு இந்த ஆட்சியின் மீது நல்ல எண்ணம் உள்ளது.
பொதுமக்கள் மனு அளித்தால் நல்லது நடக்கும். நல்ல காலம் பிறக்கும் என்று நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை தொடரும். தமிழகத்தில் நல்ல ஆட்சியை முதல்-அமைச்சர் கொடுத்து கொண்டிருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்து1¼ ஆண்டுகள் தான் ஆகிறது.
ஆனால் தேர்தல் அறிக்கையில் கூறிய பல்வேறு வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.
நான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை நேரில் பார்த்தது இல்லை. ஆனால் இங்கு பொற்கிழி பெற்ற கட்சியின் முன்னோடிகள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவை நேரில் பார்த்திருக்க கூடும். நான் இவர்கள் அனைவரையும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியரின் மறு உருவமாக பார்க்கிறேன். அவர்களின் பாதங்களை தொட்டு வணங்கி செல்பி எடுக்க வேண்டும் என ஆசை தான் ஆனால் நேரம் போதவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- இருபுறமும் சுமார் 3 அடிகள் அகலப்படுத்த முடிவு
- அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கூட்ரோடு பகுதியில் இருந்து அக்ராவரம் ஊராட்சி ரேணுகாபுரம் வரை நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது.
2022-2023 திட்டத்தின் கீழ் சுமார் 5.4 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் ரூ.6 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் இருபுறமும் சுமார் 3 அடிகள் அகலப்படுத்தி சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.எஸ்.சம்பத்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் கள்ளூர்ரவி, ஒன்றிய குழு உறுப்பினர் மனோகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரும்பாடி விஸ்வநாதன், மூங்கப்பட்டு குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜ்குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அமலுவிஜயன் எம.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், திமுக கட்சி நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கதவை உடைத்து கைவரிசை
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அருகே உள்ள தெள்ளூர் ஜாமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 54). விவசாயி. இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் கள் இவருடைய வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு பீரோவில் இருந்த செயின், மோதிரம் மற்றும் சிறுவர்களுக்கான நகை என மொத்தம் 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
வெளியூரில் இருந்து வீடு திரும்பிய அண்ணாமலை வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
இது குறித்து அரியூர் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
விவசாயி வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம் என கூறி கைவரிசை
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி அடுத்த விண்ணப்பள்ளி ஜி ஆர் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் (வயது 19). இவரது செல்போனுக்கு வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற குறுஞ்செய்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த லிங்கை அபிஷேக் திறந்த போது வாட்ஸ் அப் மூலமாக பணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி பல தவணைகளில் மொத்தம் 3 லட்சத்து 17 ஆயிரத்து 263 ரூபாயை செலுத்தி உள்ளார். அதன் பிறகு குறுஞ்செய்தி வந்த என்னை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போதுதான் தெரிந்தது தான் ஏமாற்றப்பட்டது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் அபிஷேக் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊழியர் கருகி பலி
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சேண்பாக்கம் தர்கா தெருவை சேர்ந்தவர் அஸ்லாம் பாஷா மகன் சாதிக் பாஷா (வயது 18). இவர் சைதாப்பேட்டை பி.டி.சி. ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கடந்த 8-ந் தேதி சாதிக் பாஷா ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஓட்டலில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதில் சாதிக் பாஷா மீது தீப்பற்றி எரிந்தது. அதைக் கண்ட ஓட்டல் ஊழியர்கள் தீயை அணைத்தனர்.
உடனடியாக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சாதிக் பாஷா நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் விசாரணை
- காய்கறி வியாபாரியை மிரட்டி பணம் பறித்தனர்
வேலூர்:
வேலூர் அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது 29). இவர் வீட்டையொட்டி நகை அடகு கடை வைத்துள்ளார். இந்த கடையில் சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர்.
வீட்டில் குண்டு வீச்சு
கடந்த மாதம் முகேஷ்குமார் நகை அடகு கடையை பூட்டி விட்டு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் வீட்டு மாடியின் முன்பகுதியில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், ஜன்னல் கண்ணாடி லேசாக சேதமடைந்தது. இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நகை அடகு வியாபாரி வீட்டில் குண்டு வீசியது சைதாப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி திலீப் என்கிற பிரகாஷ் (24), மதன் (25) மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் என தெரிய வந்தது.
இதில் மதன் மற்றும் திலீப் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த ரவுடி கும்பல் சத்துவாச்சாரி டபுள் ரோட்டில் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது தெரியவந்துள்ளது. அலமேலுமங்கபுரம் சமாதான நகரை சேர்ந்த குமார் (30) டபுள் ரோட்டில் ஆட்டோவில் வைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரிடம் மதன், திலீப் ஆகியோர் காய்கறி வாங்குவது போல நடித்து திடீரென கத்தியை காட்டி மிரட்டி ரூ.2000 பறித்து சென்றனர்.
