என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய கட்டிடம் கட்ட தேர்வுசெய்யப்பட்ட இடத்தை பிச்சாண்டி, எம்.பி, எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    திருவண்ணாமலை:

    துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய புதியஅலுவலக கட்டிடம் கட்ட ரூ 4 கோடி மதிப்பீட்டில் இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. இதில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, எம்.பி., எம்.எல். ஏ ஆகியோர் இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் தற்போது உள்ள இக்கட்டிடம் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள காரணத்தால் இக்கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளன. 

    இதனால் தற்போது ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியிலிருந்து ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் 2 மாடி உடன் கூடிய புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நேற்று துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றன. 

    இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி எம்.பி அண்ணாதுரை, கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ தி.சரவணன் ஆகியோர் நேரில் வந்து புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

    அப்போது ஒன்றியக்குழு தலைவர் தமயந்திஏழுமலை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்த லைவர் பாரதிராமஜெயம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை, ஒன்றிய உதவி பொறியா ளர்கள் தனவந்தன், அருணா மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
    திருவண்ணாமலையில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நகர நல அலுவலர் மோகன், துப்புரவு ஆய்வாளர்கள் கார்த்திகேயன், செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்கள் சுமார் 100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

    வயலூர் கிராமத்தில் பெரியாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்றது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த வயலூர் கிராமத்தில் பெரியாண்டவர் திருவிழா நடந்தது.51 அடி அளவில் களிமண்ணால் பெரியாண்டவர் சாமி சிலைசெய்து வர்ணம் பூசி சிலையை சுற்றி 108 கலசம் வைத்து. பெரியாண்டவரை வ–ர்ணித்து பம்பை உடுக்கை அடித்து பெரியாண்டவருக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் ஆடு, கோழி, பலியிட்டு குறி கேட்டனர். 

    பெரிய ஆண்டவருக்கு பல்வேறு மூலிகைகள் மூலம் அபிஷேகம் செய்தனர்.பின்னர்விரதம் இருந்த பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து தலையில் சுமந்தவாறு. ஊர்வலமாக வந்தனர்.

    அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை பெரியவர்கள், விழாக் குழுவினர், இளைஞர்கள், செய்திருந்தனர்.
    கலசப்பாக்கம் அடுத்த காம்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அருகில் உள்ள காம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு அதன் மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. 

    விழாவை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடைபெற்றன. தொடர்ந்து மூன்று நாள் யாகசாலை பூஜையும் இதனைத் தொடர்ந்து நேற்று காலை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

    யாகசாலையில் வைக்கப்பட்ட கலசபுனித நீரை எடுத்து அம்மன் கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தின் மீது ஊற்றப்பட்டது. விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    இதனைத் தொடர்ந்து நேற்று இரவு சாமி வீதி உலா வாணவேடிக்கை நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.
    திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் குடை பிடித்த படியும், மழையில் நனைந்தவாரும் கிரிவலம் சென்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை ஒட்டி நேற்று இரவு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கி இன்று காலை 10.20 மணி வரை பவுர்ணமி கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்தநிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணியிலிருந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் குடை பிடித்த படியும், மழையில் நனைந்தவாரும் கிரிவலம் சென்றனர்.

    கிரிவலம் முடித்த வெளியூர் பக்தர்கள் ஊருக்கு செல்வதற்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    கடந்த 3 மாதங்களாக விவசாயிகள் கஷ்டப்பட்டு பயிர் செய்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் மழையால் சேதம் அடைந்து உள்ளதை பார்த்து மிகவும் வேதனை அடைந்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு கலசப்பாக்கம் பகுதியில் கனமழை பொழிந்தது. 101 மில்லி மீட்டர் மழை கொட்டியது. இதனால் கலசப்பாக்கம் பகுதி வெள்ளக்காடாக மாறியது. இதில் கலசப்பாக்கம், பில்லூர், கப்பலூர், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம், பழமொழியில், லாடவரம், பூண்டி, நார்த்தாம்பூண்டி உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 900 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது.

