என் மலர்
தேனி
- கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கம்பம்:
சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 52). இவர் குடும்பத்துடன் நெசவு வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஷாலினி (24) க்கும் தேனி மாவட்டம் கம்பம் அருகே சுக்காங்கால்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணராஜா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பேரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
கணவருடன் தனித்தகுடித்தம் நடத்தி வந்தார். இந்த நிலையில் அவரது மனைவிக்கு தெரியாமல் ரூ.3 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாலினி தனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சிறிது நேரத்தில் வீட்டுக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து ஷாலினியை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
- இந்த வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் காபில்கான் (வயது 22). இவர் பட்டபடிப்பு முடித்து விட்டு அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருந்தார். அவரது நண்பர் முகமது சமீரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் சமீரின் சகோதரி ஷபானா என்பவருடன் காபில்கான் செல்போனில் பேசி வந்துள்ளார்.
இதனை ஷபானாவின் கணவர் அலாவுதீன் கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இந்த நிலையில் வண்டிபேட்டை பகுதியில் காபில்கான் நின்று கொண்டு இருந்தபோது முகமது சமீர் மற்றும் அலாவுதீன் ஆகியோருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் காபில்கானை இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டினர். மேலும் உடலில் சரமாரியாக குத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து சின்னமனூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை வழக்கில் தொடர்புடைய முகமது சமீர், அலாவுதீன், ஷபானா ஆகிய 3 பேரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.
- மூங்கிலாற்று பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடித்து திரும்பிய தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் புலிகள் நடமாட்டத்தை பார்த்துள்ளனர்
- டைமுக் பகுதியில் புலி நடமாடியதால் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் பீதி அடைந்தனர்.
கூடலூர்:
கேரள-தமிழக எல்லையான குமுளி அருகே மூங்கிலாற்று பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடித்து திரும்பிய தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் புலிகள் நடமாட்டத்தை பார்த்துள்ளனர். இதுகுறித்து வண்டிபெரியாறு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்தநிலையில் 5-ம் நம்பர் தேயிலை தோட்டம் அருகே மீண்டும் புலி நடமாடியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தை பார்வையிட்ட வனத்துறையினர் அங்கு காமிரா பொருத்தியுள்ளனர். இதன்மூலம் புலி நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே டைமுக் பகுதியில் புலி நடமாடியதால் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் பீதி அடைந்தனர். அந்த புலியை வனத்துறையினர்கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். எனவே தற்போது குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலியை விரைவில் பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரவிந்த் தனது தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார்.
- வயலில் மின்சார வயர்கள் தாழ்வாக சென்று கொண்டிருந்தது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள பங்களாபட்டி பெரியார்காலனியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 34). இவர் பெரியகுளம் நகராட்சி கழிவுநீர் நீருந்து பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஹேமாவதி (30). இவர்களுக்கு லக்ஷன் (3) என்ற மகனும், ஜெயஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர்.
அரவிந்த் தனது தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். நேற்று இப்பகுதியில் பலத்த மழை பெய்தநிலையில் வயல் பகுதியில் தண்ணீர் தேங்கியது. மேலும் வயலில் மின்சார வயர்கள் தாழ்வாக சென்று கொண்டிருந்தது. இதனை கவனிக்காமல் ஹேமாவதி வயலில் தேங்கிய தண்ணீரை அகற்ற சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
இதை பார்த்த அவரது கணவர் தனது மனைவியை காப்பாற்ற சென்றார். இதனால் அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. படுகாயம் அடைந்து கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விற்கப்பட்ட ஒரு காரில் இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் அது திருட்டு வாகனம் என தெரியவந்துள்ளது.
- போலியான ஆவணங்களை தயாரிப்பது, வாகனங்களை திருடுவது, அதனை எவ்வாறு விற்று கைமாற்றுவது போன்ற நுட்பங்களை அறிந்து செயல்பட்டு வந்துள்ளனர்.
ஆண்டிபட்டி:
மதுரை மாவட்டம் கொடிகுளத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வம். இவர் 4 சக்கர வாகனங்கள் விற்பனை செய்வதாக இணையதளம் மூலம் விளம்பரம் செய்தார். இந்த விளம்பரத்தை பார்த்து தூத்துக்குடியை சேர்ந்த மதன்ராஜ் என்பவர் அன்புச்செல்வத்தை தொடர்பு கொண்டார்.
