என் மலர்
வேலூர்
- ஹோமியோபதி படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார்
- கலெக்டர் உத்தரவின் பேரில் நடவடிக்கை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் பேரூராட்சி பஸ் ரோடு பகுதியில் முறையான மருத்துவம் படிக்காமல் ஹோமியோபதி மட்டும் படித்து விட்டு ஆங்கில வைத்தியம் பார்க்கப்படுகிறது என்று கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனுக்கள் வந்தது.
இதனால், புகார் மீதான உண்மை தன்மை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். அதன்படி, தாசில்தார் ரமேஷ் தலைமையில் மண்டல துணை தாசில்தார் ராமலிங்கம், ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு ஒருவர் பொதுமக்களுக்கு ஊசி, ஆங்கில மருந்துகள், மாத்திரைகளை வழங்கி கொண்டிருந்தார்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் திருப்பத்தூரை சேர்ந்த பெருமாள் (வயது46), என்பதும், இவர் ஹோமியோபதி படித்து விட்டு ஒடுகத்தூரில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் அங்கிருந்த மருந்து, மாத்திரைகள், ஊசி போன்றவற்றை கைப்பற்றி எடுத்து சென்றனர். மேலும், அனுமதியின்றி நடத்தி வந்த கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- ரெயில் நிலையத்தின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியை மேம்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
- வடக்கு முனையத்தில் இருந்து பயணிகள் வெளியேறும் பகுதியாக இது அமைய உள்ளது.
வேலூர்:
தமிழ்நாட்டின் முக்கியமான ரெயில் நிலையங்களில் காட்பாடியும் ஒன்று. நாளொன்றுக்கு சராசரியாக 37,595 பயணிகளை கையாளும் இந்த ரெயில் நிலையம் தற்போது தெற்கு ரெயில்வே மூலம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சென்னை-பெங்களூர் மார்க்கத்தில் வேலூர் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளதும்.
வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை, சிஎம்சி மருத்துவமனை, விஐடி பல்கலைக்கழகம் மற்றும் தங்க கோவில் போன்ற முக்கிய இடங்கள் காட்பாடியை சுற்றியே அமைந்துள்ளதால் இந்த ரெயில்நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
காட்பாடி ரெயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.329.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.மறுசீரமைப்பு பணிகளை 36 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள ரெயில் நிலையத்தின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியை மேம்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள ரெயில் நிலையக் கட்டிடம் 2 கட்டங்களாக இடிக்கப்பட்டு, அனைத்தும் புதிய கட்டடத்திற்கு மாற்றப்படும். தெற்குப் பக்கத்தில், ரெயில் நிலையத்திற்கு வரும் மற்றும் ரெயில் நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளை பிரிப்பதற்காக ஒரு தனி வருகை முனையமும், புறப்பாடு முனையமும் கட்டப்படும்.
வடக்குப் பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய முனையம் கட்டப்படும். அனைத்து கட்டடங்களும் காட்பாடி-வேலூர் கோட்டை நகரத்தின் தழுவலோடு, தொன்மை மாறாமல் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், அதே நேரத்தில் புதிய தொழில்நுட்ப கட்டட கலையுடன் அமைய உள்ளது.
தெற்குப் பகுதியில் அமைய உள்ள புறப்பாடு முனையக் கட்டிடம் தாழ்தள பால்கனி உடன் 4 மாடியுடன் 10,250 ச. மீ. இல் உலகத் தரத்தில் கட்டமைக்கப்படும். தரை தளத்தில் பயணிகள் புழக்கத்திற்கு இடவசதியும், புறப்பாடு பகுதி, உதவி மையம், ஏசி காத்திருப்பு அறை, முன்பதிவு பயணச் சீட்டு அலுவலகங்கள், எஸ்கலேட்டர், மின் தூக்கிகள், மற்றும் பால்கனி தளத்தில் ஓய்வறைகள் இருக்கும்.
முதல் தளத்தில் ஏசி மற்றும் ஏசி அல்லாத காத்திருப்பு அறை, பொருட்கள் வைப்பு அறை மற்றும் ரெயில்வே அலுவலகங்கள் அமைய உள்ளன.
