என் மலர்
திருவண்ணாமலை
- ரோந்து பணியின் போது சிக்கினர்
- வனத்துறையினர் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வன சரகத்திற்கு உட்பட்ட காப்புக்காடு பகுதியில் காட்டுப் பன்றிகள் வேட்டையாடப்படுவதாக திருவண்ணாமலை வன அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை அடுத்து நேற்று முன்தினம் அதிகாலையில் திருவண்ணாமலை வனசரக அலுவலர் சீனிவாசன் தலைமையி லான வனத்துறையினர் காப்பு காடு பகுதியில் ரோந்து பணி யில் ஈடுபட்டனர்.
அப்போது வடமாத்தூர் அருகில் உள்ள வனப்பகுதியில் 2 பேர் காட்டு பன்றிகளை வேட்டையாடி இறைச்சிகளை வெட்டி விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் வடமாத்தூர் பகுதியை சேர்ந்த திருமலை, பாலியப்பட்டு பகுதியை சேர்ந்த சாமி கண்ணு என்பது தெரியவந்தது.
இதை யடுத்து அவர்களை வனத்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வாய்ப்பாடுகளை வழங்கினார்
- 30 பேர் பயணடைந்தனர்
சேத்துப்பட்டு:
பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம், ஆர்.சி. எம். தொடக்கப்பள்ளியில் பெரணமல்லூர், வட்டார கல்வி அலுவலர் திடீர் ஆய்வு செய்தார்.
மாணவர்களின் கணித கற்றல் திறன் அதிகரிக்க செங்கோணம், குறுங்கோ ணம், விரிகோணம், ஆகியவை குறித்து கணித உபகரணங்கள் மூலம் மாதிரி வகுப்பு எடுத்து மாணவர்களின் கணித கற்றல் திறன் குறித்து வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் மாணவர்களுக்கு மாதிரி வகுப்பு எடுத்தார்.
மேலும் என்னும், எழுத்தும், திட்டம் பயிற்சி ஏடுகள் பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார். முன்னதாக கணிதத்தில் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பாடு வழங்கினார்.
இதேபோல் மோரக்கணியனூர், ஆர்.சி.எம். தொடக்கப்பள்ளியில் படிக்கும் 30 மாணவ-மாணவிகளுக்கு கணித கற்றல் திறன் அதிகரிக்க வாய்ப்பாடுகளை வழங்கினார்.
- வந்தவாசி அரசு பள்ளியில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் வந்தவாசி கிளை மற்றும் வழூர் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து உலக கை கழுவும் தினம் மற்றும் டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி வந்தவாசி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை பத்மாவதி தலைமை தாங்கினார்.
ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். வந்தவாசி ரெட் கிராஸ் சங்க துணைத் தலைவர் சரவணன், வட்டார சுகாதார ஆய்வாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார முதுநிலை மருத்துவர் காளிச்செல்வம் பங்கேற்று பேசினார்.
இந்த விழாவிற்கு ரெட் கிராஸ் உறுப்பினர்கள் சதானந்தன், வந்தை பிரேம், அ. ஷாகுல் அமீது, எம்.பி. வெங்கடேசன், மலர் சாதிக், மனோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சுகாதார ஆய்வாளர்கள் சுந்தர்ராஜன், சுமதி, நந்தகுமார், அன்புக்கரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இறுதியில் ரெட் கிராஸ் சங்க பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர் கேசவராஜ் நன்றி கூறினார்.
- கன்றுக்குட்டியை மீட்க முயன்ற போது விபரீதம்
- தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு அடுத்த அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 30). விவசாயி. இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமாக வீட்டின் அருகே விவசாய நிலம் உள்ளது. அந்தப் பகுதியில் கிணறு ஒன்று உள்ளது.
இந்த நிலையில் கன்றுக்குட்டி கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தது.
இதனைக் கண்ட முத்துக்குமரன் அக்கம்பக்கம் உதவியோடு கிணற்றில் குதித்து கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டு மேலே அனுப்பி வைத்தார்.
கிணறு ஆழமாக இருந்ததால் கிணற்றிலிருந்து முத்துக்குமரனால் மேலே வர முடியவில்லை.
பொதுமக்கள் இவரை மீட்க முடியாததால் இது குறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த முத்துக்குமரனை கயிறு மூலம் நீண்ட நேரம் போராடி அவரை பாதுகாப்பாக மீட்டனர்.