அவர் தனது காரை ரூ.9.10 லட்சத்துக்கு விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்தார். அன்புச்செல்வத்துடன் அவரது கூட்டாளிகள் மதுரை கோச்சடையை சேர்ந்த முருகன், கொடி குளத்தை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் மதன்ராஜிடம் காரை விற்றனர். அந்த காரை தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு மதன்ராஜ் விற்றார்.
இந்நிலையில் அந்த கார் திருட்டு கார் என தெரிய வரவே அதனை கேரள போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மதன்ராஜ் ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். இதேபோல் டிராக்டர் விற்பனை செய்வதாக கூறி அன்புச்செல்வம், அவரது நண்பர்கள் ஆகியோர் தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை சேர்ந்த அயோத்திராமனை ஆண்டி பட்டி அருகில் உள்ள கொண்டம நாயக்கன்ப ட்டிக்கு வரவழைத்தனர்.
அவரிடம் ரூ.4.70 லட்சம் பெற்றுக்கொண்டு டிராக்ட ரை விற்பனை செய்தனர். இதனை பெயர் மாற்றம் செய்வதற்கு சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக த்திற்கு கொண்டு சென்ற போது இது திருட்டு டிராக்டர் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அயோத்திராமனும் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அன்புச்செல்வன் மற்றும் அவரது நண்பர்க ளான முருகன், ஆனந்த், மாரிமுத்து, முத்துப்பாண்டி, வேல்முருகன் ஆகிய 6 பேர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து ஆண்டிபட்டி டி.எஸ்.பி ராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
விலை உயர்ந்த வாகன ங்களை திருடி அதனை ஓ.எல்.எக்ஸ் என்ற இணைய தளம் மூலம் இவர்கள் விற்று வந்துள்ளனர். விற்கப்பட்ட ஒரு காரில் இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் அது திருட்டு வாகனம் என தெரியவந்துள்ளது. இவர்கள் 6 பேரும் 3 குழுக்க ளாக பிரிந்து செயல்பட்டு வந்துள்ளனர். போலியான ஆவணங்களை தயாரிப்பது, வாகனங்களை திருடுவது, அதனை எவ்வாறு விற்று கைமாற்றுவது போன்ற நுட்பங்களை அறிந்து செயல்பட்டு வந்துள்ளனர்.
இவர்களிடமிருந்து போலியான அரசின் ரப்பர் ஸ்டாம்பு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ள்ளன. வாகனத்தின் என்ஜின்நம்பர், சேஸ்நம்பர், ஆர்.சி.புக் போன்ற அனை த்து ஆவணங்களையும் இவர்களே போலியாக தயார் செய்துள்ளனர். விலை உயர்ந்த கார், டிராக்டர், ஜே.சி.பி வாக னத்தை இக்கும்பல் திருடி வந்துள்ள னர். எனவே பொதுமக்கள் இணையதளம் மூலம் வாகனங்கள் விற்கப்படும் என்ற அறிவிப்பு வந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார். கைது செய்யப்பட்ட 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்த ப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டனர். இந்த கும்பலுடன் வேறுயாரேனும் கொள்ளை யில் ஈடுபட்டுள்ளனரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குமணந்தொழு அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
- மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்காக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாக பேசினார்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை - மயிலை ஊராட்சிக்குட்பட்ட குமணந்தொழு அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாதவன் தலைமை வகித்தார்.ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன் சிறப்பு அழைப்பாளராக விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்காக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாக பேசினார். இதில் ஒன்றிய கழக செயலாளர்கள் வக்கீல்சுப்பிரமணி, தங்கப்பாண்டி, ஒன்றிய குழு தலைவர் சித்ரா சுரேஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் பிரபாகரன், மச்சக்காளை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாடசாமி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மாடசாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது.
- ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு பருவமழை பொய்த்துப்போன நிலையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 306 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 620 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118.25 அடியாக உள்ளது. அணையிலிருந்து 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 2312 மி.கனஅடியாக உள்ளது.
