என் மலர்tooltip icon

    வேலூர்

    • மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை மேம்படுத்தப்பட உள்ளது

    வேலூர்:

    வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் பெரியார் பூங்காவை ஒட்டி நடை மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர்.

    தற்போது கோட்டை சுற்றுச்சாலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த சாலை முழுவதும் கூடுதல் மின் வசதி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

    இதற்காக கோட்டை சுற்றுச்சாலையில் ஆக்கிரப்புகளை அகற்ற மாநகராட்சி அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. பெரியார் பூங்காயொட்டி இருந்த 3 கடைகளை இன்று மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

    எந்த காரணத்தை கொண்டும் கோட்டை சுற்றுச்சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்க கூடாது. மீறி வைக்கப்படும் கடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • போஸ்டர்கள் அகற்றப்பட்டது
    • கல்வித்துறை சார்பில் ஒழுக்க நெறிமுறைகள் ஓவியமாக வரையப்படுகிறது

    வேலூர்:

    வேலூர் கிரீன் சர்க்கிளில் மேம்பால சுவர்களில் இருபுறமும் போஸ்டர்கள் ஒட்டி அசிங்கப்படுத்துகின்றனர். இதனால் மேம்பாலச் சுவர்கள் அலங்கோலமாக காட்சி அளித்தது. இந்த மேம்பாலச் சுவர்களை அழகுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    கிரீன் சர்க்கிளில் இருபுறமும் உள்ள மேம்பால சுவர்களில் பல வகையான ஓவியங்களை வரையும் பணி கடந்த மாதம் தொடங்கியது.

    இதற்காக மேம்பால சுவர்களில் இருபுறமும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றி அதில் வெள்ளை நிற வண்ணம் தீட்டும் பணி நடந்தது.

    கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில் பல்வேறு வர்ணங்கள் பூசப்பட்டு ஓவியங்கள் வரையும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சுவற்றின் ஒரு பகுதியில் வரையப்பட்டுள்ள வேலூர் வரலாற்று சிறப்பு மிகுந்த சிப்பாய் புரட்சி நினைவு தூண், கோட்டை மதில் சுவர் உள்பட பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது.

    மேம்பாலத்தின் சுவர்களில் இருபுறமும் வண்ண ஓவியங்கள் தீட்டப்படுகிறது. கல்வித்துறை சார்பில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் அரசு நல திட்டங்கள் போன்றவை பட விளக்கங்களாக இந்த மேம்பாலங்களில் ஓவி யமாக வரையப்படுகிறது.

    • 40 வாகனங்கள் மீட்பு
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் பஜார் மற்றும் வீடுகளின் முன்பு நிறுத்தப்படும் பைக்குகள் திருடு போனது. இது குறித்து புகாரின் பேரில் போலீசார் கும்பலை தேடி வந்தனர்.

    ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட பைக் திருடப்படும் சம்பவங்களும் நடந்தன. இதனை தொடர்ந்து கும்பலை பிடிக்க சித்தூர் நகர மற்றும் கிராமப்புற போலீசார் இணைந்து தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீசார் தமிழக எல்லை மற்றும் திருப்பதி பெங்களூர் செல்லும் சாலைகளில் அதிரடியாக வாகன சோதனை நடத்தினர்.

    சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்.சி.ஆர் கிராஸில் நேற்று, வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, ​3 மோட்டார் சைக்கிள்களில், வந்த 7 பேர் தமிழகத்தை நோக்கி நிற்காமல் தப்பிச் செல்ல முயன்றனர்.போலீசார் அந்த கும்பலை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர்கள் தமிழகத்தின் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த சதீஷ், ராஜீவ் காந்தி, கோகுல கண்ணன், யுவராஜ், ஹரி, ஆகாஷ் மற்றும் பாலா என தெரியவந்தது.அனைவரும் 20-22 வயதுக்கு உட்பட்டவர்கள்.

