என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
    • நிவாரணம் கிடைக்க வலியுறுத்தல்

    நெமிலி:

    நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வேட்டாங்குளம் கிராமத்தில் சின்னதெருவில் வசித்து வரும் வடிவேல் (வயது 40). என்பவரது வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது.

    இதில் வடிவேல், அவரது மனைவி, 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக நெமிலி வருவாய் ஆய்வாளர் சுரேஷ், வேட்டாங்குளம் கிராம நிர்வாக அலுவலர் நிரோஷா பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மீட்டு மாற்று இடத்தில் தங்க ஏற்பாடு செய்தனர்.

    மேலும் மழை பாதிப்பு நிவாரணம் கிடைக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் வருவாய் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • வயல் வரப்புகளை சுற்றி புடவைகளை கட்டி வைத்து பாதுகாத்தனர்
    • பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கோடைகால பருவத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இதனால் கோடை காலத்திற்கு உகந்த நெல் ரகங்களான கோ-51 மகேந்திரா-606 ஏ.டி.டி-37 உள்ளிட்ட நெல் ரகங்களை தேர்வு செய்து பயிர் செய்துள்ளனர்.

    இந்நிலையில் காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் கோடைகால பட்டத்தில் நெல் விதைகளை விதைத்து பயிர் செய்துள்ளனர்.

    மேலும் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது சாரல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளன.

    இந்நிலையில் நெற் பயிர்களை காட்டு பன்றிகள் சேதப்படுத்த தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதி படுகின்றனர்.

    இதனால் விவசாயிகள் வயல் வரப்புகளை சுற்றி புடவைகளை கட்டி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

    • 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் வாணாபாடி ரோடு, வசந்தம் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சங்கர் (வயது 37). இவரது மனைவி ஆதிலட்சுமி (30).

    ஆந்திர மாநிலம், காணிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆதிலட்சுமி, மாற்றுத்திறனாளி சங்கரை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் அவ்வப்போது ஏற்பட்ட குடும்ப தகராறினால் மனமுடைந்த ஆதிலட்சுமி கடந்த 14-ந் தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத போது மாடு கட்டும் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மனைவி இறந்து போன துக்கம் மற்றும் மன உளைச்சலில் இருந்த சங்கர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் இருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழையில் நனைந்து கொண்டு குப்பைகளை அள்ளினர்
    • பொதுமக்கள் பாராட்டு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நள்ளிரவில் இருந்து தொடரும் மழை பெய்து வந்தது.

    இதனால் இன்று காலையில் இருந்து இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்க ப்பட்டது. நிலைமையை உணர்ந்த கலெக்டர் வளர்மதி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார்.

    அரக்கோணத்தில் தொடர் மழை பெய்து வந்தாலும் அரக்கோணம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலையில் ஓரங்களில் இருக்கும் குப்பை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    நிலையை கருத்தில் கொள்ளாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்தார். மழையை காரணம் காட்டி செய்யத் தவறாமல் அதனை வழக்கம் போல் மழையில் நனைந்து கொண்டு குப்பைகளை அள்ளினர். அதனை அப்புறப்படுத்தி தள்ளு வண்டியில் எடுத்து சென்றனர்.

    இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களின் ஓயாத பணியை கண்டு நெகிழ்ந்தனர். கொட்டும் மழையிலும் தங்கள் உடலை கருத்தில் கொள்ளாமல் பொதுமக்களுக்காக இதில் ஆற்றும் பணியை பாராட்டினர்.

    • அரசினர் மேல்நிலைப்பள்ளி பள்ளி வளாகத்தில் நடந்தது
    • 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட பாரம்பரிய சிலம்ப கழகம் சார்பில் மாவட்ட அளவிளான சிலம்ப போட்டி நேற்று அரசினர் மேல்நிலைப்பள்ளி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பாரம்பரிய சிலம்ப கழக மாவட்ட தலைவர் அசோக் குமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து, போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

    மாவட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் சிலம்ப போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    இதில் பாரம்பரிய சிலம்பம் கழகத்தின் மாவட்ட செயலாளர் செமின்ராஜ், பொருளாளர் மனோகர், துணை செயலாளர் தமிழரசு, உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், சுமார் 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • டிரைவர் மற்றும் உதவியாளர் காயமின்றி தப்பினர்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த கொண்டகுப்பம் கிராமத்தில் நோயாளி ஒருவரை ஏற்றி வருவதற்காக, லாலாபேட்டை-பொன்னை சாலையில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.

    கொண்டகுப்பம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, ஆம்புலன்ஸ்சின் பக்கவாட்டில் மோதி விபத்து ஏற்பட்டது.இதில் அதிர்ஷ்டவசமாக ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளர் காயமின்றி தப்பினர்.

    இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் நிதி நிறுவன அலுவலகம், பொருளாதார குற்றபிரிவு போலீசாரல் மூடி சீல்வைக்கப்பட்டது
    • 30-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த அசநெல்லிகுப்பம் கிராமத்தை விஜயகுமார்(37). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜென்டாக பணிபுரிந்து வந்தார். இவர் நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களிடம் பணத்தை வசூல் செய்து நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு அந்த நிதிநிறுவனம், முதலீட்டாளர்களுக்கு ஒழுங்கான முறையில் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அந்த தனியார் நிதி நிறுவன அலுவலகம், பொருளாதார குற்றபிரிவு போலீசாரல் மூடி சீல்வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று தனியார் நிதி நிறுவன ஏஜென்டு விஜயகுமார் வீட்டின் முன்பு முதலீட்டாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி வீட்டை முற்றுகையிட்டனர்.

