என் மலர்
திருவண்ணாமலை
- 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
- ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள மேல்நகர் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் நேற்று மலையாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி தலைமையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.
இதில் மேல்நகர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு குழந்தைகளின் வளர்ச்சி குறித்தும் தாய்மார்களின் உடல் ஆரோக்கியத்தை குறித்தும் உணவுகள் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான ஆலோசனைகளை பெற்றனர்.
தாய்ப்பால் வார விழாவில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று உணவுகள் காய்கறிகள் பழ வகைகள் பார்வைக்கு வைத்திருந்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் சத்து பாயாசங்கள் வழங்கப்பட்டன.
- தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
- அணையின் நீர்மட்டம் 113 அடியாக உயர்ந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலான மழை பெய்து வருகின்றன. இதில் திருவண்ணாம லையில் தொடர்ந்து கன மழை பெய்ததில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. தாமரை நகர் பகுதியில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
ஒசூர் அருகேயுள்ள கெலவரப் பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி அணை ஆகியவை முழு கொள்ளளவை எட்டியதால் 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல், ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் தென்பெண்ணை ஆற் றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளதால், சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 4,270 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சாத்தனூர் அணையில் முழு கொள்ளளவு 119 அடியாகும் இதில் தற்போது 113 அடி கொள்ளளவு எட்டி உள்ளன.
அதேபோல், குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 50.18 அடியாகவும், மிருகண்டா அணையின் நீர் மட்டம் 20.50 அடியாகவும், செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 50.71 அடி யாகவும் உயர்ந்திருக்கிறது.
மேலும், ஜவ்வாதுமலை பகுதியில் தொடர்ந்து கன மழை நீடிப்பதால், அங்குள்ள பீமன் நீர்வீழ்ச் சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, நீர் வீழ்ச்சி பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை தடை விதித்திருக்கிறது.
- ரூ.20.50 லட்சம் வழங்கப்பட்டது
- சரவணன் எம்.எல்.ஏ. வழங்கினார்
கலசப்பாக்கம்:
கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலசப்பாக்கத்தில் நடைபெற்றது.
சரவணன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 20.50 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் ஒன்றிய கவுன்சிலர் முனியாண்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை உட்பட பலர் உடன் இருந்தனர்.
- விவசாயிகள் கலக்கம்
- பொன்னி விதை நெல் 50 கிலோ மூட்டை ரூ. 1,700 க்கு விற்பனை
கலசப்பாக்கம்:
கலசப்பாக்கம் தாலுகாவில் தென்பள்ளிப்பட்டு பகுதியில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையமும் ஆதமங்கலம்புதூரில் தொடக்க வேளாண் விரிவாக்க மையமும் செயல்பட்டு வருகிறது.
இந்த வேளாண் விரிவாக்க மையங்களில் ஆடி18 க்காக (சம்பா பட்டமான) பொன்னி, பாபட்லா, கோ51, கோ53, கோ45, ஆகிய ரக விதை நெல்கள் விவசாயிகளின் தேவைக்காக கடந்த 25 நாட்களாக விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இதில் பொன்னி விதை நெல் 50 கிலோ மூட்டை ரூபாய் ஆயிரத்து 700 க்கும், பாபட்லா 50 கிலோ மூட்டை ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இதனை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் சுமார் 50 டன் எடைக்கு மேல் வாங்கிச் சென்று நெல்லை முளைக்க வைப்பதற்காக தண்ணீரில் ஊறவைத்து பக்குவப்படுத்தி விதை விதைப்பதற்காக மூட்டையை பிரித்து பார்த்த போது நெல்லில் அதிக அளவில் கலப்படம் இருந்ததை அறிந்து விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதனால் விதை நெல்லை நிலத்தில் விதைப்பதை நிறுத்தி வைத்துவிட்டு சம்பந்தப்பட்ட வேளாண் விரிவாக்க அலுவலருக்கு போன் மூலம் தகவல் விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.
பின்பு வேளாண்துறை அதிகாரிகள் நேரில் சென்று நெல்லை பார்வையிட்டு ஏதோ தவறு நடந்து விட்டது அடுத்த முறை நல்ல நெல்லை இறக்குமதி செய்யலாம். மேலும் நெல்லை தண்ணீரில் ஊற வைத்து விட்ட காரணத்தினால் இந்த நெல்லை திருப்பி பெற்றுக் கொள்ள முடியாது. என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்:-
கலப்படமான பொன்னி விதை நெல்லை தற்போது சம்பா பட்டமான ஆடி 18-ந் தேதி விதைத்தால் ஆறு மாதம் கழித்து தை மாதம் அறுவடைக்கு வரும். அப்போது கலப்படமான நெல் இருந்தால் வியாபாரிகள் யாரும் நெல்லை கொள்முதல் செய்து கொள்ள மாட்டார்கள் அப்படியே செய்தாலும் அடிமாட்டு விலைக்கு தான் எடுப்பார்கள் இப்படிப்பட்ட நிலையில் இந்த நெல்லை நாங்கள் எப்படி 6 மாதம் கஷ்டப்பட்டு கண்ணை போல் பாதுகாத்து வளர்த்து அறுவடை செய்த பின் விற்பனை செய்வது.
