என் மலர்
திருவள்ளூர்
- திருத்தணி அருகே சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
- மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கட்டிடம் மேஸ்திரி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பெருகுமி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். (வயது 40) கட்டிட தொழிலாளியான இவர் திருத்தணி பஜாரில் பழங்களை வாங்கிக்கொண்டு உடல்நலம் சரியில்லாத மாமனாரை பார்ப்பதற்காக ஞானமங்கலம் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருத்தணி அருகே சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணனை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கட்டிடம் மேஸ்திரி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திருவள்ளூர் சாட்டிலைட் நகரம் 37.74 சதுர கிலோ மீட்டர் வரை 11 கிராமங்களை இணைத்து உருவாக்கப்படுகிறது.
- சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடத்தின் மேம்பாடு ஆகியவையும் இந்த சாட்டிலைட் நகர பணிகளில் அடங்கும்.
திருவள்ளூர்:
தமிழக சட்டசபை கூட்டத்தின்போது தமிழகத்தில் 5 நகரங்கள் சாட்டிலைட் நகரங்களாக உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திருவள்ளூரை சாட்டிலைட் நகரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் சாட்டிலைட் நகரம் 37.74 சதுர கிலோ மீட்டர் வரை 11 கிராமங்களை இணைத்து உருவாக்கப்படுகிறது.
இதில் அரியபாக்கம், ஆத்துப்பாக்கம், வட மதுரை, சித்தரியம்பாக்கம், பலேஸ்வரம், வேலபாக்கம், ரால்லபாடி, எல்லாபுரம், பெரியபாளையம், பனப்பாக்கம், மூங்கில்பட்டு ஆகிய கிராமங்கள் உள்ளன. மேலும் 11 தாலுகாக்களும் பரிசீலக்கப்பட்டு வருகின்றன.
இந்த 11 தாலுகாக்களில் அம்பத்தூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, மாதவரம், மதுரவாயல், பொன்னேரி, பூந்தமல்லி, திருவொற்றியூர், திருவள்ளூர், திருத்தணி, மற்றும் ஊத்துக்கோட்டை ஆகியவை அடங்கும். திருவள்ளூர் சாட்டிலைட் நகரமானதை யொட்டி அதில் இடம்பெற்றுள்ள கிராமங்களின் அருகில் சுகாதார வசதி, கல்வி வசதி, சாலை இணைப்பு, ரெயில் இணைப்பு, வெள்ள பாதிப்பு தடுப்பு உள்ளிட்ட 11 வகையான வசதிகளை வழங்குவது தொடர்பா கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும் சாட்டிலைட் நகரத்தில் உள்கட்டமைப்பு, மேம்பாட்டு திட்டங்கள், நடைமுறையில் உள்ள பணிகளை செய்து முடிக்கும் செயல்பாடுகள், அறிவிக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் போன்றவை பற்றியும் இந்த பொருளாதார ஆய்வில் பரிசீலிக்கப்பட்டன.
மப்பேட்டில் உருவாகும் மல்டி-மாதிரி தளவாட பூங்கா, சென்னை வெளிவட்ட சாலை, ஒருங்கிணைக் கப்பட்ட நடைபாதை, சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையை அகலப்படுத்துதல், சென்னை-பெங்களூஐ தொழில் வழித்தடத்தின் மேம்பாடு ஆகியவையும் இந்த சாட்டிலைட் நகர பணிகளில் அடங்கும்.
- திருத்தணி அடுத்த பாப்பிரெட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத் தெருவில் பாண்டியன்.
