search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பூண்டி ஏரிக்கு தொடர்ந்து 790 கனஅடி தண்ணீர் வருகிறது
    X

    பூண்டி ஏரிக்கு தொடர்ந்து 790 கனஅடி தண்ணீர் வருகிறது

    • சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.
    • கடந்த சில நாட்களாக பலத்த மழை இல்லை.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் பூண்டி ஏரியில் சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்புவது வழக்கம்.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்தது. பூண்டி ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை இல்லை. எனினும் பூண்டி ஏரிக்கு 790 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

    பூண்டி காப்பு காடுகள் மற்றும் ஓடைகளில் இருந்து வரும் நீர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெய்த மழையால் கிருஷ்ணா கால்வாயிலும் 250 கனஅடி தண்ணீர் வருகிறது. இதனால் மழை நின்றாலும் பூண்டி ஏரிக்கு மட்டும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி இதில் 2,174 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து 53 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. இதில் 2,485 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 102 கனஅடி நீர் வருகிறது. 192 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கனஅடி. இதில் 497 மில்லியன் கனஅடி மட்டும் தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 160 கனஅடி தண்ணீர் வருகிறது. 3 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. இதில் 2,477 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 104 கன அடி நீர் வருகிறது. 150 கன அடி வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடி நிரம்பி வழிகிறது. ஏரிக்கு வரும் 10 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேறுகிறது.

    Next Story
    ×