என் மலர்tooltip icon

    வேலூர்

    • ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்தவர் மாதவன். சிஎம்சி அருகே உள்ள கள்ளு கடை சந்து பகுதியில் லட்சுமி டிம்பர்ஸ் என்ற பெயரில் மரச்சாமான்கள் செய்யும் பட்டறை வைத்துள்ளார். இதில் ஜன்னல் கதவு மற்றும் சோபா நாற்காலி கட்டில் பர்னிச்சர் போன்றவை செய்யப்படுகின்றன.

    மரக் கடையில் தீ விபத்து

    இதற்காக மரங்களை அங்கு வாங்கி அடுக்கி வைத்திருந்தனர்.

    இன்று காலை சுமார் 6 மணிக்கு இந்த மரக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.கொஞ்சம் கொஞ்சமாக பற்றி எரிந்து அங்கிருந்த மரச்சாமான்கள் மற்றும் மரங்களில் பற்றி எரிந்தது.

    கடையிலிருந்து புகை மண்டலம் எழுந்ததைக் கண்ட பகுதியினர் உடனடியாக வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் பட்டறையில் காட்டு தீ போல மரங்கள் மற்றும் அங்கிருந்த மரச்சாமான்கள் கொழுந்து விட்டு எரிய தொடங்கின.

    இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பட்டறையில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.

    கள்ளுக்டை சந்து பகுதியில் ஏராளமான மரப்பட்டறை மற்றும் கடைகள் உள்ளன. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் விபத்து தடுக்க பட்டது.

    தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருங்கிணைப்புக்குழு குற்றச்சாட்டு
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பிரதிநிதிகளின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்

    வேலூர்:

    திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்விக்குழு, ஆட்சிமன்ற குழுவிற்கு 2 ஆண்டாக தேர்தல் நடத்தப்படாததால் ஆசிரியர் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாமல் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு குற்றச்சாட்டியுள்ளது.

    இதுகுறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் இளங்கோ, செயலாளர் அந்தோணி பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக சட்ட விதிகளின்படி இப்பல்கலைக் கழகத்தின் கீழுள்ள கல்லூரிகளின் முதல்வர்களில் இருந்து 10 உறுப்பினர்கள் பல்கலைக்கழகக் கல்விக் குழுவிற்கும், இருவர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

    இதேபோல், பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களில் இருந்தும் 10 உறுப்பினர்கள் கல்விக்குழுவிற்கும், இந்த 10 உறுப்பினர்களில் இருவர் ஆட்சிமன்றக் குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

    ஆனால், கடந்த 2021ஜனவரி முதல் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த 24 இடங்களும் காலியாகவே உள்ளன. இவற்றுக்கான தேர்தல்களை பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை நடத்தவில்லை. இவ்விரு ஆண்டுகளில் தேர்தல்களுக்கான வாக்களர் பட்டியல் மட்டும் இரண்டு முறை திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், தேர்தல்களை மட்டும் பல்கலைக்கழக நிர்வாகம் நடத்தாமல் திட்டமிட்டு தவிர்த்து வருகிறது.

    இதனால் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 65 கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்களுக்கு கல்விக்குழு, ஆட்சிமன்றக்குழுவில் பிரதிநிதித்துவம் மறுக்கப்படுகிறது. இதன்மூலம், கல்வித்தரம், மாணவர்கள் நலன் சார்ந்த பொருட்கள், பிரச்னைகள் குறித்த அர்த்தமுள்ள விவாதங்கள், சீரிய முடிவுகளை மேற்கொள்ள இயலவில்லை.

    கடந்த 2 ஆண்டுகளாக இவ்விரு அமைப்புகளில் இயற்றப்பட்டுள்ள தீர்மானங்களும் கேள்விக்குறியாகி உள்ளன. பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய அங்கமான ஆசிரியர் சமுதாயத்தின் கருத்துக்கள் பிரதிபலிக்கப்படாமல் அரசு அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகிகள், நியமன உறுப்பினர்கள் மட்டுமே மேற்கொள்ளும் முடிவுகள் ஆசிரியர், மாணவர், பெற்றோர், சமூக நலன்களுக்கு உகந்ததாக இருக்க முடியாது.

    உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு 2018ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கப்படாத நிர்வாகிகள் பலவீனப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளது.

    எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் இவ்விரு அமைப்புகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்தி திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பிரதிநிதிகளின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளனர்.

    • 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை.
    • மக்கள் எந்தவிதமான தயக்கமின்றி 10,20 ரூபாய் நாணயத்தை ஏற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு.

    வேலூர்:

    ரூபாய் நோட்டுகள் கிழியும் நிலையில், அழுக்குகள் நிறைந்து காணப்படும். எனவே ரூபாய் நோட்டுகளுக்கு பதில் 10,20 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

    இந்த நாணயங்கள் முதலில் மக்கள் கைகளுக்கு புழக்கத்துக்கு வந்தபோது வியப்புடன் பார்த்தனர். மக்கள் பலர் ஆர்வமுடன் வாங்கி பரிவர்த்தனை செய்தனர்.

    தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 10,20 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லாது என்ற வதந்தி மக்களிடையே பரவியது.

    பொதுவாக ஒரு வதந்தி என்பது சில நாட்கள் வரை இருக்கும். ஆனால் வேலூர் மாவட்டத்தில் இந்த 10 ரூபாய் நாணய விவகாரத்தை பொறுத்தவரையில் மக்களிடையே நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது.

    10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கது என்று ரிசர்வ் வங்கி பலமுறை அறிவித்துள்ளது. எனினும் வேலூர் மாவட்ட மக்களை விட்டு வதந்தி அகலவில்லை. 10 ரூபாய் நாணயங்களை செல்லாதவையாகவே மக்கள் கருதுகின்றனர். வங்கிகளில் கூட 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர்.

    வேலூரில் சுற்றுலா பயணிகள் மற்றும் சிகிச்சைக்காக தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் வருகின்றனர்.

    இங்குள்ள 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் சுமார் 15,000 வட மாநிலத்தவர்கள் தங்கி உள்ளனர். வட மாநிலத்தவர்கள் வருகை வேலூர் நகரை வர்த்தக மையமாக மாற்றி உள்ளது. வேலூருக்கு வருகை தரும் வெளியூர் மக்கள் 10-20 ரூபாய் நாணயத்தை கையில் வைத்து கொண்டு அலைகின்றனர்.

    சிறு வியாபாரிகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பெரும்பாலான இடங்களில் 10,20 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. இதனால் அவதியடைகின்றனர்.

    பஸ்களில் கூட இந்த நிலை தான் நீடிக்கிறது. சில்லரையாக கொடுங்கள் என்று கண்டக்டர்கள் கூறுவார்கள். ஆனால் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால் அதை வாங்குவதில்லை.

    ரூபாய் நோட்டாக வழங்குங்கள் என்கின்றனர். இதனால் வெளியூர் பயணிகளுக்கும், பஸ் கண்டக்டர்களுக்கும் இடையே தகராறும் ஏற்பட்டுள்ளது.

    பிச்சை எடுப்பவர்கள் கூட இந்த நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். எனவே 10 ரூபாய் நாணயங்களை கோவில் உண்டியலில் போட்டுச் செல்கின்றனர்.

    கடைக்கு வரும் மக்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. அவர்கள் வாங்க தொடங்கினால் நாங்களும் வாங்கி விடுவோம் என வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    ஆனால் பொதுமக்கள் தரப்பில் வியாபாரிகள் வாங்கவில்லை அவர்கள் வாங்கினால் நாங்களும் வாங்க தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவிக்கின்றனர்.

    ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர்

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் தொடர்பான பிரச்சினையில் வியாபாரிகளும், பொதுமக்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர்.

