என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கால்வாய் தண்ணீரில் மூட்டை மூட்டையாக ரஸ்க் பாக்கெட்டுகள் வீசப்பட்டு கிடந்தன.
    • நாலூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் தண்ணீரில் வீசப்பட்ட ரஸ்க் பாக்கெட் மூட்டைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அருகே நாலூர் ஏரி உள்ளது. இப்பகுதியில் பொன்னேரி-மீஞ்சூர் நெடுஞ்சாலையில் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

    இந்த நிலையில் இந்த கால்வாய் தண்ணீரில் மூட்டை மூட்டையாக ரஸ்க் பாக்கெட்டுகள் வீசப்பட்டு கிடந்தன. பல மூட்டைகளில் இருந்து சிதறிய ரஸ்க் பாக்கெட்டுகள் தண்ணீரில் மிதக்கிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ரஸ்க் பாக்கெட்டுகளை எடுத்து பார்த்தபோது அவை காலாவதியானது தெரிந்தது. அவை ரூ.10 மதிப்புடையது. கடந்த 2020-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டவை ஆகும்.

    ரஸ்க் பாக்கெட்டுகள் காலாவதி ஆனதால் அதனை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் யாரேனும் மொத்தமாக கொண்டு கால்வாய் தண்ணீரில் வீசி இருக்கலாம் என்று தெரிகிறது.

    நாலூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் தண்ணீரில் வீசப்பட்ட ரஸ்க் பாக்கெட் மூட்டைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • மாற்றுத்திறனாளி மாணவர்கள் - சக மாணவர்களிடையே நட்புறவை வளர்த்தல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே திறமைகளை வெளிப்படுத்தும்விதமாக நடனம், பேச்சுப்போட்டி, எழுத்துப் போட்டி கட்டுரை போட்டி உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில் சமத்துவம், சகோதரத்துவம், மாற்றுத்திறனாளி மாணவர்கள்-சக மாணவர்களிடையே நட்புறவை வளர்த்தல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ், தமிழ்நாடு டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் காத்தவராயன், அபிநய சிரோன்மணி, ஆசிரியை ஜெயந்தி, சிவா, மேற்பார்வையாளர் வட்டார மைய ஒருங்கிணைப்பாளர், சிறப்பு பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகில் உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிருஷ்ணா கால்வாய் உள்ளது.
    • கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறை வேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம் பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணாநீர் திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    பூண்டி ஏரியில் மதகு கிணறு அமைக்கும் பணிகள் மற்றும் கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் ஜூலை மாதத்தில் கிருஷ்ணா நதி நீர் பெறவில்லை.

    இந்த நிலையில் வடகிழக்கு பருமழை தீவிரமடைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பூண்டி ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகமானது. ஆந்திராவிலும் பலத்த மழை பெய்ததால் கண்டலேறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

    இந்த அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். இதில் தற்போது 55 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 2100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரை குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வினாடிக்கு 424 கன அடி வருகிறது. பூண்டி ஏரிக்கு 400 கன அடி வந்து கொண்டிருக்கிறது.

    ஓரிரு நாட்களில் கிருஷ்ணா தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 32 அடியாக பதிவானது. 2.241 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 400 கன அடி வீதம், மழைநீர் வினாடிக்கு 410 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகில் உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிருஷ்ணா கால்வாய் உள்ளது. கடந்த காலங்களில் பெய்த பலத்த மழைக்கு ஊத்துக் கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் இருந்து ஆலப்பாக்கம் வரை 8.3 கிலோமீட்டர் தூரத்துக்கு கால்வாய் சேதமடைந்தது. இதன் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

    6.3 கிலோமீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்தன. பருவமழை தீவிரமடைந்ததையொட்டி பலத்த மழை பெய்ததால் பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. தற்போது கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • பொன்னேரி அருகே உள்ள கண்டெய்னர் யார்டிற்கு செல்லும் வாகனங்கள் மட்டும் மதியம் 12 பணி முதல் 4 மணி வரை அனுமதிக்கப்படும்.
    • விதிமுறைகளை பின்பற்றாத கனரக வாகன ஓட்டிகளுக்கு முதற்கட்டமாக ரூ. 500 முதல் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் மற்றும் அதானி துறைமுகம், மற்றும் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை, பெட்ரோலிய நிறுவனம் தனியார் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.

    மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்டச்சாலை வழியாக வந்து செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் அவ்வழியாக சென்றால் சுங்க கட்டணம் செலுத்த வேண்டி வரும் என்பதால் மீஞ்சூர் நகரம் வழியாக பொன்னேரி நகரை கடந்து தச்சூர் வழியாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை அடைகிறது. இதனால் பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதனை தவிர்க்கும் வகையில் மீஞ்சூர்- தச்சூர் கூட்டுச்சாலையில் பொன்னேரி வழியாக செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டுப்பாடுகள் விதித்து பொன்னேரி வருவாய் கோட்ட சார் ஆட்சியர் ஐஸ்வர்யா உத்தரவிட்டார்.

    அதன்படி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பொன்னேரி அருகே உள்ள கண்டெய்னர் யார்டிற்கு செல்லும் வாகனங்கள் மட்டும் மதியம் 12 பணி முதல் 4 மணி வரை அனுமதிக்கப்படும்.

    விதிமுறைகளை பின்பற்றாத கனரக வாகன ஓட்டிகளுக்கு முதற்கட்டமாக ரூ. 500 முதல் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.

    தொடர்ந்து விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வட்டாட்சியர் செல்வக்குமார் தெரிவித்து உள்ளார்.

    • பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்நகரில் பூங்கா உள்ளது.
    • பழைய மீன் வலையில் 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு சிக்கி உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு தவித்த நிலையில் கிடந்தது.

    பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்நகரில் பூங்கா உள்ளது. இங்கு கிடந்த பழைய மீன் வலையில் 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு சிக்கி உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு தவித்த நிலையில் கிடந்தது.

    இந்த பூங்காவிற்கு விளையாட சென்ற சிறுவர்கள் இதை பார்த்து ஊராட்சி மன்ற தலைவர் பாபு மற்றும் பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் மற்றும் தீயணைப்புத் துறையினர் வலையில் சிக்கி தவித்த பாம்பை சுமார் 3 மணி நேரம் போராடி மீட்டனர்.

    • ரெயில் பாதையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் சென்னை மார்க்கத்தில் சென்ற அனைத்து ரெயில்களும் தாமதமாக சென்றன.
    • மின்சார ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டது. இதனால் ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. ஆனால் வழக்கத்துக்கு மாறாக அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது.

    திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகளே தெரியாத அளவுக்கு புகைபோல் காணப்பட்டது. காலை 8 மணிக்கு பின்னரே பனி மூட்டம் மெல்லமெல்ல விலக தொடங்கியது.

    திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கடும் பனி மூட்டம் காணப்பட்டது. சாலைகள் தெரியாத அளவுக்கு பனி இருந்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றன.

    ரெயில் பாதையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் சென்னை மார்க்கத்தில் சென்ற அனைத்து ரெயில்களும் தாமதமாக சென்றன. மின்சார ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டது. இதனால் ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

    சென்னை- அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்பட்ட புறநகர் ரெயில்கள் பனிப்பொழிவு காரணமாக மெதுவாக சென்றன. இதனால் ரெயில் தாமதமாக சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    சென்னை சென்ட்ரலில் இருந்து ஓசூர் நோக்கிச் சென்ற அதிவேக விரைவு ரெயில், வந்தே பாரத் ரெயிலும் தாமதமாக சென்றது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பனிமூட்டம் அதிக அளவில் இருந்தது.

    காஞ்சிபுரத்தில் மூங்கில் மண்டபம், காமராஜர் சாலை, பஸ் நிலையம், கங்கை கொண்டான் மண்டபம், கீழம்பி சாலை, பொன்னேரிக்கரை சாலை பகுதிகளில் காலை வரை பனி நிறைந்து காணப்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றனர்.

    பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது கடும் பனி மூட்டம் நிலவி வருவது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஷகிலா நிறைமதிக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • ஷகிலா நிறைமதியை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் விக்னேஸ்வரா நகரை சேர்ந்தவர் ஷகீலா நிறைமதி (59). இவர் திருவள்ளூர் அடுத்த ராம தண்டலம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கணவரிடம் விவாகரத்து பெற்று மகன் நவீனுடன் (29) தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் ஷகீலா நிறைமதி, தனது மகன் நவீனுடன் மோட்டார் சைக்கிளில் மணவாளநகர் வெங்கத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். வெங்கத்தூர் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் வேகத்தடையின் மீது ஏறி இறங்கியது. அப்போது பின்னால் அமர்ந்து இருந்த ஷகிலா நிறைமதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் ஷகிலா நிறைமதிக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷகிலா நிறைமதி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.
    • கடந்த சில நாட்களாக பலத்த மழை இல்லை.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் பூண்டி ஏரியில் சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்புவது வழக்கம்.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்தது. பூண்டி ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை இல்லை. எனினும் பூண்டி ஏரிக்கு 790 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

