என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • திருமண மண்டபத்தில் கொள்ளையடித்த நகைகள் ஆவடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் 4½ லட்சத்துக்கு அடகு வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
    • சாந்தியை போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. விவசாயி. கடந்த செப்டம்பர் மாதம் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இவரது மகன் திருமணம் நடந்தது. அப்போது உறவுக்காரர் என்று கூறி மணமகள் அறைக்கு சென்ற பெண் ஒருவர் மணமகளின் 15 பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டார்.

    இதே போல போளிவாக்கம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் திருமணம் மணவாளநகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மேலும் இதேபோல் 11 பவுன் நகை கொள்ளை போனது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் தனிப்படை போலீசார் திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் வைத்து விசாரித்தனர். இதில் கடந்த வாரம் சென்னை தி.நகரில் பிரபல துணிக்கடையில் திருட்டு வழக்கில் சிறைக்குச் சென்று வெளியே வந்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற தில் சாந்தி திருமண மண்டபங்களில் கைவரிசை காட்டியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    திருமண மண்டபத்தில் கொள்ளையடித்த நகைகள் ஆவடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் 4½ லட்சத்துக்கு அடகு வைத்திருப்பதாக தெரிவித்தார்.

    சாந்தியை போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    • செல்வமணி இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்ததாக தெரிகிறது.
    • செல்வமணி கட்டிடத்தின் 3-வது தளத்துக்கு படிக்கட்டு வழியாக நடந்து சென்றார்.

    பொன்னேரி:

    சென்னை, கானத்தூர் அடுத்த உத்தரண்டி ஜிகு கடற்கரை சாலையில் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

    இங்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வமணி (வயது 23) என்பவர் அங்கேயே தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் செல்வமணி இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்ததாக தெரிகிறது. பின்னர் அவர் கட்டிடத்தின் 3-வது தளத்துக்கு படிக்கட்டு வழியாக நடந்து சென்றார். அப்போது செல்வமணி செல்போனில் பேசியபடி சென்றதாக தெரிகிறது. திடீரென நிலைதடுமாறிய அவர் 3-வது மாடியில் இருந்து லிப்ட் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட காலி இடத்தில் தவறி விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த செல்வமணி உயிருக்கு போராடினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி செல்வமணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த மாதத்தில் பலத்த மழை கொட்டியபோது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
    • பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 38 கன அடி வீதம் பேபி கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்ப ரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 26-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 410 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இதனை கருத்தில் கொண்டு இன்று காலை பூண்டி ஏரியில் இருந்து லிங்க் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் சிறப்பு பூஜை நடத்தி தண்ணீரை கால்வாயில் திறந்து விட்டனர். வினாடிக்கு 255 கனஅடி வீதம் தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி ஆகும். இன்று காலை நிலவரப்படி 19. 39 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி.எம்.சி. ஆகும். தற்போது 2.455 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    போதுமான தண்ணீர் இருக்கும் நிலையில் தற்போது பூண்டி ஏரியின் தண்ணீரும் வந்து கொண்டு இருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த மாதத்தில் பலத்த மழை கொட்டியபோது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 32.49 அடியாக பதிவானது. 2.376 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 410 கன அடியும், மழை நீர் வினாடிக்கு 170 கன அடியும் வருகிறது.

    பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 38 கன அடி வீதம் பேபி கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கண்டலேறு அணையில் அதிகஅளவு தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு தொடர்ந்து இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • குடிநீர் மற்றும் உணவு வழங்க சரக்கு ஆட்டோ ஏற்பாடு செய்து இருந்தனர்.
    • கிராமமக்கள் சாலையோரத்தில் அமர்ந்த படி சாப்பிட்டனர்.

    பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிப்பதில் மீனவ கிராம மக்களுடன் ஏற்பட்ட தகராறில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கூனங்குப்பம் கிராமமக்கள் இன்று காலை வீடுகளை காலி செய்து விட்டு குடும்பத்துடன் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட நடைபயணமாக சென்றனர்.

    அதிகாலை முதலே சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாரை சாரையாக சாலையில் நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவு வழங்க சரக்கு ஆட்டோ ஏற்பாடு செய்து இருந்தனர். அதில் முழுவதும் உணவு பொட்டலங்கள் குடிநீர் நிரப்பப்பட்டு இருந்தது. போராட்டத்துக்கு வந்த அனைவருக்கும் அவை வழங்கப்பட்டன.

    கிராமமக்கள் சாலையோரத்தில் அமர்ந்த படி சாப்பிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்று கூறி நடைபயணத்தை தொடர்ந்தனர். நடைபயணத்தின் போது அவர்கள் போக்குவரத்துக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தாமல் சென்றனர்.

