என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • ஆவாஜிப்பேட்டை கிராமத்தில் மாடு கட்ட குச்சி நட்டபோது ராக்கெட் வெடிகுண்டு கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • குண்டை பரிசோதித்தால் தான் அது எந்த வகையைச் சேர்ந்த குண்டு, எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது தெரியவரும்.

    பெரியபாளையம்:-

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆவாஜிப்பேட்டை கிராமம், மேட்டு தெருவில் வசித்து வருபவர் குப்பன்(50). இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வரும் கூலித் தொழிலாளி ஆவார்.

    இவர் நேற்று காலை தனது மாடுகளைகட்ட வீட்டின் அருகே கடப்பாரையால் குச்சி நட்டார். அப்பொழுதே வித்தியாசமான சத்தம் கேட்டதால் அந்த இடத்தை நோண்டிப் பார்த்தார்.

    அப்போது அந்த இடத்தில் சக்தி வாய்ந்த ராக்கெட் வெடிகுண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக பெரியபாளையம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    எனவே, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த ராக்கெட் வெடிகுண்டை மீட்டு பத்திரமாக கொண்டு சென்று ஊரில் உள்ள மைதானத்தில் மணல் மூட்டைகளை அடிக்கி அதன் நடுவில் பத்திரமாக வைத்தனர்.

    மேலும், இதுகுறித்து திருவள்ளூரில் உள்ள வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து அந்த குண்டை பரிசோதித்தால் தான் அது எந்த வகையைச் சேர்ந்த குண்டு, எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது தெரியவரும்.

    கடந்த வெள்ளிக்கிழமை ஆவாஜிப்பேட்டைக்கு அருகே உள்ள மாளந்தூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் பள்ளம் தோண்டியபோது ராக்கெட் லாஞ்சர் கிடைத்தது.

    அதனை நேற்று முன்தினம் வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்பாக திருவள்ளூருக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், நேற்று ராக்கெட் வெடிகுண்டு கிடைத்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆரணி ஆற்றில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.
    • பருத்தி மேனிகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு ஒன்று அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தும்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த பருத்தி மேனி குப்பம் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராம மக்களுக்கு என்று தனியாக சுடுகாடு இல்லை. இங்கு வசிப்பவர்களில் யாராவது? இறந்து போனால் ஆரணி ஆற்றைக் கடந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று கீழ் மாளிகை பட்டு கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் அவர்களது உடலை அடக்கம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆரணி ஆற்றில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அந்த காலகட்டங்களில் யாராவது? இறந்து போனால் உயிரை பணயம் வைத்து ஆற்றுநீரை கடந்து சென்று இறந்தவர்களின் உடலை கிராம மக்கள் அடக்கம் செய்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இக்கிராமத்தைச் சேர்ந்த மோகனா(வயது55) என்பவர் அகால மரணம் அடைந்தார். இதனால் பருத்தி மேனி குப்பம் கிராம மக்கள் அவரது உடலை இடுப்பு அளவு தண்ணீரில் ஆரணி ஆற்றை கடந்து சென்று கீழ் மாளிகை பட்டு கிராமத்தில் அடக்கம் செய்தனர். எனவே, பருத்தி மேனிகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு ஒன்று அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக வட்டாட்சியர், மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு உள்ளிட்டோருக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் இப்பகுதி மக்களின் மிக முக்கிய தேவையான சுடுகாடு வசதியை செய்து தர ஊராட்சி மன்ற தலைவர் மாலா, ஒன்றிய கவுன்சிலர் புஷ்ப முருகன், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராசன் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து பருத்தி மேனி குப்பம் கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    • பூமிக்கு அடியில் சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட பழங்கால ராக்கெட் லாஞ்சர் குண்டு ஒன்றை கண்டெடுத்தனர்.
    • திருவள்ளூர் அருகே கொண்டு சென்று செயல் இழக்க செய்ய உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறினர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே மாளந்தூர் கிராமத்தில் நேற்று 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது பூமிக்கு அடியில் சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட பழங்கால ராக்கெட் லாஞ்சர் குண்டு ஒன்றை கண்டெடுத்தனர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருவள்ளூரில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அந்த ராக்கெட் லாஞ்சர் குண்டு ஆய்வு செய்தனர். அது எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது? எப்படி இங்கு வந்தது? இதன் சக்தி என்ன என்பது உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

    மேலும், இப்பகுதியில் இன்னும் இதுபோல் வேறு ஏதேனும் ராக்கெட் லாஞ்சர் குண்டு ஏதாவது உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை மேற்கொண்டனர். சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஒரு மணி நேரத்துக்கு மேலாக செய்தனர்.