    பூண்டி காப்பு காடுகள் மற்றும் ஓடைகளில் இருந்து வரும் நீர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெய்த மழையால் கிருஷ்ணா கால்வாயிலும் 250 கனஅடி தண்ணீர் வருகிறது. இதனால் மழை நின்றாலும் பூண்டி ஏரிக்கு மட்டும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி இதில் 2,174 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து 53 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. இதில் 2,485 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 102 கனஅடி நீர் வருகிறது. 192 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கனஅடி. இதில் 497 மில்லியன் கனஅடி மட்டும் தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 160 கனஅடி தண்ணீர் வருகிறது. 3 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. இதில் 2,477 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 104 கன அடி நீர் வருகிறது. 150 கன அடி வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடி நிரம்பி வழிகிறது. ஏரிக்கு வரும் 10 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேறுகிறது.

    • மீஞ்சூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தினமும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இங்கு தலைமை மருத்துவர் மற்றும் 5 உதவி மருத்துவர் என 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது பொன்னேரியை சேர்ந்த டாக்டர் நிரஞ்சன் மற்றும் மீஞ்சூரை அடுத்த மேலூரை சேர்ந்த டாக்டர் டேவிஸ் செந்தில் ஆகிய இருவருக்கும் இடையே பணிக்கு தாமதமாக வருவது குறித்து தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் புரண்டு தாக்கிக் கொண்டனர். இதில் டாக்டர் நிரஞ்சனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

    டாக்டர் தாக்கிக்கொண்டதை கண்ட சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். தாக்குதலில் பலத்த காயம் அடைந்த டாக்டர் நிரஞ்ன் ரத்தம் சொட்ட, சொட்ட மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதற்கிடையே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி செய்யும் ஊழியர்கள் டாக்டர் டேவிஸ் செந்தில் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    இதேபோல் டாக்டர் டேவிஸ் செந்திலும் மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் டாக்டர்கள் மோதல் தொடர்பாக மாவட்ட துணை இயக்குனர் ஆஸ்பத்திரியில் விசாரணை நடத்த உள்ளார். இதன் பின்னர் மோதலில் ஈடுபட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென நந்தினியை கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுவிட்டார்.
    • வெங்கல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    திருவள்ளூரை அடுத்த வன்னியசித்திரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நந்தினி (19). இவர் அதே பகுதியில் உள்ள பேன்சி ஸ்டோரில் வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென நந்தினியை கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுவிட்டார்.

    இதுகுறித்து வெங்கல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • கீர்த்தனாவின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த போது முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. உடனே மகளுக்கு போன் செய்தும் அவர் போன் எடுக்கவில்லை.
    • ஜன்னல் வழியாக பார்த்த போது கீர்த்தனா படுக்கை அறையில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த வயலூர் கிராமம் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலித்தொழிலாளி. இவரது மகள் கீர்த்தனா (வயது 17). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    சில நாட்களாக கீர்த்தனா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    கீர்த்தனாவின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த போது முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. உடனே மகளுக்கு போன் செய்தும் அவர் போன் எடுக்கவில்லை.

    இதனால் அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது கீர்த்தனா படுக்கை அறையில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து இறந்த கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    • ரெயில்வே போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • விசாரணையில் இறந்த பெண் திருத்தணி அடுத்த செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என தெரிய வந்தது.

    திருவள்ளூர்:

    திருநின்றவூர் - வேப்பம்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பலியானார்.

    இறந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை.

    திருவள்ளூர் ரெயில்வே போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் இறந்த பெண் திருத்தணி அடுத்த செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா (வயது 25) என தெரிய வந்தது. கர்ப்பிணியாக இருந்த அவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துமனைக்கு சிகிச்சைக்கு சென்று ஆண் குழந்தை பெற்றுள்ளார்.

    சற்று மனநிலை பாதிக்கப்பட்ட சங்கீதா நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் குழந்தையை விட்டு விட்டு வெளியே வந்துள்ளார். பின்னர் ரெயிலில் ஏறி சென்ற அவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபத்தில் சிக்கி பலியானார் என தெரிய வந்தது.

    ×