    விசாரணையில் அவர்கள் சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பைக் திருடியது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 40 பைக் பறிமுதல் செய்தனர். போலீசார் 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பங்கேற்பு
    • கிராம மக்கள் உள்பட போலீசார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் பரதராமி ஊராட்சியில் உள்ள பூசாரி வலசை கிராமம் மற்றும் இந்திரா நகர் பகுதியில் அடிக்கடி சாதி மோதல் ஏற்பட்டு இந்த மோதல் சம்பவம் தொடர்பாக பரதராமி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த இரு கிராமங்களிலும் இதுபோன்ற மோதல் போக்குகள் தொடர்ந்து நடைபெறக் கூடாது என வலியுறுத்தி பரதராமி அடுத்த பூசாரி வலசை கிராமத்தில் காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில் அனைத்து சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார்.குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, குடியாத்தம் தாசில்தார் எம். விஜயகுமார், குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், எஸ்.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி அனைவரையும் வரவேற்றார்.

    இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திரா நகர் மற்றும் பூசாரி வலசை கிராம மக்களிடம் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக இருந்து நன்றாக படிக்க வேண்டும் வேலைவாய்ப்பில் இப்பகுதி சேர்ந்தவர்கள் அதிக அளவில் சேர வேண்டும், இப்பகுதியைச் சேர்ந்த வர்கள் சகோதரத்துவத்தோடு வாழ வேண்டும், இப்பகுதி மக்கள் ஒற்றுமையாக சாதி மோதல்கள் இல்லாமல் இருக்க வேண்டும் அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று சமுதாய நல்லிணக்க விருது பெற கிராம மக்கள் சமுதாய நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும்.

    இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் ஒற்றுமையுடன் சகோதரத்துவத்தோடு இருக்க வேண்டும் சிறு சிறு பிரச்சனைகளை பெரியவர்கள் சமாதானம் செய்ய வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    இந்த கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனிடம் அளித்த மனுக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் இது குறித்து உரிய பரிசீலனை செய்யப்ப டுவதாக தெரிவித்தனர்.

    இந்த சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டத்தில் பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் கேசவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் இந்திராகாந்தி, கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் உள்பட ஊர் முக்கிய பிரமுகர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியர் பெரு மக்கள், காவல்துறை யினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருண்காந்தி உள்ளிட்ட காவல்துறையினர் செய்திருந்தனர்.

    • சூரிய கிரகணத்தையொட்டி நடந்தது
    • அக்னி தலம் என்பதால் கோவில் மூடப்படவில்லை

    திருவண்ணாமலை :

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 5.17 முதல் 6.24 மணி வரை சூரிய கிரகணம் வருவதால் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாரின் அம்சமான அஸ்திர தேவதை யை பிரம்ம தீர்த்த குளக்கரையில் எழுந்தருள செய்து சரியாக 5.17 மணி அளவில் பிரம்ம தீர்த்த குளக்கரையில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு மகா தீர்த்தவாரி நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து அஸ்திர தேவதைக்கு பச்சரிசி மாவு அபிஷேக பொடி பால் தயிர் விபூதி சந்தனம் உள்ளிட்ட அபிஷேக திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்பு புனித கலச நீரை ஊற்றி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பஞ்ச கிளை என்று அழைக்கப்படுகின்ற மகா தீப ஆராதனை நடைபெற்றது.

    சூரிய கிரகண நேரத்தில் அனைத்து கோவில்களும் மூடப்படும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி தலம் என்பதால் கோவில் நடை சாற்றுவது கிடையாது. இந்த கோவிலில் சூரிய கிரகணம் ஆரம்பிக்கும் முன்பு தீர்த்த வாரியும் சந்திர கிரகணம் முடிந்த பின்பு தீர்த்தவாரியும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. 