    இதற்கு தீர்வாக மாவட்ட நிர்வாகம் தான் களமிறங்கி அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    வேலூர் மாவட்டத்தில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியால் சில வியாபாரிகள், வாங்க மறுப்பதாக தெரியவருகிறது. இது வெறும் வதந்தி, 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும், அனைத்து வங்கிகளிலும் அரசாங்க அலுவலகம் 10,20 ரூபாய் நாணயங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே விளக்கமளித்துள்ளது, எனவே 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மக்கள் எந்தவிதமான தயக்கமின்றி 10,20 ரூபாய் நாணயத்தை ஏற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அதிகாரிகள் சோதனையில் சிக்கியது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தப்பள்ளி சோதனை சாவடி வழியாக ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. நந்தகுமார், இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையிலான போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது மினி வேனில் ஆந்திராவுக்கு கடத்தி வரப்பட்ட 3.7 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    அதை கடத்தி வந்த பேரணாம்பட்டை சேர்ந்த பாஷா (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

    பேரணாம்பட்டு பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக ரேசன் அரிசியை சேகரித்து லாரியில் ஆந்திராவுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதலி பேச மறுத்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள செம்பராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி மகன் சரத்குமார் என்கிற சரத் (வயது 27) வெல்டிங் வேலை செய்து வந்தார்.

    இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் அவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென அந்த இளம் பெண் சரத்குமாருடன் பேசியதை நிறுத்தினார்.

    மீண்டும் தன்னை காதலிக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என சரத்குமார் கூறிவந்துள்ளார். இளம் பெண் அவரது காதலை ஏற்க மறுத்ததால் மனம் உடைந்த சரத்குமார் வீட்டில் தூக்கில் தொங்கினார்.

    இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சரத்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    திருவலம் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆன்லைன் முதலீட்டில் அதிக பணம் தருவதாக வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பி ஏமாற்றம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்த 30 வயது பொறியியல் பட்டதாரி பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். கடந்த 12ந் தேதி இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மேலும் இந்த சேவையை பெற வேண்டும் என்றால் டெலிகிராமில் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து டெலிகிராமில் அந்தப் பெண் அவர்களை தொடர்பு கொண்டார்.

    அப்போது மர்ம நபர்கள், உங்கள் பெயரில் வர்த்தக கணக்கு ஒன்று தொடங்கப்படும். நீங்கள் செலுத்தும் தொகைக்கு கூடுதலாக பணம் அந்த கணக்கில் வரவு வைக்கப்படும் அதை நீங்கள் உங்களது வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்றனர்.

    இதை நம்பிய அந்தப் பெண் அவர்கள் அனுப்பிய இணையதள லிங்கில் சென்று தனது பெயரில் கணக்கு ஒன்று உருவாக்கி ரூ.2 ஆயிரம் செலுத்தினார். பின்னர் சிறிது நேரத்திலேயே ரூ.2,800 அவருக்கு வரவு வைக்கப்பட்டது. அந்த பணத்தை அவர் தனது வங்கி கணக்கு மாற்றிக் கொண்டார்.

    இந்த வர்த்தகம் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் என்று அவர் முழுமையாக நம்பினார். அதை தொடர்ந்து அவர் 16-ந் தேதி வரை பல தவணைகளில் ரூ.3 லட்சம் பணம் செலுத்தினார். இதையடுத்து அவர் கூடுதல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் அந்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. தொடர்ந்து அந்த மர்ம நபர்களை அவர் தொடர்பு கொண்ட போது உங்களுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் பூர்த்தி செய்தால் மட்டுமே நீங்க செலுத்திய தொகை மற்றும் கூடுதல் தொகை உங்களுக்கு வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தனர். இதை நம்பிய அந்தப் பெண் தனது வங்கியில் கடன் வாங்கி ரூ.6 லட்சத்து 51 ஆயிரம் வரை அந்த லிங்கில் சென்று பணத்தை செலுத்தியுள்ளார்.