இதேபோல் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் நேற்று கனமழை பெய்தது. வைகை அணையில் மட்டும் 15 செ.மீ மழை கொட்டியது. இதனால் அணையின் நீர்மட்டம் 47.08 அடியாக உயர்ந்தது. நேற்று 41 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 331 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 69 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1630 மி.கனஅடியாக உள்ளது.
மஞ்சளாறு அணைக்கு நேற்று நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இன்று காலை அணைக்கு 108 கனஅடி நீர் வருகிறது. நீர்மட்டம் 48.50 அடியாக உள்ளது. நீர் இருப்பு 312.32 மி.கனஅடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 73.80 அடியாக உள்ளது. நீர்வரத்து 47 கனஅடி, திறப்பு 3 கனஅடி, நீர் இருப்பு 33.34 மி.கனஅடி.
கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்தனர். இன்று காலை முதல் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் வார விடுமுறை நாட்களில் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
பெரியாறு 39, தேக்கடி 13.4, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 3.2, சண்முகாநதி அணை 7.4, போடி 18.8, வைகை அணை 150.2, சோத்துப்பாறை 61, மஞ்சளாறு 85, பெரியகுளம் 80.4, வீரபாண்டி 11.2, அரண்மனைப்புதூர் 24, ஆண்டிபட்டி 98.2 மி.மீ மழையளவு பதிவானது.
ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
- சம்பவத்தன்று வருசநாட்டில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றுவருவதாக வீட்டில் கூறிவிட்டு தனது மகளை அழைத்துச்சென்றார்.
- ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை.
வருசநாடு:
ஆண்டிபட்டி அருகே வருசநாடு உரக்குண்டான் பகுதியை சேர்ந்தவர் கவியரசன். இவரது மனைவி முத்துமாரி(25). இவர்களுக்கு மித்ரா என்ற 4 வயது குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் முத்துமாரி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
சம்பவத்தன்று வருசநாட்டில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றுவருவதாக வீட்டில் கூறிவிட்டு தனது மகளை அழைத்துச்சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துமாரியின் தந்தை அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் வருசநாடு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான முத்துமாரியை தேடி வருகின்றனர்.
சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் பவித்ரா(22). சம்பவத்தன்று சின்னமனூருக்கு வேலை தேடி செல்வதாக கூறிச்சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பவித்ராவை தேடி வருகின்றனர்.
- 111 பயனாளிகளுக்கு ரூ.104.88 லட்சம் மதிப்பீட்டில் தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டது.
- இதனைத்தொடர்ந்து நகராட்சி 12-வது வார்டு பகுதியில் சமூக கழிப்பறை திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளு வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி தேனி சமதர்மபுரம் பகுதியில் உள்ள காமராஜர் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமை தாங்கினார். பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கணேசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பியும், தேனி தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளருமான தங்கதமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தள்ளு வண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பாலமுருகன், கடவுள், திட்ட குழு உறுப்பினர் நாராயண பாண்டியன், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், நகர அமைப்பு அலுவலர் சலேத் அப்துல் நாசர், நகர அமைப்பு ஆய்வாளர் கணேஷ் குமார், சமுதாய அமைப்பாளர்கள் தமிழ்மணி, ராஜசெல்வி உள்பட கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது 111 பயனாளிகளுக்கு ரூ.104.88 லட்சம் மதிப்பீட்டில் தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நகராட்சி 12-வது வார்டு பகுதியில் சமூக கழிப்பறை திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
- சின்னமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேகமலை வனப்பகுதியில் அதிகளவில் மான், காட்டு மாடு வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது
- அதன்படி வனக்காப்பாளர்கள் ரோந்து சென்ற போது மஞ்சள் நதிக் கண்மாயில் மானின் தலை, குடல் போன்ற உள் உறுப்புகள் சிதறி கிடந்தது.
சின்னமனூர்:
சின்னமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேகமலை வனப்பகுதியான எரசக்கநாயக்கனூர் மலை மற்றும் பெருமாள் மலை பகுதியில் அதிகளவில் மான், காட்டு மாடு வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வனக்காப்பாளர்கள் ரோந்து சென்ற போது மஞ்சள் நதிக் கண்மாயில் மானின் தலை, குடல் போன்ற உள் உறுப்புகள் சிதறி கிடந்தது.