    • மேயர் சுஜாதா ஆய்வு
    • கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது

    வேலூர்,

    வேலூர் கோட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழமை மாறாமல் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

    கோட்டை கொத்தளம் இரவிலும் மிளிறும் வகையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கோட்டை வளாகத்திற்கு ஏராளமான மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

    கோட்டையில் தினந்தோ றும் ஆயிரக்கணக்கானோர் வாக்கிங் செல்கின்றனர். ஆனால் கோட்டையில் சுற்றுலா பயணிகள் மற்றும் வாக்கிங் செல்வோர்கள் அமருவதற்கு ஏதுவான இருக்கைகள் எதுவும் இல்லை.

    இந்த நிலையில் கோட்டையில் நடை பயிற்சி செல்லும் மைதானத்தைச் சுற்றிலும் இருக்கைகள் அமைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து கோட்டையில் வாக்கிங் செல்பவர்கள் அமர்ந்து செல்லும் வகையில் 50 இருக்கைகள் அமைக்கப்படுகிறது. இது தொடர்பாக மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று கோட்டை வளாகத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இது குறித்து மேயர் சுஜாதா கூறுகையில்:-

    கோட்டையில் இருக்கைகள் அமைக்க வேண்டும் என வாக்கிங் செல்பவர்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் வாக்கிங் செல்பவர்கள் அமர வசதியாக 50 இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. இது கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் கோட்டை வளாகத்திற்குள் கூடுதலாக 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. கோட்டை சுற்றுச்சா லையில் செயின் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க அதிக ஒளி வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகள் பொருத்தப்படும். அங்கும் கூடுதலாக கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது என்றார்.

    • தீபாவளி முடிந்து ஊருக்கு திரும்பினர்
    • பஸ் மற்றும் ரெயில்களில் பயணிகள் முண்டியடித்து ஏறினர்

    வேலூர்,

    தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல கடந்த 21-ந் தேதி முதல் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக கடந்த 21, 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதே போல ரெயில் நிலையங்களிலும் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்து பணி செய்யும் இடத்திற்கு அவரவர்கள் இன்று திரும்பினர். இதனால் நேற்று மாலையில் இருந்து வேலூர் புதிய, பழைய பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இன்று காலையிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. புதிய பஸ் நிலையம் மற்றும் காட்பாடி ரெயில் நிலையங்களில் ஊருக்கு செல்வதற்காக பயணிகள் கூட்டம் அதிகரித்தது

    இதனால் பஸ் மற்றும் ரெயில்களில் பயணிகள் முண்டியடித்து ஏறிச் சென்றனர்.

    • காலை 9.30 மணி ஆகியும் விநியோகிக்கப்படவில்லை
    • பால் முகவர்கள் குற்றச்சாட்டு

    வேலூர்

    வேலூர் சத்துவாச்சா ரியில் உள்ள ஒருங்கிணைந்த ஆவின் பால் பண்ணையில் இருந்து வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்க ளுக்கு நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 650 க்கும் மேற்பட்ட முகவர்கள் மூலம் பால் வினியோகம் செய்யப்ப டுகிறது. இந்நிலையில் இன்று காலை சுமார் 5.30 மணிக்கு முகவர்களுக்கு செல்ல வேண்டிய பால் பாக்கெட்டுகள் பெரும்பாலான பகுதிகளுக்கு காலை 9.30 மணி ஆகியும் விநியோகிக்கப்படவில்லை. இதனால் வேலூர் சுற்றியுள்ள பால் முகவர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் வந்து பால் பாக்கெட்டுகளை எடுத்து சென்றனர். கால தாமதமான ஆவின் பாலால் முகவர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

    இதே போல் கடந்த மாதத்தில் 3 நாட்கள் ஆவின் பால் விநியோகத்தில் மிகுந்த தாமதம் ஏற்பட்டது. இது போன்ற பண்டிகை விடுமுறை நாட்களில் தொடர்ந்து ஆவின் பால் விநியோகம் தாமதமாவதாகவும், இதனால் ஆவின் பால் முகவர்கள், பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதால் இதனை தடுக்கும் வகையில் வேலூர் மாவட்ட ஆவின் நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இருட்டில் தவிக்கும் பயணிகள்
    • காலி இடம் பரப்பளவு அதிகமாக உள்ளதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறதுஎஎ8520

    வேலூர்,

    வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ.53 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 9.25 ஏக்கர் பரப்பளவில் 2 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் மொத்தம் 84 பஸ்கள் நிற்க முடியும். இதன் முகப்பு கட்டிடத்தில் 82 கடைகள் கட்டப்பட்டுள்ளன.