    பின்னர் பணத்தை அவர் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முடியவில்லை. அந்த நபர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டது அவருக்குதெரியவந்தது. இது குறித்து அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் கூறுகையில் ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் அதிக பணம் தருவதாக கூறி மர்ம நபர்கள் மோசடி செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் தங்களது வங்கி விவரங்களை கொடுக்க வேண்டாம். மேலும் அதிகபணத்திற்கு ஆசைப்பட்டு பணமும் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றனர்.

    • 25-ந்தேதி நடக்கிறது
    • மாணவர்களுக்கு எழுதுகோல் வழங்கப்பட உள்ளது

    வேலூர்:

    வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் சக்தி அம்மா, ஆன்மிகத்துடன் பல்வேறு சமுதாய நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

    வித்யா நேத்ரம் என்ற திட்டத்தின் கீழ் 10,11,12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வில் சிறப்பாக வெற்றி பெற ஸ்ரீமேதா சூக்தயாகம் என்ற ஸ்ரீசரஸ்வதி யாகம் ஒவ் வொரு ஆண்டும் ஸ்ரீநாராயணி பீடத்தில் நடந்து வருகிறது.

    இதில், ஆண்டுதோறும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு சக்தி அம்மாவின் ஆசி பெறுகிறார்கள்.

    அதன்படி இந்தாண்டு வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் நாராயணி பீடத்தில் ஸ்ரீசரஸ்வதி யாகம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்வு பயம் நீங்கி படித் ததை நினைவில் கொண்டு வரும் வகையில் சிறப்பு அம்சமாக இந்த யாகம் நடைபெறுகிறது.

    யாகத்தில் கலந்து கொள்ளும் 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு யாகத்தில் வைக்கப்பட்ட சக்தி அம்மாவால் ஆசீர்வதிக்கப்பட்ட எழுதுகோல் வழங் கப்பட உள்ளது.

    இதில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.சிவஞானம், வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.முனுசாமி மற்றும் கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டு மாணவர்க ளுக்கு தேர்வு எழுதும் முறைகளை பற்றி அறிவுரைகள் வழங்க உள்ளனர்.

    இதில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சக்தி அம்மாவின் அருளாசி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிரிக்கெட் வீரர் ரஹானே மாணவிகளின் கேள்விகளுக்கு ருசிகர பதில்
    • மாரத்தான் ஓட்டம் நடந்தது

    வேலூர்:

    வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலை விழா இன்று முதல் 4நாட்கள் நடக்கிறது.இதன் தொடக்க விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை நடந்தது.

    பிரபல கிரிக்கெட் வீரர் ரஹானே தேசிய கொடி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

    விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த ஆண்டு விளையாடுகிறேன் அது பெருமையாக உள்ளது.

    விளையாட்டு கலை போல கல்வி மிக முக்கியமான ஒன்று.விஐடி பல்கலைக்கழகத்தில் விளையாட்டு கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.

    இந்த விழாவில் 45 ஆயிரம் பேர் கலந்து கொண்டதை பார்க்கும் போது கிரிக்கெட் மைதானத்தில் இருப்பதை போல உணர்வு ஏற்படுகிறது.

    கல்லூரி நாட்களை நான் தவற விட்டேன். அந்த நேரத்தில் நாட்டுக்காக விளையாடி க்கொண்டிருந்தேன். இந்தியாவில் அதிக இளைஞர்கள் உள்ளனர். இளைஞர்கள் தைரியமானவர்கள் அவர்களுக்கு புதிய கருத்துக்களை சொல்ல வேண்டியதில்லை. இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு கிரிக்கெட் வீரர் ரஹானே பதிலளித்தார்.

    அவர் கூறியதாவது:-

    ராகுல் டிராவிட் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை பார்த்து கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். தோனியை பார்த்து வளர்ந்தேன்.

