என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மீஞ்சூர் அருகே கால்வாய் தண்ணீரில் மூட்டை மூட்டையாக வீசப்பட்ட 'ரஸ்க்' பாக்கெட்டுகள்
- கால்வாய் தண்ணீரில் மூட்டை மூட்டையாக ரஸ்க் பாக்கெட்டுகள் வீசப்பட்டு கிடந்தன.
- நாலூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் தண்ணீரில் வீசப்பட்ட ரஸ்க் பாக்கெட் மூட்டைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அருகே நாலூர் ஏரி உள்ளது. இப்பகுதியில் பொன்னேரி-மீஞ்சூர் நெடுஞ்சாலையில் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
இந்த நிலையில் இந்த கால்வாய் தண்ணீரில் மூட்டை மூட்டையாக ரஸ்க் பாக்கெட்டுகள் வீசப்பட்டு கிடந்தன. பல மூட்டைகளில் இருந்து சிதறிய ரஸ்க் பாக்கெட்டுகள் தண்ணீரில் மிதக்கிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ரஸ்க் பாக்கெட்டுகளை எடுத்து பார்த்தபோது அவை காலாவதியானது தெரிந்தது. அவை ரூ.10 மதிப்புடையது. கடந்த 2020-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டவை ஆகும்.
ரஸ்க் பாக்கெட்டுகள் காலாவதி ஆனதால் அதனை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் யாரேனும் மொத்தமாக கொண்டு கால்வாய் தண்ணீரில் வீசி இருக்கலாம் என்று தெரிகிறது.
நாலூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் தண்ணீரில் வீசப்பட்ட ரஸ்க் பாக்கெட் மூட்டைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






