என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • 500 மரக்கன்றுகளை நட்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பொருளியல் துறை 1990-93-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மு கலைவாணி தலைமை வகித்தார்.

    பொருளியல் துறை தலைவர் எஸ்.விஜயலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு தனது கல்லூரி நினைவுகளை சக மாணவர்களும் பகிர்ந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி முன்னாள் முதல்வர் பி.சுப்பிரமணிய கவுண்டர், முன்னாள் பேராசிரியர்கள் எம்.டி.ஜெயபாலன், ஆர்.வி. ரகுராமன், கே. சிவஜோதி, பி.சந்திரமோகன், எல். குப்புசாமி ஆகியோர்கள் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

    ஒ.ஜோதி எம்.எல்.ஏ தன்னுடன் பயின்ற மாணவ, மாணவிகள் இணைந்து கல்லூரி வளாகத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் தாவரவியல் பூங்கா ஏற்படுத்தி கல்லூரி வளாகத்தில் 500 மரக் கன்றுகளை நட்டனர்.

    தங்களுடன் படித்த நண்பர் சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு பெற்று மக்கள் பணி யாற்றுவது பெருமையாக உள்ளதாக எம்.எல்.ஏ. விடன் படித்த நண்பர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முன் வரவில்லை
    • போராட்டத்தை தீவிரபடுத்த ஆலோசனை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி காஞ்சி சாலையில் 9-வது நாளாக விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும், சுகாதார சீர்கேடு ஏற்படும் என்ற மக்களின் எச்சரிக்கையும் மீறி அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த ஊராட்சிகளிலேயே கிடங்கு அமைத்துக் கொட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.

    காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முன் வராததால் போராட்டத்தை தீவிரபடுத்த ஆலோசித்து வருகின்றனர்.

    • 3 வாலிபர்கள் கைது
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை சேர்ந்தவர் 27 வயதுடைய இளம் பெண். இவருக்கு திருமணமாகி செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி ஷூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை பணி முடிந்து தனது நண்பருடன் பைக்கில் விடுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சித்தாத்தூர் நமண்டி ஏரிக்கரை அருகே ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் வந்தனர். நண்பருடன் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை மடக்கி அவர்களை வாலிபர்கள் தாக்கியுள்ளனர்.

    மேலும் இளம் பெண்ணுடன் வந்த வாலிபரை கயிற்றால் கட்டி போட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் வாலிபர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.

    அவரை விரட்டிச் சென்ற வாலிபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

    சுதாரித்துக் கொண்ட இளம் பெண் வாலிபர்களிடம் இருந்து ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு சென்றார்.

    இது பற்றி பொதுமக்களிடம் இளம்பெண் கூறினார். சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் விரைந்தனர்.

    பொதுமக்கள் வருவதை கண்ட வாலிபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். பின்னர் கட்டிப் போட்டிருந்த வாலிபரை பொதுமக்கள் மீட்டனர்.

    இது குறித்து இளம் பெண் தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற திருவடிராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (28), ரஞ்சித் குமார் (27), விக்னேஷ் ( 21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இது குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நலம் பாதிக்கப்பட்டதால விரக்தி
    • போலீசார் விசாரணை

    வாணாபுரம்:

    தச்சம்பட்டு அருகே உள்ள சூ.பாப்பாம்பாடி பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 64), கூலி தொழிலாளி.

    இவ ருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் அதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாய பயிர்களுக்கு அடிக்க வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காட்டாம் பூண்டி அரசு சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 கொள் முதல் நிலையங்கள் மட்டுமே உள்ளது
    • ஜமாபந்தி விழா நடைபெற்றது

    கலசப்பாக்கம்:

    கலசப்பாக்கம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி விழா நடைபெற்றது.கூடுதல் கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கலச பாக்கம் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல் மூட்டைகளை கொண்டு வந்து தரையில் நெல்லை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலசபாக்கம் பகுதியில் தற்போது நெல் அறுவடை செய்யப்பட்டு வருவதற்கு கொள்முதல் செய்ய போதுமான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    தற்போது எலத்தூர், கேட்டவரம் பாளையம் ஆகிய 2 கொள் முதல் நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் கூடுதலாக ஆங்காங்கே கொள் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளுக்கு உதவி செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • நகரமன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வரும் ஜூன் மாதம் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மக்களிடம் உள்ள பயனற்ற பொருட்களை குறைத்தல், மறு பயன்பாடு, மற்றும் மறு சுழற்சி என்ற அடிப்படையில் பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள், பழைய துணிகள் மற்றும் பயன்படாத காலணிகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை சேகரிப்பதற்காக நகராட்சி வளாகம், நந்தீஸ்வரர் கோயில் அருகில், பஸ் நிலையம், வேதபுரீஸ்வரர் கோவில் அருகில் ஆகிய 4 இடங்களில் பயனற்ற பொருட்களை வாங்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தினை நகர மன்ற தலைவர் மோகனவேல் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன், மணிவண்ணன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மதனராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
    • பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக உறுதி மொழி ஏற்பு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி நகர தலைவர் பொன்னையன் தலைமையில் கட்சியினர் மார்க்கெட் வீதியில் உள்ள காந்தி சிலை அருகே வைக்கபட்ட ராஜீவ்காந்தி திரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக உறுதி மொழி ஏற்றனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜபாபு, நிர்வாகிகள் செல்வம், வாசுதேவன், உதயகுமார், சம்மந்தம், மாணிக்கம், குருமூர்த்தி, பிள்ளையார், ஆறுமுகம், சைதை பிரபு, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நாளை நடக்கிறது
    • அரசு பணி தேர்வுகள் வெற்றி பெறுவது குறித்து விழிப்புணர்வு

    போளூர்:

    சென்னையில் கடந்த 17 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் இம்பேக்ட் ஐ.ஏ.எஸ் அகாடமி திருவண்ணாமலை நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை ஆண்டாள் சிங்காரவேலர் திருமணம் மண்டபத்தில் உள்ள கலையரங்க வளாகத்தில் போட்டி தேர்வு குறித்து இலவச கருத்துதரங்கு நடத்த உள்ளது. இந்நிறுவன இயக்குனர்.