- போதைப் பொருளை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பாப்பிரெட்டிப்பள்ளி கிராமத்தில் தொடர்ந்து குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது திருத்தணி அடுத்த பாப்பிரெட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத் தெருவில் பாண்டியன் (வயது 30) என்பவர் தன்னுடைய கடையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போதைப் பொருளை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தி வேளாண்மை பொறியியல் துறை கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
- 12 கிராம மக்களின் கருத்துக்களை கேட்காமல் கோவில் நிலத்தை கையகப்படுத்தி அரசு கட்டிடம் கட்டுவதை ஏற்க முடியாது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சின்னக் காவனத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சோலையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தி வேளாண்மை பொறியியல் துறை கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சின்னக் காவனம், பெரிய காவனம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காலம் காலமாக கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் தான் தங்களது வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். கோவில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வரும் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்குவதற்கு இந்த இடத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் 12 கிராம மக்களின் கருத்துக்களை கேட்காமல் கோவில் நிலத்தை கையகப்படுத்தி அரசு கட்டிடம் கட்டுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வேளாண்மை பொறியியல் துறை கட்டிடம் கட்டும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி 12 கிராம மக்கள் சார்பில் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தங்களது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் 12 கிராம மக்கள் சார்பில் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
- தன் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய தந்தை முனுசாமி திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி:
திருத்தணி அடுத்த அகூர் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மாலினி (வயது 18). இருவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் மாலினி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரு மணி நேரம் கழித்து வீட்டில் உள்ள உறவினர்கள் அதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து மாலினி உடலை கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை நடத்தி வருவதாகவும், ஒற்றுமையாக வாழ முடியாமல் தவித்ததாகவும், இதனால் மனமுடைந்து மாலினி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தன் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய தந்தை முனுசாமி திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
- அம்பத்தூரை அடுத்த கள்ளிகுப்பத்தில் ஜகதாம்பிகை என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது.
- முனுசாமி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சென்னை அம்பத்தூரை அடுத்த கள்ளிகுப்பத்தில் ஜகதாம்பிகை என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது இந்த இடத்தை அவருடைய மகன் முனுசாமி என்பவர் பராமரித்து வந்தார்.
சில ஆண்டு காலமாக அந்த இடத்தை முனுசாமி கவனிக்காமல் விட்டுவிட்டார். அந்த இடத்தினை சிலர் போலியான ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் தனது நிலத்தினை பார்ப்பதற்கு முனுசாமி கள்ளிக்குப்பம் சென்றுள்ளார். அந்த இடத்தினை வேறு ஒரு நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வந்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முனுசாமி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் புகாருக்குள்ளான இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு உங்கள் இடத்தினை ஆய்வு மேற்கொண்டு இடத்தை உரியவரிடம் ஒப்படைப்பதற்கு அம்பத்தூர் தாசில்தார் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்புவதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் அம்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக முனுசாமியின் உறவினர்கள் ஒன்றிணைந்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாசில்தார் இடம் யாருடையது என்று விசாரணை மேற்கொண்டு உரியவரிடம் இடத்தை அளந்து ஒப்படைக்கப்படும் என தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் தாலுக்கா அலுவலகம் இரண்டு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர் சுபத்ரா தேவி, உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
பொன்னேரி:
பொன்னேரியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே திறமைகளை வெளிப்படுத்தும்விதமாக ஓட்டப்பந்தயம், லெமன் ஸ்பூன், பலூன் உடைத்தல், சிலம்பம், குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர் சுபத்ரா தேவி, உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ், தமிழ்நாடு டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் காத்தவராயன், ஆசிரியர்கள் அர்ச்சுனன், நிர்மலா, நாராயணன், உடற்கல்வி ஆசிரியர் ஜெயராஜ், வட்டார மைய ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில், ஆனந்த், செபஸ்டின் , சிறப்பு பயிற்றுநர்கள் ஆசிரியர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
- நோயின் தாக்குதல் தீவிரமாக இருந்தால் நெற்பயிர் முழுவதுமாக காய்ந்து விடும்.
- கிராம உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வேளாண் விரிவாக்க மையத்தினை தொடர்பு கொள்ளலாம்
பொன்னேரி:
பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் நடப்பு சம்பா பருவத்தில் 24 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் சில பகுதிகளில் இலை சுருட்டு புழு, இலை கருகல் நோய், மற்றும் பாக்டரியல் நோய் தாக்குதல் உள்ளது. நோய் தாக்குதலால் நெற்பயிர்களின் இலை வெண்மை நிறமாக மாறி காய்ந்து விடும். தீவிர தாக்குதலினால் நெற்பயிர் முழுவதுமாக காய்ந்து விடும்.
