என் மலர்
ராணிப்பேட்டை
- வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது
- பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது
வாலாஜா:
வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள் நடைபெற்றது.அதன்படி கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், திருஷ்டி, எதிரிகள் பயம் விலக மஹா சுதர்சன ஹோமம், ஆயுள்பயம் நீங்க ஆயுஷ் ஹோமம், உடல் நோய், மன நோய் விலக மஹா தன்வந்திரி ஹோமம், வாழ்வில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம் ஆகிய ஐந்து ஹோமங்கள் நடைபெற்றது.புத்தாண்டை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு துளசி மாலை, வண்ண மலர்கள் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மேலும் காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு தொடர் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. ஹோமங்களில் கலந்து கொண்டவர்களுக்கு விசேஷ ஹோம பிரசாதங்களை பீடாதிபதி ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் வழங்கி வாழ்த்தினார். நாளை 2-ம்தேதி திங்கள்கிழமை காலை 5.30 மணிக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெறுகிறது.
முன்னதாக வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.
- மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கிராமத்தில் செந்தூர் வாழ்வாதாரம் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு செந்தூர் வாழ்வாதாரம் மேம்பாட்டு அறக்கட்டளை இயக்குனர் அமுதா செல்வம் தலைமை தாங்கினார், தலைமை ஆசிரியர் அருண்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், அகில இந்திய இளைஞர் மற்றும் மாணவர் பிரிவு செயலாளர் ஆபிரகாம் லிங்கன், உதவும் வேலைவாய்ப்பு மைய மேத்யூ, ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி நந்தகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரஞ்சிதா கோபு ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்கள்.
தொடர்ந்து மாணவ ர்களின் கற்றல் திறனை வெளிப்படுத்த மாணவர்களுக்கும் மட்டுமல்லாது, அவா்களது பெற்றோர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் கல்வியின் மீது ஆா்வத்தை ஏற்படுத்துகிற வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த கரகாட்டம் ஒயிலாட்டம் பறையாட்டம் கும்மியாட்டம் பெரிய கொம்பாட்டம் நாடகம் சமூக விழிப்புணர்வு பாடல்கள் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் பேராசிரியர் குமரன், அஜித்குமார், பெல் சேகர், தலைவர் ரேவதி சேட்டு, சமூக ஆர்வலர்கள் ராமன், லட்சுமணன் பயிற்சியாளர்கள் ஜேம்ஸ் குணசேகரன், மெர்லின் ஜேம்ஸ், லூர்து, ஆண்ட்ரூஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர் செந்தூர் வாழ்வாதாரம் மேம்பாட்டு அறக்கட்டளை செயலாளர் குமரேசன் நன்றி கூறினார்.
- 2 தொழிலாளிகள் படுகாயம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சத்ருகனா மோகபத்ரா (வயது 24), நிரஞ்சன் சிங் (25). இவர்கள் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் கூலி தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று பணியின் போது, கெமிக்கல் பேரல்களை எடுத்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கெமிக்கல் கசிந்து தீப்பற்றி எரிந்தது.
இதில் இவர்கள் 2 பேர் மீதும் தீ பரவியது உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 75 பேர் கலந்து கொண்டனர்
- 10-ந் தேதி வரை நடக்கிறது
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட வாலாஜா, ஆற் காடு, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, கலவை ஆகிய வருவாய் வட்டங்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலு வலகத்தில் பதிவு செய்துள்ள தகுதியான நபர்கள் விவரம் குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்படும்பட்டியல் மற்றும் நேரிடையாக அந்தந்த தாலுகா அலுவலகத்தில் தகுதியான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் வரப்பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து இவர்களுக்கான நேர்காணல் அந் தந்த தாலுகா அலுவலகங்களில் நடந்து வருகிறது.
அதன்படி வாலாஜா தாலுகா அலுவலகத்தில் நேற்று நேர் காணல் தாசில்தார் நடராஜன் தலைமையில் நடந்தது. சுமார் 75 பேர் நேர்காணலில் கலந்து கொண்டனர்.
இந்த நேர்காணல் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில் தாசில்தார் ரேவதி, மண்டல துணை தாசில்தார் விஜயசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
- சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதி
- தண்ணீரை கொதிக்கவைத்து குடிக்க அறிவுரை
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த குன்னத் தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததி குடியிருப்பு பகுதியில் 4 குடும்பத்தை சேர்ந்த 19 பேர் வசித்து வருகின்றனர்.