    கடந்த 3 மாதங்களாக விவசாயிகள் கஷ்டப்பட்டு பயிர் செய்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் மழையால் சேதம் அடைந்து உள்ளதை பார்த்து மிகவும் வேதனை அடைந்தனர். மேலும் இது சம்பந்தமாக வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மழையால் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரிகளுக்கும் ஆறுகளுக்கும் தண்ணீர் வர தொடங்கி உள்ளது. ஒருபக்கம் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்த போதிலும் தாங்கள் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது மிக வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக போளூரில் 64.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. செய்யாறு, போளூர், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    மற்ற இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக போளூரில் 64.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    சேத்துப்பட்டு பகுதியில் நேற்று இடியுடன் மழை பெய்தது. ராந்தம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (வயது 50). இவரது மனைவி சூடாமணி, மகன் பூங்காவனம், உறவினர் முனியம்மாள் ஆகியோர் நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது சங்கர் வீட்டின் மீது இடி தாக்கியது. இதில் சங்கரின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. மேலும் அருகில் இருந்த மாட்டுக்கொட்டகையும் இடிந்து விழுந்தது. இடி தாக்கியதில் அங்கிருந்த பசுமாடு சம்பவ இடத்திலேயே பலியானது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய சங்கர் குடும்பத்தினரை மீட்டனர். இதில் சங்கர் அவரது மனைவி சூடாமணி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கண்ணமங்கலம் வண்ணாங்குளம் காட்டுகாநல்லூர் அம்மாபாளையம் புதுப்பாளையம் குன்னத்தூர் சேவூர் முள்ளிபட்டு எஸ்.வி.நகரம் இரும்பேடு உள்ளிட்ட கிராமங்களில் காற்றுடன் கூடிய பலத்த கனமழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பொழிந்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் சாலையில் தேங்கியது.

    ஆரணி கோட்டை மைதானம் அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் மழைநீர் வெள்ளம் புகுந்தது.

    இதனால் அலுவலகம் முழுவதும் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.

    ஆரணி உதவி கலெக்டர் அலுவலக வளாகம் எதிரில் மழைநீர் சாலையில் தேங்கியுள்ளது. பொதுமக்கள் இந்த சாலையை கடக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:

    திருவண்ணாமலை 37, ஆரணி 11.6, செய்யாறு 51, செங்கம் 5.4, ஜமுனாமரத்தூர் 18.3,வந்தவாசி 25, போளூர் 64.8, தண்டராம்பட்டு 17.8, கலசப்பாக்கம் 5, சேத்துப்பட்டு 22.6, கீழ்பென்னாத்தூர் 33.2, வெம்பாக்கம் 45.



    செங்கம் அருகே ஆற்றில் மூழ்கி சிறுமி, சிறுவன் பரிதாபமாக இறந்தனர்.
    செங்கம், 

    செங்கம் அருகே உள்ள பரமனந்தல் தீபம் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் கீர்த்தனா (வயது 11) மற்றும் அவர்களது உறவினர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடைய மகன் விஷ்ணு (11) இவர்கள் 2 பேரும் வீட்டின் அருகே உள்ள செய்யாற்றில் குளிப்பதற்காக சென்றனர். 

    2 பேர் சாவு இந்நிலையில் ஆற்றில் இறங்கி குளிக்கும்போது ஆழம் அதிகம் உள்ள பகுதியில் சிக்கிக்கொண்டனர். இதில் தண்ணீரில் மூழ்கி கீர்த்தனாவும், விஷ்ணுவும் பரிதாபமாக இறந்தனர். 

    இறந்த சிறுவர்களின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

    இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கோடை விடுமுறை அறிவித்துள்ள சூழலில் குழந்தைகள் ஆற்றில் குளிக்கச் சென்றபோது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சித்திரை வசந்த உற்சவம் நிறைவையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடந்தது
    திருவண்ணாமலை,

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவையொட்டி அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    சித்திரை வசந்த உற்சவம்தி ருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா, மகா சிவராத்திரி விழா போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். சித்திரை மாதத்தில் இக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நடைபெறும். இந்த உற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவ விழாவானது கடந்த 5-ந் தேதி தொடங்கியது. முன்னதாக 4-ந் தேதியன்று மாலையில் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியின் முன்பு பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து விழா நாட்களில் கோவிலில் கடந்த 5-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை இரவு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவிலில் மகிழமரம் அருகில் சாமிக்கு பொம்மை வடிவிலான சேடி பெண் பூப் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தீர்த்தவாரி நிகழ்ச்சி தொடர்ந்து நேற்று சித்திரை வசந்த உற்சவம் நிறைவு விழாவையொட்டி பகல் சுமார் 12.30 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. 

