என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • மனைவி போலீஸ் நிலையத்தில் புகார்
    • பைக்கில் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, அருகே உள்ள அனாதிமங்கலம், கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன், (வயது 45) தொழிலாளி. சேத்துப்பட்டில் இருந்து அனாதிமங்கல கிராமம் நோக்கி ஆரணி - சேத்துப்பட்டை சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆரணியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி எதிரே வந்தமினி வேன் அய்யப்பன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

    இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அய்யப்பனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அய்யப்பன் பரிதாபமாக இறந்துவிட்டார். சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துமனி வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் மூதாட்டி காசியம்மாள் கிராமத்தில் உள்ள பாழடைந்த சமுதாய கூடத்தில் தனியாக வசித்தார்.
    • கடந்த 2-ந் தேதி இரவு காசியம்மாள் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த புலிவனாந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காசியம்மாள் (வயது 85). இவரது கணவர் சின்னத்தம்பி மூத்த மகன் செல்வம், 2-வது மகன் ராஜி (60) ஆகியோர் அடுத்தடுத்து இறந்து விட்டனர். 3-வது மகன் சின்னப்பையன் பராமரிப்பில் காசியம்மாள் இருந்தார்.

    யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் மூதாட்டி காசியம்மாள் கிராமத்தில் உள்ள பாழடைந்த சமுதாய கூடத்தில் தனியாக வசித்தார்.

    கடந்த 2-ந் தேதி இரவு காசியம்மாள் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    மேலும் அவரது கம்மல் மூக்குத்தி என 1½ பவுன் நகைகள் இரும்பு பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    காசியம்மாளுக்கும் அவரது மூத்த மருமகள் தேவகி (58) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தேவகியிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் தேவகி இந்த கொடூர கொலையை செய்திருப்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    தேவகி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    என்னுடைய மாமியார் காசியம்மாள் பெயரில் 2 ஏக்கர் நிலம் உள்ளது.

    எனது மகன் நரேஷ் செங்கல் சூளை நடத்தி பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. தற்போது அவர் ஆந்திர மாநிலம் நெல்லூரில் கூலி வேலை செய்து வருகிறார். அவருக்கு ரூ.4 லட்சம் கடன் உள்ளது.

    அந்தக் கடனை அடைக்க எனது மாமியார் காசியம்மாளிடம் நிலத்தை பிரித்து எழுதி தருமாறு கேட்டேன். இதனால் அவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அவர் சொத்தை பாகம் பிரித்து தர முடியாது என கூறிவிட்டார். இதனால் நான் ஆத்திரமடைந்தேன்.

    கடந்த 2-ந் தேதி நள்ளிரவு வீட்டிலிருந்து காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு மாமியார் தங்கி இருந்த இடத்திற்கு சென்றேன். அவர் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரது கழுத்தில் 3 முறை கத்தியால் குத்தினேன்.

    இதில் ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து இறந்தார்.

    அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். கொலைக்கு பயன்படுத்திய கத்தியை அங்குள்ள கோவில் அருகே வீசிவிட்டேன். பின்னர் எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஓலையை எடுத்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யார் அருகே உள்ள வட ஆளப்பிறந்தான் கிராமத்தைச் சேர்ந்த காசி என்பவர் மனைவி சரளா (வயது 55) விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    கடந்த 27-ந் தேதி சரளா அடுப்பு பற்ற வைப்பதற்காக வீட்டின் பின்புறம் இருந்த பண ஓலையை எடுத்துக் கொண்டிருந்தபோது அதிலிருந்த குளவிகள் சரளாவின் முகம், கால், கை, தலை ஆகிய பகுதிகளில் கொட்டியதால் வீக்கம் ஏற்பட்டு மயக்கம் அடைந்து விட்டார்.

    அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
    • சாலையில் நடந்துசென்ற போது விபரீதம்

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த சிறுவள்ளுவர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது55) என்பவர் நேற்று போளூரில் இருந்து செங்கம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது படியம்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முருகன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே சாலை ஓரம் இறந்து கிடந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீசார் நேரில் சென்று இறந்து கிடந்த முருகன் உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி
    • ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல்சீசமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தீபா நகரில் இயங்கி வரும்

    அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம் செய்யாறு ஒன்றியம் உள்ளிட்ட பல இடங்களில் புகார் மனு அளித்துள்ளனர்.