    இதன் பின்னர், வேறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என கூறிவிட்டு கண்டெடுக்கப்பட்ட ஒரு ராக்கெட் லாஞ்சர் குண்டு பத்திரமாக கொண்டு சென்றனர்.அதனைத் திருவள்ளூர் அருகே கொண்டு சென்று செயல் இழக்க செய்ய உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறினர்.

    • நல்லூர்-விஜயநல்லூர் செல்லும் சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த கிரேன் குப்பம்மாள் மீது மோதியது.
    • கிரேனை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த நல்லூர் படவேட்டம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குப்பம்மாள் (70). இவர் நல்லூர்-விஜயநல்லூர் செல்லும் சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த கிரேன் குப்பம்மாள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் இறந்து போனார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிரேனை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    • அரசு ‌ குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 5000 ரூபாய் வழங்க வேண்டும்.
    • எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள் ஒருவர் கூட கட்சியை விட்டு வெளியேறவில்லை. அ.தி.மு.க. தொண்டர்களின் கட்சி.

    பொன்னேரி:

    பொன்னேரியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    நெசவாளர்களின் துயரத்தை போக்க எம்.ஜி.ஆர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அதனை ஜெயலலிதா கடைப்பிடித்தார். இதன் காரணமாக நெசவாளர்கள் பயனடைந்தனர்.

    அதேபோன்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொரோனா காலகட்டத்தில் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கியபோது குறை கூறிய தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்தபின் ரூ.1000 மட்டும் வழங்கினால் போதும் என்று நினைக்கிறது.

    இதனால், கரும்பு, மஞ்சள், பச்சரிசி, வெல்லம் போன்றவற்றை விளைவித்த ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

    விவசாய தொழிலுக்கு மூடுவிழா செய்துவிட்டு ஏழைகள் வயிற்றில் அடிக்கக்கூடாது. எனவே அரசு ‌ குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 5000 ரூபாய் வழங்க வேண்டும்.

    காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது போன்று சிலர் அங்கும் இங்கும் பதவி சுகத்திற்காக செல்வார்கள்.

    ஆனால் எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள் ஒருவர் கூட கட்சியை விட்டு வெளியேறவில்லை. அ.தி.மு.க. தொண்டர்களின் கட்சி.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும். பாராளுமன்ற தேர்தலிலும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது நிச்சயம். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள வி.சி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகியவையும் அதிருப்தியில் இருக்கின்றன.

    அந்த கூட்டணியில் உள்ள 11 கட்சிகளும் கட்டி வைத்துள்ள நெல்லிக்காய் மூட்டை. அதை அவிழ்த்து விட்டால் சிதறி போய்விடும். தி.மு.க. கூட்டணி வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்குள் தேய்ந்து போய்விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரகசிய தகவலின் அடிப்படையில் ஆரணி போலீசார் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
    • ஏரியில் குட்கா,புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிப்பு

    ஊத்துக்கோட்டை:

    தமிழக அரசு குட்கா,புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்ரடெண்ட் சி.பாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் சிறப்பு காவல்படை போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா,புகையிலை பொருட்கள் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணிக்க வருகின்றனர்.

    இந்நிலையில்,நேற்று மாலை சிறப்பு காவல் படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவா,முருகவேல்,தலைமை காவலர்கள் கமலக்கண்ணன்,தமிழரசன் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னம்பேடு கிராமம்,பெரிய காலனி அருகே வாகனங்களை கண்காணித்து வந்தனர்.

    அப்பொழுது அவ்வழியே வந்த ஒரு மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் ஒரு பையில் இருபது கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் பொன்ராஜ் (வயது48) என்பதும், திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. 


    மேலும் சின்னம்பேடு ஏரியில் குட்கா,புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து பல்வேறு கடைகளில் விற்பனை செய்வதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஏரியில் பதுக்கி வைத்திருந்த குட்கா,புகையிலை உள்ளிட்ட 180 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த ஆரணி காவல் நிலைய போலீசார், வழக்கு பதிவு செய்து, குட்கா வியாபாரி பொன்ராஜை கைது செய்ததுடன், பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • மின் கம்ப வயரில் இறந்தபடி மிகப் பெரிய வவ்வால் தொங்கிக் கொண்டிருந்தது.
    • மின் கம்ப வயரில் அடிபட்டு இறந்துவிட்டதாக பருந்து அளவில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பொன்னியம்மன் கோயில் தெரு மின் கம்ப வயரில் இறந்தபடி மிகப் பெரிய வவ்வால் தொங்கிக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு அரிதாக காணப்படும் மிகப்பெரிய வவ்வாலை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்து செல்கின்றனர். இவ்வவ்வால் வழி தவறி ஊருக்குள் வந்ததால் மின் கம்ப வயரில் அடிபட்டு இறந்துவிட்டதாகவும் பருந்து அளவில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • ஊத்துக்கோட்டையில் 4 ரோடுகள் சந்திப்பில் அண்ணா சிலை உள்ளது.
    • போக்குவரத்து சிக்னல் கம்பம் இடிந்து விழுந்ததால் சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் 4 ரோடுகள் சந்திப்பில் அண்ணா சிலை உள்ளது. இதை ஒட்டி வாகன நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து சிக்னல் கம்பம் உள்ளது. சுமார் 20 அடி உயரம் கொண்ட இந்த போக்குவரத்து சிக்னல் கம்பம் 20 வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது.