அவர்களில் 6 பெரியவர்கள், 4 சிறுவர்கள் என மொத்தம் 10 பேர் திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சோளிங்கர் வட்டார மருத்துவ அலுவலர் கோபிநாத் மற்றும் மருத்துவ குழுவினர் சென்று காய்ச்சல் குறித்து கேட்டறிந்தார். குடிநீர், ரத்தம் மாதிரிகள் எடுத்துக்கொண்டனர்.
பனிக்காலம் என்பதால் அனைவரும் தண்ணீரை கொதிக்கவைத்து குடிக்க வேண்டும், லேசான காய்ச்சல் ஏற்படும் போதே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினர்.
- 3 பேர் படுகாயம்
- ரெயில் நிலையத்துக்கு சென்றபோது நடந்தது
காவேரிப்பாக்கம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த செதுக்கரை கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது மகள் மகா (வயது 6). குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
அரையாண்டுத்தேர்வு விடுமுறை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த மேல்வீராணம் பகுதியில் உள்ள தனது பாட்டி விஜயா (60) வீட்டிற்கு வந்திருந்தாள். இந்த நிலையில் நேற்று செதுக்கரை கிராமத்திற்கு விஜயா, சிறுமி மகா மற்றும் உறவினர் மகன் சதீஷ் (15) ஆகியோர் மொபட்டில் பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள சோளிங்கர் ரெயில் நிலையத்துக்கு சென்றனர்.
மேட்டுமங்களம் அருகே வந்த போது தொழிலாளர்களை ஏற்றி செல்ல நின்றிருந்த தனியார் நிறுவன பஸ் மீது எதிர்பாராத விதமாக மொபட் மோதி, அதில் சென்ற 3 பேரும் படு காயம் அடைந்தனர்.
- பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
செல்ப் அறக்கட்டளை மற்றும் அரக்கோணம் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணித்திட்டம் சார்பாக ஆதிதிராவிடர் பெண்கள் மின் நிலைப்பள்ளியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அம்மனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தோத்திராவதி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி, செல்ப் அறக்கட்டளை செயலாளர் கோவி. பார்த்திபன், குளோ அறக்கட்டளை தலைவர் பி.ஜேம்ஸ், உடற்கல்வி ஆசிரியர் செல்வநாதன், ஆசிரியர்கள் தினேஷ், பாரதி, மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மாவட்ட காசநோய் துணை இயக்குனர் டாக்டர் ஜெயஸ்ரீ, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகலா, அரக்கோணம் அரசு மருத்துவமனை குழந்தை நல மருத்துவர் டாக்டர் ரெஜினா, காசநோய் மேற்பார்வையாளர் ஏ.தனஞ்செழியன், சுகாதாரப் பார்வையாளர்கள் எம்.உஷா மற்றும் கே.அருள் ஆகியோர் கலந்து கொண்டு செல்ப் அறக்கட்டளை தன்னார்வலர்கள் கோ.முருகேசன், நந்தினி, ப.சுஜித்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
- வேலூர் சிபிசிஐடி போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லை அனுமதி பெற்ற அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பி அரிசியாக மாற்றி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த 2020-ம் ஆண்டு நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக வேலூர் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பயன்பெறாமல் இடைத்தரகர்கள், வியாபாரிகள், அதிகாரிகள் சேர்ந்து அரசுக்கு ரூ.8 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் இதுவரை 32 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஆற்காடு அருகே உள்ள கத்தியவாடி கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் என்பவர் நெல் கொள்முதல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
ஆற்காடு மாசா பேட்டையில் உள்ள வீட்டில் இருந்த பாலசுப்பிர மணியனை நேற்றிரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
- இளநீர் பறித்த தகராறில் விபரீதம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த கிழவனம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பாஸ்கர்(வயது 43). அரக் கோணம் அருகே உள்ள தனியார் டயர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். 'கராத்தே' மாஸ்டராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
கராத்தே மாஸ்டர்
இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. நிலத்தில் தென்னை மரங்கள் நட்டு வைத்து பராமரித்து வந்தார். மரங்கள் நன்கு வளர்ந்து இளநீர், தேங்காய் போன்றவை மரத்தில் காய்த்து இருந்தது.