    மேலும் அரசு டாஸ்மாக் கடை அருகாமையில் பழமை வாய்ந்த ஸ்ரீ பச்சையம்மன் கோவில் உள்ளதாலும் பள்ளிகள் உள்ளதாலும் இதனால் பொதுமக்கள் இடையூறு ஏற்படுவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இதுவரையில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆரணி வாழைபந்தல் சாலையில் அகற்ற கோரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அரசு மதுபான கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் ஒரு நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சம்பவ இடத்திலேயே இறந்தார்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கலசபாக்கம் நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது47) வேன் டிரைவர். தனது மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு நேற்று காலை சென்றார்.

    அவரது பின்னால் திருவண்ணாமலை கோர்ட்டில் அமினா வேலை செய்யும் சொரகுளத்தூர் கண்ணதாசன் அமர்ந்து சென்றார். வண்ணாங்குளம் சுடுகாடு பகுதியில் எதிரே பஸ்ஸூக்கு வழிவிட ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளை ரோட்டோரமாக சென்றார்.

    பின்னர் சாலையில் பயணம் செய்ய முயன்ற போது எதிர் பாராத விதமாக கீழே விழுந்து இருவரும் படுகாயமடைந்தனர்.இதில் அடிபட்ட ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். கண்ணதாசன் காயத்துடன் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இந்த விபத்து தொடர்பாக கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1,258 வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது
    • கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட 1,258 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்

    முகாமில் வாக்காளர்களிடம் படிவம் 6பி அளித்து தங்களின் ஆதார் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் சுய விருப்பத்தின் பேரில் இணைத்து கொண்டனர்.

    திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை கலெக்டரும், தேர்தல் அலுவலருமான முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறுகையில்:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 66 ஆயிரத்து 264 ஆகும். இதுவரை 7 லட்சத்து 88 ஆயிரத்து 965 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து உள்ளனர்.

    இது 38 சதவீதம் ஆகும். மீதம் உள்ள வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்களையும் வாக்காளர் அட்டையுடன் இணைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • 2000 மரக்கன்றுகள் நடப்பட்டது

    செய்யாறு:

    செய்யாறு தொகுதியில் செய்யாறு ஒன்றியம் வடபூண்டிபட்டு, அனக்காவூர் ஒன்றியம் வீரம்பாக்கம், வெம்பாக்கம் ஒன்றியம் சோதியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 2000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்படி நேற்று செய்யாறு ஒன்றியம் வடபூண்டிபட்டு கிராமத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    2000 மரக்கன்றுகள்

    நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை வகித்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா சுந்தரேசன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக ஒ. ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு 2000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் நகர செயலாளர் கே. விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர்கள் அசோக், சான் பாஷா, திமுக நிர்வாகி பார்த்திபன், வேளாண் உதவி அலுவலர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சரவணன் எம்.எல்.ஏ. பேச்சு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.

    இதில் சரவணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மோட்டூர் அருணகிரிமங்கலம் ஆகிய 2 பஞ்சாயத்துகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    கலசப்பாக்கம் யூனியனில் முதற்கட்டமாக 23 பஞ்சாயத்துகளில் 9 ஆயிரம் மரக்கன்றுகள் இன்று முதல் நடப்படுகிறது.

    இக்கன்றுகளை நமது யூனியனில் செயல்படும் கடலாடி நர்சரியில் 3 ஆயிரம் மரக்கன்றுகளும் காட்டாபூண்டி நர்சரியில் 3 ஆயிரம் மரக்கன்றுகளும் சனானந்தல் நர்சரியில் 3 ஆயிரம் மரக்கன்றுகளும் என 9 ஆயிரம் மரக்கன்றுகள் வேப்பம், கொங்கு, மா போன்ற 27 வகையான மரக்கன்றுகள் கொள்முதல் செய்து 100 நாள் பணியாளர்களை வைத்து நடப்படுகிறது.

    மரக்கன்று நடுவது பெரிய விஷயம் அல்ல இதனை பாதுகாப்பது தான் மிகவும் அவசியம் மேலும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வையுங்கள் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் 15 வருடங்கள் கழித்து அது பலன் தரும் எந்த ஒரு பணியும் மேற்கொள்ளாததால் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கிறது.

