என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 கிராமங்களுக்கு தூய்மை பணிக்காக 41 மின்கலன் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி, செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் பாபு தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒ.ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு ரூ.1.16 கோடி மதிப்புள்ள 41 மின்கலன் வாகனங்களை 30 கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் தூய்மைப் பணிக்காக வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், ஜே. கே. சீனிவாசன், திராவிட முருகன், தினகரன், தொண்டரணி செயலாளர் ராம் ரவி, ஒப்பந்ததாரர் கோபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து ஒ.ஜோதி எம்எல்ஏ செங்குட்டான் பகுதியில் அங்கன்வாடி கட்டிடத்தையும், அனக்காவூர்ஒன்றியம் பெண் இலுப்பை கிராமத்தில் அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தார்.

    • அடுக்கம்பாறை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே படவேடு காளிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கவிதா (வயது 38) . இவர் ஒண்ணுபுரம் கிராமத்தில் நாக நதி ஆற்றங்கரை அருகே உள்ள ரைஸ்மில்லில் நேற்று காலை வேலைக்கு சென்றார்.

    அப்போது பாய்லர் ஒன்று வெடித்ததில் அருகில் இருந்த கவிதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக் கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரபு கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில பொதுச் செயலாளர் பாரி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் முறையீடுகளின் போது நிர்வாகம் ஒப்புக்கொண்ட ஊராட்சி செயலாளர் பணி விதிகள் மற்றும் சிறப்பு நிலை தேர்வு நிலை அரசாணை வழங்க வேண்டும்.

    மேலும் கணினி உதவியாளர் பணி வரன்முறை மற்றும் ஊழிய மாற்ற அரசாணை வெளியிட வேண்டும். 2023 பொங்கல் பண்டிகைக்கு முன்பு வழங்குவதாக ஒப்புக்கொண்ட உதவி பொறியாளர், உதவி இயக்குனர், உதவி செயற் பொறியாளர் பதவி உயர்வு ஆணைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது
    • பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மனு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்களை துணியால் கட்டிக்கொண்டு அதிகாாிகளை தேடுவது போன்று செய்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அப்போது, கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அளித்த மனுக்களுக்கு உரிய மனுதாரர்களுக்கு அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

    தொடர்ந்து பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    • சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் சிரமம் அடைந்தனர்
    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் குப்பை கிடங்கு உள்ளது.

    நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகள் வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டு இங்கு கொட்டப்படுகிறது. நேற்று முன்தினம் குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்து உள்ளனர்.

    காற்றின் வேகத்தால் தீ குப்பை கிடங்கில் பெரும்பாலான இடத்தில் பரவி எரிந்தது. இதனால் அங்கிருந்து வெளியேறிய கரும் புகையினால் திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலை, போளூர் சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் குப்பை கிடங்கில் தீ எரிந்தது. குப்பை கிடங்கு அருகில் கிரிவலப்பாதையில் உள்ள 8-வது லிங்கமான ஈசானிய லிங்கம் கோவில் உள்ளதால் கோவிலுக்கு கிரிவலம் வந்த பொதுமக்களும் புகையினால் அவதி அடைந்தனர்.

    குப்பை கிடங்கில் தீ அணைக்கும் பணியை திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் எரிந்தது. ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் முருகேசன், துப்புரவு ஆய்வாளர் மால் முருகன், தூய்மை அருணை மேற்பார்வையாளர் கார்த்திவேல்மாறன், நகரமன்ற துணைத்தலைவர் ராஜாங்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • காசோலையில் போலி கையெழுத்திட்டார்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகா கோமுட்டி ஏரி பகுதியை சேர்ந்தவர் செல்வம். அவரது மனைவி சாந்தி (வயது 40). இவர், கடந்த 2 ஆண்டுகளாக ஜவ்வாதுமலை பெண்கள் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவியாக உள்ளார். இந்த கூட்டமைப்பில் ஜமுனாமரத்தூரை சுற்றியுள்ள மலை கிராமங்களை சேர்ந்த 12 மகளிர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றது.

    இதில் ஜமுனாமரத்தூரில் உள்ள ஜம்படி கிராமத்தை சேர்ந்த பிரவீன்குமார் (32) என்பவர் கள அலுவலராக இருந்தார். இந்த கூட்டமைப்பிற்கான சேமிப்பு கணக்கு ஜமுனாமரத்தூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உள்ளது.

    வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க குழுவின் தலைவியான சாந்தி, பொருளாளரான தீபா, முதன்மை நிர்வாகியான அருள்பத்திநாதன் ஆகியோர் குழு கூட்டமைப்பால் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

    ரூ.12 லட்சம் மோசடி இந்த கூட்டமைப்பில் 12 மகளிர் குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் விவசாய பொருட்களை வாங்குவது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்குரிய பணத்திற்கு காசோலையில் அவர்கள் 3 பேரும் கையெழுத்திட்டு அதை கள அலுவலர் பிரவீன்குமாரிடம் கொடுத்து அனுப்புவர்.