இவரது சித்தப்பா மகன் சந்திரன் (45), இவருக்கும் பாஸ்கர் தோட்டத்திற்கு அருகிலேயே விவசாயம் நிலம் உள்ளது. இந்த நிலையில் சந்திரனும் இவரது மனைவி உள்ளிட்டோரும் பாஸ்கர் நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் இருந்து ஓலைகளையும், இளநீரையும் பறித்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த பாஸ்கர், 'என்னுடைய தென்னை மரத்தில் இருந்து ஏன் இளநீரை பறிக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். இதனால் இருதரப்பி னருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ள்ளது. தகராறை அருகில் இருந்த பாஸ்கரின் மகன் ஆகாஷ் செல்போன் மூலம் வீடியோ எடுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சந்திரன், தான் வைத்திருந்த இளநீர் வெட்டும் கத்தியால் பாஸ்கரின் முகம் மற்றும் மார்பில் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மயங்கி கீழே விழுந்தார்.
பாஸ்கரை அங்கிருந்த வர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரனை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
ரக்கோணம் சுவால்பேட்டை விநாயகர் கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் 59-வது பிறந்த நாளை முன்னிட்டு அரக்கோணம் நகர தலைவர் கே.வி.ரவிச்சந்திரன் தலைமையில் நெமிலி ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன்,ரவி, முன்னிலையில் விநாயகர் கோவிலில் அர்ச்சனை செய்து பின்னர் அன்னதானம் வழங்கினர்.
ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் ஹரிதாஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகன் காந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு இனிப்பு அன்னதானம் வழங்கினர். பொதுக்குழு உறுப்பினர் உத்தமன் நன்றி உரை கூறினார்.
- ஒரு ஏக்கருக்கு ரூ.1178 செலுத்தி பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம்
- தோட்டக்கலை துணை இயக்குநர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதத்தை ஈடு செய்யும் வகையில் நடப்பு ராபி பருவத்தில் கத்தரி, வெண்டை, சீவப்பு மீளகாய், வாழை போன்ற பிராதன தோட்டக்கலைப் பயிர்களுக்கு பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர்காப்பீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டின் ராபி பருவத்தில் மிளகாய் (சிவப்பு) பயிர்காப்பீடு செய்ய பள்ளூர்.பனப்பாக்கம், அரக்கோணம் வடக்கு, அரக்கோணம் தெற்கு பாராஞ்சி, சோளிங்கர் வேலம் மற்றும் பாணாவரம் குறுவட்டங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதால் இந்த பகுதிகளில் மிளகாய் சிவப்பு, சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களான சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் வங்கி கணக்கு புத்தக முதல்பக்க நகல, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, மத்திய மாவட்ட கூட்டுறவு சங்கங்க ளிலோ அல்லது பொது சேவை மையங்களிலோ விவசாயிகள் செலுத்த வேண்டிய 5 சதவீத பிரிமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.1178/- செலுத்தி பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம்.
மேலும் சிவப்பு மிளகாய் பயிர்காப்பீடு செய்ய நாளை சனிக்கிழமை கடைசி நாள் என்பதால் இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.
- அடிக்கடி கொலை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்தது
- போலீசார் கைது செய்தனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது64). இவரது தங்கை மஞ்சுளா(53). தம்பி ஆண்டியப்பன் ஆகியோர் குடும்பத்துடன் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர்.
கணவர் கொலை
இந்த நிலையில் கடந்து சில மாதங்களுக்கு முன்பு மஞ்சுளா குடும்பத்தினருக்கும், ஆண்டியப்பன் குடும்பத்தினருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆண்டியப்பனின் மகன் அஜித் மஞ்சுளாவின் கணவர் ஜோதியை கொலை செய்து உள்ளார். இதனால் அஜித் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் .
தனது கணவர் கொலைக்கு செய்ததற்கு அண்ணன் பெரியசாமி தான் காரணம் என மஞ்சுளா கருதினார்.
இதனால் பெரியசாமிக்கும், மஞ்சுளாவுக்கும் அடிக்கடி கொலை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அண்ணனை வெட்டினார்
இந்த நிலையில் மஞ்சுளா நேற்று அண்ணன் பெரியசாமி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அண்ணன் தங்கை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மஞ்சுளா தனது அண்ணன் என்றும் பாராமல் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக வெட்டினார்.
இதில் பெரியசாமி ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தார்.
இதனைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பதிவு செய்து போலீசார் மஞ்சுளாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