    அப்போது முதலீட்டாளர்கள் திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் செய்துக்கொண்டனர். மேலும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில், சயனபுரத்தை சேர்ந்த பாண்டியன்(32) என்பவர் காயம் அடடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பூமி பூஜை நடந்தது
    • ரூ.18.85 லட்சம் மதிப்பீட்டில் அமைகிறது

    ஜோலார்பேட்டை:

    முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.18.85 லட்சம் மதிப்பீட்டில் குன்னத்தூர் சாலை வழியாக மண்டலவாடி காமராஜ் நகர் முதல் கலந்தரா கூட்டுரோடு வரை வரை 1 கிலோமீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு தலைமை தாங்கினார்.

    ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் கே. ஜி. சரவணன், க.உமா கன்ரங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் எம். மகேந்திரன் வரவேற்றார்.

    இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணியை நேற்று துவக்கி வைத்தார்.

    பொதுமக்களின் 10 ஆண்டுகால கோரிக்கைக்கு புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டதால் அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • குடிசை வீட்டிற்கும் பரவியது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் புதிய கோர்ட் பகுதியை சேர்ந்தவர் சீனு (வயது42), கணவனை இழந்தவர். தற்போது குடிசை வீட்டில் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார்.

    இதனை நோட்டமிட்ட திருடன், சீனு வீட்டிற்குள் நுழைந்தான். அப்போது வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சேவல்கள், திருடனை பார்த்து சத்தம் போட்டன. இதனால் தான் எங்கே மாட்டிக்கொள்வோம் ? என ஆத்திரமடைந்த திருடன், சேவல்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டுகளுக்கு தீ வைத்தான். கண் இமைக்கும் நேரத்தில் மளமளவென பற்றிக்கொண்ட தீ சேவல்களை கருகி கொன்றதோடு, குடிசை வீட்டிற்கும் பரவியது.

    வேலைக்கு சென்ற சீனு வீட்டிற்கு வந்துபார்த்த போது, சேவல்கள் மற்றும் வீடு உள்ளிட்டவை தீயில் கருகிப்போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதல்கட்ட விசாரணையில் திருடன் மாட்டிக்கொள்ளாமல் இருக்க சேவல்களுக்கு தீ வைத்தது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

    • மானியம் ரூ.3லட்சத்து 75 ஆயிரமாக உயர்வு
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு அரசு, படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சுயதொழில் தொடங்க வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில் தொடங்குவதற்கான திட்ட மதிப்பீட்டின் உச்ச வரம்பு ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்தி ஆணைகள் பிறப்பித்துள்ளது. இதற்கான மானியம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்திலிருந்து ரூ.3லட்சத்து 75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    பொதுப்பிரிவினருக்கு 35 வயதிலிருந்து 45 வயதாகவும், சிறப்பு பிரிவினருக்கு (எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி, சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் திருநங்கைகள்) 45 வயதிலிருந்து 55 வயதாகவும் உயர்த்தி ஆணைகள் பிறப்பித்துள்ளது.

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலை தவிர்த்து மற்ற பொருட்களை வாங்கி விற்கலாம். தொழிற்சாலை உதிரிபாகங்கள் கடை, குறிப்பாக மளிகை கடை, பெட்டிக் கடை,பேன்சி ஸ்டோர், புத்தக நிலையங்கள் தொடங்கு பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும்.

    இந்த திட்டத்தின் கீழ் https://www.msmeonline.tn.gov.in/uyegp என்ற வலைதள முகவரியில் ,கல்விச் சான்று, ஆதார் அட்டை, இருப்பிடச் சான்று,ஜாதி சான்று, விலைப்புள்ளி, திட்ட விபரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், ராணிப்பேட்டை -632402 முகவரியில் நேரிலோ அல்லது 04172-270111 /270222 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு
    • வருகிற 24-ந் தேதி நடத்த ஏற்பாடு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்னாள் முதல் அமைச்சர் கருணா நிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஒட்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவது குறித்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் வளர்மதி முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒரு வருடம் நடத்த முதல் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். மாவட்டத்தில் கலவை பேரூராட்சி சோளிங்கர் ஒன்றியம் கூடலூர் ஆகிய இடங்களில் அரசினர் மேல்நிலைப் பள்ளி களில் இந்த சிறப்பு மருத்துவ முகாம்களை வருகிற 24-ந் தேதி அன்று நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இதற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் , உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இப்பணியில் இணைந்து செயல்படு வார்கள் , உணவு உள்பட தேவைப்படும் அனைத்து உதவிகளும் நானே செய்து தருகிறேன்.

    கடமைக்காக மருத்துவ முகாம் நடத்துவது என்றில்லாமல், எவ்வித பிரச்சனை இல்லாத வண்ணம் ஒரு நல்ல சிறப்பான, பன்னோக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கும் வகையில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது என்ற வகையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை அமைச்சர் நட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, ஜெ. எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் லோகநாயகி. மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் உள்பட நகரமன்ற, பேரூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • திடீரென வலிப்பு வந்தால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே மகேந்திரவாடி பகுதியில் சென்னை - பெங்களூர் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இதில் வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவருகின்றனர்.

    ஜார்கண்ட் மாநிலம், மோகன்பூர் பகுதியை சேர்ந்த விஜய் ஏம்ராம் (வயது 40) என்பவரும் இங்கு வேலை செய்து வந்தார்.

    வேலை செய்து கொண்டிருந்த போது விஜய்க்கு திடீரென வலிப்பு வந்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×