என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொன்னேரி அருகே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அரசு கட்டிடம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
- கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தி வேளாண்மை பொறியியல் துறை கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
- 12 கிராம மக்களின் கருத்துக்களை கேட்காமல் கோவில் நிலத்தை கையகப்படுத்தி அரசு கட்டிடம் கட்டுவதை ஏற்க முடியாது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சின்னக் காவனத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சோலையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தி வேளாண்மை பொறியியல் துறை கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சின்னக் காவனம், பெரிய காவனம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காலம் காலமாக கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் தான் தங்களது வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். கோவில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வரும் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்குவதற்கு இந்த இடத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் 12 கிராம மக்களின் கருத்துக்களை கேட்காமல் கோவில் நிலத்தை கையகப்படுத்தி அரசு கட்டிடம் கட்டுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வேளாண்மை பொறியியல் துறை கட்டிடம் கட்டும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி 12 கிராம மக்கள் சார்பில் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தங்களது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் 12 கிராம மக்கள் சார்பில் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.