    இதனை தடுக்கும் வகையில் மரக்கன்று நடும் திட்டம் நல்ல திட்டமாகும் மேலும் மீதமுள்ள 22 பஞ்சாயத்துகளுக்கு கூடிய விரைவில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் அன்பரசிராஜசேகரன் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் யூனியன் கவுன்சிலர் கலையரசிதுறை பீடிஓக்கள் பாண்டியன் கோவிந்தராஜுலு பஞ் தலைவர்கள் வித்யாபிரசன்னா முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் துரிஞ்சாபுரம் யூனியனில் சேர்மன் தமயந்தி தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட பஞ் துணைத் தலைவர் பாரதிராமஜெயம் பீடிஓ லட்சுமி இன்ஜினியர் அருணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புகார் எப்படி அளிக்க வேண்டும் என மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது
    • பதக்கங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் பள்ளியில் திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பாக காவல் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் இன்ஸ் பெக்டர் பிரபு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பற்றியும், புகார் எப்படி அளிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் திருவண்ணாமலை வட்ட அளவிலான தடகள போட்டி மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

    இதில் சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 7 தங்க பதக்கங்களையும், 15 வெள்ளிப் பதக்கங்களும் மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பாக காவல் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் இன்ஸ் பெக்டர் பிரபு மாணவர்களுக்கு பதக்கங்களையும் வாழ்த்துளை தெரிவித்தனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களையும் இதற்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள். எ. ஹரிபிராசாத், வி.பிரகாஷ் பள்ளியின் செயலாளர் டாக்டர்.வி.எம். நேரு, தலைவர் டாக்டர். கணேசன், பொருளாளர் மணி, இணைச் செயலாளர் ரவிச்சந்திரன், சிஷ்யா பள்ளி முதல்வர் டாக்டர் மகாதேவன் மற்றும் அறக்கட்டளை இயக்குநர்கள் அனைவரும் பாராட்டினர்.

    • பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள முருகா பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி சுமார் 140 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இந்த ஏரி பராமரிக்கப்படுகிறது.

    முருகாபாடி பெரிய ஏரியில் சுமார் ஒரு வருட காலமாக மதகு உடைந்து தண்ணீர் நிற்காமல் வெளியேறி வருகிறது. இதனால் ஏரியில் தேங்கியுள்ள தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. அதன் காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக பொதுப்பணித் துறை அலுவலகத்திற்கு கிராம மக்கள் சார்பாகவும் முருகா பாடி சமூக முன்னேற்ற சங்கம் மூலமாகவும் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

    ஊர் நாட்டாமை ஆரிமுத்து,.சங்கர்,பாபு,முருகா பாடி சமூக முன்னேற்ற சங்க தலைவர் மூ.சா. வீரபத்திரன் என்கிற தேசபக்தன் மற்றும் கோபி, ஏழுமலை ஆகியோர் இது சம்பந்தமாக போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தியிடம் மனு கொடுத்தனர்.

    பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து உடனடியாக மதகு சீரமைக்க செய்ய ஏற்பாடு செய்வதாக அவர் கூறியுள்ளதாக கிராமமக்கள் கூறினர்.

    தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
    • பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் நடந்தது

    திருவண்ணாமலை:

    பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 3½ லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

    தமிழக முதல்- அமைச்சரால் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டு பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் வனத்துறை சார்பில் 60 ஆயிரம் மரக்கன்றுகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 2 லட்சத்து 38 ஆயிரம் மரக்கன்றுகளும், வேளாண் துறை சார்பில் 50 ஆயிரம் மரக்கன்றுகளும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகளும் என ஒரே நாளில் 3 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நேற்று நடைபெற்றது.

    இந்த பணி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் 345 கிராமங்களிலும் நடைபெற்றது. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதன் தொடக்க நிகழ்ச்சி திருவண்ணாமலை ஒன்றியம் தென்மாத்தூர் கிராம ஊராட்சியில் குளத்தின் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

    துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:- திருவண்ணாமலை மாவட்டம் பல்வேறு வகையில் தமிழகத்தில் முன்னிலையில் திகழ்ந்து கொண்டு இருக்கிறது.

    நிலத்தடி நீர் மேம்பாடு, பண்ணை குட்டை அமைத்தல் ஆகியவற்றில் முதல் மாவட்டமாக திகழ்ந்ததால் கலெக்டருக்கு முதல்- அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டினார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று கடந்த 6 மாத காலமாக பல்வேறு முயற்சி எடுத்து மரக்கன்றுகள் நடும் பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இந்த பணியும் நடைபெற்று உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×