என் மலர்
தேனி
- அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
- தி.மு.க.வின் ஊழல் குறித்து பேச ஓ.பன்னீர்செல்வத்துக்குதான் முழு தகுதி உள்ளது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவு அணியைச் சேர்ந்த கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தலைமையில் மருது அழகுராஜ் மற்றும் சேலம், ஈரோடு, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்ட செயலாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று வரை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றுதான் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு தீர்மானம் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இன்னும் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது.
இது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் இணையதளத்தில் புதிய பதிவேற்றம் செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனை மறைத்து எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச் செயலாளர் என கூறி கட்சியினரை ஏமாற்றி வருகிறார். இனிமேல் அவர் அ.தி.மு.க. கொடியை பற்றி பேசினால் பொடிப்பொடியாகி விடுவார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை விரைந்து நடத்தக் கோரி ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து நடத்துவோம். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவரது கட்சி கொள்கையின்படி ஊழல்வாதிகளை சேர்க்க மாட்டோம் என்கிறார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி, காமராஜ், தங்கமணி, அன்பழகனை வைத்துக் கொண்டு தி.மு.க.வின் ஊழல் குறித்து பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை.
தி.மு.க.வின் ஊழல் குறித்து பேச ஓ.பன்னீர்செல்வத்துக்குதான் முழு தகுதி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எலியை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் எலி ஒன்று சிக்கி இருப்பதைக் கண்டு அதைப் பிடிக்க கூண்டிற்குள் உள்ளே பாம்பு நுழைந்தது.
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கூண்டுக்குள் சிக்கி இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி கீழத்தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புப் பகுதியில் சங்கரன் என்பவரது வீட்டில் சுமார் 4 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு நுழைந்தது.
அங்கே எலியை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் எலி ஒன்று சிக்கி இருப்பதைக் கண்டு அதைப் பிடிக்க கூண்டிற்குள் உள்ளே நுழைந்தது. அந்த சமயத்தில் நல்ல பாம்பும் உள்ளே வசமாக சிக்கிக்கொண்டது.
எலி வலைக்குள் இருந்த நல்ல பாம்பு ஆக்ரோஷமாக சீறியதைக் கண்டு சங்கரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டனர். பின்னர் அங்கு பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர். பின்னர் இது குறித்து போடி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கூண்டுக்குள் சிக்கி இருந்த நல்ல பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து போடி மெட்டு மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வைகை அணை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதியினை மேம்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் சரவணகுமார், மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறையையும் மேம்படுத்தும் நோக்கில் சிறப்பு திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் உள்ள தங்கும் விடுதிகளை மேம்படுத்துவது குறித்து தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வைகை அணை பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹோட்டல் ஆய்வு செய்யப்பட்டது.
இந்தியாவிலேயே தமிழகம் சுற்றுலாத்துறையில் முன்னணியில் உள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு சுமார் ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது.
சுற்றுலாத்துறை மக்களின் முக்கிய தேவையாக இன்றைய காலகட்டத்தில் மாறியுள்ளது. வேலைப்பளுவின் காரணமாக மன அமைதிக்கு ஓய்வு எடுக்கவும் மறுபடியும் ஊக்கத்துடன் பணிகளை மேற்கொள்ளவும் சுற்றுலா உதவுகிறது. ஏழை முதல் பணக்காரர்கள் வரை மன அழுத்தத்தை போக்க சுற்றுலாவிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
கொரோனா காலத்தில் சுற்றுலாத்துறை முடக்கி இருந்தது. முதல்-அமைச்சர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக தற்போது மீண்டும் சுற்றுலாத்துறை சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ளது.
சுற்றுலா தலங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக சாத்திக்கூறுகள் உள்ள சுற்றுலாத்தளங்களில் புதிய படகு சவாரிகளை உருவாக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் மூக்கையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விசித்திரமான மாதத்தை மலை மாதம் என்றும் அழைப்பதுண்டு.
- சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும், சுருளி அருவி விளங்கி வருகிறது.
