என் மலர்
திருவள்ளூர்
- மின்வேலியில் சிக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விவசாய நிலத்தில் மின்வேலி வைத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வலசை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர் (வயது37).கூலித் தொழிலாளி. நேற்று இரவு அவர் அருகே உள்ள வயலுக்கு சென்றார். அப்போது அங்குள்ள வேர்க்கடலை தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் நுழையாமல் இருக்க மின்வேலி அமைத்து இருந்தனர்.
இதனை கவனிக்காமல் தனசேகர் சென்றபோது மின்வேலியில் இருந்த மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
நீண்ட நேரம் தனசேகர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி நித்யா மற்றும் அவரது தங்கை அமலா ஆகியோர் வயல்வெளிக்கு சென்று தேடினர். அப்போது மின்வேலியில் சிக்கி தனசேகர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்க முயன்ற அமலா மீதும் மின்சாரம் தாக்கியது.
தகவல் அறிந்ததும் மணவாளநகர் போலீசார் விரைந்து வந்து பலியான தனசேகரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அமலாவுக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விவசாய நிலத்தில் மின்வேலி வைத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்வேலியில் சிக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பச்சை பயிறு மூட்டையின் மீது தார்பாய் போடுவதற்காக சென்றபோது மின்னல் தாக்கியது.
- காயமடைந்த இருவரும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பொன்னேரி:
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கடந்த இரு தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து குளிர்வித்து வருகிறது. அவ்வகையில் இன்று மாலை பொன்னேரி சுற்று வட்டார பகுதியில் திடீரென இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொன்னேரி அடுத்த பெரும்பேடு விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த விவசாயி சரவணன் (45), செங்கழுநீர் மேடு பகுதியை சேர்ந்த வேம்புலி (60), பெரும்பேடு பகுதியை சேர்ந்த ஆதிலட்சுமி (40) ஆகியோர் வயலில் பச்சைப்பயிறு அறுவடை செய்து கொண்டிருந்தபோது திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சரவணன் பச்சை பயிறு மூட்டையின் மீது தார்பாய் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அருகில் வேலை செய்து கொண்டிருந்த ஆதிலட்சுமி மயங்கி விழுந்தார். வேம்புலிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் இருவரையும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மின்னல் தாக்கி இறந்த சரவணன் என்பவருக்கு சரிதா என்ற மனைவியும் மஞ்சு(23), விக்னேஷ்(18) என்ற இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். திடீரென மின்னல் தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ராதாகிருஷ்ணனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
- சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராதாகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
செங்குன்றம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள ஏரிக்கரை பாக்கம், மேல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது66). இவர் கடந்த 2001-ம் ஆண்டில் ஒரு பாலியல் வழக்கில் சென்னை ஆயிரம் விளக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தண்டனை பெற்ற ராதாகிருஷ்ணன் புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ராதாகிருஷ்ணனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராதாகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஆரணி ஆற்றின் முகத்துவார பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
- திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி:
பழவேற்காடு, குளத்து மேடு ஆரணி ஆற்றின் முகத்துவார பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர்யார்? எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குறைந்த அழுத்த மின்சார சப்ளை நடைபெறுவதால் அடிக்கடி மின்சாதன பொருட்கள் பழுதடைந்து பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
- சுமார் ரூ.3 லட்சம் செலவில் விநாயகர் கோவில் தெரு முனையில் டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கும் பணி கடந்த பத்து நாட்களாக நடைபெற்றது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் ஊராட்சியில் உள்ள பெரிய காலணியில் விநாயகர் கோவில் தெரு மற்றும் பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பகுதியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும், குறைந்த அழுத்த மின்சார சப்ளை நடைபெறுவதால் அடிக்கடி மின்சாதன பொருட்கள் பழுதடைந்து பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது குறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி உதயகுமார், துணைத் தலைவர் மேனகா பிரேம் குமார் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் முறையிட்டனர். இந்நிலையில், சுமார் ரூ.3 லட்சம் செலவில் விநாயகர் கோவில் தெரு முனையில் டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கும் பணி கடந்த பத்து நாட்களாக நடைபெற்றது.
இந்நிலையில், இன்று மதியம் மேற்கண்ட இரண்டு தெருகளில் உள்ள மின் இணைப்புகளை டிரான்ஸ்பார்மரில் இணைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது மூன்று நபர்கள் வந்து டிரான்ஸ்பார்மர் இங்கு அமைக்க கூடாது. மின்வாரிய ஊழியர்கள் யாரும்? பணி செய்யக்கூடாது என்று தகாத வார்த்தைகளால் பேசி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
இதனால் அப்பணி பாதியில் நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கண்ட இரண்டு தெருகளில் வசித்து வரும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து மேற்கண்ட மூன்று நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு பிரச்சனை ஏற்பட்டதால் மின்வாரிய ஊழியர்கள் பயந்து போய் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக டிரான்ஸ்பார்மர் பணியை முடித்து சீரான மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என தங்களது கோரிக்கையை முன்வைத்து கன்னிகைப்பேர் சர்ச்சை எதிரே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சாலையின் இருபுறமும் ஸ்தம்பித்து நின்றது.தகவல் அறிந்து பெரியப்பாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்று அப்பகுதி மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் இப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.
