என் மலர்
திருவண்ணாமலை
தொடர் மழையால் செண்பகத்தோப்பு அணை நிரம்பியது.
கண்ணமங்கலம்:
கடந்த சில தினங்களில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக படவேடு செண்பகத்தோப்பு அணையின் கொள்ளளவானது தற்போது 54 அடியை எட்டி உள்ளது.
எனவே இன்று காலை அணையிலிருந்து சுமார் 1000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கமண்டல நதியின் ஓரமாக பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பாக இருக்கும்படியும் பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது என வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சேவூர் முள்ளிபட்டு இரும்பேடு கண்ணமங்கலம் காட்டுகாநல்லூர் படவேடு உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக பலத்த கனமழை பெய்ந்து வருகிறது.
மேலும் ஜவ்வாதுமலை அடி வாரத்தில் நேற்று அதிகபட்சமாக 10 செ.மீ மழை பதிவாகி உள்ளதால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அமிர்தி, காட்டாறு, காட்டுகாநல்லூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரி கால்வாயில் மழை வெள்ளம் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன.
குன்னத்துர் கீழ்நகர் குண்டம் தடுப்பணையில் மழைநீர் நிரம்பியதால் ஆரணியில் உள்ள கமண்டலநாகநதி ஆற்றில் மழை வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளன.
கோடை காலத்தில் கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
போளூர் பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கடந்த ஒரு வாரமாக இடி மின்னலுடன் கோடை மழை பெய்து வருகின்றது.
இதனால் வயல்வெ ளிகளை சூழ்ந்த தண்ணீர் அங்கிருந்து வெளியேறி அருகிலுள்ள ஓடைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் போளூர் அடுத்த எடப்பிறை கிராமத்தை சேர்ந்த சதாசிவம் விவசாயி இவரது மனைவி சுதா (வயது 30) இவர் நேற்று முன்தினம் தங்கள் நிலத்தில் கட்டப்பட்டிருந்த மாடு இருக்கிறதா மழையில் எங்காவது சென்று விட்டதா என்று பார்ப்பதற்காக நேற்று அதிகாலை 4 மணி அளவில் தங்கள் வீட்டின் அருகே உள்ள ஓடையை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சதாசிவம் கொடுத்த புகாரின் பேரில் போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு அடுத்த தேசூரில் டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தேசிய டெங்கு தடுப்பு தினமும் தேசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெருங்கடபுத்தூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
டெங்கு கொசு உற்பத்தி ஆகும் இடங்கள், வீட்டைச்சுற்றி குப்பை கூளங்கள் போடுவதை அப்புறப்படுத்துவது, தேவையற்ற டயர்கள், தேங்காய் சிரட்டைகள், முட்டை ஓடு, தண்ணீர் தொட்டி ஆகியவற்றில் கொசுப்புழு வளர்ச்சியை தடுப்பதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும்.
மேலும் காய்ச்சல் கண்டவுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி முறையாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வப்போது தண்ணீர் சேகரிக்கும் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் சேமிக்க வேண்டும், மூடி வைத்தல் அவசியம், போன்றவை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் நிலவேம்பு குடிநீர் பருகுவதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்கலாம் என்று வலியுறுத்தப்பட்டது.அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடையே டெங்கு குறித்த விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் ஹித்தேன் டி.ஷா, சுகாதார ஆய்வாளர் கணேஷ்குமார், ராஜேஷ் கண்ணா, மருத்துவ பணியாளர்கள், மஸ்தூர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொள்முதல் நிலையத்தில் எடை போடாததால் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அருகே கலசபாக்கம் அடுத்த ்மோட்டூர் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.
இங்கு பதிவு செய்யப்பட்ட நெல் மூட்டைகளை எடை போடாமல் தாமதப்படுத்தி வருவதாக நெல் மூட்டைகளை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த கலசபக்கம் போலீசார் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர் கூறுகையில் கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விவசாயிகள் அதிகமானோர் பதிவு செய்து உள்ள காரணத்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து நெல் மூட்டைகளை எடை போட்டு வருகின்றன. போளூரை சேர்ந்த விவசாயிகள் இங்கு வந்து பதிவு செய்து உள்ள காரணத்தால் எடை போடுவது தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
பின்னர் அ–திகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போளூர் பகுதி விவசாயிகளின்நெல் மூட்டைகளையும் எடைபோட சம்மதித்தனர். அதன்பின்னர் சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சேத்துப்பட்டு அருகே பாம்பு கடித்து மாணவி பரிதாபமாக இறந்தார்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள செவரபூண்டி, மதுர கருங்கல்மேடு, கிராமத்தை, சேர்ந்தவர் தர்மராஜ், இவரது மகள் திவ்யா, (வயது 19).
திவ்யா 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் உள்ளார்.திவ்யா கடந்த மாதம் 28ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திவ்யாவை விஷப் பாம்பு ஒன்று கடித்தது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில் திவ்யா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திவ்யாவின் உறவினர் தினேஷ், சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