தை முதல் ஆனி மாதம் வரை உள்ள பொழுது தேவர்களுக்கு பகல் பொழுதாகவும், ஆடி முதல் மார்கழி வரை இரவு பொழுதாகவும் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் பகல் காலம் முடிவடைந்து இரவு தொடங்கும் நேரமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இந்த காலத்தை தட்சிணாயண புண்ணிய காலம் என்று அழைப்பார்கள். அதன்படி இந்த வருடம் ஆடி மாதம் முதல் நாளிலும், 31-ம் நாளிலும் 2 அமாவாசை வருகிறது. இது போன்ற விசித்திரமான மாதத்தை மலை மாதம் என்றும் அழைப்பதுண்டு.
வழக்கமாக எல்லா அமாவாசை நாட்களும் தர்ப்பணம் செய்வதற்கு உகந்ததாக இருந்தாலும், ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி ஆடி மாத பிறப்பின் முதல் நாளில் அமாவாசை வருவதால் இன்று பல்வேறு இடங்களில் புண்ணிய நதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும், சுருளி அருவி விளங்கி வருகிறது. இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்புனித நீராடி தர்ப்பணம் செய்ய பக்தர்கள் கூடுவது வழக்கம்.
கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் எதிரொலியாக சுருளி அருவியில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டு இருந்தது. நேற்று முதல் இந்த தடையை வனத்துறையினர் நீக்கினர்.
இதனையடுத்து இன்று காலை முதல் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சுருளி அருவிக்கு வரத் தொடங்கினர். அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் அதில் ஆனந்தமாக நீராடி அதன் பின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
பின்னர் இங்குள்ள விஸ்வநாதர், பூதநாராயணன் கோவிலிலும் வழிபாடு செய்தனர். இது மட்டுமின்றி அன்னதானமும் வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக களையிழந்து காணப்பட்ட சுருளி அருவி இன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகையால் கூட்டம் அலைமோதியது.
இங்குள்ள கடைகளில் வியாபாரம் அதிகரித்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
- ஆண்டிபட்டியில் மாலை நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் கிராம மக்கள் ரெயில் நிலையத்தை கடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர்.
- இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிபட்டி:
மதுரை-போடி வரை அகல ரெயில் பாதை பணிகள் முடிந்து கடந்த 15-ந் தேதி முதல் போடியில் இருந்து மதுரை, சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக உள்ள ஆண்டிபட்டி பகுதி மக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 11 ஆண்டுகளுக்கு பின்னர் ரெயில் வசதி ஏற்படுத்தப்பட்டதால் ஆர்வமுடன் பயணித்து வருகின்றனர்.
மதுரையில் இருந்து தினசரி காலை 9.24 மணிக்கும், சென்னையில் இருந்து வாரம் 3 முறை இயக்கப்படும் குளிர்சாதன விரைவு ரெயில் காலை 8.20 மணிக்கும் ஆண்டிபட்டிக்கு வருகிறது.
இதேபோல் மதுரைக்கு மாலை 6.34 மணிக்கும், சென்னைக்கு இரவு 9.10 மணிக்கும் ரெயில்கள் திரும்பி செல்கின்றன. இந்தநேரங்கள் தவிர மற்ற நேரங்களில் ரெயில் நிலையம் பூட்டப்படுகிறது. ஆண்டிபட்டி ரெயில் நிலையத்தை கடந்து ஏராளமான பொதுமக்கள் கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால் மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக மாலை நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் கிராம மக்கள் ரெயில் நிலையத்தை கடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து முன்கூட்டியே வரும் பயணிகள் ரெயில் நிலையம் பூட்டப்பட்டு ள்ளதால் வெளியிலேயே காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டிபட்டி பகுதியில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது மகிழ்ச்சி அளித்தாலும் ரெயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீனாட்சியின் வீட்டுக்குள் புகுந்து அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அரிவாளால் வெட்ட முயன்றார்.
- கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் கோம்பை மதுரை வீரன் தெருவைச் சேர்ந்த ரங்கசாமி மனைவி மீனாட்சி (வயது 45). இவர் சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (37). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில் மீனாட்சியின் மகளை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கேரளாவுக்கு அழைத்துச் சென்று விட்டார்.
இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக ஈஸ்வரன் கேரளாவில் இருந்து கோம்பைக்கு வந்தார். அப்போது மீனாட்சியின் வீட்டுக்குள் புகுந்து அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அரிவாளால் வெட்ட முயன்றார்.
உயிருக்கு பயந்து அவர் வெளியே ஓடி வரவே வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் ஈஸ்வரன் சூறையாடி ரூ.5 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். இது குறித்து மீனாட்சி கோம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரியவர்கள் நடமாடும் பகுதியில் காரை வேகமாக ஏன் ஓட்டுகிறீர்கள்? என கேட்டவருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
- இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சுரேஷ் வீரபாண்டி கோவில் கடையில் பூ வாங்கிக் கொண்டு நின்று கொண்டு இருந்தார்.
அப்போது ஆண்டிபட்டி சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த முரளி (வயது 29), கருப்பணன் (22), பிரேம்குமார் (27) ஆகியோர் காரில் அதிவேகமாக வந்தனர். அப்போது டிரைவர் சுரேஷ் பெரியவர்கள் நடமாடும் பகுதியில் காரை வேகமாக ஏன் ஓட்டுகிறீர்கள்? என கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் சுரேசின் மூக்கில் கத்தியால் குத்தினர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை விலக்க முயன்ற போது கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த சுரேஷ் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆடி முதல் நாளான இன்று புதுமணத் தம்பதிகளுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
- சந்தையில் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி விற்பனை அமோகமாக நடைபெற்றது.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் தினசரி மற்றும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பல்வேறு பகுதிகளில் இன்று இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆடி மாதத்தில் புதிதாக திருமணம் செய்த தம்பதியை தங்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பது தொன்று தொட்டு கடைபிடிக்கும் பழக்கமாக இருந்து வருகிறது. நகரங்களில் இது போன்ற பழக்கம் மறந்து விட்டாலும் கிராமங்களில் இன்றளவும் தவறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி புதிதாக திருமணம் செய்த மகள் மற்றும் மருமகனை ஆடி முதல் நாளில் வரவழைத்து அவர்களுக்கு புத்தாடை வழங்கி கறி விருந்து சமைத்து பரிமாறுவார்கள். மேலும் அவர்களுக்கு சீர் வரிசையும் வழங்கி ஒரு வாரம் தங்கள் வீட்டில் வைத்து உபசரிப்பார்கள்.
ஆடி விருந்து என்பது தலை ஆடி, நடு ஆடி, கழிவு ஆடி என 3 வகைகளில் விருந்து அளிக்கப்படுகிறது. ஆடி முதல் நாளில் அளிக்கப்படும் விருந்து தலை ஆடி என்றும் 2 வாரங்கள் கழித்து அளிக்கப்படும் விருந்து நடு ஆடி என்றும், கடைசி நாளில் அளிக்கப்படும் விருந்து கழிவு ஆடி என அழைக்கப்படுகிறது.
பெரும்பாலும் புதுமணத் தம்பதிகளுக்கு தலை ஆடி மற்றும் நடு ஆடியிலேயே விருந்து வைப்பது வழக்கமாக உள்ளது. கழித்து கட்டிய மருமகனுக்கு கழிவு ஆடி என்ற பழமொழி உள்ளது. இதனால் கடைசி ஆடியில் மருமகனை அழைத்தால் அது கவுரவ குறைச்சலாக இன்று வரை கிராமங்களில் கருதப்படுகிறது. இதனால் அவரவர் வசதிக்கேற்றபடி புதுமணத்தம்பதிகளுக்கு விருந்து அளித்து வருவது வழக்கமாக உள்ளது.
அதன்படி ஆடி முதல் நாளான இன்று புதுமணத் தம்பதிகளுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனால் சந்தையில் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி விற்பனை அமோகமாக நடைபெற்றது. வழக்கமாக பண்டிகை நாட்களில் கொண்டாடப்படுவதைப் போல ஆடியிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதால் ஏராளமான ஆடுகள், கோழிகள் அறுக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன.