    வெங்கடேஷ்குமார் மற்றும் இந்நிறுவனத்தின் படித்து வனத்துறை அதிகாரியாக உள்ள விஷ்ணுவர்தன் மற்றும் பல வல்லுனர்கள் கலந்து கொண்டு ஐஏஎஸ் ஐபிஎஸ் குரூப்-1, 1 குரூப்-2 போன்ற அரசு பணி தேர்வுக்கான பயிற்சி மற்றும் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

    கல்லூரி படிப்பு முடித்த மற்றும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். என வெங்கடேஷ் குமார் தெரிவித்தார்.

    அனைவருக்கும் அனுமதி இலவசம் மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் அகாடமியின் கையேடு வழங்கப்படும்.

    மேலும் மாலை இரண்டு 2 மணி முதல் 4 மணி வரை போட்டி தேர்வுக்கான பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை தேர்வையும் நடத்த உள்ளது.

    இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் 100 சதவீதம் வரை கட்டண விலக்க அளிக்கப்படும் மேலும் அவர்கள் 98405 52455 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளளாம் எனக் கூறியுள்ளார்.

    • ஏழைகளுக்கு கூழ் வழங்கப்பட்டது
    • சிறப்பு வழிபாடு நடத்தினர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் உள்ள சந்தவாசல் கெங்கையம்மன் கோவிலில் வைகாசி முதல் வெள்ளிக்கிழமையில் வசந்த உற்சவம் கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு காலையில் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது.

    பிற்பகலில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கூழ் கொண்டு வந்து கோவில் முன்பு கொப்பரையில் ஊற்றி, பின்னர் சிறப்பு வழிபாடு நடத்தி ஏழைகளுக்கு கூழ் வழங்கப்பட்டது.

    இரவில் அம்மன் திருவீதி மேளதாளம், வாண வேடிக்கையுடன் நடைபெற்றது.

    • கோரிக்கை மனுக்களை அலுவலரிடம் வழங்கினர்
    • வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் தாலுகா அலுவலகத்தில் பசலி வருவாய் தீர்வாய் ஜமாபந்தி முதல் நாள் நேற்று தொடங்கியது.

    மேல்பள்ளிப்பட்டு உள்வட்டத்திற்கு உட்பட்ட மேல்வணக்கம்பாடி, ஆண்டிபட்டி, நீப்பத்துறை உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு நேற்று ஜமாபந்தி நடைபெற்றது. ஜமாபந்தி குறித்து போதுமான தகவல் கிராம பகுதிகளில் பொது மக்களுக்கு தெரிவிக்கா ததால் ஜமாபந்தி வெறிச்சோடி காணப்பட்டது.

    பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, இருக்கை வசதிகள் முறையாக செய்து தராததால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் அவதிக்குள்ளாகினர்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) வ.தேன்மொழி ஜமாபந்தி அலுவலராக கலந்து கொண்டார்.

    செங்கம் தாசில்தார் முனுசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரேணுகா, வட்ட வழங்க அலுவலர் முனுசாமி, துணை தாசில்தார்கள் துரைராஜ், தமிழரசி, வருவாய் ஆய்வாளர் சீதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    மேல்பள்ளிப்பட்டு உள்வட்டத்திற்குட்பட்ட கிராமத்திலிருந்து குறைவான அளவில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் வழங்கினர்.

    இதில் வேளாண்மை துறை, நெடுஞ்சாலை துறை உள்பட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயகுமார், குணாநிதி, முரளி, சங்கமித்ரா, சத்யா, நேரு உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் கிராம நிர்வாக அலுவலர் குணாநிதி நன்றி கூறினார்.

    • வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு நடந்தது
    • மூலிகை கொண்டு வேள்வி பூஜை நடைபெற்றது

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமம் ஏரிக்கரை ஓரத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

    வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு காளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.

    இதனை தொடர்ந்து மூலவர் லிங்கபைரவி அலங்காரத்தில், உற்சவர் அம்மன் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் அலங்கா ரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    மேலும் வளாகத்தில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நலம் பெற வாழ்க்கை செழிக்க பலவகையான மூலிகை கொண்டு வேள்வி பூஜை நடைபெற்றது.

    இரவு பக்தர்கள் அம்மனை தோளில் சுமந்தவாறு கோவிலை மூன்று முறை சுற்றி வந்து ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
    • 15 நாட்களாக மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தில் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா முன்னிட்டு அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 15 நாட்களாக மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் நாடக கலைஞர்கள் அர்ஜுனன் வேடம் அணிந்து கொண்டு பாடல்களைப் பாடி உயரமான மரத்தில் ஏறி மகாபாரதம் எப்படி நடைபெற்றது என்று தத்துரூபமாக நடித்துக் காண்பித்தனர்.

    இந்த அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×