குறைந்த செலவில் அதிக லாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் இந்த நேரத்தில் இப்படி கலப்படம் இருந்தால் எங்களின் எதிர்கால வாழ்க்கை என்னாவது 6 மாத கஷ்டத்தின் பலன் என்னாவது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் பலர் கலந்து கொண்டனர்
- ரூ.3,60,000 கடன் வழங்கப்பட்டது
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மாங்கால் கூட்ரோடு கிளை சார்பில் எஸ் கே தண்டலம் கிராமத்தில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கிளை மேலாளர் பி ஜெயந்தி தலைமை தாங்கினார் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் வங்கி மூலம் வழங்கப்படும் சேவைகள் மாற்றுத்திறனாளி கடன்கள் கால்நடை பராமரிப்பு மூலதன கடன் விதவைகளுக்கான உதவி கடன் நடமாடும் ஏடிஎம் நடமாடும் வாகனம் மூலம் கணக்கு துவக்குதல் ஆகிய குறித்து விளக்கப்பட்டது.
தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு நேரடி கடன் ரூ.3,60000 வழங்கப்பட்டது. இதில் வங்கி உதவியாளர் தீபா காசாளர் சபரிநாதன் கலந்து கொண்டனர்.
- கமிட்டியின் கண்காணிப்பாளர் தானியங்களை எடை போடவில்லை
- ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
செய்யாறு:
செய்யாறு ஆற்காடு சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்கி வருகிறது.
நெல் மூட்டைகள் எடை போடவில்லை
தற்போது சொர்ணவாரி பயிரிட்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்களை மார்க்கெட் கமிட்டியில் கொண்டு வந்து உள்ளனர்.
இன்று காலையில் நெல்களை எடை போடும் தொழிலாளர்கள் எடை போட முயன்ற போது கமிட்டியின் கண்காணிப்பாளர் சரவணன் நெல், மணிலா, எள் உள்ளிட்ட தானியங்களை எடை போட வேண்டாம் என்றும் நிறுத்தி உள்ளார்.
2, 3 நாட்களாக நெல்லை கொண்டு வந்திருந்து காத்திருந்த விவசாயிகள் பாதிப்படையவே எடை போடாததை கண்டித்து செய்யாறு ஆற்காடு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். டிஎஸ்பி செந்தில், இன்ஸ்பெக்டர் பாலு, சப் இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ராம்குமார், கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் ஆகியோர் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி நெல்களை எடை போட நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.
விவசாயிகள் டிஎஸ்பி செந்தில் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிட்டு மார்க்கெட் கமிட்டிக்கு சென்று விட்டனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சர்வே எண்களில் 9.51 சதுர பரப்பு மீட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது
- இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது
கண்ணமங்கலம்:
படவேடு ரேணுகாம்பாள் கோவிலுடன் இணைந்த அய்யம்பாளையம் ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ரோவர் கருவி மூலம் நடைபெற்றது.
இதையடுத்து அளவீடு செய்த நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என அடையாளம் படுத்தும் வகையில் எழுத்துக்கள் உள்ள கல்நடும் பணி நடந்தது.
திருவண்ணாமலை மாவட்ட இணை ஆணையர் க.பெ.அசோக்குமார், உதவி ஆணையர் மு.ஜோதிலட்சுமி ஆகியோர் ஆலோசனைப்படி, ரேணுகாம்பாள் கோவில் செயல் அலுவலர் சிவஞானம் முன்னிலையில், துறை செயற் பொறியாளர், உதவி கோட்டப் பொறியாளர், உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையில் கல் நடப்பட்டன.