வியாபாரி குமார் கூச்சலிட்டார்.அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது தொடர்பான வழக்கு அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கால்வாய்களை தூர்வார நடவடிக்கை
- ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காட்பாடியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் பாதாள சாக்கடை பணிகளுக்கு வீடுகளில் கொடுக்கப்படும் இணைப்பு குழாய்களில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு செய்தபோது பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டது. அதனை ஒரு சில நாட்களில் அகற்றிட உத்ரவிடப்பட்டுள்ளது. மழை நீர்வரத்துக்கால்வாய்கள் மற்றும் சாக்கடை கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விஜி ராவ்நகர் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த பகுதியில் ஆய்வு செய்து அந்தப் பணிகளை சிறப்பாக செய்திட நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
நீர்வழிபாதை கால்வாயில் எந்தவிதமான கட்டிட ஆக்கிரமிப்புகள் இருக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது துணை மேயர் சுனில் குமார் மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- சாலை - தெருக்களில் அட்டகாசம் செய்ததால் நடவடிக்கை
- பைக்கில் வேகமாக சென்ற 4 பேரை போலீசார் பிடித்தனர்
வேலூர்:
வேலூரில் பகல் மற்றும் நள்ளிரவு வேளைகளில் இளைஞர்கள், 'பைக் ரேஸ், வீலிங்' போன்ற சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகள் சிறுவர்கள் அதிக நடமாட்டம் உள்ள தெருக்களில் அதிவேகமாக செல்லும் பைக் ரோமியோக்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இவர்களால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன், விபத்திலும் சிக்குகின்றனர்.
இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று வேலூர் கஸ்பா பகுதிகளில் இளைஞர்கள் 4 பேர் தெருவில் அதிவேகமாக பைக்கில் சென்று சத்தம் எழுப்பி இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.
இது பற்றி பொதுமக்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் மூலம் அந்த இளைஞர்கள் பிடிக்க உத்தரவிட்டனர். அவர்களை போலீசார் பிடித்து வந்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது இளைஞர்களின் பெற்றோர்களும் வரவழைக்கப்ப ட்டிருந்தனர்.
பைக்கில் சுற்றி இடையூறு செய்த இளைஞர்களுக்கு கலெக்டர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுரை வழங்கினார். அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் ஒரு வாரத்திற்கு பிறகு தான் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.
வேலூர் மாநகரப் பகுதியில் பைக்கில் சுற்றி அத்து மீறி திரியும் இளைஞர்கள் கண்காணிக்கப்ப டுகின்றனர். மாநகரப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு வாயிலாக, வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து, வாகன உரிமையாளர், வாகனத்தை ஓட்டியவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.
அதேபோல், வாகன சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள், அதை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அந்த வீடியோ பதிவு அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
- போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
- ரூ.70 ஆயிரம் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது
வேலூர்:
தமிழக காவல் துறையில் தடய அறிவியல் பயன்பாட்டுக்காக ரூ.3 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரம் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 14 நடமாடும் நவீன தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
இதில், ஒரு வாகனம் வேலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த வாகனத்தை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தொடங்கி வைத்தார்.
அப்போது, மாவட்ட தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ஜேம்ஸ் அந்தோணிராஜ், துணை இயக்குநர் சோபியா ஜோசப், முன்னாள் தடய அறிவியல் உதவி இயக்குநர் பாரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன் (தலைமையிடம்), குணசேகரன் (இணைய வழி குற்றப்பிரிவு), மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த வாகனத்தில் ரத்த கறைகளை கண்டறியும் வசதி, பாலியல் குற்ற சம்பவங்களில் தடயங்களை விரைந்து சேகரித்து ஆய்வு செய்யவும், வெடி விபத்து சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்தின் வகைகளை ஆய்வு செய்யவும், ரத்த வகைகள் ஆய்வு, துப்பாக்கி துண்டுகளால் சேதம் ஏற்பட்டுள்ளதா? என ஆய்வு செய்வது என நவீன வசதிகள் கொண்டதாக இருக்கும். இந்த வாகனம் குற்றச்சம்பவங்கள் நடைபெற்ற இடத்துக்கு அனுப்பி பயன்படுத்தவுள்ளனர்.
- சக்தி அம்மா பங்கேற்பு
- ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூர் நாராயணி பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீதுர்கை அம்மன் புதுப்பிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து சிறப்பு பூஜைகள் இந்து பூர்ணாஹூதி நடைபெற்து. பின்னர் யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த கலசநீர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
சக்தி அம்மா கலந்து கொண்டு துர்கை அம்மன் சிலை மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
இதே போன்று நாராயணி அம்மன் பழைய கோவில் கோபுர கலசம் மீது புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது . நிகழ்ச்சியில் நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, நாராயணி பீட இயக்குனர் சுரேஷ்குமார், மேலாளர் சம்பத் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.