புறப்படும் முனைய கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் பெண்கள் காத்திருப்பு அறை, ஏசி அல்லாத காத்திருப்பு அறை, குழந்தை பராமரிப்பு மற்றும் வணிகப் பகுதி மற்றும் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் வணிக நிறுவனங்கள் அமைய உள்ளன.
தெற்கு பகுதியில் அமைய உள்ள வருகை தாழ்தள பால்கனி வசதியுடன் 4 மாடியுடம் 10,250 சதுர மீட்டரில் அமைய உள்ளது. தாழ்தளத்தில் பயணிகளின் வசதிக்காக உதவி மையம், சுற்றுலா தகவல் மையம், பொருட்கள் வைப்பறை மற்றும் ரெயில்வே அலுவலகங்கள் அமைய உள்ளன.
இதன் முதல் தளத்தில் பல்வேறு ரெயில்வே அலுவலகங்களும் மற்ற மூன்று தளங்களும் வணிக நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
புறப்பாடு மற்றும் வருகை முனையங்களை இணைப்பதற்காக இரு சுரங்கப்பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வருகை மற்றும் புறப்பாடு பயணிகளை பிரிப்பதற்காக 2 பொதுத்தளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இவை வருகை முனையத்திலிருந்து அனைத்து நடைமேடைகள் மற்றும் வடக்கு முனையத்தை இணைக்கும்.
இதே போலவே புறப்பாடு முனைய பொதுத்தளம் புறப்பாட்டு முனையத்தை அனைத்து நடைமேடைகள் மற்றும் வடக்கு முனைய கட்டடத்துடன் இணைக்கும். அனைத்து நடைமேடைகளிலும் போதுமான அளவு எஸ்கலேட்டர், மின் தூக்கி, படி வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டு பொது தளங்களும் பயணிகளுக்கான வசதிகளுடன் நடைமேடைகள் பயணிகளுக்கு எளிதில் புலப்படும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
தரை தளத்தில் 600 சதுர மீட்டரில் அமைய உள்ள வடக்கு முனையம் பயணச்சீட்டு மையம், புறப்பாட்டு பகுதி ஆகியவற்றுடன் அமைய உள்ளது. வடக்கு முன்னயத்தின் முன் பகுதி 300 சதுர மீட்டரில் அமைய உள்ளது.
வடக்கு முனையத்தில் இருந்து பயணிகள் வெளியேறும் பகுதியாக இது அமைய உள்ளது. இந்த பகுதியில் வாகனங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதற்கான வசதிகளும் அமைய உள்ளது.
இந்த பன்னடுக்கு கார் பார்க்கிங் வசதி 6 மாடியுடன் 9250 சதுர கிலோ மீட்டரில் பிரமாண்டமாக அமையுள்ளது. இதில் 258 கார்கள், 2120 இருசக்கர வாகனங்களை நிறுத்திக் கொள்ள முடியும். புறப்பட்டு முனையத்திலிருந்து கார் பார்க்கிங் வருவதற்கு அகலமான சாலை வசதி அமைக்கப்பட்டு வருகிறது.
- கல்வியால் மட்டுமே ஒருவர் வாழ்வில் சிறந்த நிலையை அடைய முடியும்
- சக்தி அம்மா பேச்சு
வேலூர்:
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகளுக்காக சக்தி அம்மா தலைமையில் சிறப்பு சரஸ்வதி யாகம் இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம், வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட பேனாக்க ளுக்கு சக்தி அம்மா சிறப்பு பூஜைகள் செய்து மாணவர்க ளுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
மாணவர்களாகிய உங்களுக்கு பிடித்த சினிமா ஹீரோ ஒருவராவது இருப்பார். ஆனால் அவர்கள் நிஜத்தில் ஹீரோ இல்லை. நீங்கள் தான் நிஜ ஹீரோ. தன்னைப்போல் மற்றவர்களையும் உயர்த்த நினைப்பவர்கள் யாரோ அவர்கள் தான் நிஜ ஹீரோ. சமுதாயத்தில் கல்வியால் மட்டுமே ஒருவரை வாழ்வில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். கல்வியால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும்.
