என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரிகள் விபத்தால் பெங்களூரு - சென்னை சாலையில் போக்குவரத்து பாதிப்பு
- 5 கி.மீ. தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன
- வேலூர் பெருமுகையில் பரபரப்பு
வேலூர்:
வேலூர் பெருமுகையில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த இடத்தின் அருகில் இன்று காலை சென்னை நோக்கி சென்ற லாரி ஒன்று டயர் வெடித்து பழுதாகி நின்றது.
லாரிகள் விபத்து
சுமார் 8.30 மணி அளவில் வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மற்றொரு லாரி பழுதாகி நின்ற லாரி மீது திடீரென மோதியது.
இந்த விபத்தின் காரணமாக 2 லாரிகள் சாலையின் குறுக்கே திரும்பி நின்றன. இதனால் பெங்களூரில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் போக்குவரத்து தடைப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
அனைத்து வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்றன. இதனை அறிந்த கார் ஆட்டோ மற்றும் இரு சக்கரத்தில் வந்தவர்கள் சர்வீஸ் சாலையில் செல்ல முயன்றனர். அதனால் சர்வீஸ் சாலை பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பெருமுகையிலிருந்து சத்துவாச்சாரி கெங்கை அம்மன் கோவில் வரை வாகனங்கள் வரிசையாக நின்றன.
இதன் காரணமாக சென்னைக்கு செல்பவர்கள் கடும் அவதி யடைந்தனர். வேலூரில் இருந்து சென்னை சென்ற பஸ்களில் பயணிகள் தவித்தனர். சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
5 கி.மீ. தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
சுமார் 45 நிமிடத்திற்கு பிறகு விபத்தில் சிக்கிய லாரிகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனையடுத்து 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையாக நின்ற வாகனங்கள் புறப்பட்டு சென்றன இந்த சம்பவம் இன்று காலை வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