    • அனைத்து அபிஷேகமும் கடந்த ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டன.
    • கியூஆர் கோடு விளம்பர பலகைகள் வைத்துள்ளனர்.

    அறுபடைகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள் தோறும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.

    சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், திருக்கல்யாணம், தங்கத்தேர், கேடயம் உள்ளிட்ட வேண்டுதலை நிறைவேற்ற சேவா கட்டணம் செலுத்துவது வழக்கம்.

    அபிஷேகம், சேவா டிக்கெட்டுகள் கடந்த, 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆன்லைன் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக மேற்கண்ட அனைத்து அபிஷேகமும் கடந்த ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டன.

    அரசு வழிகாட்டுதலுடன் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் அபிஷேகம், சேவா டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு மலைக்கோவிலில் நேரில் வருபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

    இதனால், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற இருமுறை திருத்தணி மலைக்கோவிலுக்கு வந்து செல்ல வேண்டி இருந்தது.

    இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் மீண்டும் ஆன்லைன் மூலம் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பக்தர்கள் https://tiruttanigaimurugan, hrce.gov.in என்ற இணையதளம் மூலம் மேற்கண்ட டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றினால் மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் மட்டும் செலுத்தி வந்தனர்.

    தற்போது கோவில் நிர்வாகம் கியூ ஆர்கோடு ஸ்கேன் மூலம் நன்கொடை, காணிக்கைகள் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக மலைக்கோவிலில், தேர்வீதியில் நான்கு இடங்களில் கியூஆர் கோடு விளம்பர பலகைகள் வைத்துள்ளனர்.

    இனிவரும் நாட்களில் பக்தர்கள் பணமாக இல்லாமல் மொபைல் போன் மூலம் கியூ ஆர்கோடு ஸ்கேன் செய்து காணிக்கைகள். நன்கொடைகள் செலுத்தலாம். இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    இதேபோல் ஆன்லைன் மூலம் தரிசனம் டிக்கெட் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிப்பதில் உள்ள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணக்கோரி கூனங்குப்பம் கிராமமக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர்.
    • இன்று கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து விட்டு குடும்பத்துடன் நடைபயணமாக திருவள்ளூர் நோக்கி புறப்பட்டனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அருகே கூனங்குப்பம் மீனவ கிராமம் உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

    இவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன், நண்டு பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இதேபோல் அருகில் உள்ள மற்றொரு மீனவர்கள் பகுதியான ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம், நடுவூர்மாதா குப்பம் கிராம மக்களும் இதே ஏரியில் இறால் மட்டும் பிடித்து வருகின்றனர்.

    இதனால் இவர்களுக்கும் கூனங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே மீன், நண்டு பிடிப்பதில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.

    கூனங்குப்பத்தை சேர்ந்தவர்கள் பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிக்கக்கூடாது என்று தடை விதித்து மற்ற 3 மீனவ கிராம மக்களும் வலைகளை பறித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கூனங்குப்பம் கிராமமக்கள் போலீஸ் நிலையம், ஆர்.டி.ஓ. அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம், நடுவூர்மாதா குப்பம் மற்றும் கூனங்குப்பம் கிராமமக்களிடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    இதனால் கூனங்குப்பம் கிராமமக்கள் பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதுபற்றி அதிகாரிகளிடம் மீண்டும் தெரிவித்தும் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிப்பதில் உள்ள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணக்கோரி கூனங்குப்பம் கிராமமக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர்.

    அதன்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து விட்டு குடும்பத்துடன் நடைபயணமாக திருவள்ளூர் நோக்கி புறப்பட்டனர்.

    இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்தபடி புத்தக பையுடன் நடந்து வந்தனர். மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் வழங்குவதற்காக ஆதார்அட்டை, ரேசன் கார்டு மற்றும் மீன்பிடி வலையுடன் வந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் தாசில்தார் செல்வக்குமார் மற்றும் அதிகாரிகள் ஆண்டார் மடம் அருகே கூனங்குப்பம் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவரிடம் கிராமமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கிராமமக்கள் தொடர்ந்து தங்களது நடைபயணத்தை தொடர்ந்தனர்.

    இதற்கிடையே சுமார் 7 கி.மீட்டர் தூரம் வரை நடந்து வந்த மீனவ கிராம மக்களிடம் வஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சார்ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், தாசில்தார் செல்வக்குமார், மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன் ஆகியோர் அழைத்தனர்.