நன்மை செய்ய முடியும். வாழ்க்கையின் முன்னேற்ற த்திற்கு கல்வி தேவை அந்த சந்தர்ப்பம் உங்களுக்கு தற்போது கிடைத்துள்ளது நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் நிஜ ஹீரோவாக வர வேண்டும் படிக்கும் வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி மற்றவைகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு பயம் வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த யாகம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த யாகத்தின் மூலம் சரஸ்வதி தேவியின் சக்தி இந்த பேனாவில் இறக்கப்ப டுகிறது. போருக்குச் செல்லும் வீரருக்கு ஆயுதம் தேவைப்படுவது போல் தேர்வு எழுத செல்லும் உங்களுக்கு இந்த பேனா ஆயுதமாக இருக்கும்.
கடைகளில் இருக்கும் போது இது ஒரு சாதாரண பேனா. ஆனால் பூஜை செய்த பிறகு சரஸ்வதி தேவியின் பூரண சக்தி கிடைத்து உள்ளது. இதனால் அரிய சக்தி கிடைத்து மகா சரஸ்வதி தேவி உங்களுக்கு துணையாக இருப்பார்.
இதனால் தேர்வு எழுதும் போது உங்களுக்கு பதட்டம் வராது. சிறப்பான முறையில் தேர்வு எழுதி நல்ல நிலையை அடைந்து நீங்களும் உயர்ந்து உங்களை சார்ந்தவர்களையும் முன்னேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வி.ஐ.டி. ரிவேரா கலைவிழா நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வி.ஐ.டி.யில் ரிவேரா' 23 என்ற சர்வதேச கலைத் திருவிழா 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ரிவேரா' 23 சர்வதேச கலை திருவிழா 2-வது நாளான நேற்று நாளில் இன்பியூசன் எனும் சர்வதேச மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
சாகிதி எனும் தெலுங்கு பாட்டுக்கு பாட்டு நிகழ்வும், சைலன்ட் டிஸ்கோ எனும் நிகழ்வில் மாணவ, மாணவிகள் ஹெட்போன் அணிந்து கொண்டு அதில் கேட்கும் இசைக்கேற்ப நடனம் ஆடினார்கள்.
மேற்கத்திய இசையை மையப்படுத்தி 'ரெசோனன்ஸ்' நிகழ்வும், மாணவ, மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து திரைப்பட பிரபல நடிகையும், பின்னணி பாடகிமான ஆண்ட்ரியாவின் இசை கச்சேரி நடைபெற்றது.
இசைக்கச்சேரியில் ஆண்ட்ரியா தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படப் பாடல்களை பாடி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார். மேலும் ஜாவித் அலி குழுவினரின் இசை கச்சேரியும் நடைபெற்றது. இன்று மாலை நாளயக் குழுவின் இசை கச்சேரி நடைபெற உள்ளது.
அதேபோல் மாலை ப்ரிஸ்க் பேக்டர் என்ற மாபெரும் நடனப் போட்டியும் நடைபெற உள்ளது. இன்று காலை 9 மணிக்கு ஐக்கியா என்ற நிகழ்வு நடைபெறுகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார பண்பாட்டை விளக்கும் வகையில் இந்த நிகழ்வு இருக்கும் என தெரிவித்தனர்.
- மொத்தம் ரூ.3.57 லட்சத்திற்கு குத்தகை ஏலம் விடப்பட்டது
- போலீசார் பாதுகாப்பு
ஒடுகத்தூர்:
ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமாக 97 புளியமரங்கள், 18 தென்னை மரங்கள், கட்டண கழிப்பறை, பஸ் நிலையம் சுங்க வசூல், தினசரி சந்தை ஆகியவை ஆண்டு தோறும் பேரூராட்சி அலுவலகத்தில் பொது ஏலம் விடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்தாண்டிற்கான பொது ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று ஒடுகத்தூர் பேரூராட்சியில் நடந்தது. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி தலைமையில் நடைப்பெற்ற ஏலம் காலை 11 மணிக்கு தொடங்கியது.
