search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elections have not been held for 2 years"

    • ஒருங்கிணைப்புக்குழு குற்றச்சாட்டு
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பிரதிநிதிகளின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்

    வேலூர்:

    திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்விக்குழு, ஆட்சிமன்ற குழுவிற்கு 2 ஆண்டாக தேர்தல் நடத்தப்படாததால் ஆசிரியர் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாமல் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு குற்றச்சாட்டியுள்ளது.

    இதுகுறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் இளங்கோ, செயலாளர் அந்தோணி பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக சட்ட விதிகளின்படி இப்பல்கலைக் கழகத்தின் கீழுள்ள கல்லூரிகளின் முதல்வர்களில் இருந்து 10 உறுப்பினர்கள் பல்கலைக்கழகக் கல்விக் குழுவிற்கும், இருவர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

    இதேபோல், பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களில் இருந்தும் 10 உறுப்பினர்கள் கல்விக்குழுவிற்கும், இந்த 10 உறுப்பினர்களில் இருவர் ஆட்சிமன்றக் குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

    ஆனால், கடந்த 2021ஜனவரி முதல் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த 24 இடங்களும் காலியாகவே உள்ளன. இவற்றுக்கான தேர்தல்களை பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை நடத்தவில்லை. இவ்விரு ஆண்டுகளில் தேர்தல்களுக்கான வாக்களர் பட்டியல் மட்டும் இரண்டு முறை திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், தேர்தல்களை மட்டும் பல்கலைக்கழக நிர்வாகம் நடத்தாமல் திட்டமிட்டு தவிர்த்து வருகிறது.

    இதனால் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 65 கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்களுக்கு கல்விக்குழு, ஆட்சிமன்றக்குழுவில் பிரதிநிதித்துவம் மறுக்கப்படுகிறது. இதன்மூலம், கல்வித்தரம், மாணவர்கள் நலன் சார்ந்த பொருட்கள், பிரச்னைகள் குறித்த அர்த்தமுள்ள விவாதங்கள், சீரிய முடிவுகளை மேற்கொள்ள இயலவில்லை.

    கடந்த 2 ஆண்டுகளாக இவ்விரு அமைப்புகளில் இயற்றப்பட்டுள்ள தீர்மானங்களும் கேள்விக்குறியாகி உள்ளன. பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய அங்கமான ஆசிரியர் சமுதாயத்தின் கருத்துக்கள் பிரதிபலிக்கப்படாமல் அரசு அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகிகள், நியமன உறுப்பினர்கள் மட்டுமே மேற்கொள்ளும் முடிவுகள் ஆசிரியர், மாணவர், பெற்றோர், சமூக நலன்களுக்கு உகந்ததாக இருக்க முடியாது.

    உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு 2018ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கப்படாத நிர்வாகிகள் பலவீனப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளது.

    எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் இவ்விரு அமைப்புகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்தி திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பிரதிநிதிகளின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளனர்.

    ×