- ஆந்திராவில் இருந்து அந்த வழியே சந்தேகத்திற்கு இடமான ஒரு டிப்பர் லாரி வந்தது.
- போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். இதில் லாரியில் உரிய அனுமதி இன்றி ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
பாதிரிவேடு:
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பஜாரில் நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் பாதிரிவேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து அந்த வழியே சந்தேகத்திற்கு இடமான ஒரு டிப்பர் லாரி வந்தது. அதை போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். இதில் லாரியில் உரிய அனுமதி இன்றி ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான பரணம்பேடு கிராமத்தை சேர்ந்த தங்கபிரகாசம் (வயது 38), அல்லிப்பூகுளத்தை சேர்ந்த கிளீனரான நாகராஜ் (29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மனு மீது எந்தவித நடவடிக்கை எடுக்காததால் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
- ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
பொன்னேரி:
சோழவரம் அடுத்த பண்டிகாவனுர் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தி விநாயகர் நகரில் சுமார் 50 ஆண்டுகளாக 100 குடும்பத்தைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் இந்த ஊராட்சியில் இருந்து மஞ்சங்கரணை ஊராட்சியில் சுடுகாட்டை பயன்படுத்தி வருவதால் பல்வேறு பிரச்சனை ஏற்படுவதாக கூறி தங்களுக்கு தாங்கள் பகுதியிலே சுடுகாடு மற்றும் சாலை வசதி அமைத்து தரக்கோரி பல்வேறு மனு அளித்தும் மனு மீது எந்தவித நடவடிக்கை எடுக்காததால் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்பு அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணனிடம் மனு அளித்தனர் மனுமீது ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் விரைவில் தாங்கள் பகுதிக்கு சுடுகாடு மற்றும் சாலை வசதி அமைக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என நரிக்குறவர் இன மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
- இறந்து போன வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- அஜய்குமார் சிங்கின் மர்ம மரணம் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
குன்றத்தூர், நத்தம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். இவர் தனது வீட்டின் அருகே காரை நிறுத்தி இருந்தார்.
நேற்று இரவு நிறுத்தப்பட்ட காரில் இருந்து திடீரென விளக்குகள் எரிந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் காரின் மீது போடப்பட்டு இருந்த கவரை நீக்கி பார்த்த போது காருக்குள் டிரைவர் இருக்கையில் வாலிபர் ஒருவர் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்து போன வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்து போன வாலிபர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஜய்குமார் சிங்(வயது 20) என்பது தெரிந்தது. அவர் தனது அக்காளின் குடும்பத்துடன் கடந்த 8 மாதமாக திருமுடி வாக்கத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததால் கடந்த வாரம் வேலையில் இருந்து நிர்வாகத்தினர் நிறுத்தி விட்டதாக தெரிகிறது. பின்னர் அதே பகுதியில் வேறு ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து உள்ளார். அங்கும் அஜய்குமார் சிங்கின் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததால் நேற்று காலை 9 மணியளவில் வேலையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். இதன் பின்னர் அவர் நிறுத்தப்பட்டு இருந்த காரில் மர்மமாக இறந்து உள்ளார்.
பூட்டப்பட்ட காருக்குள் அஜய்குமார் சிங் எதற்காக வந்தார். டிரைவர் இருக்கையில் இருந்த போது அவர் சீட்பெல்ட்டும் போட்டு உள்ளார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அஜய்குமார் சிங்கின் மர்ம மரணம் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த சில ஆண்டுகளாகவே ரவிக்கு சற்று மனநலம் பாதிப்பு இருந்ததாக தெரிகிறது.
- சாப்பாடு கொடுக்க தாமதமானதால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவரே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த வஞ்சிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மடிமை கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 65). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (50).
நேற்று இரவு மனைவியிடம் சமைத்து இருந்த மீன் குழம்பு சாப்பாட்டை கொண்டு வரும்படி ரவி கூறினார். ஆனால் சாப்பாட்டை எடுத்து வர ஜோதி தாமதம் செய்ததாக தெரிகிறது.