இதில், புளியமரங்கள் ரூ.33,300க்கும், தென்னை மரங்கள் ரூ.4,900க்கும் முதலில் ஏலம் விடப்பட்டது. அதனைத்தொடந்து, பஸ் நிலையம் சுங்க வசூல் ஏலம் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 300க்கும், கட்டண கழிப்பறை ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 500க்கும் ஏலம் விடப்பட்டது.
அதேபோல், தினசரி சந்தை சுங்க வசூல் குறைந்த அளவிற்கே ஏலம் கேட்டதால் அதனை மறு தேதி அறிவிப்பு இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் ரூ.3.57 லட்சத்திற்கு குத்தகை ஏலம் விடப்பட்டது.
இதில், வார்டு கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தரப்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
- லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் முற்றுகை
- அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி ஊராட்சிக்கு உட்பட்ட தாங்கல் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மலைகளில் கல்குவாரிகள் இயங்கி வருகிறது.
இந்த கல்குவாரியில் இருந்து கட்டிட பணிகளுக்காக வேலூர், குடியாத்தம், ஒடுகத்தூர், அணைக்கட்டு, பள்ளிகொண்டா போன்ற பகுதிகளுக்கு ஜல்லி கற்கள், பாறைகள், கருங்கற்களை டிப்பர் லாரி மூலம் இரவு, பகலாக ஏற்றி செல்கின்றனர்.
அவ்வாறு, ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு உரிய அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும், இரவு, பகல் பாராமல் லாரிகள் இயக்கப்படுவதால் சுற்றியுள்ள பள்ளிகள், வீடுகள் முழுவதும் தூசி படிகின்றது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், குவாரியில் வைக்கப்படும் வெடியால் பூமி அதிர்ந்து வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் எங்கள் ஊரே மாசு அடைந்த நிலையில் காணப்படுகின்றது என கூறினர்.
அதேபோல், அதிவேகமாக இயக்கப்படும் டிப்பர் லாரிகளால் அவ்வப்போது விபத்துகள் நடந்து உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில், நேற்று கல்குவாரியில் அனுமதியின்றி டிப்பர் லாரிகளில் கற்களை ஏற்றி கொண்டிருந்தனர். இதனால், பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் கிரிதரனிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவருடன் சேர்ந்து பொதுமக்கள் டிப்பர் லாரிகளை சிறைபிடித்து குவாரியை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து, தகவலறிந்து வந்த தாசில்தார் ரமேஷ், மண்டல துணை தாசில்தார் ராமலிங்கம், விஏஓ சிவமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தார். மேலும், அனுமதியின்றி இயங்கி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்தார். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த ஒரு லாரி மட்டுமின்றி கல்குவாரிகளில் அனுமதியின்றி இயங்கி வரும் இன்னும் பல டிப்பர் லாரிகளை கண்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குடியாத்தம்-சித்தூர் சாலை, பரதராமி-பனமடங்கி சாலைகளை பார்வையிட்டார்
- அதிகாரிகள் உடன் இருந்தனர்
குடியாத்தம்:
வேலூர் கோட்டம் குடியாத்தம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக நடைபெற்று வரும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை திருவண்ணாமலை வட்ட கண்காணிப்பு பொறியாளர் நெடுஞ்சாலைகள் மற்றும் கட்டுமானம் பராமரிப்பு பணிகளை எஸ்.பழனிவேல் ஆய்வு செய்தார்.
பின்னர் குடியாத்தம்-சித்தூர் சாலை, பரதராமி-பனமடங்கி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட சாலைகளையும் பொறியாளர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை வேலூர் கோட்ட பொறியாளர் ஆர்.என். தனசேகரன், குடியாத்தம் உதவி கோட்ட பொறியாளர் ஆர்.எஸ்.சம்பத்குமார், வேலூர் தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் கே.ரவிச்சந்திரன்உதவி பொறியாளர் ப.யோகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- வானில் ஒரே நேர்கோட்டில் தோன்றியது சந்திரன், குரு, சுக்கிரன் ஆகியவையாகும்.
- 3-ம் ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வு பல நூற்றாண்டுகளுக்கு பிறகு நடந்துள்ளது.
வேலூர்:
வானில் 50 ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை சந்திரன், வியாழன், வெள்ளி ஆகிய 3 கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை நடந்தது.
