search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடநாடு வழக்கை விரைவுபடுத்த கோரி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆக.1 முதல் தொடர் போராட்டம்- புகழேந்தி
    X

    கொடநாடு வழக்கை விரைவுபடுத்த கோரி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆக.1 முதல் தொடர் போராட்டம்- புகழேந்தி

    • அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
    • தி.மு.க.வின் ஊழல் குறித்து பேச ஓ.பன்னீர்செல்வத்துக்குதான் முழு தகுதி உள்ளது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவு அணியைச் சேர்ந்த கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தலைமையில் மருது அழகுராஜ் மற்றும் சேலம், ஈரோடு, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்ட செயலாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று வரை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றுதான் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு தீர்மானம் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இன்னும் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது.

    இது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் இணையதளத்தில் புதிய பதிவேற்றம் செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனை மறைத்து எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச் செயலாளர் என கூறி கட்சியினரை ஏமாற்றி வருகிறார். இனிமேல் அவர் அ.தி.மு.க. கொடியை பற்றி பேசினால் பொடிப்பொடியாகி விடுவார்.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை விரைந்து நடத்தக் கோரி ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து நடத்துவோம். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவரது கட்சி கொள்கையின்படி ஊழல்வாதிகளை சேர்க்க மாட்டோம் என்கிறார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி, காமராஜ், தங்கமணி, அன்பழகனை வைத்துக் கொண்டு தி.மு.க.வின் ஊழல் குறித்து பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை.

    தி.மு.க.வின் ஊழல் குறித்து பேச ஓ.பன்னீர்செல்வத்துக்குதான் முழு தகுதி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×