என் மலர்
ராணிப்பேட்டை
- உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார்.
- போலீஸ் விசாரணை
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வாங்கூர் பஸ் நிலைய தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 46) தொழிலாளி. இவர் கடந்த 4 வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 29-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஆனந்தன் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உறவினர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு திட்டம்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அரக்கோணம்:
பாணாவரம் அடுத்த ரங்காபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் முதல் அமைச்சரின் எண்ணும் எழுத்தும் திட்ட விளக்க பெற்றோர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி ஜெயம்மாள் விஜயராகவன் தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் திருமதி சரண்யா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் திருமதி கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக் கூட்டத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு எண்ணும், எழுத்தும் திட்டத்தைப் பற்றி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் விளக்கி கூறினார். மற்றும் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முதலமைச்சரின் எண்ணும் எழுத்தும் திட்டத்தை சிறப்பாக செயல்பாடுத்துதல், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை புதிய ஆசிரியரை கொண்டு உடனே நிரப்ப கோருதல், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சிறப்பாக நடைப்பெற்றதையொட்டி பாராட்டுதல், புதிய ஆசிரியரை நியமிக்கும் வரை புரவல ஆசிரியருக்கு ஊதியம் வழங்க உதவுதல், இல்லம் தேடிக் கல்வி மையத்தை சிறப்பாக நடைப்பெற கண்காணித்து உதவுதல் மற்றும் அதன் செயல்பாடுகளை ஊக்குவித்தல், பல ஆண்டுகளாக பழுதுபார்க்காமல் உள்ள பள்ளி கட்டிடங்களை உடனே பழுபார்க்க அதிகாரிகளை கோருதல், சுகாதார பணியாளர்களை நியமிக்க உதவுதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பெரும்பான்மையான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் புரவல ஆசிரியர்கள் திருமதி ரேவதி குணா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவாக புரவல ஆசிரியர் ராதிகா நன்றி கூறினார்.
- 157 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
- 142பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. ராணிபேட்டயில் நேற்று மட்டும் 32 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
இந்த புதிய அலையால் பாதிக்கப்பட்டு 157 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 13 பேர் அரசு மருத்துவமனையிலும், 2பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
142பேர் வீட்டு தனிமையில் சிகிச்சையில் உள்ளனர்.
- தந்தை கண்முன்னே மகள் இறந்த பரிதாபம்
- போலீஸ் விசாரணை
நெமிலி:
வாலாஜா அடுத்த பாகவெளி குப்பத்து மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமன்.விவசாயம் செய்து வருகிறார்.
இவருக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.இதில் 2-வது மகளான காயத்ரி (21).பிஏ தமிழ் பட்டப் படிப்பை முடித்து விட்டு சுங்குவார் சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். சம்பவத்தன்று அதிகாலை படுக்கையில் இருந்து எழுந்து தனக்கு மயக்கம் வருவதாக தந்தையிடம் கூறினார்.
உடனடியாக அவரை பைக்கில் ராமன் வாலாஜா தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அங்கிருந்த டாக்டர்கள் அவரை பரிசோதித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.கண்முன்னே மகள் இறந்ததை பார்த்த தந்தை ராமன் கதறி அழுதார்.
இதுகுறித்து அவர் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தர ராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
- திருமணமாகததால் விரக்தி.
- மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
வாலாஜா:
வாலாஜாபேட்டை ராயாஜி குளக்கரை தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27) ஆட்டோ டிரைவர்.இவருக்கு தொழில் சரிவர அமையாததாலும் சரியான வருமானம் இல்லாததாலும் திருமணமாகவில்லை என வாழ்க்கையில் விரக்தி அடைந்தார்.
இந்நிலையில் சாத்துப்பாக்கம் கிராமத்திற்கு சென்ற சதீஷ் அங்கிருந்த பெருமாள் கோயில் எதிரில் நேற்று முன்தினம் மண்எ ண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக வாலாஜா போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உலக நன்மைக்காக வேண்டி நடக்கிறது
- யாகத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பு
வாலாஜா:
வாலாஜா அடுத்த கீழ்ப்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 116 நாட்கள் ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப மஹா யாகம் தொடங்கியது.
மக்கள் பிணி தீர்க்கும் மருத்துவமனையாகத் திகழும் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் குடும்ப க்ஷேமம் கருதியும், உடல் நலம் கருதியும், கொரோனா போன்ற கொடிய நோய்களின் அச்சுறுத்தல் இல்லாமல் இருக்கவும் கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி கடந்த 30-ந் தேதி முதல் வருகிற ஐப்பசி 4 (21.10.2022) வெள்ளிக்கிழமை வரை கோடி ஜப தன்வந்திரி மஹா யாகம் ஆடி அமாவாசை, ஆஷாட நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி சனிக்கிழமை, சாரதா நவராத்திரி, ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 62 வது ஜெயந்தி மற்றும் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தியை முன்னிட்டு 116 நாட்கள் யாகத் திருவிழாவாக தொடங்கியது.