வானில் பிரகாசமாக தோன்றிய இந்த அதிசய நிகழ்வை கண்ட பொதுமக்கள் வீட்டின் மாடிகளுக்கு சென்று தங்களது கேமரா மற்றும் செல்போன்களில் பதிவு செய்தனர்.
கேமரா செல்போன்களில் எடுக்கப்பட்ட காட்சிகளை ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காணக்கூடிய சந்திரனுடன் 3 கோள்கள் இணைந்த இந்த அதிசய நிகழ்வு குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தி இருந்தனர்.
இதற்கிடையில், சூரிய மண்டலத்தின் பிரகாசமான 2 கிரகங்கள்-வியாழன் மற்றும் வீனஸ் ஆகியவை மார்ச் 1-ந் தேதி மிக நெருக்கமாக இருக்கும். கடந்த சில வாரங்களாக நெருங்கி வருகின்றன.
மார்ச் 1-ந் தேதி கிரகங்கள் மிக அருகில் இருக்கும். சந்திரன் 0.52 டிகிரி இடைவெளியில் வியாழன் அளவு-2.1 ஆகவும், வீனஸ்-4.0 அளவிலும் பிரகாசிக்கும். சூரிய அஸ்தமனத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அடி வானத்தில் இதனை தாழ்வாக காண முடியும்.
வானில் தோன்றிய இந்த அரிய நிகழ்வு குறித்து ஆற்காடு பஞ்சாங்க ஜோதிடர் சுந்தர ராஜன் ஐயர் கூறியதாவது:-
வானில் ஒரே நேர்கோட்டில் தோன்றியது சந்திரன், குரு, சுக்கிரன் ஆகியவையாகும்.
3-ம் ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வு பல நூற்றாண்டுகளுக்கு பிறகு நடந்துள்ளது. இந்த நிகழ்வு வரும் பவுர்ணமி வரை தொடர்ந்து 10 நாட்கள் நீடிக்கும்.
இதனால் பல்வேறு நன்மைகளும் தீமைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அரிய நிகழ்வு மூலம் மக்கள் சுபிட்சமான வாழ்வினை பெறுவார்கள். வானலாவிய புதிய கட்டிடங்கள் உருவாகும்.
வேலையில்லா திண்டாட்டம் தீரும். மாணவ, மாணவிகளின் கல்வி மேம்படும். புதிய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.
ஆன்லைன் வியாபாரம் தொடர்ந்து சூடு பிடிக்கும். பெரிய செல்வந்தர்கள் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு ஏழ்மை நிலையை அடையும் சூழ்நிலை உருவாகலாம். வாகன விபத்துக்கள் அதிகரிக்கும்.
வைரஸ் காய்ச்சல்கள் உருவாகும். இளம்வயது சிறுவர்களை நோய்கள் அதிகளவில் தாக்கும், நாய்கள் இனவிருத்தி அதிகரிக்கும். தெரு நாய்களின் தொல்லை தாங்க முடியாத அளவில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்
- 100 அரங்குகளில் 20 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது
வேலூர்:
வேலூர் நேதாஜி மைதானத்தில் மாவட்ட நிர்வாகமும் பொது நூலகத்துறை புத்தகத் திருவிழா இன்று முதல் வருகிற 6-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்வி, பொருளாதாரம் அரசியல், வரலாறு உட்பட பல்வேறு சுமார் 20 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன
அமைச்சர் துரைமுருகன் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
அவர் பேசியதாவது:-
புத்தகங்களை படிப்பதால் மொழி பற்று வருகிறது, இனப் பற்று வருகிறது, நாட்டுப் பற்று வருகிறது.
வாசிப்பு பழக்கம் மாணவர்களை ஒழுக்கம் உடையவர்களாக மாற்றுகிறது.
ஆசிரியர்கள் மாணவர்க ளுக்கு விளையாட்டுடன் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.