    இதனை ஏற்று காலை 10 மணியளவில் மீனவ கிராம மக்கள் அதிகாரிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிப்பதில் மற்ற கிராமமக்கள் எங்க ளுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி உடனடியாக உத்தரவிடவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் வஞ்சிவாக்கம் பகுதியில் நடைபயணம் செய்த மீனவர்கள் திடீரென பழவேற்காடு-செங்குன்றம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த 2 அரசு பஸ்களையும் சிறைபிடித்தனர். போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்களே மறியலை கைவிட்டு போக்குவரத்தை அனுமதித்தனர்.

    பேச்சுவார்த்தை நடந்து வரும் வஞ்சிவாக்கம் பகுதியில் கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த பெண்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் திரண்டு இருந்ததால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

    டி.எஸ்.பி.கிரியாசக்தி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அவர்கள் அசம்பாவிதத்தை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வசதி செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    நாங்கள் காலம்காலமாக பழவேற்காடு ஏரியில் மீன், நண்டு பிடித்து தொழில் செய்து வருகிறோம். தற்போது ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம், நடுவூர் மாதா குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் நாங்கள் தொழில் செய்வதை தடுத்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக மேலும் சில மீனவ கிராமமக்கள் உள்ளனர். எங்களது வலைகளையும் அவர்கள் எடுத்து சென்று விடுகின்றனர். இதனால் நாங்கள் பழவேற்காடு ஏரியில் நண்டு, மீன் பிடித்து தொழில் செய்யமுடியாத சூழல் நிலவுகிறது.

    இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாங்கள் கடந்த 8 மாதங்களாக பாதிக்கப்பட்டு உள்ளோம்.

    எங்களுக்கு பழவேற்காடு ஏரியில் மீன், நண்டு பிடிப்பதில் உள்ள பிரச்சினைக்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு காணவேண்டும். அதுவரை நாங்கள் போக மாட்டோம். எங்களுக்கு முடிவு தெரியவேண்டும்.

    இவ்வாறு ஆவேசமாக அவர்கள் கூறினர்.

    இதற்கிடையே சுமார் 2 மணிநேரம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் நோக்கிய தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கூனங்குப்பம் கிராமமக்கள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் மதியம் 12 மணிக்கு பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.

    பொன்னேரி ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் வைத்து பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக இருதரப்பு மீனவ கிராம மக்களுடன் நாளை தனித்தனியாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் சுமூக முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவத்தால் பழவேற்காடு பகுதி இன்று காலை பெரும்பரபரப்பாக காணப்பட்டது.

    • தாசில்தார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • மாவட்ட கலெக்டரிடம் பேசி விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி கூறினார்.

    பெரியபாளையம்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர் வட்டக் குழு சார்பில் வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், பத்து ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை உட்பிரிவு செய்து கிராம கணக்குகளில் பதிவு செய்யக்கோரியும், வகை மாற்றம் செய்யப்பட்ட பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்யக் கோரியும் நேற்று திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அமணம்பாக்கம் வருவாய் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    வட்டச் செயலாளர் பழனி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ஜி.கண்ணன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

    மாகரல், குமக்கம்பேடு-இந்திரா நகர், அம்மணம்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு 2008-ம் ஆண்டு காத்திருப்பு போராட்டம் நடத்தியதின் பேரில் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அந்த பட்டாக்களை உட்பிரிவு செய்து கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யவில்லை. இதனை போர்க்கால அடிப்படையில் செய்து தருமாறு திருவள்ளூர் தாசில்தாரிடம் கடந்த ஜூலை மாதம் கோரிக்கை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், கிராம நத்தத்தில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கவில்லை. மேலும், வழங்கிய பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்யவில்லை. இவற்றை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து நேற்று போராட்டம் நடைபெற்றது.

    சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தை அறிந்த திருவள்ளூர் தாசில்தார் மதியழகன், வருவாய் அலுவலர் சரவணன், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சந்திரதாசன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும், பட்டா வேண்டி 300 பேர் நேற்று மனு அளித்தனர். இதில், 200 மனுக்கள் புதியதாக பட்டா வழங்க கோரியும், 100 மனுக்கள் வகை மாற்றம் செய்து கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