    வெளியில் 1450 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்கிங் வசதி, பஸ் நிலையம் பின்புறம் உள்ள அடுக்குமாடி கார் பார்க்கிங்கில் 300 கார்கள் வரை நிறுத்த முடியும்.

    மேற்கு பக்கம் 2 நுழைவு வாயில், கிழக்கு பக்கம் ஒரு நுழைவு வாயில் உள்ளது.மின் சிக்கனத்திற்காக பஸ் நிலையம் முழுவதும் எல்.இ.டி பல்புகள் பயன்படுத்தப்படுகிறது. 4 உயர் கோபுர விளக்குகள் உள்ளன.

    கிழக்கு பகுதியில் செல்லியம்மன் கோவில் அருகே மின்விளக்கு குறைவாக இருக்கும் காரணத்தினால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. அந்த பகுதியில் தற்போது ஒரு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த வெளிச்சம் போதுமானதாக இல்லை. காலி இடம் பரப்பளவு அதிகமாக உள்ளதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    செல்லியம்மன் கோவில் நுழைவு வாயிலில் மின் விளக்குகள் எதுவும் பொருத்தப்படவில்லை. கோவிலுக்கு பின்புறம் பஸ் நிலைய வளாகத்திலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது

    காட்பாடியில் இருந்து ரெயில்களில் வரும் பொது மக்கள் இரவு நேரங்களில் புதிய இறங்கி செல்லியம்மன் கோவில் முன்பு பஸ் நிலையத்திற்கு வருகின்றனர். நுழைவு வாயில் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது.

    இதனை தடுக்க செல்லியம்மன் கோவில் நுழைவுவாயில் பகுதியில் கூடுதலாக மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • போலீசார் எச்சரிக்கை
    • இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு

    வேலூர்:

    வேலூர் தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓல்டு டவுன் பகுதியில் கடந்த 23-ந் தேதி பிற்பகல் சுமார் 2 மணியளவில், ஊர் நாட்டாண்மை தேர்ந்தெடுத்தது தொடர்பாக ஏற்கனவே இருந்த பிரச்சினையில் இருதரப்பினருக்கு இடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசி தாக்கிக்கொண்டனர்.

    இதில் அவர்களுக்கு லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் மீதும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்து சம்பவ இடத்தில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அவர்கள் அனைவரையும் கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து தகவல்கள் யாருக்கேனும் கிடைத்தால் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கலாம். அப்பகுதியில் மேற்கொண்டு எவ்விதபிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க போலீசார் பணிய மர்த்தப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீண் வதந்திகளை நம்பி மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்று கேட்டு க்கொள்ளப்படுகின்றது.

    • மாலை 6.30 மணிக்கு நடக்கிறத
    • ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தினமும் கந்த புராண பாராயணம் நடந்து வருகிறது

    வேலூர்:

    வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 41-ம் ஆண்டு மகா கந்தர் சஷ்டி மற்றும் 27-ம் ஆண்டு சூரசம்ஹார விழா, வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி, கந்தர் சஷ்டி சஹஸ்ரநாம அர்ச் சனை, காலை 9 முதல் 10 மணி வரை நடக்கிறது. அதோடு, தினமும் கந்த புராண பாரா யணம் நடக்கிறது. மேலும், 30-ந் தேதி காலை 7.30-க்கு ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், தங்ககவசம் அலங்காரம் செய் யப்படுகிறது.