தொடர்ந்து புத்தங்களை படித்தவர்கள் எல்லாம் தலைவர் ஆகிஉள்ளனர்
கருணாநிதி ஆட்சியின் போது சென்னை எத்திராஜ் கல்லூரி அருகே புத்தக பதிப்பாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் புத்தகசாலை அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது பதிப்பாளர்களிடையே ஒற்றுமை இல்லாததால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அந்த திட்டத்தை உயிர்ப்பித்து புத்தக பதிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் நாளான இன்று புத்தக கண்காட்சியை ஏராளமான பள்ளி கல்லூரி மாணவிகள் பார்வை யிட்டனர். அவர்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.இந்த புத்தக கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
- குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
- உழவர் சந்தைகளுக்கு செல்லும் அரசு பஸ்களை முறையாக இயக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைவு கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவர்கள் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் காட்டெருமை காட்டுப்பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
இதற்கு பதில் அளித்த வனத்துறை அதிகாரிகள் வேலூர் மாவட்டத்தில் வனவிலங்குகள் இறங்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு அறிக்கை தயார் செய்து வருகிறோம். விரைவில் வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் வருவதை தடுக்க சோலார் மின் வசதி ஏற்படுத்தப்படும். மேலும் வன விலங்குகள் வருவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
ஆற்றை காணவில்லை
தொடர்ந்து பேசிய விவசாயிகள் விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் வழங்கப்படும் விதைகள் தரமானதாக இல்லை. அவற்றை வாங்கிப் பயிரிட்டதன் மூலம் இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் வேளாண் துறைகள் விற்பனை செய்யப்படும் விதை தரத்தை ஆய்வு செய்து பிறகு வழங்க வேண்டும்.
மேல்அரசம்பட்டில் உள்ள ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 77 மீட்டர் அகலம் கொண்ட அந்த ஆற்றில் மேல்அரசம்பட்டிலிருந்து ஒடுகத்தூர் வரை வெறும் 5 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள ஆற்றை காணவில்லை. அதனை மீட்டெடுத்து ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒடுகத்தூரிலிருந்து குடியாத்தம் உழவர் சந்தைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த மூன்று ஆண்டுகளாக ஓடவில்லை. இதனால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.வேலூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் முறையாக இயக்க வேண்டும்.
பேரணாம்பட்டு பகுதியில் வனப்பகுதியில் இருந்து தற்போது விலங்குகள் வெளியே வர தொடங்கி விட்டன. கடந்த வாரம் மான் ஒன்று குட்டியுடன் வந்து விவசாய கிணற்றுக்குள் விழுந்து விட்டது.
இதை தடுக்க தனது சொந்த செலவில் காட்டிற்குள் தொட்டி ஒன்று கட்டி வருவதாக விவசாயி ஒருவர் கூறினார். மேலும் இந்த தொட்டியை முழுமையாக கட்டி முடிக்க மணல் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும்.அதற்கான மொத்த செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார். அவருக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.
- 5 கி.மீ. தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன
- வேலூர் பெருமுகையில் பரபரப்பு
வேலூர்:
வேலூர் பெருமுகையில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த இடத்தின் அருகில் இன்று காலை சென்னை நோக்கி சென்ற லாரி ஒன்று டயர் வெடித்து பழுதாகி நின்றது.
லாரிகள் விபத்து
சுமார் 8.30 மணி அளவில் வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மற்றொரு லாரி பழுதாகி நின்ற லாரி மீது திடீரென மோதியது.
இந்த விபத்தின் காரணமாக 2 லாரிகள் சாலையின் குறுக்கே திரும்பி நின்றன. இதனால் பெங்களூரில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் போக்குவரத்து தடைப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
அனைத்து வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்றன. இதனை அறிந்த கார் ஆட்டோ மற்றும் இரு சக்கரத்தில் வந்தவர்கள் சர்வீஸ் சாலையில் செல்ல முயன்றனர். அதனால் சர்வீஸ் சாலை பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பெருமுகையிலிருந்து சத்துவாச்சாரி கெங்கை அம்மன் கோவில் வரை வாகனங்கள் வரிசையாக நின்றன.