    முன்னதாக உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் தனித் தனி வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள மாட வீதியை வலம் வந்தனர். பின்னர் அய்யங்குளத்திற்கு மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அய்யங்குளத்தில் சூல ரூபத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மன்மத தகனம் பின்னர் அய்யங்குளத்திற்கு எதிரில் உள்ள அருணகிரிநாதர் கோவிலில் சாமிக்கும், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து தொடர்ந்து நேற்று இரவு கோபால விநாயகர் கோவிலில் சாமிக்கு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இரவு 10 மணியளவில் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இதில் மன்மத உருவபொம்மை செய்து வைக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் எழுந்தருளி மன்மதன் மீது பாணம் தொடுக்கும் நிகழ்ச்சியில் மன்மத உருவபொம்மை எரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சாலை தடுப்பு சுவரில் மோதி பஸ் விபத்துக்குள்ளானது
    செங்கம்,

    பெங்களுரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி இன்று அதிகாலை 55 பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பஸ்  சென்று கொண்டிருந்தது.

    அப்போது செங்கம்  வனத்துறை அலுவலகம் அருகே வந்துபோது பஸ் கட்டுப்பாட்டை இழந்த சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 15 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது.

     அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு  108 ஆம்பூலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக 5 பேரை திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து சம்பவஇடத்திற்கு வந்த செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    சேத்துப்பட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    சேத்துப்பட்டு,

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எட்டி வாடி, திருமலை, வடமாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில்  நடைபெற்று வரும் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். 

     பின்னர் அங்கிருந்து சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில் ஊராட்சி செயலாளர் களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரதாப், ஊரக வளர்ச்சி பணிகள் குறித்து ஊராட்சி செயலாளர்களிடம் கேட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது ஊரக வளர்ச்சி உதவி பொறியாளர் கோவர்தனன், ஊராட்சிகளில் மாவட்ட செயலர் அறவாழி, ஒன்றியக்குழு தலைவர் ராணி அர்ஜுனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகோபால், சத்தியமூர்த்தி ஒன்றிய பொறியாளர் மனோகரன், மாதவி, ஜெயந்தி, பணி மேற்பார்வையாளர்கள் பாலாஜி, ஜெயவேலு, சாந்தி, மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உட்பட உடனிருந்தனர்.
    ராமசாணிக்குப்பம் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு இலவச திருக்குறள் புத்தகங்களை தலைமை ஆசிரியர் வழங்கினார்.
    கண்ணமங்கலம் :

    கண்ணமங்கலம் அருகே ராமசாணிக்குப்பம்– ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று அரசு பள்ளியில்   5-ம் வகுப்பு படிக்கும் 59 மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. 

    இதனை பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வி, அவரது கணவர் சமூக ஆர்வலர் க.பிரபாகரன் மாணவர்களுக்கு பிரியா விடை அளித்து உலகம் போற்றும் திருவள்ளுவரின் பெருமைகளையும் அவர் எழுதிய திருக்குறளின் பெருமையும் எடுத்து கூறி அனைவருக்கும் திருக்குறள் அதன் கருத்துக்கள் உள்ள புத்தகம் பரிசளித்தனர்.மாணவச்செல்வங்களும் நாங்கள் 1330 திருக்குறள்களையும் மனதில் பதியுமாறு திருக்குறள் அதன் கருத்துக்கள் அனைத்தையும் படிப்பதாக உறுதி கூறினார்கள். 

    5-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நட்டனர்.தலைமை ஆசிரியர், பெற்றோர்கள், ஆசியர்கள், அனைவரும் இணைந்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    இடைநிலை ஆசிரியர் சுமதி, ஆசிரியர்கள் வனிதா, ஜெயந்தி, துர்கா, பவானி ஆகியோர் இணைந்து 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியாக பிரியா விடை அளித்தனர்.
    ×