    4 ரோடு சந்திப்பு எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். நேற்று இரவு 7 மணி அளவில் போக்குவரத்து சிக்னல் கம்பம் திடீரென்று உடைந்து விழுந்தது. இதை கண்ட அங்கிருந்த மக்கள் அலறியடித்து சிதறி ஓடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே மின் சப்ளை துண்டிக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    போக்குவரத்து சிக்னல் கம்பம் இடிந்து விழுந்ததால் சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் இடிந்து விழுந்த டிராபிக் கம்பத்தை அகற்றினர். அதன் பின்னர் வாகன போக்குவரத்து சீர் அடைந்தது.

    • திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஸ்டாலின் நகரைச் சேர்ந்த குமரேசன்.
    • தகராறு மோதலாக மாறியதால் அருகில் பாஸ்ட்புட் கடையில் இருந்த கரண்டியை எடுத்த குமரேசன், ஜெகனை கையில் தாக்கினான்.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஸ்டாலின் நகரைச் சேர்ந்த குமரேசன் (வயது29), அனுமந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்கிற லோகேஷ் ஆகிய இருவரும் நண்பர்கள் ஆவர்.

    கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி இவர்கள் இருவரும் திருத்தணி பஸ் நிலையம் அருகில் கள்ளச் சந்தையில் பார்த்திபன் என்பவர் மது பானம் விற்பனை செய்ததை வாங்கி குடித்துள்ளனர்.

    அப்போது மது போதையில் முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியாக சென்ற வாலிபரின் செல்போன் மற்றும் ரூ.500 பணத்தை பிடுங்கி தகராறில் ஈடுபட்டனர். அப்போது குமரேசன் செல்போனை திரும்ப அந்த வாலிபரிடமே கொடுத்ததால் குமரேசன் மற்றும் ஜெகன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    அந்த தகராறு மோதலாக மாறியதால் அருகில் பாஸ்ட்புட் கடையில் இருந்த கரண்டியை எடுத்த குமரேசன், ஜெகனை கையில் தாக்கினான். இதில் பலத்த காயம் அடைந்த ஜெகன் அருகில் இருந்த கடாயை எடுத்து குமரசேன் தலையில் பலமாக தாக்கியதில் அவன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தான்.

    இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவ மனைக்கு குமரேசனை கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பலத்த காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த குமரேசன் ஒரு மாதத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஜெகன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்த திருத்தணி போலீசார் அதை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருவள்ளூரில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் சென்று ராக்கெட் லாஞ்சர் குண்டை ஆய்வு செய்தனர்
    • இதுபோல் வேறு ஏதேனும் ராக்கெட் லாஞ்சர் குண்டு ஏதாவது உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே மாளந்தூர் கிராமத்தில் நேற்று 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது நிலத்தை தோண்டியபோது சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட பழங்கால ராக்கெட் லாஞ்சர் ஒன்றை கண்டெடுத்தனர்.

    இதுகுறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருவள்ளூரில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த ராக்கெட் லாஞ்சர் குண்டை ஆய்வு செய்தனர். அது எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது எப்படி இங்கு வந்தது இதன் சக்தி என்ன என்பது உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

    மேலும், இப்பகுதியில் இன்னும் இதுபோல் வேறு ஏதேனும் ராக்கெட் லாஞ்சர் குண்டு ஏதாவது உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை மேற்கொண்டனர். சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஒரு மணி நேரத்துக்கு மேலாக சோதனை மேற்கொண்டனர். இதன் பின்னர், வேறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என கூறிவிட்டு கண்டெடுக்கப்பட்ட ஒரு ராக்கெட் லாஞ்சர் குண்டை பத்திரமாக கொண்டு சென்றனர். அதனைத் திருவள்ளூர் அருகே கொண்டு சென்று செயலிழக்க செய்ய உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறினர். இச்சம்பவம் இப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×