அப்போது கோவில் மேலாளர் மகாதேவன், ஒப்பந்ததாரர் உடனிருந்தனர். இதன் மூலம் பல்வேறு சர்வே எண்களில் 9.51 சதுர பரப்பு மீட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
- தாய்ப்பாலின் அவசியம் பற்றி குழந்தைகள் நல மருத்துவர் தாய்மார்களுக்கு எடுத்துரைத்தார்
- ஊட்டச்சத்து தானியங்கள் பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சுகாதார மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் குமார் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மருத்துவ அலுவலர் டாக்டர் சிவப்பிரியா முன்னிலை வகித்தார். தாய்ப்பாலின் அவசியம் பற்றி குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ஷாமிலி தாய்மார்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து தானியங்கள் பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
தலைமை செவிலியர் தனம் செவிலியர்கள், முபாரக் பேகம், தமிழ்செல்வி, கோகுலவாசன், மீனாட்சி, சீதா, சுதாமதி, உமா, பிரியங்கா மற்றும் 50-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்
- குறை தீர்வு கூட்டத்தை புறக்கணித்தனர்
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீவு நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். இதில் தாலுகாவில் உட்பட்ட பல்வேறு பகுதி சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது தனித்தனியாக விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர் இதற்கிடையில் திடீரென கூட்டத்திற்கு பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் வரவில்லை என்று விவசாயிகள் திடீரென கூட்டத்தை புறக்கணித்து அலுவலகம் நுழைவாயில் முன்பு கருப்பு துண்டு அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு நார்த்தாமுண்டி சிவகுமார் தலைமை தாங்கினார். இதில் வழக்கமாக மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமையில் நடைபெறும் தாலுகா அளவிலான விவசாயிகள் கூட்டம் முறையாக நடத்தப்படுவதில்லை என்றும் தாலுகா அளவிலான விவசாயிகள் கூட்டத்திற்கு பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் சரிவர வருவதில்லை என்றும் வருவாய் துறை சார்பில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைந்து கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆரணி நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை
- அதிகாரிகள் பேச்சு வார்த்தை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.
இதில் தற்போது நகராட்சி நிரந்தர துப்புரவு பணியாளர்களாக 54 பேர் பணியாற்றி வருகின்றனர்.
நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 2 மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை இதனால் ஆணையர் மற்றும் மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
ஆனால் எந்த நடவடிக்கை மேற்கொள்ளாத நகராட்சியை கண்டித்து சுமார் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஓன்றிணைந்து ஆரணி நகராட்சியை முற்றுகையிட்டு திடீரென ஆணையர் அறையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அதிகாரிகள் தலையீட்டு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக கூறினார்கள் அப்போது அதிகாரியிடம் துப்புரவு பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையறிந்த நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி வரும் 10ம் தேதிக்குள் துப்புரவு பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள 2 மாதம் சம்பளம் வழங்குவதாக உறுதியளித்தார். இதனால் துப்புரவு பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
- புதுமண தம்பதிகள் தாலி மாற்றி வழிபட்டனர்
- ஏராளமான போலீசார் பாதுகாப்பு
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள நீப்பத்துறை கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் ஸ்ரீஅலமேலுமங்கை, பத்மாவதி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கட்டரமண பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலின் வரலாறு சார்ந்த பெருமாளின் தங்கையாக ஆற்றின் நடுவில் சென்னம்மாள் பாறை உள்ளது. இந்தக் கோவிலில் இன்று ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெற்றது.
விழாவில் திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மாவட்டங்களிலிருந்தும், சென்னை, பெங்களுர் போன்ற பெருநகரங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்கள் பொங்கலிட்டு குழந்தைகளுக்கு மொட்டை அடித்து, காதணிவிழா நடத்தியும் வழிபட்டனர்., புதுமண தம்பதியினர் புது தாலி கயிறு மாற்றுதல், சென்னம்மாள் பாறையில் மஞ்சள், சிவப்பு, பொறி கடலை, கருமணி வலையல் போன்றவை வைத்து பச்சை போடுதல் போன்ற பல்வேறு பிராத்தனைகள் செய்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை, போளுர், ஊத்தங்கரை, செங்கம், சிங்காரப்பேட்டை, அருர் நகரங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.பத்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்
- பழங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வடிவிலான தேரோட்டம்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மருத மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா முன்னிட்டு பக்தர்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மருதாடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மருது மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திரு விழா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இன்று ஆடித்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
இதை தொடர்ந்து பிஸ்கட் பாக்கெட் அலங்காரத்தில் செய்யப்பட்ட அம்மன் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வடிவிலான தேரை பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு தேரை இழுத்தனர்.
மேலும் பக்தர்கள் எலுமிச்சம்பழம் குத்திக்கொண்டும் வேல் போட்டுக்கொண்டு டிராக்டர் உரல் இழுத்துச் சென்று நேர்த்தி கடனை செலுத்தினர்.
இந்த திருவிழாவை காண வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மருத மாரியம்மனை தரிசனம் செய்து சென்றனர்.