இது குறித்து வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கன்னிச்சேர்வைபட்டி எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த தங்கம் மகன் சுரேஷ், நாகராஜ் மகன் பிரகாஷ், சின்னஓவுலாபுரத்தை சேர்ந்த ஜெயராஜ் மகன் சிவா, சின்னச்சாமி மகன் ராகுல் ஆகிய 4 பேரும் மானை வேட்டையாடியது தெரிய வந்தது.
இதையடுத்து வேட்டை கும்பலை சேர்ந்த சுரேஷ் மற்றும் பிரகாஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- ரூ.2 லட்சம் கடன் வாங்கியதை திருப்பி தர காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
- காபில் பணத்தை திருப்பி கொடுக்காமல் தகராறு செய்து முகமது சமீரை தாக்கி உள்ளார்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிக்குளம் பகுதியை சேர்ந்தவர் அபுதாகீர் மகன் காபில் (வயது21). இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த காதர் மகன் முகமது சமீர் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த பணத்ைத திருப்பி தர காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று இரவு காபில் முகமது சமீரிடம் கடனை திருப்பி தருவதாகவும், சின்னமனூர் வண்டிப்பேட்டை பகுதிக்கு வருமாறு கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து முகமது சமீர் அவரது உறவினர் அலாவுதீனுடன் அங்கு சென்றார்.
அப்போது காபில் பணத்தை திருப்பி கொடுக்காமல் தகராறு செய்து முகமது சமீரை தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் காபிலை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த காபில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். கொலை சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சின்னமனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து காபிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பதுங்கி இருந்த முகமதுசமீர் மற்றும் அலாவுதீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள்.
- தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்களை சென்றடையும் வண்ணம் 100 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன.
தேனி:
தேனி மாவட்டம் போடி அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை 2-ம் கட்ட சொற்பொழிவு நிகழ்வு கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இதில் பத்மஸ்ரீ கலைமாமணி நர்த்தகி நடராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்ததாவது:-
கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் 'மாபெரும் தமிழ்க் கனவு' என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்களை சென்றடையும் வண்ணம் 100 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன. இதன் 100-வது நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
போடி அரசினர் பொறியியல் கல்லூரியில் "தென்மேற்கு பருவக்காற்றும் தீந்தமிழ் வீச்சும்" என்னும் தலைப்பில் மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ கலைமாமணி நர்த்தகி நடராஜ் சிறப்புரையாற்றி உள்ளார். அவர் கடந்த 30 ஆண்டுகளாக பரதநாட்டியத்திற்கு தமது வாழ்வை அர்ப்பணித்துள்ளார். இவரது திறமையைப் பாராட்டி, இந்திய அரசு 2019-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. இவரது வாழ்க்கை குறிப்பு 11-ம் வகுப்பு தமிழ் பாடநூலில் பாடமாக உள்ளது.
தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் பெருமையையும், மாணவர்கள் அடுத்து வரும் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
நர்த்தகி நடராஜ் தெரிவித்ததாவது:-
கல்லூரி மாணவ-மாணவிகள் தாங்கள் காணும் கனவினை மிகப்பெரிய கனவாக காண வேண்டும்.அந்த கனவினை முழுமையாக எடுத்துக்கொண்டு அதற்கான கடின முயற்சியை மேற்கொள்வதன் மூலம் வெற்றி என்ற இலக்கினை எளிதாக அடைவது மட்டுமல்லாமல் இந்த சமுதாயத்தில் நீங்கள் யார் என்பதை நிரூபிக்க முடியும். மாணவர்கள் கல்லூரி படிப்பினை முடிக்கும் முன்னர் தங்கள் காணும் கனவினை நினைவாக்குவதற்கான பணிகளை இன்று தொடங்க வேண்டும் என்றும் வாழ்க்கையில் உங்களின் இலக்கிற்கு முரணாக அமையும் அனைத்தையும் எதிர்த்து போராடி தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயல்பட்டு வெற்றி காண வேண்டும் என பேசினார்.
பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு மற்றும் சிறப்பான கேள்வி கேட்ட கேள்வி நாயகன், கேள்வி நாயகிகளுக்கு பாரட்டுச் சான்றிதழ்கள் மற்றும் புத்தங்களை பரிசாக கலெக்டர் வழங்கினார்.






