என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.
    • வங்கக்கடலில் புயல் உருவாக உள்ள நிலையில் எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

    காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள் தங்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்திட வேண்டும் என்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வங்கக்கடலில் புயல் உருவாக உள்ள நிலையில் எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணிகண்டன்.
    • 3 திருட்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணிகண்டன். இவர் இரவு மோட்டார் சைக்கிளில் சீதஞ்சேரி பஜார் வீதிக்கு சென்றார். அங்குள்ள ஓட்டல் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார். சிறது நேரம்கழித்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள்மாயமாகி இருந்தது.

    இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பென்னாலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளை திருடியது பூண்டி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வா, கில்பர்ட் கிரேஸ் ராஜ் , தங்கதுரை என்பது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 3 திருட்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந் தேதி காலை மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அருகே உள்ள சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி கிராமத்தில் புகழ்பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வார செவ்வாய்க்கிழமைகளில் வந்து சுவாமி தரிசனம் செய்து விளக்கு ஏற்றினால் பக்தர்களின் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இவ்வாறு சிறப்புமிக்க இந்த கோவில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த திருக்கோயிலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 19 ஆண்டுகளுக்கு பிறகு மூலவர் சந்நிதி, அண்ணாமலையார் சந்நிதி உள்ளிட்ட சந்நிதிகள் புதுப்பித்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக எஸ்.எஸ்.கியூ லைன் அமைத்தல்,திருக்குளம் பாதுகாப்பு வேலி அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந் தேதி காலை மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    விழாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் வசதிக்காக 4 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள், 32 இடங்களில் தற்காலிக கழிப்பறைகள், 25 இடங்களில் குடிநீர் வசதி, 7 இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரம், 2 இடங்களில் காவல் கட்டுப்பாட்டு அறை, 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், இரண்டு இடங்களில் அகன்ற டிவி திரைகள், சுமார் 2 கிமீ தூரத்திற்கு பேரிகாட்,4 இடங்களில் தற்காலிக மருத்துவ முகாம் பந்தல், ஒரு இடத்தில் தீயணைப்பு பந்தல் ஆகிய வசதிகள் என இந்துசமய அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெற்றது. கடந்த மாதம் கந்த சஷ்டி விழாவும் இக்கோவிலில் சிறப்பாக நடைபெற்றது

    இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் விடியற்காலை முதல் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    எனவே, சிறப்புமிக்க இக்கோவிலில் விழா காலங்களில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு, ஆந்திர மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்தை பின்பற்றி பக்தர்களுக்கான காத்திருக்கும் அறைகளை போர்க்கால அடிப்படையில் கட்டிக் கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது
    • பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு மக்களுடன் உரையாடினர்.

    பொன்னேரி:

    அரசியல் சாசன சட்டம் இயற்றிய தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டியலின மக்களை சந்தித்து உரையாடும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி அத்திப்பட்டு பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கர்நாடக மாநில கோலார் மக்களவை உறுப்பினர் முனுசாமி மற்றும் பாஜக மாநில எஸ்.சி அணி தலைவர் தடா. பெரியசாமி, மாவட்ட பொது செயலாளர், அன்பாலயா சிவகுமார், இளைஞர் அணி தலைவர் பிரவீன், பொன் பாஸ்கர், சிவ கோகுலகிருஷ்ணன் கோட்டி மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு மக்களுடன் உரையாடினர். இந்நிகழ்ச்சியில் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    • திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம் உள்ளது.
    • கல்வி மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ மாணிக்கம், மாவட்ட இணை செயலாளர் பரிமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம் உள்ளது.

    நேற்று இரவு இந்த அலுவலகம் முன்பு பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் அமைச்சுப் பணியாளர்களுக்கு அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேஷ் பாபு, கல்வி மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ மாணிக்கம், மாவட்ட இணை செயலாளர் பரிமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மூத்த ஆலோசகர் மதியழகன், மாநில இணை செயலாளர் காஜா மொய்தீன் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான ஊதியம் வழங்காததை கண்டித்தும், ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினார்கள்.

    • மீஞ்சூர் அருகே உள்ள சோம்பட்டு பகுதிைய சேர்ந்தவர் சுகுணா.
    • தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரை சந்திர சேகர் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அருகே உள்ள சோம்பட்டு பகுதிைய சேர்ந்தவர் சுகுணா. மின்கசிவு காரணமான இவரது குடிசை வீடு திடீரென தீப்பற்றியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். சிறிது நேரத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் தங்க நகை நாசமானது.

    தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரை சந்திர சேகர் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். அப்போது சோம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம், வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபா, கிராம நிர்வாக அலுவலர் உஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • திருமழிசையை சேர்ந்தவர் சதீஷ். பிரபல ரவுடி.
    • வியாபாரி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார்.

    திருவள்ளூர்:

    திருமழிசையை சேர்ந்தவர் சதீஷ். பிரபல ரவுடி. இவர் அங்குள்ள பழைய இரும்பு கடைக்கு சென்று வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார்.

    இதுகுறித்து வியாபாரி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இளையராஜா வழக்குப்பதிவு செய்து ரவுடி சதீஷை கைது செய்து விசாரித்து வருகிறார்.

    • கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
    • கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த அமரம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 27). இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று வேலைக்கு செல்வதாக இருசக்கர வாகனத்தில் அமரம்பேடு பகுதியில் இருந்து சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஐயர் கண்டிகை அருகே திடீரென லாரியில் மோதி காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிகிச்சை பயனின்றி சரவணன் உயிரிழந்தார். இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை நோக்கி வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியதில் இரண்டு வேனின் முன்பகுதியும் நொறுங்கியது.
    • வேனில் பயணம் செய்த டிரைவர்கள் உள்பட 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து ஊழியர்களை ஏற்றி கொண்டு சென்னை நோக்கி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரம் அருகே சென்று கொண்டிருந்த போது தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றி சென்ற வேன் ஒன்று போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்ததால் அந்த பகுதியில் சாலையின் எதிர் திசையில் சென்றது.

