என் மலர்
திருவண்ணாமலை
- கள்ளக்காதல் விவகாரம் நதியாவின் கணவருக்கு தெரிந்ததால் அதனை கண்டித்துள்ளார்.
- கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2 குழந்தைகளுடன் நதியா வீட்டைவிட்டு வெளியேறினார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த கண்ணக்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 36), லாரி டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவரின் மனைவி நதியா (32). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
செல்போன் 'ராங் கால்' மூலம் தங்கராஜிக்கும், நதியாவுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து செல்போனில் இருவரும் பேசி வந்தனர். பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. தங்கராஜ், அடிக்கடி சென்னைக்கு சென்று நதியாவை சந்தித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் நதியாவின் கணவருக்கு தெரிந்ததால் அதனை கண்டித்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2 குழந்தைகளுடன் நதியா வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர், தண்டராம்பட்டு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து நதியாவும், தங்கராஜும் குடும்பம் நடத்தியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு, 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மீண்டும் மாங்காடு சென்ற நதியா, குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு, மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று முன்தினம் இரவு தங்கராஜின் சொந்த கிராமத்துக்கு வந்தார்.
கணவர் வேறொரு பெண்ணுடன் வீட்டுக்கு வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தங்கராஜின் மனைவி ரேகா, இருவரையும் வீட்டுக்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்தார். அதைத்தொடர்ந்து தங்கராஜ் மற்றும் நதியா ஆகியோர் பெரியகோலாப்பாடி கிராமத்தில் உள்ள முருகர் கோவில் பகுதிக்கு சென்றனர்.
அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு அழைத்து செல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என நதியா மிரட்டியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த தங்கராஜ், சேலையால் கழுத்தை நெரித்து நதியாவை கொலை செய்தார்.
அப்போது, கிராம மக்கள் அந்த பகுதிக்கு வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர். நதியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தங்கராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாம்ராஜை தாக்கிய மாணவியின் தந்தையை கைது செய்ய கோரி அவரது உறவினர்கள் களம்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆரணி திருவண்ணாமலை ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. கூலி தொழிலாளி. இவருடைய 2-வது மகன் சாம்ராஜ் (வயது 21) சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவர் அதே பகுதியில் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.
இதற்கு மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாணவி சாம்ராஜூடன் பேசுவதை நிறுத்தினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சாம்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் முகேஷ், சந்தோஷ் ஆகியோர் மாணவியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் மாணவியின் தந்தை சாம்ராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சாம்ராஜ் அவரது உறவினர் ஒருவரிடம் செல்போனில் விவரங்களை தெரிவித்துள்ளார்.
பின்னர் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்ட சாம்ராஜின் தாய் செல்வராணி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்றனர். தூக்கில் தொங்கிய சாம்ராஜை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சாம்ராஜை தாக்கிய மாணவியின் தந்தையை கைது செய்ய கோரி அவரது உறவினர்கள் களம்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆரணி திருவண்ணாமலை ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். களம்பூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வாலிபரை தாக்கியதாக கூறப்படும் மாணவியின் தந்தை தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
- போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை செங்கம் சாலையில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
அவர்கள் தினமும் கல்லூரிக்கு அரசு பஸ் மூலம் திருவண்ணா மலைக்கு வருகின்றனர்.
மேலும் பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு செல்வதற்கு போதுமான பஸ் வசதி இல்லாத காரணத்தால் சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருவதாக மாணவ, மாணவிகள் கூறினர்.
மேலும் அவ்வழியாக செல்லும் அரசு பஸ்கள் கல்லூரி அருகில் நிறுத்தாமல் செல்வதால் மிகவும் சிரமம் அடைந்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் இன்று காலை திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு பஸ்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இச் சம்பவம் குறித்து அறிந்த திருவண்ணா மலை கிழக்கு நிலைய போலீசார் மாணவர்க ளை சமரசம் செய்தனர்.
மேலும் தேவையான போக்குவரத்து வசதி செய்து தர போக்குவரத்து துறை அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர்.
- சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
- கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது
செங்கம்:
செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நேற்று பிற்பகல் நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் கனமழை பெய்தது. இந்த மழையால் பல்வேறு கிராமப் பகுதிகளில் இருப்பிடங்களை சுற்றி தண்ணீர் சூழ்ந்தது.