    இந்த நிலையில் பிரவீன்குமார் கூட்டமைப்பின் வங்கி காசோலையில் தலைவி உள்ளிட்ட நிர்வாகிகளின் கையெழுத்தை போட்டு அதன் மூலம் வங்கி கணக்கில் இருந்து ரூ.12 லட்சம் எடுத்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவி சாந்தி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போலியாக காசோலையில் கையெழுத்திட்டு ரூ.12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பிரவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடன் தொல்லையால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நபிகள் நாயகம் தெருவை சேர்ந்தவர் பையாஸ் அகமது என்பவரின் மகன் இம்ரான் (வயது 27), திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடன் தொல்லையால் மனவேதனையில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சூரிய பகவானுக்கு கற்பூர ஆரத்தி
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், அருகே உள்ள பரியம்பாடி, கிராமத்தில் விநாயகர், கெங்கையம்மன், பொன்னியம்மன், நவகிரக சன்னதி, ஆகியகோவில்கள் புதிதாக புதுப்பிக்கப்பட்டு, பஞ்ச வர்ணம் பூசி, இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவிலின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு 3 யாக குண்டங்கள் அமைத்து, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து.

    பிரபாகரன்பா ரதியார், சிவ முத்துபாரதியார், சிவலிங்கா ஓதுவார், ஆகிய குழுவினர் 3 காலை யாக பூஜைகள் செய்யப்பட்டு, பல்வேறு மூலிகைகள் மூலம் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் மேளதாளம் முழங்க புனித நீர் கலசத்தை, கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தில் உள்ள கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். சூரிய பகவானுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், நாட்டாண்மைதாரர்கள், சென்னை வாழ் மக்கள், விழா குழுவினர், மற்றும் இளைஞர்கள், ஆகியோர் செய்து இருந்தனர்.

    • 30,948 பேர் எழுதுகின்றனர்
    • பறக்கும் படை அமைத்து கண்கானிப்பு

    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம்.

    இதில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ ர்களுக்கு பருவ தேர்வாகவும், 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வாகவும் நடைபெறுகிறது.

    பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையின் படி பிளஸ்-2 மாணவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரையும், பிளஸ்-1 மாணவர்களுக்கு 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி வரையும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை தொடங்க உள்ள பிளஸ்-2 மாணவர்களுக்கான தேர்வில் 15 ஆயிரத்து 467 மாணவர்களும், 15 ஆயிரத்து 481 மாணவிகளும் என 30 ஆயிரத்து 948 பேரும் எழுதுகின்றனர்.

    இந்த தேர்விற்காக மாவட்டத்தில் 130 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களில் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. இதில் முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளை வாசிக்க வழக்கப்படும்.

    இந்த தேர்வை மாணவர்கள் எந்தவித அச்சமும், பதற்றமும் இல்லாமல் எழுத வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதேபோல் பிளஸ்-1 தேர்வை 13 ஆயிரத்து 463 மாணவர்களும், 14 ஆயிரத்து 246 மாணவிகளும் என 27 ஆயிரத்து 709 பேரும் எழுதுகின்றனர். 10-ம் வகுப்பு தேர்வை 15 ஆயிரத்து 302 மாணவர்களும், 14 ஆயிரத்து 621 மாணவிகளும் என 29 ஆயிரத்து 923 பேரும் எழுதுகின்றனர். பறக்கும் படை அமைத்து கண்காணிக்கின்றனர்.

    • பைக்கில் சென்றபோது தடுமாறி கீழே விழுந்து பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் அடுத்த கீழ்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ராஜா (வயது 32) வேன் டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    ராஜா நேற்று போளூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார் அப்போது கலசபாக்கம் அருகே கரையாம்பாடி பகுதியில் வரும்போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து ராஜா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த தனியார் பஸ் ராஜா மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ராஜா பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த மோரணம் பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது. இதில் ராம கிருஷ்ணன் (வயது 55). என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ராமகிருஷ்ணன் நேற்று இரவு 2.10 மணியளவில் ஆசனமாபேட்டை கிராமம் கலவை ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது டாஸ்மாக் கடை எதிரில் பீட் நோட்டில் கையெழுத்திட்டு சாலை ஓரமாக மண் ரோட்டில் நின்றிருந்தார். காஞ்சிபுரத்திலிருந்து கலவை நோக்கிச் சென்ற தனியார் கம்பெனி பஸ் நின்று கொண்டிருந்த ராமகிருஷ்ணன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் ராமகிருஷ்ணனின் இடது முழங்கால் துண்டாகி தொங்கியது. உடனிருந்த ஓம் காட் போலீஸ் சந்தோஷ் 108 ஆம்புலன்சுக்கு தெரிவித்தார். விரைந்து வந்த ஆம்பூலன்ஸ் ராமகிருஷ்ணனை செய்யாறு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்த டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலு ஆகியோர்கள் மருத்துவமனைக்கு வந்து காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனை மேல் சிகிச்சைக்காக மியாட் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து, மியாட் மருத்துவமனையில் சப் இன்ஸ்பெக்டர்சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து மோரணம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    • திருவண்ணாமலை கோர்ட்டில் மக்கள் நீதி மன்றம் நடந்தது
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3.76 கோடி நஷ்டஈடு

    வண்ணாமலை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் குறித்த மாவட்ட அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்டப்பணி ஆணைக்குழு தலைவருமான இருசன் பூங்குழலி மேற்பார்வையில், தலைமை குற்றவியல் நடுவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். இதில் பார் அசோசியேசன் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மூத்த வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

    மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 368 எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 69 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக 3 கோடியே 76 லட்சத்து 95 ஆயிரத்து 38 ரூபாய் வழங்கப்பட்டது.

    ×