    அப்போது சென்னை நோக்கி வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியதில் இரண்டு வேனின் முன்பகுதியும் நொறுங்கியது. இதில் வேனில் பயணம் செய்த டிரைவர்கள் உள்பட 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    • இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது.
    • சிறுவாபுரி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் இன்று மூன்றாவது வார கார்த்திகை சோமவாரம் மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு 70 ஆண்டுகளுக்கு பின்னர் 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.

    இதை முன்னிட்டு இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது. இன்று மதியம் மகா பூர்ணாகுதி நடைபெற்றது. இதன் பின்னர், புனித நீர் அடங்கிய கலசங்கள் பிரகார புறப்பாடு நடைபெற்றது. பின்னர், மூலவருக்கு 108 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின்னர், மூலவருக்கு அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், சிறுவாபுரி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதன் பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவிலின் தக்கார் சித்ராதேவி தலைமையில் கோயிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • மதியம் உச்சிக்கால பூஜை, நெய்வேத்திய பிரசாதம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாலையில் மலர் பூஜை, மகா தீபாராதனை, ஐயப்ப பஜனை, இரவு அன்னதானம் நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பிஞ்சலார் தெருவில் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் 5-ம் ஆண்டு விளக்கு பூஜை மற்றும் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், மூலவருக்கு சந்தன காப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், பக்தர்களுக்கு நெய்வேத்திய பிரசாதம், கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் உச்சிக்கால பூஜை, நெய்வேத்திய பிரசாதம், அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாலையில் மலர் பூஜை, மகா தீபாராதனை, ஐயப்ப பஜனை, இரவு அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், பூக்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட சுவாமி, வாண வேடிக்கைகளுடன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்நிகழ்ச்சியின்போது விரதம் இருந்த மாளிகைமார்கள் விளக்குகளை தட்டில் ஏந்திய வண்ணம் உலா வந்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சாஸ்தா சேவா சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பஸ் டிரைவர் லாரியை முந்திச்செல்ல பஸ்சின் வேகத்தை அதிகரித்ததால் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்தது.
    • பஸ் சின்னாபின்னமாக நொறுங்கியதால் காயம் அடைந்த பயணிகளால் வெளியே வர முடியவில்லை.

    கும்மிடிப்பூண்டி:

    சென்னை கவரப்பேட்டை அருகே தச்சூரில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் 3 பேர் பலியானார்கள். அதன் விவரம் வருமாறு:-

    ஐதராபாத்தில் இருந்து சொகுசு ஆம்னி பஸ் ஒன்று சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. இதில் 30 பேர் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 5 மணியளவில் ஆம்னி பஸ், சென்னை கவரப்பேட்டை அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்ரோடு மேம்பால பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அதே நேரத்தில் ஆந்திராவில் இருந்து லாரி ஒன்று சென்னை நோக்கி வந்தது. ஆம்னி பஸ்சும், லாரியும் சென்னை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. இதனால் பஸ்சும் லாரியும் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக சென்றது.

    லாரி முன்னே செல்ல ஆம்னி பஸ் அதன் பின்னால் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து பஸ் டிரைவர் லாரியை முந்திச்செல்ல பஸ்சின் வேகத்தை அதிகரித்தார். இதனால் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது.

    பஸ் மோதிய வேகத்தில் லாரி நொறுங்கி தலைகீழாக கவிழ்ந்தது. அதே நேரத்தில் பஸ்சும் நொறுங்கி சின்னா பின்னமானது. அதன் முன் பகுதியும், பக்கவாட்டு பகுதியும் பலத்த சேதம் அடைந்து கண்ணாடிகள் நொறுங்கின. நொடிப்பொழுதில் இந்த விபத்து நடந்து முடிந்து விட்டது.

    இந்த கோர விபத்தில் சிக்கிய பயணிகள் கூச்சல் போட்டு உயிருக்கு போராடினார்கள். பஸ் சின்னா பின்னமாக நொறுங்கியதால் காயம் அடைந்த பயணிகளால் வெளியே வர முடியவில்லை.

    இதுகுறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக கவரப்பேட்டை போலீசாரும், பொன்னேரி தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் பஸ்சின் பாகங்களை வெட்டி அதில் சிக்கிய பயணிகளை மீட்டனர்.

    இந்த விபத்தில் ஆம்னி பஸ்சில் இருந்த சென்னையை சேர்ந்த பயணிகள் தொக்கலா சதீஷ்குமார் (வயது 45), தும்மலா ரோஷித் (35) மற்றும் ஆந்திராவை சேர்ந்த பஸ் கிளீனர் ஸ்ரீதர் (35) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் பஸ்சில் இருந்த பயணிகள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மகி என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆனது. பலியான மகி கும்மிடிப்பூண்டி புதுவாயல் பகுதியை சேர்ந்தவர். இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர் தனது கிராமத்தில் இருந்து லிப்ட் கேட்டு பஸ்சில் ஏறினார். சிறிது நேரத்திலேயே அவர் விபத்தில் சிக்கி பலியாகி விட்டார். ஆஸ்பத்திரியில் மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விபத்தை ஏற்படுத்திய பெங்களூருவை சேர்ந்த பஸ் டிரைவர் கிஷோர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த விபத்து காரணமாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மேம்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தி வாகனங்களை சர்வீஸ் சாலை வழியாக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் பஸ்சையும், லாரியையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    ×