    ஆஸ்திரேலியா நாட்டின் காபா மைதானத்தில் விளையாடியதை என்னால் மறக்க முடியாது. அந்த போட்டியில் கடினமாக விளையாடி வெற்றி பெற்றோம்.. கிரிக்கெட் என்னுடைய சுவாச மூச்சு புத்தகம் படிப்பது ஓவியம் வரைவது என்னுடைய பொழுது போக்காகும். தற்காப்புக் கலையில் கருப்பு பெல்ட் பெற்றுள்ளேன்.

    ஒரு நாள் மட்டுமே வகுப்பு சென்றேன் கல்லூரி வாழ்க்கை என்னால் மறக்க முடியாது.கிரிக்கெட் விளையாட தொடங்கியதால் கல்லூரி வாழ்க்கையை தவறவிட்டேன். நடுத்தர குடும்பத்தில் பிறந்த எனக்கு எனது பெற்றோர்கள் உதவியாக இருந்தார்கள். அவர்களுடைய உதவியால் என்னுடைய இலக்கை அடைந்தேன் எனக் கூறினார். விழாவில் ரகானே மரக்கன்று நட்டு வைத்தார்.

    நிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன் ஜி வி செல்வம் உதவி துணை தலைவர் காதம்பரி விஸ்வநாதன் துணைவேந்தர் ராம் பாபு கோடாலி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மலிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ரிவேரா கலை விழாவில் முதல் நாளான இன்று காலை மன நலன் மற்றும் மன உறுதி என்ற நோக்கத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற 9 கிலோ மீட்டர் தூர மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை துணை தலைவர் ஜி.வி.செல்வம் துவங்கி வைத்தார்.

    இதில் மாணவர்கள் மாணவிகளுக்கு தனித்தனியாக மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது

    காட்பாடி சாலையின் வழியாக சென்று அக்சிலியம் கல்லூரி வழியாக சென்று சித்தூர் சாலை வழியாக சென்று திருவலம் சாலைவழியாக வந்து மீண்டும் பல்கலைக்கழகத்தை அடைந்தது

    இந்த ஓட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரஹானே பரிசு சான்றிதழ்கள் வழங்கினார்.

    • சில மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர்
    • கலெக்டர் கூட்டத்தில் ஒழுக்கம் தான் முக்கியம் என அறிவுரை

    வேலூர்:

    வேலூர் அண்ணாசாலையில் ஊரீசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சிலர் புள்ளிங்கோ கட்டிங் ஒன் சைடு ஆப்சைட் லைன் கட்டிங், டாப் கட்டிங் போன்ற பல்வேறு முறைகளில் சரியான முறையில் தலைமுடியை வெட்டாமல் ஸ்டைலாக வந்துள்ளனர்.

    இதனால் பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களை அழைத்து தலைமுடியை ஒழுக்கமாக வெட்டி வர வேண்டும் என்று பல நாட்களாக அறிவுறுத்தி வந்தனர். இதை மாணவர்கள் கண்டுகொள்ளவில்லை. இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களில் ஒழுங்கற்ற முறையில் முடி வைத்திருந்த மாணவர்களை கண்டறிந்த தலைமை ஆசிரியர் எபினேசர் பல்வேறு வகையில் கட்டிங் செய்திருந்த மாணவர்களை தனியாக பிரித்து பள்ளி வளாகத்தில் அமர செய்தார்.

    முடி திருத்தும் தொழிலாளர்கள் மூலம் பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு தலைமுடியை திருத்தம் செய்ய ஏற்பாடு செய்தார். முடி வெட்டும் போது சில மாணவர்கள் தப்பி ஓடினர். மாணவர்களை அழைத்து வந்து மீண்டும் முடியை வெட்டினார்கள்.