    இதில், நத்தம் பகுதியில் இருப்பவருக்கு 15 நாட்களுக்குள்ளும், தோப்பு-பாட்டை பகுதியில் இருப்பவர்களுக்கு ஒரு மாதத்திலும், மேய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருப்பவர்களுக்கு மாவட்ட கலெக்டரிடம் பேசி விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி கூறினார். இதனை ஏற்று அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால் சுமார் இரண்டு மணி நேரம் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மூன்று ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
    • ஆவடியில் இருந்து மாளந்தூர் வரை செல்லும் மாநகரப் பேருந்தை ஏனம்பாக்கம், ஆவாஜிப்பேட்டை வழித்தடத்தில் இயக்க வேண்டுகோள்

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கத்தில் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் தலைமை தாங்கினார். துணை பெருந்தலைவர் வக்கீல் கே.சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ஸ்டான்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் குழந்தை வேலு, திருமலை, சரவணன், ரவி சிவாஜி ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், அம்மணம்பாக்கம் தாங்கல் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மூன்று ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த ஏரி தற்போது காணாமல் போய்விட்டது. தற்போது தாமரைப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சுடுகாட்டு நிலத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் சுடுகாட்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி மீட்டு தர வேண்டும் என கூறியதால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேலும், ஆவடியில் இருந்து மாளந்தூர் வரை செல்லும் மாநகரப் பேருந்தை ஏனம்பாக்கம், ஆவாஜிப்பேட்டை வழித்தடத்தில் இயக்க வேண்டும், அத்தங்கிகாவனூர் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை உடனடியாக திறக்க வேண்டும், ஏ.ஜி.எம்.டி பணியை விரைவாக முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கம்பெனி ஒன்றுக்கு அப்ரூவல் வழங்க ரூ.35 லட்சம் ஊழல் நடைபெற்றதாக மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தோம். அந்த பிரச்சனை குறித்து அடுத்த கூட்டத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஒன்றிய குழு உறுப்பினர்களின் கோரிக்கையை 60 நாட்களில் நிறைவேற்றி தருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி கூறினர். முடிவில், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் சுபதாஸ் நன்றி கூறினார்.

    • திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் அருகே உள்ள செல்லம்பட்டறை கிராமத்தை சேர்ந்தவர் இருதயராஜ்.
    • திருவள்ளூர் அருகே விபத்தில் முதியவர் பலியானார்.

    திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் அருகே உள்ள செல்லம்பட்டறை கிராமத்தை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது70). இவர் மோட்டார் சைக்கிளில் செல்லம் பட்டரை நோக்கி சென்றார். நரசிங்கபுரம் கீழச்சேரி சாலையில் சென்றபோது எதிரே கடம்பத்தூர் வெண் மனப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென இருதய ராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் இருதயராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். முனிரத்தினம் படுகாயம் அடைந்தார்.

    • புழல் ஜெயிலில் இன்று காலை அதிகாரிகள் கண் காணிப்பில் ஈடுபட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புழல் ஜெயிலில் இன்று காலை அதிகாரிகள் கண் காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தண்டனை கைதிகள் பிரிவில் உள்ள புதரில் செல்போன் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

    அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த செல்போன் எப்படி இங்கு வந்தது. அதன் மூலம் பேசிய கைதிகள் யார்?யார்? யாரிடம் பேசினார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பூந்தமல்லி அருகே உள்ள சொக்கநல்லூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது.
    • குறித்து தனியார் தொழிற்சாலையின் மேலாளர் முருகன் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார்

    பூந்தமல்லி அருகே உள்ள சொக்கநல்லூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 2 லாரிகளில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான 12 புதிய வாகன டயர்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.

    இது குறித்து தனியார் தொழிற்சாலையின் மேலாளர் முருகன் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இளையராஜா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • ஊத்துக்கோட்டை அண்ணா சிலை, அண்ணா நகர், சக்திவேடு சாலைகளில் இரவு பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ஆந்திராவில் இருந்து வரும் அனைத்து வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே தமிழகத்தில் நுழைய அனுமதிக்கப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை நகரம் தமிழக எல்லையில் உள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதி மற்றும் சத்தியவேடு பகுதிகளில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக சென்னை உட்பட பல பகுதிகளுக்கு தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவு கடத்துவது அதிகரித்து உள்ளது.

    இதனை தடுக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் கல்யான் போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி, இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், சிவா, முருகேசன் பரமசிவம், ஏட்டுகள் சுந்தரம் ராஜன், முருகேசன் ஆகியோர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஊத்துக்கோட்டை அண்ணா சிலை, அண்ணா நகர், சக்திவேடு சாலைகளில் இரவு பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆந்திராவில் இருந்து வரும் அனைத்து வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே தமிழகத்தில் நுழைய அனுமதிக்கப்படுகிறது. கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி எச்சரித்து உள்ளார்.

    ×