search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரவு ரோந்து பணியில் கூடுதல் போலீசார் நியமித்து கண்காணிப்பு
    X

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று இரவு வேலூர் சரக டி.ஐ.ஜி. டாக்டர் எம்.எஸ். முத்துசாமி ஆய்வு செய்த காட்சி.

    இரவு ரோந்து பணியில் கூடுதல் போலீசார் நியமித்து கண்காணிப்பு

    • குடியாத்தத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி பேட்டி
    • ஏ.டி.எம். கொள்ளை எதிரொலியாக நடவடிக்கை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று இரவு வேலூர் சரக டி.ஐ.ஜி. டாக்டர் எம்.எஸ். முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு கே.ராமமூர்த்தி, குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    பின்னர் அப்போது வேலூர் சரக டி.ஐ.ஜி. டாக்டர் எம்.எஸ்.முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வேலூர் சரகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை என 4 மாவட்டங்கள் உள்ளன.

    இந்த 4 மாவட்டங்களில் விபத்துக்களை பெருமளவு குறைக்கும் வகையில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து விபத்துக்கள் ஏன் ஏற்படுகிறது, விபத்துக்கள் ஏற்படா வண்ணம் தடுக்கும் வழிமுறைகள், அப்பகுதியில் அதிகளவு மின்விளக்குகள் பொறுத்துவது, வளைந்து வளைந்து செல்லும் சாலைகளை போக்குவரத்திற்கு ஏற்றவாறு மாற்றுவது குண்டும் குழியுமான இடங்களை கண்டறிந்து சீர் செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளால் விபத்துக்கள் பெருமளவு குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் 4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் வகையில் வாட்ஸ் அப் எண்கள் மற்றும் இமெயில் முகவரிகள் வைத்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு தகவல்கள் வரப்பெற்று அந்த தகவல்கள் அந்தந்த பகுதி போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இது நல்ல பலன் அளித்து வருகிறது.

    மேலும் தகவல் தெரிவிக்கும் மாணவர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டு வருகிறது. வேலூர் சரகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டம் தமிழக எல்லை பகுதியில் உள்ளது. மேலும் குடியாத்தம் மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் குடியாத்தம் மட்டுமல்ல எல்லை புற மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சோதனை சாவடிகளும் கண்காணிப்பு கேமராக்கள் ஏற்படுத்தப்பட்டு அது இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

    மேலும் அப்பகுதியில் ஒரு சப் இன்ஸ்பெக்டர், 4 காவலர்களுக்கு குறையாமல் பணியில் இருப்பார்கள் அவர்கள் வாகனங்களை தீவிர சோதனை செய்த பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிப்பார்கள்.

    திருவண்ணாமலையில் நடைபெற்ற ஏ.டி.எம். கொள்ளைகளை தொடர்ந்து வேலூர் சரதத்தில் உள்ள அனைத்து வங்கி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து அனைத்து ஏ.டி.எம். களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அலாரங்கள் பொருத்த வேண்டும், மேலும் ஏ.டி.எம். மையங்களில் காவலாளி களை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

    இரவு ரோந்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரோந்து பணி செய்யப்படுகிறது.ஒவ்வொரு பிரிவுக்கும் 3 காவலர்கள் இருப்பார்கள். மேலும் இ-பீட் சிஸ்டத்தின் கீழ் இரவு ரோந்து பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    குடியாத்தம் துணைக்கோட்டத்தில் 1997 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கண்டுபிடிக்க முடியாத 12 வழக்குகள் இருந்தன அதில் 2 வழக்குகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மீதமுள்ள வழக்குகள் கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக 11 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற மிகப்பெரிய கொள்ளை சம்பவத்தில் கண்டுபிடிப்பு பணிகளை டவுன் இன்ஸ்பெக்டரிடம் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரேங்குக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    விரைவில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் கண்டு பிடிக்கப்படும் என்றார்.

    Next Story
    ×