இதன் காரணமாக சென்னைக்கு செல்பவர்கள் கடும் அவதி யடைந்தனர். வேலூரில் இருந்து சென்னை சென்ற பஸ்களில் பயணிகள் தவித்தனர். சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
5 கி.மீ. தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
சுமார் 45 நிமிடத்திற்கு பிறகு விபத்தில் சிக்கிய லாரிகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனையடுத்து 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையாக நின்ற வாகனங்கள் புறப்பட்டு சென்றன இந்த சம்பவம் இன்று காலை வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பலே கில்லாடி வாலிபர் உள்பட 3 பேர் கைது
- வேலூரில் ஏற்றுமதி நிறுவன ஏஜெண்டாக செயல்பட்டு பணத்தை சுருட்டினர்
வேலூர்:
அரியானா மாநிலம் குரு நகரை சேர்ந்தவர் ரவிகாந்லட்சுமணண் ராவ். இவர் ஆன்லைன் மூலம் காய்கறி பழங்கள் வர்த்தகம் செய்யும் தனியார் நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
பணம் மோசடி
இவரிடம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை கிராமத்தை சேர்ந்த சீதாராம் (வயது 32) என்பவர் தான் காய்கறிகள் ஏற்றுமதி செய்யும் ஏஜெண்டாக உள்ளேன் என்று அறிமுகம் செய்து கொண்டார்.
இதையடுத்து ரூ.70 லட்சத்திற்கு வியாபாரம் செய்தார். அதற்கான பணத்தையும் திருப்பி செலுத்தினார்.
தொடர்ந்து ரூ.1 கோடி 80 லட்சத்திற்கு பணம் பெற்று வியாபாரம் செய்தார்.
ஆனால் அதற்கான பணத்தை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை. தொடர்ந்து தனியார் நிறுவனம் கேட்கவே ரூ.70 லட்சம் கொடுத்தார்.
தனியார் நிறுவனத்திடம் பெற்ற பணத்தை குடியாத்தம் சீவூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் (28), அகரம்சேரி கிராமத்தை சேர்ந்த சரவணன் (26), குடியாத்தத்தை சேர்ந்த வசந்தகுமார் (26) ஆகியோரது வங்கி கணக்கு மூலம் பெற்றார்.
தொடர்ந்து தனியார் நிறுவனத்துக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் பணம் செலுத்தியதாக சீதாராம் போலி ஆவணங்கள் தயாரித்து உள்ளார்.
அழகிகளுடன் உல்லாசம்
இதையடுத்து 3 பேரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை சீதாராம் தனது மனைவி விஜிதாவின் வங்கி கணக்கிற்கு மாற்றினார். பணத்தை பெற்றுக் கொண்ட சீதாராம் ஆடம்பர கார், வேன் வாங்கினார். மேலும் அகரம்சேரியில் நிலம் வாங்கி வீடு கட்டினார்.
அவர் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்து பெங்களூரு அழகிகளை வேலூருக்கு வரவழைத்தார். அவர்களுடன் மது குடித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இதேபோல அந்த தனியார் நிறுவனத்தில் ஏஜெண்டாக உள்ள திருவண்ணாமலையை சேர்ந்த சரண்ராஜ் என்பவர் ரூ.36 லட்சம் செலுத்த வேண்டி இருந்தது. அதற்கும் சீதாராம் போலி பில் தயாரித்து பணத்தை நிறுவனத்திற்கு கொடுக்காமல் செலவு செய்துள்ளார். இதற்கு சரண்ராஜ் உடந்தையாக இருந்தார்.
நிறுவனத்தில் சேர வேண்டிய பணம் வராததால் நிறுவனத்தினர் சோதனை செய்தனர். அப்போது போலி ஆவணங்கள் தயாரித்து சீதாராம் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து ரவிகாந்த் லட்சுமணண்ராவ் வேலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார்.
3 பேர் கைது
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பண மோசடி செய்த சீதாராம் அவருக்கு உடந்தையாக இருந்த சதீஷ்குமார், சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் வசந்தகுமார், சரண்ராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர். சீதாராமின் மனைவியும் இதில் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. அவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.
மோசடி செய்த பணத்தில் ஆடம்பரமாக செலவு செய்த சீதாராம் தனது மனைவியின் பிரசவத்திற்காக வாங்கிய வேனை அடமானம் வைத்து சிகிச்சைக்கு பணம் அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