- புதிதாக பொறுப்பேற்ற உதவி கலெக்டர் அனாமிகா தகவல்
- பிரச்சினைகளுக்கு தீர்வு காண முறையான கூட்டங்கள் நடத்தப்படும்
செய்யாறு:
செய்யாறில் நேற்று முன் தினம் ஆர். அனாமிகா உதவி கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின் அவர் கூறியதாவது:-
பொதுமக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும். எந்த நேரத்திலும் பொதுமக்கள் பொது பிரச்சினைக்காக என்னை சந்திக்கலாம். கடந்த பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள மக்கள் குறைதீர் கூட்டங்கள், நகர வடிவமைப்பு கூட்டம், விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முறையான கூட்டங்கள் நடத்திட நடவடிக்கைகள் இவ்வாறு கூறினார்.
செய்யாறு உதவி கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஆர்.அனாமிகா சென்னையை பூர்விகமாக கொண்டவர்.
இவருடைய தந்தை ரமேஷ் சந்த் மீனா இந்திய ஆட்சிபணித்துறை அதிகாரியாக பணியாற்றியவர்.அனாமிகா முதுநிலை தொழில் நிர்வாக இயலில் அகமதாபாத்தில் பயின்று, பி டெக் பாடப்பிரிவை திருச்சியில் பயின்றவர்.
அனாமிகா தன்னுடைய பணியை திருவள்ளூர் மாவட்டத்தில் உதவி கலெக்டர் பயிற்சி 22 மாதங்கள் பணியாற்றியும், புது டெல்லியில் நிதி அயோக்கில் 4 மாதம் உதவி செயலாளராக பணியாற்றியும், தற்போது செய்யாறு சப் கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரோந்துப் பணியின் போது சிக்கினர்
- சிறையில் அடைப்பு
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாசன் தலைமையிலான போலீசார் நேற்று ஷா நகர், ஹபில்ஸ் பேட்டை, பழனிபேட்டை மற்றும் கிருஷ்ணாம்பேட்டை பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பழனி பேட்டை எஸ்.ஆர்.கேட் பகுதியில் உருட்டுக் கட்டை வைத்து க்கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த நபரை கண்ட சப்-இன்ஸ்பெக்டர் தாசன் அந்த நபரை பிடித்து விசாரித்தார்.
அவர் ஷா நகர் பகுதியை சேர்ந்த சுனில் (வயது 21) என்பது தெரியவந்தது. இதே போன்று ஹபில்ஸ் பேட்டை ரெயில்வே குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது சந்தே கிக்கும் வகையில் நின்றிருந்த வெங்கடேசபுரம் பகுதியை ரூபேசிடம் (22) சோதனை செய்தனர்.
இருவரிடமும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- விழுப்புரத்தை சேர்ந்தவர்
- போலீசார் விசாரணை
செங்கம்:
விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த யாசின் என்பவரது மகன் ஹாரிப் (வயது 23).
இவர் தனது உறவினர்களுடன் செங்கம் அடுத்த குட்டூர் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராமல் நீரில் மூழ்கி உறவினர்களின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
உறவினர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் செங்கம் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தன். அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.நீண்ட நேரத்துக்கு பின்னர் வாலிபர் உடலை மீட்டனர் செங்கம் போலீசாரிடம் உடலை வனத்துறையினர் ஒப்படைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருக்ன்றனர்.
- முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு
- போலீசார் பேச்சுவார்த்தை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் ஓரந்தவாடி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் மற்றும் வேலை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் திருவண்ணாமலை-காஞ்சி சாலை ஆலத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பாளையம் ஒன்றிய அலுவலர்கள் மற்றும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் மற்றும் வேலை வழங்க உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒன்றிய அலுவலர்கள் தெரிவித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- குழந்தைகள் இல்லாததால் கணவருடன் அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
கலசபாக்கம் அடுத்த கீழ்பொத்தரை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 38). இவர் போளூர் தாலுகா கொம்மனந்தல் கிராமத்தைச் சேர்ந்த தரணி (22), என்பவரை காதலித்து கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை இதனால் மாமனார், மாமியர், கணவருடன் அடிக்கடி தகராறு ஊற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மாதம் ஒருமுறை தாய் வீட்டிற்கு தரணி செல்வதும் அங்கு உறவினர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைப்பதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை தரணி மனம் உடைந்து காணப்பட்டார். பின்னர் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் மடியில் கல்லைக் கட்டிக் கொண்டு குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த உறவினர்கள் கிணற்றில் இறங்கி தேடி பார்த்தனர் ஆனால் தரணியை மீட்க முடியவில்லை. உடனடியாக போளூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் உடனடியாக வந்து கிணற்றில் இறந்து கிடந்த தரணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தரணியின் உறவினர் செவ்வந்தி கொடுத்த புகாரின் பேரில் கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தரணியின் கணவர் சங்கர் மற்றும் மாமனார் மாமியார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கட்டிடம் முழுவதும் சிதிலமடைந்துள்ளது
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
தூசி:
வெம்பாக்கம் அடுத்த வந்தவாசி சாலையில் தூசி போலீஸ் நிலையம் உள்ளது. இது 1904-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.