இதனை ரவி கண்டித்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் கணவன்- மனைவியிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவி இரும்பு கம்பியால் மனைவி ஜோதியின் தலையில் தாக்கினார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜோதி ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அலறல் சத்தம் கேட்டு வீட்டின் மாடியில் உள்ள அறையில் இருந்த மகன்கள் வந்து பார்த்த போது தாய் ஜோதி உயிருக்கு போராடியபடி கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது வரும் வழியிலேயே ஜோதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
கைதான ரவி வாய்பேச முடியாதவர் ஆவார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் இருவருக்கு வாய்பேச முடியாத நிலை உள்ளது. ஜோதி கூலிவேலை மற்றும் விவசாயம் செய்து குடும்ப செலவுகளை சமாளித்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே ரவிக்கு சற்று மனநலம் பாதிப்பு இருந்ததாக தெரிகிறது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்து உள்ளார். இதற்கு முன்பும் இரண்டு முறை மனைவி ஜோதியை, ரவி தாக்கி உள்ளார். அப்போது லேசான காயத்துடன் தப்பிய ஜோதி நேற்று ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார்.
சாப்பாடு கொடுக்க தாமதமானதால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவரே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா பிஜேபி குமார் தலைமையில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பாரதிய ஜனதா கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா பிஜேபி குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கே ஆர் வி அறக்கட்டளை வெங்கடேசன் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு பொது மக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் நந்தன், பொதுச் செயலாளர் பொன் பாஸ்கர், நகர தலைவர் சிவகுமார் நகர பொதுச் செயலாளர் ரமேஷ், ஓ பி சி அணி துணை தலைவர் கோவிந்தராஜ், வழக்கறிஞர் வேல் மாரியப்பன், மகளிர் அணி ராஜி, மகேஸ்வரி, தடபெரும்பாக்கம் சங்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மீஞ்சூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மத்திய அரசு வங்கி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பாக மீஞ்சூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மத்திய அரசு வங்கி முன்பு முற்றுகை போராட்டம் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாநில துணை தலைவர் டி எல் சதாசிவலிங்கம், நகர தலைவர் கார்த்திகேயன் துரைவேல் பாண்டியன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஏலியம்பேடு மகேஷ் , வழக்கறிஞர் சம்பத், மகிளா காங்கிரஸ் ஜோதி சுதாகர், எழிலரசி, மீஞ்சூர் அருண் சோழவரம் கோவிந்தராஜ், ஏ ஐ டி யு சி மாநிலத் துணைத் தலைவர் எம்பி தாமோதரன், அத்திப்பட்டு சாய் சரவணன், ஆரணி சுகுமார், அத்திப்பட்டு புருஷோத்தமன், தீபக், சஞ்சய் காந்தி நந்தகுமார், மாநில பேச்சாளர் வில்சன், மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- படிக்கும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஜெயலட்சுமிக்கு ஆறுதல் கூறினர்.
- தந்தை இறந்த சோகத்திலும் அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் மாணவி தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், பெரியமேட்டுப் பாளையம் 1-வது தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது57). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பவானி.
இவர்களது மகள்கள் பொற்செல்வி, ஜெயலட்சமி. இவர்களில் பொற்செல்வி தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். ஜெயலட்சமி காலடிப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார்.
மூர்த்தி தனது மகள் ஜெயலட்சுமியிடம், படித்தால்தான் வாழ்க்கை யில் முன்னேற முடியும், எந்த சூழ்நிலையிலும் படிப்பை விடக்கூடாது என்று அடிக்கடி கூறி வந்தார். தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இன்று கடைசி தேர்வு என்பதால் ஜெயலட்சுமி தேர்வுக்கு தயாராகி வந்தார்.
இந்நிலையில் மூர்த்திக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் அவர் இறந்து போனார். இதனால் கடைசி தேர்வு எழுத தயாரான ஜெயலட்சுமி நிலைகுலைந்தார். தந்தை இறந்த துக்கத்தில் எப்படி தேர்வு எழுத செல்வது என்று கலங்கினார்.
எனினும் தந்தையின் கல்வி ஆசையை நிறைவேற்றும் வகையில் இன்று காலை ஜெயலட்சுமி துக்கத்திலும் கடைசி தேர்வை எழுத பள்ளிக்கு சென்றார். இதுபற்றி அறிந்ததும் அவருடன் படிக்கும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஜெயலட்சுமிக்கு ஆறுதல் கூறினர். பின்னர் ஜெயலட்சுமி தனது கடைசி பரீட்சையை எழுதினார்.
இதுபற்றி அவர் கூறும்போது, எனது தந்தை எப்போதும் படிப்பில் கவனம் செலுத்தும்படி கூறுவார். அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் தேர்வு எழுதினேன் என்றார். இன்று மாலை மூர்த்தியின் இறுதி சடங்கு நடைபெறு கிறது. தந்தை இறந்த சோகத்திலும் அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் மாணவி தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






