என் மலர்
உள்ளூர் செய்திகள்

பன்றிகள் பிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு ெதரிவித்து வாக்குவாதம்
- அதிகாரி பேச்சுவார்த்தை
- 3 நாட்கள் கால அவகாசம்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சியில் 18 வார்டுகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சில மாதங்களாகவே பன்றிகள் தொல்லை அதிகரித்து ஆங்காங்கே உள்ள விளை நிலங்கள், வீட்டுத் தோட்டங்கள் சேதப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பன்றிகள் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது வாா்டு கவுன்சிலர்கள் குறிப்பிட்டுப் பேசி பன்றிகளை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதன் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, பேரூராட்சி தலைவா் சுபபிரியா குமரன், துணை தலைவர் வசீம்அக்ரம் ஆகியோா் பிடிக்க கூறினர்.
இதையடுத்து செங்கல்பட்டு பகுதியில் இருந்து பன்றி பிடிக்கும் குழுவினா் 10 பேர் வரவழைக்கப்பட்டு பன்றிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று 16 பன்றிகளை பிடித்து வேனில் ஏற்றும் போது பன்றிகளின் உரிமையாளர்களுக்கும் பன்றிகளை பிடிப்பவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலரிடமும் எங்களுக்கு கால அவகாசம் கொடுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு இதுவரை கொடுத்த கால அவகாசம் போதுமானது. பன்றிகளால் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே பன்றிகளை பிடிப்பதுதான் ஒரே வழி என பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி கூறினார். பின்பு மீதமுள்ள பன்றிகளை நாங்களே பிடித்து அப்புறப்படுத்தி விடுகின்றோம் என பன்றியின் உரிமையாளர்கள் கேட்டனர்.
இதன்பின் தகவலறிந்து வந்த பள்ளிகொண்டா போலீசார் பன்றி உரிமையாளா்களிடம், பேரூராட்சி ஊழியா்களின் பணியை தடுக்கக் கூடாது என கூறி சமாதானப்படுத்தி 3 நாட்கள் கால அவகாசம் கொடுத்து பேரூராட்சியில் ஒரு பன்றிகூட இருக்க கூடாது அப்படி இருந்தால் மீண்டும் பேரூராட்சி மூலமாக பிடித்து எடுத்து செல்லப்படும் என கூறி அனுப்பி வைத்தனர்.