கோடி ஜப யாகத்தின் தொடக்கத்தில் காலை கோ பூஜை, ஆரம்ப கால யாகசாலை பூஜை, மஹா கணபதி ஹோமம் மற்றும் விநாயகர் தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம் ராஜ குபேர கோவில் பீடாதிபதி அம்பத்தூர் ராமசாமி-சசிகலா குடும்பத்தினர், தொழிலதிபர் சரவணன் ஆற்காடு, ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி மற்றும் டாக்டர். ரங்கராஜன், சீனிவாசன், பாண்டிச்சேரி ஆகியோர் யாகத்தில் பங்குபெற்றனர்.
மேலும் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இரண்டாவது நாளாக நடைபெற்ற யாகத்தில் ஆஸ்திரேலியா நாட்டில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர். அழகர் சாமி குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு சுவாமிகளிடம் ஆசி பெற்று சென்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
- சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
- போலீசார் விசாரணை
நெமிலி:
காவேரிப்பாக்கம் அடுத்த கடப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி. மகன் முனுசாமி (வயது 45). விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த சில வருடங்களாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையையும் எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நோயின் தீவிர தாக்கத்தால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.அவரை வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம் பாறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
- 250 வாகனங்கள் பரிேசாதனை.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் தணிக்கையை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டையில் உள்ள 250 தனியார் பள்ளி வாகனங்களை வருடாந்திர தணிக்கை ஆய்வு இன்று ராணிப்பேட்டை அடுத்த ஆட்டோ நகர் தேசிய நெஞ்சாலையொட்டி உள்ள தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆய்விற்கு ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் பூங்கொடி முன்னிலை வகித்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர் ராமசாமி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-
கடந்த ஆண்டு பள்ளி வாகனங்கள் விபத்து ஏதுமில்லை. அதேபோன்று இந்த ஆண்டும் ஓட்டுனர்கள் கண்ணும் கருத்துமாக விபத்துக்கள் ஏதுமின்றி வாகனங்களை இயக்க வேண்டும். டிரைவர்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வபோது கண் பார்வை பரிசோதனை செய்து கொள்ளுங்கள், வாகனங்கள் இயக்கும் போது செல்போன் பயன்படுத்த கூடாது.
ஆய்வு
டிரைவர் ஆகிய உங்களை நம்பி தான் குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்புகின்றனர். இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்த வருடாந்திர ஆய்வில் பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, ஸ்டேயரிங், வாகன படிகட்டு, அவசர வழி, ஜன்னல் உள்ளிட்ட பல்வேறு நிலை குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை டி.எஸ்.பி. பிரபு, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், செங்குட்டவேல் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நல சங்க நிர்வாகிகள், டிரைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பராமரிப்பு பணி மேற்கொள்ளபட உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை துண்டிப்பு.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த முகுந்தராயபுரம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், நாளை ( சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை லாலாபேட்டை, தக்காம்பாளையம், தெங்கால், நெல்லிக்குப்பம் , ஏகாம்பரநல் லூர் , கத்தாரிகுப்பம் , பிள்ளையார்குப்பம், பேஸ் -3 , சிப்காட், அம்மூர், வேலம், கல்மேல்குப்பம், மற்றும் கிருஷ்ணாவரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படு கிறது . இந்த தகவலை செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித் துள்ளார்.
- எரும்பி, தாடூர் சுற்றுவட்டார பகுதிகளில் துண்டிப்பு
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாகல பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே நாளை (சனிக்கிழமை) காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை சோளிங்கர், எரும்பி, தாடூர், தாலிக்கால், போளிப்பாக்கம், பழையபாளையம், கீழ் பாலபுரம், பாணாவரம், கொடைக்கல், பெருங்காஞ்சி, ஜம்பு குளம், தலங்கை, மறுதாலும் காட்ரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்சார விநியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை மின் வாரி செயற்பொறியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
- மழையையும் பொருட்படுத்தாமல் காரில் இருந்து இறங்கி வந்தார்.
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை பாரதி நகரில் கட்டப்பட்டுள்ள ராணிப்பேட்டை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதற்காக நேற்று இரவு வேலூரில் இருந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூட்டுத்தாக்கு அருகில் கட்டப்பட்டுள்ள சிஎம்சி மருத்துவமனையை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் இரவு ராணிப்பேட்டைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.அவருக்கு அமைச்சர் காந்தி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது லேசான மழை தூரல் இருந்தது.அதையும் பொருட்படுத்தாமல் காரில் இருந்து இறங்கி வந்து ராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டர் அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் திமுக கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அப்போது அங்கு கூடி இருந்த தொண்டர்கள் வாழ்த்து கோ–சங்களை எழுப்பினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான ஆர்.காந்தி, திமுக மாநில சுற்றுலா செயலாளர் வினோத் காந்தி, ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், நகர பொறுப்பாளர் பூங்காவன, நகரமன்ற உறுப்பினர்கள் வினோத், குமார், கிருஷ்ணன், அப்துல்லா மற்றும் திமுக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- ராணிப்பேட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- 5267 பேருக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 71 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து புதிய கட்டிடங்களை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டம் ஆகும். கனிமவளங்கள் நிறைந்த மாவட்டம். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் தோல் ஏற்றுமதி உலகத்தையே ஈர்க்க கூடிய வகையில் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 மணி நேரத்தில் 187 டன் நெகிழி சேகரித்து சுவிட்சர்லாந்து நாட்டில் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்திருக்கிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் தோல் மற்றும் காலணி உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறது. பனப்பாக்கத்தில் ரூ.400 கோடி செலவில் 250 ஏக்கரில் சர்வ தேச காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் 20,000 பேருக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறிய 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். இதனால்தான் உங்கள் முன் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவது சிலருக்கு புரியவில்லை. நான் தான் அடுத்த முதல்அமைச்சர் என அலைந்து கொண்டிருக்கிறவர்கள் இன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்தெந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை பட்டியலிட்டு உங்கள் முன்னே கூறி வருகிறோம். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டாக தெரியும் என்பது போல சிலர் அறியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஸ்டாலின் விளம்பர பிரியராக இருக்கிறார் என கூறுகிறார்கள். எனக்கு எதற்கு விளம்பரம் இனிமேல் எனக்கு விளம்பரம் தேவையா?55 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன்.