    பள்ளி வளாகத்திலேயே 75 மாணவர்களுக்கும் சீரான முறையில் முடித்திருத்தம் செய்யப்பட்டது. பின்னர்முடிவெட்டி கொண்ட மாணவர்களுக்கு பிஸ்கெட் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் எபினேசர் கூறுகையில்:-

    மாணவர்கள் பள்ளிக்கு ஒழுக்கமாக முடியை வெட்டி வரவேண்டும். சீருடை அணிந்து வரவேண்டும் மாணவர்களுக்கு ஒழுக்கம் தான் முக்கியம் கல்விதானாக வரும். எனவே நேற்று கலெக்டர் கூட்டத்தில் அறிவுறுத்திய படி இன்று இந்த பணியை சொந்த செலவில் முடியை வெட்டுகிறோம் என்றார்.

    • குடியாத்தத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி பேட்டி
    • ஏ.டி.எம். கொள்ளை எதிரொலியாக நடவடிக்கை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று இரவு வேலூர் சரக டி.ஐ.ஜி. டாக்டர் எம்.எஸ். முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு கே.ராமமூர்த்தி, குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    பின்னர் அப்போது வேலூர் சரக டி.ஐ.ஜி. டாக்டர் எம்.எஸ்.முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வேலூர் சரகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை என 4 மாவட்டங்கள் உள்ளன.

    இந்த 4 மாவட்டங்களில் விபத்துக்களை பெருமளவு குறைக்கும் வகையில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து விபத்துக்கள் ஏன் ஏற்படுகிறது, விபத்துக்கள் ஏற்படா வண்ணம் தடுக்கும் வழிமுறைகள், அப்பகுதியில் அதிகளவு மின்விளக்குகள் பொறுத்துவது, வளைந்து வளைந்து செல்லும் சாலைகளை போக்குவரத்திற்கு ஏற்றவாறு மாற்றுவது குண்டும் குழியுமான இடங்களை கண்டறிந்து சீர் செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளால் விபத்துக்கள் பெருமளவு குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் 4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் வகையில் வாட்ஸ் அப் எண்கள் மற்றும் இமெயில் முகவரிகள் வைத்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு தகவல்கள் வரப்பெற்று அந்த தகவல்கள் அந்தந்த பகுதி போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இது நல்ல பலன் அளித்து வருகிறது.

    மேலும் தகவல் தெரிவிக்கும் மாணவர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டு வருகிறது. வேலூர் சரகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டம் தமிழக எல்லை பகுதியில் உள்ளது. மேலும் குடியாத்தம் மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் குடியாத்தம் மட்டுமல்ல எல்லை புற மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சோதனை சாவடிகளும் கண்காணிப்பு கேமராக்கள் ஏற்படுத்தப்பட்டு அது இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

    மேலும் அப்பகுதியில் ஒரு சப் இன்ஸ்பெக்டர், 4 காவலர்களுக்கு குறையாமல் பணியில் இருப்பார்கள் அவர்கள் வாகனங்களை தீவிர சோதனை செய்த பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிப்பார்கள்.

    திருவண்ணாமலையில் நடைபெற்ற ஏ.டி.எம். கொள்ளைகளை தொடர்ந்து வேலூர் சரதத்தில் உள்ள அனைத்து வங்கி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து அனைத்து ஏ.டி.எம். களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அலாரங்கள் பொருத்த வேண்டும், மேலும் ஏ.டி.எம். மையங்களில் காவலாளி களை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

    இரவு ரோந்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரோந்து பணி செய்யப்படுகிறது.ஒவ்வொரு பிரிவுக்கும் 3 காவலர்கள் இருப்பார்கள். மேலும் இ-பீட் சிஸ்டத்தின் கீழ் இரவு ரோந்து பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    குடியாத்தம் துணைக்கோட்டத்தில் 1997 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கண்டுபிடிக்க முடியாத 12 வழக்குகள் இருந்தன அதில் 2 வழக்குகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மீதமுள்ள வழக்குகள் கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக 11 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற மிகப்பெரிய கொள்ளை சம்பவத்தில் கண்டுபிடிப்பு பணிகளை டவுன் இன்ஸ்பெக்டரிடம் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரேங்குக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    விரைவில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் கண்டு பிடிக்கப்படும் என்றார்.

    • ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்
    • ஜெயிலில் அடைப்பு

    வேலூர்:

    காட்பாடி அருகே உள்ள பனமடங்கியைச் சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர் சுரேஷ் (வயது 28) கடந்த ஜனவரி மாதம் இரவு கோழித் தீவனம் வாங்க வேலூருக்குச் சென்றார்.

    கொணவட்டம் அருகே சென்றபோது, அவரை 5 பேர் கொண்ட கும்பல் தடுத்து நிறுத்தி, செல்போன் மற்றும் ரூ.20 ஆயிரத்தை பறித்துச் சென்றனர்.

    அப்போது, அவரை கடத்தி ரூ.2 லட்சத்தை கொடுத்தால் மட்டுமே விடுவிப்போம் என உறவினர்களிடம் தெரிவிக்கும்படி கூறினர்.

    சுரேஷும் அவர்கள் கூறியபடி செல்போனில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார் எடுத்துக்கொண்ட அவரது உறவினர்கள் ஏராளமானோர் கொண வட்டத்திற்கு வந்தனர்.

    விரைந்து வந்த அவர்கள் கொணவட்டத்தைச் சேர்ந்த பாஷா (37), ரியாஸ் (32), சித்திக் (36) ஆகிய 3 பேரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களை வேலூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாஷா தொடர்ந்து வழிப்பறி மற்றும் கடத்தல் வழக்கில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார்.

    இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் பாஷா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • அதிகாரி பேச்சுவார்த்தை
    • 3 நாட்கள் கால அவகாசம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சியில் 18 வார்டுகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சில மாதங்களாகவே பன்றிகள் தொல்லை அதிகரித்து ஆங்காங்கே உள்ள விளை நிலங்கள், வீட்டுத் தோட்டங்கள் சேதப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    பன்றிகள் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது வாா்டு கவுன்சிலர்கள் குறிப்பிட்டுப் பேசி பன்றிகளை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதன் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, பேரூராட்சி தலைவா் சுபபிரியா குமரன், துணை தலைவர் வசீம்அக்ரம் ஆகியோா் பிடிக்க கூறினர்.

    இதையடுத்து செங்கல்பட்டு பகுதியில் இருந்து பன்றி பிடிக்கும் குழுவினா் 10 பேர் வரவழைக்கப்பட்டு பன்றிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று 16 பன்றிகளை பிடித்து வேனில் ஏற்றும் போது பன்றிகளின் உரிமையாளர்களுக்கும் பன்றிகளை பிடிப்பவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலரிடமும் எங்களுக்கு கால அவகாசம் கொடுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அதற்கு இதுவரை கொடுத்த கால அவகாசம் போதுமானது. பன்றிகளால் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே பன்றிகளை பிடிப்பதுதான் ஒரே வழி என பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி கூறினார். பின்பு மீதமுள்ள பன்றிகளை நாங்களே பிடித்து அப்புறப்படுத்தி விடுகின்றோம் என பன்றியின் உரிமையாளர்கள் கேட்டனர்.

    இதன்பின் தகவலறிந்து வந்த பள்ளிகொண்டா போலீசார் பன்றி உரிமையாளா்களிடம், பேரூராட்சி ஊழியா்களின் பணியை தடுக்கக் கூடாது என கூறி சமாதானப்படுத்தி 3 நாட்கள் கால அவகாசம் கொடுத்து பேரூராட்சியில் ஒரு பன்றிகூட இருக்க கூடாது அப்படி இருந்தால் மீண்டும் பேரூராட்சி மூலமாக பிடித்து எடுத்து செல்லப்படும் என கூறி அனுப்பி வைத்தனர்.

    ×