    தொடர்ந்து, காலை 9 மணிக்கு ஸ்ரீசண் முகர் சிறப்பு அபிஷேகம் சத்ரு ஸம்ஹார திரிசதி, 11.30-க்கு சண்முக அர்ச் சனை, தீபாராதனை நடக்கிறது. இதையடுத்து, மாலை 6.30-க்கு கோட்டை மைதானத்தில் சூரசம்ஹார விழா பிரமாண்ட மாக நடக்கவுள்ளது.

    இதையடுத்து,31-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல், ஸ்ரீமகா கந்தர் சஷ்டி திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீஜல கண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் செய்து வருகிறது.

    • பூஜை அறையில் வைத்து இருந்த நகைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தபோது வைரக் கம்மலை காணாமல் கல்பனா திடுக்கிட்டார்.
    • பூஜை அறையை சுத்தம் செய்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு குப்பை சேகரிக்கும் இடத்தில் போட்டது தெரியவந்தது.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பலமநேர் ரோடு அம்பேத்கர் சிலை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் கல்பனா. இவர் நேற்று குடும்பத்துடன் வீட்டில் நோன்பு இருந்து வழிபாடு நடத்தினார்.

    அப்போது பூஜையில் வீட்டில் உள்ள நகைகளை வைத்துள்ளார். இதில் ஒரு ஜோடி வைர கம்மலை வைத்து பூஜை செய்தார்.

    பூஜைக்கு பின் இன்று காலை பூஜை அறையை சுத்தம் செய்தபோது வாடி இருந்த பூக்கள் மற்றும் பூஜையிலிருந்த பொருட்களை சேகரித்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு காலையில் தனது வீட்டுக்கு அருகில் இருக்கிற குப்பை சேகரிக்கும் பகுதியில் போட்டுள்ளார்.

    சிறிது நேரம் கழித்து பூஜை அறையில் வைத்து இருந்த நகைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தபோது வைரக் கம்மலை காணாமல் திடுக்கிட்டார்.

    அப்போது பூஜை அறையை சுத்தம் செய்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு குப்பை சேகரிக்கும் இடத்தில் போட்டது தெரியவந்தது.

    உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு குப்பை கிடங்குக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதனால் பதறி அடித்துக் கொண்டு கல்பனா உடனடியாக குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசனுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனையடுத்து நகர மன்ற தலைவர் சவுந்தரராசன் உடனடியாக அப்பகுதி தூய்மை பணியாளர்களை தொடர்புகொண்டு குப்பைகளை சேகரித்த வாகனம் எங்கே இருக்கிறது என கேட்டுள்ளார். குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

    உடனடியாக அந்த குப்பை வண்டியை குப்பைகள் சேகரிக்கும் இடத்திற்கு கொண்டு வருமாறு தெரிவித்தார்.

    இதனையடுத்து அங்கு சம்பவ இடத்திற்கு நகர மன்ற தலைவர் சவுந்தரராசன் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்றனர்.

    அந்த குப்பை வண்டி உடனடியாக அங்கு கொண்டுவரப்பட்டது. அங்கு இருந்த குப்பைகளை கீழே கொட்டி ஒவ்வொரு பிளாஸ்டிக் பைகளாக பார்த்தனர்.

    அப்போது கல்பனா தன்னுடைய வீட்டிலிருந்து கொட்டிய பிளாஸ்டிக் பைகளை அடையாளம் காட்டினார். அதனை எடுத்து கீழே கொட்டி பார்த்தபோது வைரக்கம்மல்கள் இரண்டும் அதிலிருந்தது. அதனை நகர மன்ற தலைவர் சவுந்தரராசன் கல்பனாவிடம் வழங்கினார்.

    சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக குப்பைகளை கிளறி அதிலிருந்து வைரக்கம்மல்களை பெற்றுத் தந்த நகர மன்ற தலைவருக்கு கல்பனா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

    ×