அதிகாலை முதல் ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இதனை வாங்கிச் சென்றனர். இதே போல காய்கறிகள் விற்பனையும், ஜவுளி உள்ளிட்ட விற்பனையும் அதிகமாக நடந்ததால் பெரும்பாலான வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
- தனது மோட்டார் சைக்கிளை மதுரை-தேனி ரோட்டில் உள்ள தேவாலயம் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி இருந்ததை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தேனி:
தேனியை சேர்ந்தவர் முத்து (வயது45). தனது மோட்டார் சைக்கிளை மதுரை-தேனி ரோட்டில் உள்ள தேவாலயம் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து தேனி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழகுப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (46). இவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது அேத பகுதியை சேர்ந்த கோகுலபாண்டியன், குருநாதபாண்டியன் ஆகியோர் செல்போனை திருடிச் சென்றனர். அவர்களை பிடித்து கண்டமனூர் போலீசில் ஒப்பட ைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
- தேனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் தத்தெடுத்து குழந்தையை வளர்த்து வந்தனர்.
- மது குடித்து விட்டு வந்து கூடுதலாக நகை, பணம் கேட்டு ஜெயசுதாவை சித்ரவதை செய்துள்ளார்.
தேனி:
தேனி பவர் கவுஸ் தெருவை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது40). இவருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ஜெயேந்திரன் (53) என்பருக்கும் கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தேனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். ஜெயேந்திரன் மது குடித்து விட்டு வந்து கூடுதலாக நகை, பணம் கேட்டு ஜெயசுதாவை சித்ரவதை செய்துள்ளார்.மேலும் சசிகலா என்ற பெண்ணுடன் சேர்ந்து சித்ரவதை செய்வதாக தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஜெயேந்திரன் மற்றும் சசிகலா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தொடர் மழை காரணமாக சுருளிஅருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- தற்போது தண்ணீர் வரத்து சீரடைந்து ள்ளாதால் ஒரு வாரத்திற்கு பிறகு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க ப்பட்டு ள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குதொடர்ச்சி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் வருடம் முழு வதும் நீர்வரத்து இருக்கும். இதனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வருகி ன்றனர்.
மேலும் அமாவாசை உள்ளிட்ட புனித நாட்களில் முன்னோர்களுக்கு அருவி கரையோரம் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மேகமலை, ஈத்தக்காடு வனப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சுருளிஅருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு வனத்து றையினர் தடைவிதித்தனர்.
இந்நிலையில் தற்போது தண்ணீர் வரத்து சீரடைந்து ள்ளாதால் ஒரு வாரத்திற்கு பிறகு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க ப்பட்டு ள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நீராடி மகிழ்ந்தனர்.
- பலத்த காயமடைந்த வினோத்குமாரை தனது மோட்டார் சைக்கிளில் யுவராஜா சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
- இந்த வழக்கு தொடர்பாக ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி (வயது25), கார்த்தி (24), அஜய் (23), செல்வேந்திரன் (24), மாதவன் (24), செல்வா (24) ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அழகர்சாமி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் வினோத்குமார் (வயது 24). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து மாம்பழ வியாபாரம் செய்து வந்தார். வினோத்குமாரின் நண்பரான யுவராஜாவின் செல்போனை அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி மகன் ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி என்பவர் பறித்து சென்று விட்டார்.
யுவராஜூடன் சென்று சின்னமனூர் வாரச்சந்தை அருகே மதுபோதையில் இருந்த ஒண்டியிடம் தனது நண்பரின் செல்போனை தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஒண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரை சரமாரியாக குத்தினார். இதனை தடுக்க வந்த யுவராஜாவை ஒண்டியின் நண்பர்கள் தடுத்துள்ளனர்.
பலத்த காயமடைந்த வினோத்குமாரை தனது மோட்டார் சைக்கிளில் யுவராஜா சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுப்பிரமணி சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி (வயது25), கார்த்தி (24), அஜய் (23), செல்வேந்திரன் (24), மாதவன் (24), செல்வா (24) ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