நரிக்குறவர்கள், இருளர் இன மக்கள் வீடுகளுக்கு சென்றதால் அப்படி கூறுகிறார்கள். அந்த சந்திப்பிற்கு பிறகு எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நரிக்குறவர்கள் இருளர்கள் இன மக்கள் வீடுகளுக்கு சென்றதோடு எங்களுடைய கடமை முடியவில்லை. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 293 நரிக்குறவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 9600 இருளர் இன மக்கள் உள்ளனர். இதில் 5267 பேருக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 20 திருநங்கைகள் 9,522 மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
விளிம்பு நிலையில் உள்ள மக்களை தேடி சென்று அவர்களுடைய குறைகளை தீர்க்கிறோம்.
பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்குவது பல்லாயிரம் கோடி திட்டங்களை உருவாக்குவதற்கு இணையானதாகும். கடந்த ஆட்சியில் அரசு பள்ளிகளில் வழங்கக்கூடிய புத்தகப் பையில் முன்னாள் முதல்அமைச்சர்கள் படத்தை போட்டு விளம்பரம் செய்தார்கள். அந்த பைகள் இன்னும் மிச்சமாக உள்ளது. அவற்றை பயன்படுத்த வேண்டாம் என என்னிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதன் மூலம் ரூ.17 கோடி அரசுக்கு செலவு ஏற்படும்.
முன்னாள் முதல்அமைச்சர்கள் படம் இருந்தால் என்ன. அந்த பைகளை மாணவர்களுக்கு கொடுங்கள் என்று கூறினேன்.
விளம்பரம் எனக்கு எதற்கு ஏற்கனவே உள்ள புகழ் பெருமை போதும். திராவிட மாடல் ஆட்சி என்றாலே மு.க.ஸ்டாலின் முகம் தான் ஞாபகத்துக்கு வரும். பல மாநிலங்கள் ஒருங்கிணைந்தது தான் இந்தியா என்றால் என் குரல் தான் ஞாபகத்திற்கு வரும்.
27 சதவீத இட ஒதுக்கீடு என்றால் என் முகம் தான் ஞாபகத்திற்கு வரும். அரசு பஸ்சில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களுக்கு எனது முகம் தான் ஞாபகத்திற்கு வரும்.
அம்பேத்கர், பெரியார் பிறந்த நாளை சமூகநீதி சமத்துவ நாளாக கொண்டாடும்போது என் பெயர் தான் ஞாபகத்திற்கு வரும். நான் என்றால் ஸ்டாலின் மட்டுமல்ல நாம் அனைவரும் சேர்ந்ததுதான். என்றும் உங்களில் ஒருவன் நான்.அனைவரும் சேர்ந்தது தான் நான். நமக்கான ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவை சீரமைத்துக் கொண்டிருக்கிறோம்.அதுமட்டுமின்றி ஒளிமயமான எதிர்காலத்திற்காக எந்நாளும் செயல்படுகிறோம். என் சக்தியை மீறி உங்களுக்காக உழைப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன், நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத்(ராணிப்பேட்டை) ஹரிணி தில்லை(வாலாஜா) தேவி பென்ஸ்பாண்டியன் (ஆற்காடு) முஹம்மத் அமீன், நகரமன்ற துணை தலைவர்கள் கமலராகவன், ரமேஷ்கர்ணா, பவளகொடி சரவணன், குல்சார் அஹமத், வாலாஜா ஒன்றியக்குழு தலைவர்கள் சேஷா வெங்கட், புவனேஸ்வரி சத்யநாதன், அசோக் ஒன்றியக்குழு துணை தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஸ்ரீமதி நந்தகுமார், ரமேஷ், மாவட்ட அவைத்தலைவர் அசோகன், மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத்,வன்னிவேடு ஊராட்சிமன்ற தலைவர் கற்பகம் சக்திவேல்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சக்திவேல்குமார், மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணை தலைவர், ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், கோட்டாட்சியர் பூங்கொடி உள்பட அரசு அலுவலர்கள், அதிகாரிகள், திமுக பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் டி.ஆர்.ஓ குமரேஷ்வரன் நன்றி கூறினார்.