குறிப்பாக கரியமங்கலம், மண்மலை, பேயாலம்பட்டு, முறையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருப்பிடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. கிராம பகுதிகளில் அடைக்கப்பட்டுள்ள நீர்வழி தடங்களை மீண்டும் ஏற்படுத்தி தண்ணீர் நிற்காமல் நீர் வழித்தடங்களில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆரணி பொதுக்கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேச்சு
- 25 சலவைத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணாசிலை அருகில் அ.தி.மு.க. சார்பில் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுகூட்டம் நடந்தது.
நகர செயலாளர் அசோக்குமார் வரவேற்றார் முன்னாள் எம்.எல்.ஏக்கள் தூசி.மோகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்.எல்.ஏ.வுமான சேவூர் ராமசந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் அ.தி.மு.க. துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :-
1989ல் எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியை வழி நடத்த ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார். ஜானகி அம்மையார் அதே போல ஓ.பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.க. மீது விசுவாசம் இருந்தால் ஜெயலலிதா மீது உண்மையாக பற்று இருந்தால் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி வழி நடத்தட்டும் என்று ஓதுங்கி கொள்ள வேண்டும்.
அதிமுக கொள்கையே திமுகவை எதிர்ப்பது மட்டும் தான் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணாவின் கொள்கையை மறந்ததற்காக தலைவர்களை ஒதுக்கிய தற்காக கருணாநிதியை எதிர்த்து தான் அதிமுக உருவானது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் 25 சலவைத் தொழிலாளர்களுக்கு சலவைப் பெட்டி உள்ளிட்ட நலத்திட்டங்களை முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் நகர மன்ற துணைத் தலைவர் பாரி பாபு, ஒன்றிய செயலாளர்கள் திருமால், ஜெயபிரகாஷ், நகரமன்ற உறுப்பினர்கள் சுதாகுமார் பாரதிராஜா சதீஷ்குமார், தேவராஜ், நகர மாணவரணி செயலாளர் குமரன் மாவட்ட ஐ.டி.விங் சரவணன், பையூர் சதிஷ், குன்னத்தூர் செந்தில், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இறுதியில் நகர மன்ற உறுப்பினர் விநாயகம் நன்றி கூறினார்.
- வருகிற 20-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளன.
இம்முகாமில் ஒசூரைச் சேர்ந்த டாடா எலக்ரானிக்ஸ் நிறுவனம் பங்கேற்க உள்ளது. இந்நிறுவனம் சுமார் 1000 பெண் பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
இதில் பிளஸ்-2 தேர்ச்சி அடைந்த 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண் பணியார்களை முகாம் நாளன்று தேர்வு நடத்தி தேர்வு செய்யவுள்ளது.
முகாம் நாளன்று நிறுவனம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வெற்றிகரமாக பயிற்சியை முடித்தவர்களுக்கு பணியாணை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
முதலாமாண்டில் ரூ.15 ஆயிரம் சம்பளமும், விடுதி வசதி, நிறுவனத்தில் சேர்ந்து ஓராண்டு பணிமுடித்தவர்களுக்கு உயர் கல்வி பயில்வதற்கான வாய்ப்பும் மற்றும் சட்டப்படியான பிற சலுகைகளும் உண்டு என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் 04175-233381 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஆர்வமும் விருப்பமும் உள்ள பெண்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
- 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- நீர்வரத்து ஒரே நாளில் 4 மடங்கு உயர்வு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் சாத்தனூர் அணை உள்ளது. 119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 7,321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். தற்போது அணையில் 116.60 அடி உயரத்திற்கு அதாவது, 6,788 மில்லியன் கன அடி அளவிற்கு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இது மொத்த கொள்ளளவில் 92.72 சதவீதமாகும்.
சாத்தனூர் அணை கடந்த 2 மாதத்திற்கு முன்பே முழு கொள்ள ளவை எட்டிய நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வந்தது.
மேலும் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் இடது மற்றும் வலதுபுற கால்வாயிலும் நீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கி கல்வராயன் மலைத்தொடர் பகுதியிலும் கிருஷ்ணகிரி அணையின் உபரிநீரும் சேர்ந்து சாத்தனூர் அணைக்கு வரும் தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி வினாடிக்கு 3,760 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. இது ஒரே நாளில் நான்கு மடங்காக உயர்ந்து தற்போது வினாடிக்கு 12,345 கன அடி நீராக வந்து கொண்டிருக்கிறது.
எனவே அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 9,930 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் 450 கன அடி நீர் பாசன கால்வாய் வழியாக வெளியேற்றப்ப டுகிறது.
4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது.