இலைச்சுருட்டு புழு தாக்குதல் இருந்தால் இதனை கட்டுப்படுத்த வேப்பெண்ணைய் 3 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் அல்லது அசாடிராக்டின் 400 மில்லி மருந்தினை 200 லிட்டர் தண்ணீருடன் கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேலைகளில் இலைகள் முழுவதும் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். பாக்டரியல் இலை கருகல் நோயின் அறிகுறியானது இலைகள் காய்ந்தும் சுருண்டும் காணப்பட்டால், இதனை கட்டுப்படுத்த ஸ்டெப்ரோ மைசின் சல்பேட் ஹெக்டருக்கு 300 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு 1250 கிராம் இந்த மருந்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
இந்த வழிமுறைகளை பின்பற்றி விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாத்து பயனடையலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு அந்தந்த கிராம உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வேளாண் விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றும், மீஞ்சூர் மற்றும் கும்மிடிப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் டில்லி குமார் தெரிவித்தார்.
- சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், தியாகராஜன் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர்.
- கைது செய்யப்பட்ட இருவரிடமும் இருந்து 135 அரசு மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி கம்மாள தெருவில் உள்ள ஒரு பெட்டிக் கடை மற்றும் போந்தவாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடை என இரண்டு இடங்களில் அரசு மதுபானங்கள் இரவு பகலாக விற்பனை செய்வதாக ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர் மற்றும் தியாகராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
எனவே, இவர்களது தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கம்மாள தெருவில் உள்ள பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக அரசு மதுபான பாட்டில்களை விற்பனை செய்த ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன்(வயது23), போந்தவாக்கம் கிராமத்தில் பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக அரசு மதுபான பாட்டில்களை விற்பனை செய்த பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருசங்கு(வயது38) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், இவர்கள் இருவரிடமும் இருந்து 135 அரசு மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். குற்றவாளிகள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
- கடந்த சில நாட்களாக குடிநீர் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு தடவை மட்டும் வருகிறது.
- தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த பழவேற்காடு அருகே கோட்டைக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டிகுப்பம் ஜமீலாபாத், தோணிரவு, செஞ்சி அம்மன் நகர், புது குப்பம் அம்பேத்கர் காலனி, நடுவூர் மாதா குப்பம் உட்பட 15க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.
இங்கு சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொன்னேரி அடுத்த அரசூரில் இருந்து குழாய் வழியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் செல்கிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு தடவை மட்டும் வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றன.
மேலும் கேன் தண்ணீர் ரூ.30-க்கு விலை கொடுத்து வாங்குவதாகவும், லாரி, டிராக்டரில் வரும் குடிநீர் ரூ.5 முதல் ரூ.7 வரை வாங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.
இதேபோல் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அருகில் உள்ள கிராமங்களில் குடத்தில் தண்ணீர் எடுத்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருவள்ளுர் மாவட்ட வருவாய் அலகில், காலியாக உள்ள 93 கிராம உதவியாளர் பணியிடம் நிரப்ப, இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
- விண்ணப்பதாரர்களுக்கும் வருகிற 4-ந் தேதி காலை 10 மணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படவுள்ளது.
திருவள்ளுர்:
திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
திருவள்ளுர் மாவட்ட வருவாய் அலகில், காலியாக உள்ள 93 கிராம உதவியாளர் பணியிடம் நிரப்ப, இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் வருகிற 4-ந் தேதி காலை 10 மணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படவுள்ளது.
இதற்காக, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கலவலக் கண்ணன் செட்டி இந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காக்களுர் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்கோட்டை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமுல்லைவாயில் சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பூந்தமல்லி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரி, திருத்தணி செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பள்ளிப்பட்டு அய்யன் வித்யாஸ்ரம் மேல்நிலைப்பள்ளி, ஆர்.கே.பேட்டை, கோஜன் ஸ்கூல் ஆப் பிசினஸ் அன்டு டெக்னாலஜி, செங்குன்றம் பொன்னேரி மற்றும் மஹரிஷி வித்யா மந்திர்பள்ளி கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய பள்ளிகளில் தேர்வு நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- 2 லாரிகளில் இருந்த வாகன டயர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருடு போனது.
- திருட்டு தொடர்பாக வாணியம்பாடி பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அடுத்த சொக்கநல்லூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு 2 லாரிகளில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான புதிய 12 வாகன டயர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருடு போனது.
இது குறித்து புகாரின் பேரில் வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினர். இந்த திருட்டு தொடர்பாக வாணியம்பாடி பகுதியில் பதுங்கி இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், வினோத், வசந்த் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.