தூசி, மாமண்டூர், மாத்தூர், சித்தாத்தூர், மாங்கால், சோழவரம், பல்லாவரம், குரங்கணில்முட்டம் உள்ளிட்ட 74 கிராமத்திற்கு உட்பட்டது. தொடக்கத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் மட்டுமே பணியாற்றி வந்தனர்.
இந்தக் கட்டிடம் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடம் ஆகவும் இருந்து வந்தது. இந்த போலீஸ் நிலைய கட்டிடத்தின் பின்புறத்தில் தூசி சார் பதிவாளர் அலுவலகமும் தொடக்கத்தில் இருந்த செயல்பட்டு வந்தது.
கடந்த 2004-ம் ஆண்டு இந்த போலீஸ் நிலையத்தின் கட்டிடம் நூறாண்டு கடந்ததால் கட்டிடம் முழுவதும் சிதலமடைந்தது.
தூசி போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கிராம பொதுமக்கள் தரப்பிலும், போலீசார் தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.
ஒரு வழியாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தூசி போலீஸ் நிலையம், தூசி துரோபதி அம்மன் கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு அப்போது இந்த இடத்தில் புதிய போலீஸ் நிலையம் கட்டிடம் கட்டப்பட்டது.
இதே போல் தூசி மெயின் ரோட்டில் வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் சார் பதிவாளர் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கண்ட இரு அலுவலகங்களும் புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டது 2006 -ம் ஆண்டு மாங்கால் கூட்டு ரோட்டில் 4200 ஏக்கர் பரப்பளவில் செய்யாறு சிப்காட் தொழிற் பூங்கா தொடங்கப்பட்டது.
ஆனால் இந்த 2 அலுவலகங்களும் செயல்பட்டு வந்த பழைய கட்டிடம் கேட்பாரற்ற நிலையில் பாழடைந்து உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்து வருகிறது. பகல் நேரங்களில் மது பிரியர்கள் அட்டகாசம் பொதுமக்களின் முகம் சுளிக்க வைக்கிறது.
பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தூசி பழைய போலீஸ் நிலைய கட்டிடம் முறைப்படி இடித்து தள்ளிவிட்டு இந்த இடத்தை வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாகவே உள்ளது.
- பருவ மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து சோதனை
- குடிசைகளை அகற்றி மாற்று இடம் வழங்க உத்தரவு
வந்தவாசி:
வந்தவாசி பகுதியில் பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்து உதவி கலெக்டர் அனாமிகா ஆய்வு மேற்கொண்டார்.
இன்னும் சில நாட்களில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வந்தவாசி எள்ளுப்பாறை, சவுரியார் பாளையம், பிருதூர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் மக்கள் வசிக்கும் இடங்களை பார்வையிட்டு அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள குடிசைகளை உடனடியாக அகற்று மாறும் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட்டார். மழைக்காலங்களில் குடிசைவாழ் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்தார்.
தாசில்தார் முருகானந்தம், நகராட்சி கமிஷனர் மங்கையர்கரசன், நகரத் தலைவர் ஜலால், வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் கிருபானந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- காலை 9 மணிமுதல் பகல் 2 மணிவரை மின்நிறுத்தம்
- பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கீழ்பள்ளிப்பட்டு கேவி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) அத்தியாவசியமான மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக அன்று காலை 9 மணிமுதல் பகல் 2 மணிவரை வல்லம், சாம்கோ, காட்டுக்காநல்லூர், கீழ்பள்ளிப்பட்டு, கீழ்அரசம்பட்டு, வரகூர், கம்மவான்பேட்டை, கம்மசமுத்திரம், கொங்கராம்பட்டு, ரெட்டிபாளையம், மேட்டுக்குடிசை மற்றும் அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
இதேபோல் சாத்துமதுரை துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கணியம்பாடி, அடுக்கம்பாறை, மூஞ்சூர்பட்டு, நெல்வாய், காட்டுப்புத்தூர், துத்திப்பட்டு, புதூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.