எனவே சாத்தனூர் அணையில் இருந்து திருக்கோவிலூர் வழியாக கடலூரை சென்றடையும் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் வாழும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், யாரும் ஆற்றில் இறங்கவோ, போனில் 'செல்பி' எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் அதிக அளவில் வெளியேறும் போது அணையிலும் அணையை ஒட்டி உள்ள கரையோர பகுதிகளில் இருக்கும் முதலைகள் அடித்து வரப்பட்டு ஆற்று நீரில் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
எனவே பொதுமக்கள் ஜாக்கிர தையாக இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- வழக்கு கோப்புகள் சோதனை
- மரக்கன்றுகள் நட்டினார்
செய்யாறு:
செய்யாறு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐஜி என். கண்ணன் நேற்று முன் தினம் நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வு செய்ய வந்த ஐ.ஜி. கண்ணனை திருவண்ணாமலை எஸ்பி கி.கார்த்திகேயன், செய்யாறு டிஎஸ்பி வி. வெங்கடேசன் ஆகியோர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
செய்யாறு காவல் உட்கோட்டத்தில் உள்ள 6 போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கு கோப்புகளை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் ஆய்வு செய்தார்.
மேலும் போலீசாரின் தேவைகள் உட்பட பல தகவல்களை எஸ்.பி, டிஎஸ்பி இடம் கேட்டறிந்தார். ஆய்வுக்கு பின்னர் டிஎஸ்பி வளாகத்தில் தென்னை மரக்கன்று ஐஜி கண்ணன் நட்டு வைத்தார்.
- அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
- ரூ.25.54 கோடியில் சீரமைக்க ஓப்புதல் அனுப்பப்பட்டுள்ளது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை சமுத்திரம் ஏரி நீர்வளத்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஏரியில் படகு குழாம், பூங்கா அமைத்து அழகுப்படுத்த மற்றும் மேம்படுத்தும் வகையில் சமுத்திரம் ஏரியின் கரையில் நடைபாதை, பூங்கா, விளையாட்டு திடல், வாகன நிறுத்துமிடம், பொதுமக்கள் தங்குமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அணுகுசாலை, ஏரி பாதுகாப்பிற்கு இரும்பு வேலி அமைத்தல் ஆகிய வசதிகளுடன் சமுத்திரம் ஏரியின் உபரிநீர் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.25 கோடியே 54 லட்சம் கருத்துரு தயார் செய்யப்பட்டு சுற்றுச்சூழல் துறை மூலமாக செயல்படுத்த அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சுற்றுசூழல், கால நிலை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ வி.மெய்யநாதன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், உதவி கலெக்டர் வெற்றிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்
- வளர்ச்சி திட்ட பணிகளை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் லாடவரம் ஊராட்சிக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகளை ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு லாடவரம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் குமரவேல் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
- இளைஞர்கள் திறன் திருவிழா நடந்தது
- 534 பேர் தேர்வு செய்யப்பட்டனர்
புதுப்பாளையம்:
புதுப்பாளையம் ஒன்றியம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கீழ் செயல்படுத்தப்படும் வட்டாரங்களில் தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் இளைஞர்கள் திறன் திருவிழா புதுப்பாளையம் இதய மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
மாவட்ட இயக்கம் மேலாண்மை அலகின் உதவி திட்ட அலுவலர் ஜான்சன் வரவேற்ற கலசப்பாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
உடன் புதுப்பாளையம் யூனியன் சேர்மன் சி சுந்தரபாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட இயக்க மேலாண்மை அகின் திட்ட இயக்குனர் அஸையித் கலைமான் பங்கேற்றனர்.
புதுப்பாளையம் பேரூராட்சி தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார், மாவட்ட கவுன்சிலர் மனோகரன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ரபியுல்லா இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முனைவர் சரோஜாஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் 534 மேற்பட்ட கலந்து கொண்டு பயிற்சிக்கு நிறுவனங்களின் மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சியில் சேர்வதற்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முகாமில் வில்லியம் சகாயம் நன்றி கூறினார்.
- 5 பேர் மீது மனைவி புகார்
- சந்தேகத்தின்பேரில் போலீசார் நடவடிக்கை
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்த அடைக்கல் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி (வயது 52).இவர் தென் கருப்பனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காசாளராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் விவசாய நிலத்திற்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை இதையடுத்து விவசாய நிலத்திற்கு சென்று பார்த்த போது கிணற்றுக்கு அருகில் அவரது செருப்பு மற்றும் செல்போன் கிடந்தது.
இதையடுத்து போலீசார் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்த வீராசாமி உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை குறித்து அவரது மனைவி மீனாட்சி வாணபுரம் போலீசில் தனது கணவர் சாவில் 5 பேர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். போலீசார் சந்தேகத்தின்பேரில் வீராசாமியின் உறவினர்கள் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






